Published : 21 Sep 2018 09:35 am

Updated : 21 Sep 2018 09:46 am

 

Published : 21 Sep 2018 09:35 AM
Last Updated : 21 Sep 2018 09:46 AM

பொதுச் சட்டங்களைவிட நியாயமான சட்டங்களே நாட்டுக்குத் தேவை!

இந்திய சட்ட ஆணையம் சமீபத்திய ஆலோசனை அறிக்கையில் ‘அனைத்து மதங்களுக்கும் பொதுவான சிவில் சட்டம் சாத்தியமும் இல்லை, இப்போது அவசியமும் இல்லை’ என்று துணிச்சலாகத் தெரிவித்துள்ளது. ‘ஒரே தேசம் ஒரே சட்டம்’ என்று முழங்கியவர்களுக்கு இது அதிர்ச்சியாகக்கூட இருந்திருக்கலாம்.

சட்டங்களுக்கு, அரசு மட்டுமே மூலாதாரம் இல்லை. பன்மைத்துவச் சட்ட அமைப்புகள் இருந்ததற்கு வரலாறு உண்டு. அவற்றுக்கான மூலாதாரங்களும் வெவ்வேறானவை. எனவேதான் சட்ட ஆணையம், தனிப்பட்ட சட்டங்களுக்குப் பன்மைத்துவம் உண்டு என்பதை அங்கீகரித்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல், தனிப்பட்ட சட்டங்களில் அக சீர்திருத்தங்களை மேற்கொண்டு, அரசியல் சட்டம் வகுத்துள்ள சட்டப்பிரிவுகளின்படி சமத்துவம், நடுநிலைமை ஆகிய அம்சங்கள் தொடர வேண்டும் என்று கூறியிருக்கிறது.

சில தீர்ப்புகள்

கள யதார்த்தங்களைக் கவனத்தில் கொள்ளாமல், ‘பொது சிவில் சட்டம் இயற்றப்பட வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் ஆலோசனை வழங்குகிறது. “நம்முடைய வழிகாட்டு நெறிகள் பொது சிவில் சட்ட கற்பனையை ஊட்டியிருக்கிறது. அரசியல் சட்டம் எதிர்பார்த்த இது இன்னும் பூர்த்தியாகாமல் இருக்கிறது” என்று ‘ஏபிசி எதிர் அரசு’ (2015) வழக்கில் நீதிபதி விக்ரம்ஜீத் சென் கூறியிருக்கிறார். இந்த வழக்கு, மதம் அல்லது தனிச் சட்டம் தொடர்பானதல்ல, ‘பாதுகாவலர்கள் - மைனர்கள் சட்டம் 1890’ பற்றியது. பொது சிவில் சட்டம் பற்றிய கருத்து இங்கே தேவையற்றது.

சரளா முட்கல் (2015) வழக்கு விசாரணையின் போதும் இப்படியொரு கருத்தை உச்ச நீதிமன்றம் வெளியிட்டது. “தேசப் பிரிவினைக்குப் பிறகு இங்கேயே தங்கிவிட்டவர்கள் (முஸ்லிம்கள்) அறிவார்கள், இந்தியா ஒரே நாடு என்ற கொள்கையில் நம்பிக்கை கொண்டிருக்கிறது. எனவே, எந்த சமூகமும் தங்களுக்கென்று தனி மதச் சட்டம் தேவை என்று கோர முடியாது” என்றது. தேசத்தின் மீதான விசுவாசமும் ஒரே சீர்மையான சட்டமும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை அல்ல.

அடிப்படை உரிமையல்ல

அரசியல் சட்டம் இயற்றப்பட்ட நிர்ணய சபையில்கூட இந்த விவகாரத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. ஒரே சிவில் சட்டம் என்பதை அடிப்படை உரிமைகளுக்கான அத்தியாயத்தில் சேர்க்க வேண்டும் என்று சிலர், துணைக் குழு விவாதத்தில் கோரினர். கடைசியில் வாக்கெடுப்பு நடத்தி, பொது சிவில் சட்டம் என்பது அடிப்படை உரிமையல்ல, எனவே, இதை இங்கே வாதிட்டு நிலைநாட்ட வேண்டியதில்லை என்று முடிவெடுக்கப்பட்டது.

அரசியல் சட்டத்தை வகுத்தவர்கள் சட்டக் கூறு 44-ல், ‘யூனிஃபார்ம்’ என்ற ஆங்கில வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளனர். ‘காமன்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை. ‘காமன்’ என்றால், ‘எல்லா சூழ்நிலைகளிலும் ஒன்று’ என்று பொருள். ‘யூனிஃபார்ம்’ என்றால், ‘அதே நிலையில் அதே தான்’ என்று பொருள். மதப் பன்மைத்துவத்தால்தான் நாம் வெவ்வேறு தனிப்பட்ட சட்டங்களைக் கொண்டிருக்கிறோம் என்று நினைப்பதே தவறு. உண்மையில் பிராந்தியத்துக்கு பிராந்தியம் சட்டம் வேறுபடுகிறது.

நாடு முழுக்க ஒரே சட்டம்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் அரசியல் சட்டத்தை வகுத்தவர்களுக்கு இல்லை. ஏனென்றால், தனிச் சட்டங்கள் தொடர்பாகப் புதிய சட்டங்களை இயற்றும் அதிகாரம், பொதுப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, தனிச் சட்டங்கள் தொடர்பான புதிய சட்டங்களை மத்திய அரசும் மாநில அரசுகளும் இயற்றலாம். சட்ட பன்மைத்துவத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில்தான் இப்படிச் செய்யப்பட்டிருக்கிறது. சட்ட ஆணையம் இதற்கு உரிய முக்கியத்துவத்தை அளித்துள்ளது.

பொதுச் சட்டம் என்பது மாயை

குற்றவியல் நடைமுறைச் சட்டங்களில் நாம் பொதுச் சட்டங்களைக் கொண்டிருப்பதாக நினைப்பதும் மாயை. இந்திய தண்டனையியல் சட்டத்துக்கு மாநில அரசுகள் திருத்தங்களைச் செய்திருக்கின்றன. சமீபத்திய உதாரணம், பஞ்சாபில் இ.த.ச. ‘295 ஏ’ என்ற பிரிவில் திருத்தம் செய்யப்பட்டு, ‘295 ஏஏ’ உருவாக்கப்பட்டிருக்கிறது. கிரந்த சாஹிப் உட்பட மதங்களின் புனித நூல்கள் அவமதிக்கப்பட்டால் கடுமையான தண்டனை விதிப்பது இந்த 295 ஏஏ.

இந்துக்களுக்கான பொதுச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதால், நாடு முழுக்க இந்துக்கள் ஒரே மாதிரியான சட்டங்களின்படிதான் நடத்தப்படுகின்றனர் என்று நினைப்பதும் மாயை. இது முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கும்கூட பொருத்தம். நாகாலாந்தில் கடைப்பிடிக்கப்படும் உள்ளூர் மரபுகளுக்குச் சட்டப் பாதுகாப்பு தரப்பட்டிருக்கிறது. கோவா மாநிலத்தில் ‘பொது சிவில் சட்டம்’ இருப்பதாக அடிக்கடி சொல்லப்படுகிறது. அங்கு இந்துக்கள் இன்னமும் போர்த்துகீசியர்கள் இயற்றிய குடும்ப வாரிசு சட்டப்படிதான் நடத்தப்படுகின்றனர். ‘திருத்தப்பட்ட இந்து சட்டம் 1955-56’ அங்கு அமல் செய்யப்படுவதில்லை. அங்கு முஸ்லிம் தனிச் சட்டப்படி அல்ல - போர்த்துகீசிய, சாஸ்திரோக்தமான இந்து சட்டப்படிதான் அனைவரும் நடத்தப்படுகின்றனர். முற்போக்கானது என்று கருதப்படும் சிறப்புத் திருமணச் சட்டம் கோவாவுக்கு விரிவுபடுத்தப்படவில்லை.

ஜம்மு-காஷ்மீரிலும் உள்ளூர் இந்து சட்டங்கள் மத்திய சட்டங்களிலிருந்து வேறுபட்டவை. அங்கே ஷரியத் சட்டம்கூடச் செல்லுபடியாகாது. நாட்டின் பிற பகுதிகளில் கடைப்பிடிக்கப்படும் முஸ்லிம் தனிச் சட்டத்திலிருந்து வேறுபட்ட, உள்ளூர் மரபையொட்டிய முஸ்லிம் சட்டம்தான் அங்கே அமலாகிறது.

மறக்கப்பட்ட விவகாரங்கள்

பொது சிவில் சட்டத்தைவிட முக்கியத்துவம் வாய்ந்த பல விஷயங்கள் அரசியல் சட்டத்தின் வழிகாட்டுக் குறிப்புகளில் இடம்பெற்றுள்ளன. வேலை செய்யும் உரிமை, வாழ்வாதாரத்துக்குத் தேவைப்படும் குறைந்தபட்ச ஊதியம் பெறும் உரிமை, பொது நன்மைக்காக சமூகத்தின் வளங்களைப் பகிர்ந்து கொடுக்க வேண்டிய கடமை, மிகச் சில கைகளில் மட்டுமே செல்வம் குவிந்துவிடாமல் தடுக்க வேண்டிய கடமை, நாட்டின் பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை ஆகியவை பற்றியெல்லாம் அதில் இடம் பெற்றும், யாரும் அவற்றை விவாதிப்பதில்லையே ஏன்?

எந்த ஒரு சமூகத்தின் தனிச் சட்டத்தையும் திருத்தி, அச்சமூகத்தை முன்னுக்குக் கொண்டுவரும் அக்கறையில் கோருவது வேறு. சீர்மைக்காகப் பிற மதங்களின் சட்டத்தையும் திருத்த வேண்டும் என்று கோருவது வேறு. ‘பொது’ சட்டங்களைவிட, ‘நியாயமான’ சட்டங்கள்தான் சமூகத்துக்குத் தேவை.

- ஃபைசான் முஸ்தஃபா,

ஹைதராபாத் நல்சார் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்

சுருக்கமாகத் தமிழில்: சாரி.

‘தி இந்து’ ஆங்கிலம்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author