Published : 06 Sep 2018 09:57 AM
Last Updated : 06 Sep 2018 09:57 AM

கருத்து வேறுபாடுகள்: சமூகத்துக்கு நன்மையா, தீமையா?

எந்த விஷயத்திலும் யாருடனும் கருத்து வேறுபடாத மனிதர்களே கிடையாது. ஒரு குழந்தை எப்போது ‘நான்’, ‘என்னுடையது’ என்ற வார்த்தைகளுடன் ‘இல்லை’ ‘மாட்டேன்’ என்பதையும் பயன்படுத்தத் தொடங்குகிறதோ அப்போதே அது தன்னை உணர்ந்துவிட்டது என்கின்றனர் மெய்யியலாளர்கள். ஆரம்பகாலம் தொட்டே நாம் நம்முடைய இருப்பை இப்படிக் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்துவதன் மூலம்தான் உறுதிசெய்துகொண்டு வருகிறோம். பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும், உடன் பிறந்தவர்களுக்கு இடையிலும் கருத்து வேறுபாடுகள் இல்லாத குடும்பங்களே இல்லை. யாரும் எதுவும் பேசக் கூடாது என்று அடக்கி வைக்கப்படும் குடும்பங்களைவிட, கருத்து வேறுபாடுகளைப் பேசித் தீர்த்துக்கொள்ளும் குடும்பங்களே ஒற்றுமையாக வாழ்கின்றன. கருத்து வேறுபாடுகள் ஜனநாயகத்துக்கு மட்டுமல்ல, மனித குலம் பிழைத்திருப்பதற்கும் அவசியம். ஒருவருக்கொருவர் கருத்து மாறுபடுவதுதான் அடிப்படையான மனித சுபாவம்.

வீட்டில், நண்பர்களிடத்தில், வேலைசெய்யும் இடங்களில் கருத்து வேறுபாடு கொள்கிறோம். இப்படி மாறுபட்ட கருத்துகளைச் சொல்லித்தான் நட்பை, உறவை வலுப்படுத்துகிறோம். ஒருவர் சொல்லும் கருத்தை இன்னொருவர் ஏற்காவிட்டாலும் ஒற்றுமையாக வாழ்வது எப்படி என்பதைக் கற்றுக்கொள்கிறோம். கணவர் மனைவி இடையே பல தருணங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றன. நாம் சொல்வதைத்தான் நண்பர்கள், உறவினர்கள் கேட்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தால் நமக்கு நட்போ, உறவோ இருக்காது. சமூகமாகச் சேர்ந்து வாழ்வது என்றால், கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அடுத்தவர்களுடன் சேர்ந்து வாழப் பழகுவதுதான்.

கருத்து வேறுபாடு என்பது நம்முடைய ரத்தத்திலேயே ஊறியிருக்கிறது. கருத்து வேறுபட இன்னொருவர் இருக்க வேண்டும் என்பதுகூட அவசியம் இல்லை. நாமே நமக்குள் தொடர்ந்து முரண்படுகிறோம். ஒரு விஷயம் குறித்து நாமே நமக்குள் விவாதிக்கிறோம். சிந்திக்கும்போது நாமே நமக்குள் மாற்றுக் கருத்துகளையும் கூறிக்கொள்கிறோம். எதிர்க் கருத்தே கூடாது என்று நாம் மூளையைக் கட்டுப்படுத்தும்போது நம்முடைய சிந்தனையே வற்றிவிடுகிறது. நாம் செய்யும் அர்த்தமுள்ள செயல்கள், நமக்குள் நடக்கும் இந்த வாதப் பிரதிவாதங்களின் விளைவுகள்தான்.

சமூக விவாதம்

கருத்து வேறுபாடு என்பதுதான் சமூகத்தின் இருப்பைக் காட்டும் செயல். சொல்வதற்கெல்லாம் அமைதியாக ஒப்புதல் தருவதுதான் பிரச்சினை. ஒரு முடிவை நாம் அனைவரும் ஏற்கிறோம் என்றால், சொல்வதை அப்படியே கேட்டுவிட்டு அமைதியாக ஏற்கிறோம் அல்லது ஒத்துழைக்கிறோம் என்று பொருள். ஒரு கருத்தை எல்லோரும் ஏற்பதன் மூலம்தான் சமூகங்களில் ஒற்றுமையை உருவாக்க முடியும், சமூகம் நிலைகுலையாமல் இருக்க இந்த ஒற்றுமை அவசியம்.

சமூகத்தைக் கட்டமைக்கும் ஒவ்வொரு வழிமுறையின் போதும் கருத்து வேறுபாடு அவசியமாகிறது. எதைச் சொன்னாலும் ஆமோதிப்பவர்களால் சமூகம் உருவாகாது. அது மிகச் சிலரின் ஆதிக்கத்துக்கு மட்டுமே வழிவகுக்கும். எதிர்க் கருத்துகள்தான் ஒரு நாகரிக சமூகத்தை இணைக்கும் பசையாகச் செயல்படுகிறது. பக்குவப்பட்ட சமூகம் என்பது எதிர்க் கருத்துள்ளவர்களையும் அரவணைத்துச் செல்லும் அமைப்பாகும். மாறுபட்ட கருத்து தெரிவிப்பவருக்கு சேதம் ஏதும் இல்லாமல், அவருடைய கருத்தை மட்டும் நிராகரித்து, அதில் உள்ள நியாயத்துக்கேற்பத் தங்களுடைய முடிவை மாற்றிக்கொள்பவைதான் ஜனநாயக சமூகங்கள். இதுதான் உண்மையான ஜனநாயகச் செயல்பாடு.

தேர்தல்களும் வாக்குகளும் இதைச் செயல்படுத்துவதற்கான வழிமுறைகள். ஜனநாயகத்தின் சாரம் எதுவென்றால், மாற்றுக் கருத்து சொல்பவர்களை எப்படிக் கையாள்கிறோம் என்பதுதான். மாற்றுக் கருத்து உள்ளவர்களுடன் விவாதித்து, நாம் ஏன் ஒரு கருத்தை வலியுறுத்துகிறோம் என்று அவர்களுக்குப் புரியவைத்து அவர்களையும் அரவணைப்பதில்தான் இருக்கிறது ஜனநாயகத்தின் வெற்றி. தனிநபர்களுக்குள்ள கருத்து வேறுபடும் குணத்தை சமூகத்துக்குப் புகுத்துவதன் மூலம்தான் ஜனநாயக சமூகம் எதிர்க் கருத்துகளைக் கையாள்கிறது.

மாற்றுக் கருத்து வெறும் விமர்சனம் மட்டுமல்ல, புதிய கண்ணோட்டங்களையும் முன்வைப்பது. தங்களுடைய கொள்கைக்கு மாற்றாக ஒன்றைக் கூறுகிறார் என்பதற்காக அறிவியல் அறிஞர்கள், புதிய அறிஞர்களைச் சிறையில் அடைப்பதில்லை. இப்போது மாற்றுக் கருத்தைச் சொன்னால் சமூக அறிவியலாளர்களும் கலைஞர்களும் கடும் விமர்சனங் களுக்கு உள்ளாகின்றனர்.

கல்விக்கூடங்களில் சட்டவிரோதமாகச் சிலரை வேலைக்கு அமர்த்துவது கூடாது என்று கல்வியாளர்கள் கூறினால், அந்தக் கருத்துக்காகவே அவர்களைப் பணியிடை நீக்கம் செய்வது அல்லது வேறு வகைகளில் அலைக்கழிப்பது என்று நடவடிக்கை எடுக்கின்றனர்.

ஜனநாயகம் தழைக்க மட்டும்தான் மாற்றுக் கருத்துகள் அவசியம் என்பதில்லை. மனித குலம் வாழவும்கூட எதிர்க் கருத்துகள் அவசியமாகின்றன. அதிருப்திக் கருத்துகளைக் களையெடுக்கும் சமூகங்கள் கடைசியில் காணாமல் போய்விடுகின்றன. நாஜிகளின் ஆட்சி நடந்த ஜெர்மனியையும், ஸ்டாலினால் ஆளப்பட்ட ரஷ்யாவையும் நாம் மறந்துவிடக் கூடாது.

தார்மிகப் பின்னணி

எதிர்க் கருத்துகள் ஜனநாயகத்துக்கு நல்லது என்பதால் மட்டும் முக்கியத்துவம் பெறுவதில்லை. அதன் பின்னணியில் தார்மிக நெறியும் இருக்கிறது. எதிர்க்கருத்துகள் வெளிவராமல் தடுக்கும் சமூகங்கள் தார்மிகமற்றவை. தார்மிக அடிப்படையிலான எதிர்க் கருத்துகளுக்கு இரண்டு உதாரணங்களைக் காணலாம். முதலாவது, ஆதிகாலம் முதல் காந்தி - அம்பேத்கர் காலம் வரையில் இந்தியர்கள் தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவிக்கக் கையாண்டுவரும் அகிம்சை, தார்மிக நெறியின் பாற்பட்டது. இரண்டாவது, எதிர்க் கருத்து என்பது மற்றவர்களைவிட மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களைக் காப்பாற்றுவதற்கான தார்மிக வழிமுறையாகும். எதிர்க் கருத்து வெறும் புகார் அல்ல. சமூகத்தின் எதிர்க் கருத்தானது ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டவர்களின் சார்பில் எழுப்பப்பட வேண்டியது. சமூக வாழ்க்கையில் அடிப்படையான கண்ணிய வாழ்க்கைகூட மறுக்கப்பட்ட மக்களுக்கு, இது மட்டும்தான் ஆதரவாக இருக்க முடியும்.

சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பவர்கள் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவிக்கவும் போராடவும் அதிக உரிமை உள்ளவர்கள் என்பதே தார்மிகக் கொள்கையாகும். எனவே, சமூகப் படிநிலையிலும், பொருளாதாரத்திலும் வலிமையாக இருப்பவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் விளிம்புநிலையில் உள்ளவர்களிடமிருந்து குரல்கள் வரும்போதே அதை ஆதரித்துக் குரல் கொடுக்க வேண்டும். அவர்கள் தங்களுடைய தரப்பை எடுத்துரைக்க வாய்ப்பு தர வேண்டும். ஏழைகள் ஒடுக்கப்பட்டவர்களுக்காகக் குரல்கொடுப்பவர்கள் ஒடுக்கப்படும்போது, நாம் வசதியாக வீட்டில் உட்கார்ந்துகொண்டு, யாருக்கு வந்த விருந்தோ என்று அலட்சியமாக இருப்பது தார்மிகரீதியில் மிகவும் தவறு. தேசநலன் என்ற பெயரில் அந்தப் போராளிகளை நாம் கண்டிக்கும்போது, ஏற்கெனவே விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டு, ஒடுக்கப்பட்ட மக்களை மேலும் ஆழத்தில் அழுத்த உதவி செய்தவர்களாகிவிடுகிறோம்.

தமிழில்: சாரி.

‘தி இந்து’ ஆங்கிலம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x