Published : 25 Sep 2018 08:57 AM
Last Updated : 25 Sep 2018 08:57 AM

மாயாவதி - அஜீத் ஜோகி கூட்டணி: காங்கிரஸ் அணுகுமுறையின் தோல்வி!

அஜீத் ஜோகி தலைமையிலான சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸுக்கும் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சிக்கும் இடையே கூட்டணி இறுதிசெய்யப்பட்டிருப்பது, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் காங்கிரஸின் தோல்வியைக் காட்டுகிறது. மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் நடக்கவிருக்கும் சட்ட மன்றத் தேர்தல்கள், 2019 மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுகின்றன. இத்தேர்தல்களில் காங்கிரஸுக்குக் கிடைக்கும் வெற்றி தோல்விகள்தான், மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் விஷயத்தில் அக்கட்சியின் பலத்தைத் தீர்மானிக்கப்போகின்றன.

மத்திய பிரதேசத்தில் தங்களுக்குக் கணிசமான சட்ட மன்றத் தொகுதிகளை ஒதுக்கினால் காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக்கொள்ளத் தயார் என்று சில நாட்களுக்கு முன்னால் கூறியிருந்தார் மாயாவதி. அதை காங்கிரஸ் தீவிரமாகப் பரிசீலித்திருக்க வேண்டும். 2013 மத்திய பிரதேச சட்ட மன்றத் தேர்தலில் 41.04% வாக்குகளைப் பெற்று ஆட்சியைப் பிடித்தது. அதற்கு மிக நெருக்கமாக வந்து 40.29% வாக்குகளைப் பிடித்த காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கத் தவறியது. அந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் 4.27% வாக்குகளைப் பெற்றது. காங்கிரஸ் அப்போதே பகுஜன் சமாஜுடன் கூட்டணி வைத்திருந்தால் வெற்றி கிட்டியிருக்கலாம். இப்போதும் பகுஜன் சமாஜ் கட்சியின் கோரிக்கையை காங்கிரஸ் தலைமை செவிமடுத்ததாகவே தெரியவில்லை. சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் பாஜகவுக்கு மாற்று நாம்தான் என்ற உறுதியில் காங்கிரஸ் தலைவர்கள் செயல்படுகின்றனர்.

சத்தீஸ்கரில் பாஜகவை காங்கிரஸ் வீழ்த்திவிடும் என்று எதிர்பார்ப்பு இருந்த நிலையில், மாயாவதி அஜீத் ஜோகி கூட்டணி, காங்கிரஸின் வெற்றி வாய்ப்புக்குப் பெரிய சவாலாகத் திகழ்வது நிச்சயம். காங்கிரஸுக்கு மட்டுமல்ல சமாஜ்வாடி கட்சிக்கும் தனது அதிரடி நடவடிக்கை மூலம் எச்சரிக்கை விடுத்திருக்கிறார் மாயாவதி. தான் விரும்பும் தொகுதிகளை விட்டுக்கொடுக்கத் தவறினால் தனித்துப் போட்டியிடவும் தான் தயார் என்று உணர்த்தியிருக்கிறார்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களிலும் ஆட்சியில் இருக்கும் கட்சி என்பதால் பாஜக மீது இயல்பாகவே அதிருப்தி அதிகம். இதன் பலனை, தான் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் நினைப்பது தவறான அணுகுமுறை.

குஜராத்தில் ஜிக்னேஷ் மேவானி, ஹர்திக் படேல், அல்பேஷ் தாக்கூர் ஆகிய இளம் தலைவர்களுடன் இணைந்து ராகுல் காந்தி சூறாவளிப் பிரச்சாரம் செய்தும் வெற்றி கைநழுவியதை மறக்கக் கூடாது. எல்லா கட்சிகளும் பாஜகவுக்கு எதிராக இருக்கலாம், அதேசமயம் அக்கட்சிகள் தங்களுடைய எதிர்காலத்தை விட்டுக்கொடுத்துவிட்டு காங்கிரஸின் வெற்றிக்காக உழைக்கும் என்று எதிர்பார்க்கக் கூடாது. கூட்டணி தொடர்பாக சரியான வியூகங்களை வகுக்காமல், தேர்தல் முடிவு தங்களுக்குச் சாதகமாக இல்லையென்று பின்னர் வருந்துவதால் பயனில்லை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x