Published : 25 Jun 2019 09:43 AM
Last Updated : 25 Jun 2019 09:43 AM

ராசிமணல் அணை:  காமராஜரின் திட்டம், எம்ஜிஆரின் விருப்பம்!

பி.ஆர்.பாண்டியன்

கர்நாடகத்தில் கபினி, கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி, ஹேரங்கி என ஆறுக்கும் மேற்பட்ட அணைகள் கட்டியிருப்பதோடு, ஆயிரக்கணக்கான ஏரிகள் உட்பட பல நீர்த் தேக்கங்களையும் உருவாக்கி, ஆண்டு முழுவதும் தண்ணீரைப் பயன்படுத்திவருகின்றனர். தென்மேற்குப் பருவமழையை நம்பி கட்டப்பட்டுள்ள அணைகள் அனைத்தும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் இறுதி வரை அணைகளை மூடி நீர்ச் சேமிப்புக் காலமாகப் பின்பற்ற வேண்டிய நடைமுறையை கர்நாடகம் பின்பற்றுவதில்லை.

தமிழகத்துக்கு மாதம்தோறும் வழங்க வேண்டிய உரிய அளவிலான நீரை கர்நாடகம் விடுவிப்பது கிடையாது. உபரி நீரை மட்டுமே விடுவித்துவருகின்றனர். இதனால், காவிரிப்படுகையில் குறுவை சாகுபடி முடிவுக்கு வந்துவிட்டது, சம்பா சாகுபடியும் தற்போது கேள்விக்குறியாகிவிட்டது. சுமார் 2 கோடி விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பறிபோகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சென்னை, வேலூர், கடலூர், தஞ்சாவூர், திருச்சி, கரூர், ஈரோடு, திருப்பூர், சேலம், கோவை உள்ளிட்ட 11 மாநகராட்சிகளை உள்ளடக்கிய 25 மாவட்டங்களில் வாழக்கூடிய சுமார் 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரம் பறிபோகும் பேராபத்து ஏற்பட்டுள்ளது.

ஆய்வா? சதியா?

கர்நாடக முதல்வர் குமாரசாமி, தமிழகம் சமவெளிப் பகுதி என்பதால், அணை கட்ட முடியாத நிலை உள்ளதால்தான் மேகேதாட்டு அணையைக் கட்டி, தண்ணீரைத் தேக்கி தமிழகப் பாசனத்துக்கு வழங்க உள்ளதாகக் கூறி, மேகேதாட்டு அணைக்கு ஆய்வறிக்கை தயாரிக்க மத்திய அரசிடம் அனுமதி பெற்றார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசால் தொடரப்பட்ட வழக்கில் ஆய்வுக்குத்தான் அனுமதி என்றும் அணை கட்ட முடியாது என்றும் கூறப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கர்நாடகம் தொடர்ந்து ஆய்வுசெய்து தாக்கல் செய்துள்ள ஆய்வறிக்கையை ஏற்று, மத்திய அரசின் நீர் வள ஆணையத்தின் பொறியாளர்கள் நேரடியாக மேகேதாட்டு அணை அமையவுள்ள இடங்களை ஆய்வுசெய்துவருகின்றனர்.

மேகேதாட்டுவில் அணை கட்டுவதால் தங்களுக்கு எந்தப் பயனும் இல்லை என கர்நாடக விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. மேலும், மேகேதாட்டு மலைப் பகுதியில் உள்ள 47 மலைக் கிராம மக்களும் அணைகட்ட எதிர்ப்புத் தெரிவித்துப் போராடிவருகின்றனர். இந்நிலையில், அரசியல் ஆதாயத்துக்காகவே தமிழகத்துக்கு வரும் உபரி நீரைத் தடுத்திடும் குறுகிய நோக்கோடு மட்டுமே மத்திய அரசும், கர்நாடக அரசும் செயல்பட்டுவருகின்றன.

கர்நாடக முதல்வர் குமாரசாமி உண்மையாகவே தமிழக நலனில் அக்கறை கொண்டிருக்கிறார் என்றால், சட்டவிரோதமாக மேகேதாட்டு அணை கட்டுவதைக் கைவிட்டு, தமிழக எல்லையான ராசிமணலில் தமிழக அரசு சட்டப்படி அணை கட்ட ஒத்துழைப்பு தர முன்வர வேண்டும். 1961 - 62ம் ஆண்டிலேயே காமராஜர் முதல்வராக இருந்தபோது ராசிமணலில் அணை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் துவங்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து, எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் அப்போதைய சட்டமன்ற உறுப்பினரான பழ.நெடுமாறனால் ராசிமணல் அணையைக் கட்ட மத்திய அரசிடம் அனுமதி கேட்டு முன்மொழியப்பட்ட தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்துக்குள் ஓடும் தண்ணீரைத் தேக்கிப் பயன்படுத்திக்கொள்ள சட்டப்படி தமக்கு முழு உரிமை உள்ளதாகவும், தமிழகம் நோக்கி வரும் தண்ணீரைத் தடுத்து, மேகேதாட்டு அணை கட்ட கர்நாடகாவுக்குச் சட்டப்படி உரிமையில்லை என்றும் அத்தீர்மானத்தில் சுட்டிக்காட்டி, அதை மத்திய அரசிடம் எம்ஜிஆரே நேரில் வழங்கி வலியுறுத்தியுள்ளார். எனவே, மேகேதாட்டுவில் சட்டவிரோதமாக அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கையோடு ராசிமணல் அணை கட்டுவதை ஒப்பிட்டுப் பேசுவது பொருத்தமில்லை.

ராசிமணல் அணை சாத்தியமே

மேகேதாட்டுவிலிருந்து ஒகேனக்கல் வரை சுமார் 60 கிமீ தொலைவு காவிரியின் இடது கரை முழுமையும் தமிழக எல்லையாகவும், கிருஷ்ணகிரி மாவட்ட வனத் துறைக் கட்டுப்பாட்டிலும் உள்ளது. வலது கரை முழுமையும் கர்நாடக மாநிலத்துக்குச் சொந்தமானதாக உள்ளது. ஒகேனக்கல் முதல் மேகேதாட்டு வரை தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதைப் பாரம்பரியமாகப் பின்பற்றிவருகின்றனர். வலது கரை முழுவதும் கர்நாடகாவுக்குச் சொந்தம் என்பதால், மின்சார உற்பத்தியை கர்நாடகமே செய்துகொள்ளலாம்.

தமிழக எல்லைப் பகுதியில் ராசிமணல் அணை கட்டுமானப் பணி துவக்கி முடிக்கப்படுமேயானால், சுமார் 50 முதல் 100 டிஎம்சி வரை தண்ணீர் தேக்க முடியும். மேல் நோக்கி 42 கிமீ மேகேதாட்டு வரையிலும், வடக்கே 25 கிமீ தூரம் அஞ்செட்டி வரை இரு பிரிவுகளாகத் தண்ணீர் சேமிப்புப் பகுதிகளாகத் தேக்கிவைக்க முடியும். மேட்டூர் அணையில் அதன் முழுக் கொள்ளளவான 120 அடி தண்ணீரைத் தேக்கிவைக்கும்போது ஒகேனக்கல் அருவியைக் கடந்து நீர் தேங்கி நிற்கும் நிலை உள்ளது. எனவே, அதற்கு மேல் பகுதியில் 18 கிமீ தொலைவில் இருபுறமும் உயர்ந்த மலைக்குன்று பகுதியாக ராசிமணல் உள்ளதால், குறைந்த செலவில் விரைவாக அணையைக் கட்டி தண்ணீரைத் தேக்கிவைக்க முடியும். மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறையும்போது ராசிமணலிலிருந்து தண்ணீரைத் திறந்து மேட்டூர் அணையில் நிரப்பிக்கொள்ள முடியும்.

ராசிமணல் அணையால் காவிரிப் படுகையின் குடிநீர்த் தேவையையும், குறுவை, சம்பா சாகுபடிகளையும் உறுதிசெய்ய முடியும். நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்திப் பாதுகாக்க முடியும். இதைக் கருத்தில்கொண்டு மத்திய அரசு உரிய அனுமதியும், தேவையான நிதி ஒதுக்கீடும் செய்திட முன்வர வேண்டும். இத்திட்டம் குறித்த அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையத்திடம் தமிழக அரசு விரைவில் முன்மொழிந்து அனுமதி பெற வேண்டும்.

- பி.ஆர்.பாண்டியன்,

பொதுச் செயலாளர்,

தமிழக காவிரி விவசாயிகள் சங்கம்.

தொடர்புக்கு: p.r.pandi1968@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x