Published : 19 Jun 2019 07:51 AM
Last Updated : 19 Jun 2019 07:51 AM

காந்தி பேசுகிறார்: அகிம்சை என்றால் அன்பு

சரியாகச் சொன்னால் கொல்லாமையே அகிம்சை ஆகும். நமக்கு எதிரி என்று எண்ணிக்கொள்பவர்மீதும்கூட கெட்ட எண்ணத்தை மனதில் வைத்துக்கொள்ளக் கூடாது என்பதே அகிம்சை என்பதன் உண்மையான பொருள். இந்த எண்ணத்தில் எவ்வளவு முன்ஜாக்கிரதையான தன்மை அடங்கியிருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும். ‘உங்கள் எதிரி என்று நீங்கள் எண்ணுபவர்களிடம்கூட’ என்று நான் சொல்லவில்லை. ‘உங்கள் எதிரி என்று தம்மை எண்ணிக்கொள்பவரிடம்கூட’ என்று கூறியிருக்கிறேன். அகிம்சா தருமத்தைப் பின்பற்றி நடப்பவருக்கு விரோதி என்ற ஒருவர் இருப்பதற்கே இடமில்லை. விரோதி ஒருவர் உண்டு என்பதையே அவர் மறுக்கிறார்.

நேரான வகையில் அகிம்சை என்பதற்கு மிகுந்த அன்பு, அதிக அளவு தயை என்பதே பொருள். நான் அகிம்சையைப் பின்பற்றுகிறவனாக இருப்பின் என்னுடைய பகைவனிடத்திலும் நான் அன்போடிருக்க வேண்டும். தவறு செய்யும் தந்தையிடமோ மகனிடமோ எந்த முறைகளை அனுசரிப்பேனோ அவற்றையே தீமையைச் செய்யும் என் பகைவனிடமும் எனக்கு முன்பின் தெரியாதவரிடமும் நான் அனுசரிக்க வேண்டும். இந்தத் தீவிரமான அகிம்சையில் சத்தியமும் பயமின்மையும் அவசியமாகச் சேர்ந்தே இருக்கின்றன. தாம் அன்பு கொண்டிருப்பவரை ஒருவர் ஏமாற்ற முடியாது. அவனையோ அல்லது அவளையோ கண்டு அவர் பயப்படுவதோ பயமுறுத்துவதோ இல்லை.

எனக்கு அகிம்சையில் பற்றுதல் அதிகம் என்பதால் சத்தியத்துக்கு இரண்டாவது இடத்தையே நான் தருவதாக நீங்கள் நினைப்பது தவறு. அதேபோல் அகிம்சையைவிட சத்தியத்திடமிருந்தே நாட்டுக்கு அதிக பலம் கிடைத்தது என்று நீங்கள் எண்ணுவதும் தவறு. ஆனால், அதற்கு மாறாக நாடு ஏதாவது அபிவிருத்தியை அடைந்திருக்குமாயின் அகிம்சையைத் தன்னுடைய போராட்ட முறையாக நாடு மேற்கொண்டதுதான் அதற்குக் காரணம் என்று நான் திடமாக நம்புகிறேன். மேலும், அகிம்சை மனப்பான்மையை அடைவதற்குக் கஷ்டமான பயிற்சி முறையே அவசியமாகிறது என்பதும் பொருந்தும்.

அகிம்சையே என் கடவுள், சத்தியமே என் கடவுள், அகிம்சையை நான் நாடும்போது ‘என் மூலம் அதை அறி’ என்று சத்தியம் எனக்குக் கூறுகிறது. சத்தியத்தை நான் நாடும் போது அகிம்சை ‘என்னைக் கொண்டு அதைக் காண்’ என்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x