Published : 21 Sep 2014 12:32 PM
Last Updated : 21 Sep 2014 12:32 PM

இந்துத்துவா வேறு; இந்தியத்துவா வேறு

அகில இந்திய அளவில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு நடந்த இடைத்தேர்தலின் முடிவுகள் சில நல்ல செய்திகளைச் சொல்லியுள்ளன. அதிலும் குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் நடந்த இடைத்தேர்தலின் முடிவுகள் தேசிய அரசியலின் எதிர்கால அணுகுமுறைகளில் சில அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவை.

அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு மக்களின் ஆதரவை அணிதிரட்டுவதே ஜனநாயக அரசியல். பெரும்பான்மை மக்களின் ஆதரவை யார் தங்களுக்குச் சாதகமாக அணிதிரட்டுகிறார்களோ அவர்கள் ஆட்சியையும் அதிகாரத்தையும் கைப்பற்றுகிறார்கள். ‘தங்களவர்’ அல்லது ‘தங்களுக்கு நெருக்கமானவர்’ என்று மக்கள் யாரைக் கருது கிறார்களோ, அவர்களின் பின்னால் அணிதிரள்கிறார்கள்.

அடையாள அரசியலின் அபாயங்களை இந்தத் தலைமுறை எவ்வளவு தெளிவாகப் புரிந்துவைத்திருக்கிறது என்பதற்கு உத்தரப் பிரதேச இடைத்தேர்தல் முடிவுகள் அருமையான எடுத்துக்காட்டு. “வளைகுடா நாடுகளிலிருந்து திரட்டப்படும் பெரும் பணத்தை முதலீடாகக் கொண்டு இஸ்லாமிய இளைஞர்கள், விவரம் தெரியாத இந்துப் பெண்களை வசியப்படுத்தித் திருமணம் செய்துகொண்டு, பாலியல் பலாத்காரம் செய்து பின்பு மதமாற்றமும் செய்கிறார்கள். இந்த லவ் ஜிகாதை முறியடிப்பதற்கு இந்துக்களே அணிதிரண்டு பாஜகவுக்கு வாக்களியுங்கள்” என்று அறைகூவல் விடுத்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் யோகி ஆதித்யாநாத்தைத் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தின் தளபதியாக நியமித்துத் தேர்தலைச் சந்தித்தது பாஜக. “இந்த லவ் ஜிகாதை அரங்கேற்றும் இஸ்லாமியர்கள் இருக்க வேண்டிய இடம் ஒன்று பாகிஸ்தான் அல்லது கபுருஸ்தான் (கல்லறை)” என்ற கோஷம்தான் தேர்தல் பிரச்சாரம் எங்கும் எதிரொலித்தது.

புறக்கணித்த மக்கள்

பல நிலைகளில் பலவீனமாகி நின்ற அகிலேஷ் யாதவின் அரசு, லவ் ஜிகாதை அரங்கேற்றும் இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது என்ற சங்க பரிவார நிறுவனங்களின் பிரச்சாரத்தால் தேர்தல் வெற்றி உறுதி என்று பாஜக ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். சட்டம்-ஒழுங்கு, ஊழல், அரசு இயந்திரத்தின் மந்தம், பெருகிவரும் வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பல பிரச்சினைகளில் தோற்றுப்போன சமாஜ்வாதி கட்சிக்கு மக்கள் அமோகமாக வாக்களிக்க என்ன காரணம்? “என்ன நடந்தாலும் ஏற்றுக்கொள்வோம், இந்தியா என்னும் தத்துவத்தை உடைக்க அனுமதிக்க மாட்டோம்” என்று இந்தத் தலைமுறை சொன்னதுதானே உண்மை!

வளர்ச்சி, முன்னேற்றம், ஊழலற்ற-திறந்த நிர்வாகம், எல்லோருக்கும் நல்ல காலம் என்று நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குக் கேட்டவர்கள் இடைத்தேர்தலில் அடையாள அரசியலை முன்னெடுத்துச் சென்றதை மக்கள் ஏற்றுக்கொள்ள வில்லை. சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் மதரஸாக்களை விரிவாக்க 100 கோடி ரூபாயைத் தந்துவிட்டு, மதரஸாக்கள் தீவிரவாதிகளின் கூடாரம் என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சாக்ஷி மகராஜ் பிரச்சாரம் செய்த பாஜகவின் முரண்பட்ட அரசியல் நிலைப்பாட்டை மக்கள் நிராகரித்தார்கள்.

அரசியல் போலித்தனம்

பாஜகவின் முன்னணித் தலைவர்கள் முக்தர் அப்பாஸ் நக்வி, ஷா நவாஸ் ஹுசைன் போன்றவர்களின் மனைவியர் ஆசாரமான இந்துக் குடும்பத்துப் பெண்கள். இன்றும் இந்துக்களாகவே வாழ்கிறார்கள். பாஜகவின் மாநிலங்களவையின் முன்னாள் தலைவர் சிக்கந்தர் பகத்தும் இந்துப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டவர். பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஹேம மாலினியும், முன்னாள் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தர்மேந்திராவும் திருமணத்துக்காக இஸ்லாமியர்களாக மதம் மாறிக்கொண்டவர்கள். இவர்களைத் தங்களது முன்னணித் தேர்தல் பிரச்சாரகர்களாக வைத்துக்கொண்டு ‘லவ் ஜிகாத்’ என்று யோகி ஆதித்யாநாத் பிரச்சாரம் செய்ததை ‘கடைந்தெடுத்த அரசியல் போலித்தனம்’ என்பதை மக்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

ஆர்எஸ்எஸ் இயக்கத் தலைவர் மோகன் பகவத், “இந்த தேசத்தில் இஸ்லாமியர், கிறிஸ்தவர், பெளத்தர்கள், சீக்கியர்கள் அனைவரையுமே இந்துக்கள் என்றே அழைக்க வேண்டும்” என்று சொன்னபோதும், ஆதித்யாநாத், மேனகா காந்தி, சாஷி மகராஜ் போன்ற பாஜகவின் முன்னணித் தலைவர்கள் வகுப்புவாதத்தைத் தூண்டிவிடும் வகையில் பகிரங்கமாகப் பேசியபோதும், பிரதமர் வாய் திறக்கவில்லை என்பதை இந்தத் தலைமுறை கவனித்துக்கொண்டேதான் இருக் கிறது. எப்போதும் பேசாத மன்மோகன் சிங் இப்போதும் பேசாமல் இருப்பதில் வியப்பில்லை. ஆனால், பேச்சே மூச்சென்று இருக்கக்கூடிய பிரதமர் மோடி இதையெல்லாம்பற்றிப் பேசாமல் இருப்பதன் மர்மம் அவர்களுக்கு விளங்கவில்லை. “லவ் ஜிகாத் என்றால் என்ன?” என்று கேட்ட உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை இவர்கள் நம்பத் தயாராக இல்லை.

ஜாதி விட்டு மாற்று ஜாதியில் திருமணம் செய்துகொள்வதும், மாற்று மதத்தில் திருமணம் செய்துகொள்வதும் தேசவிரோதக் குற்றம்போல் கருதப்படுவதை இந்தத் தலைமுறை ஏற்றுக் கொள்வில்லை. தேசிய மனித உரிமை ஆணையம் தந்துள்ள தகவலின்படி உத்தரப் பிரதேச மாநிலத்தில், மகராஜ் கஞ்ச் மாவட்டத்தில் மட்டும் நடக்கும் திருமணங்களில் 75 சதவீதத்துக்கும் அதிகமானது குழந்தைத் திருமணங்கள். இந்தக் குழந்தைத் திருமணங்களைக் கண்டிப்பதற்கும் களைந்தெடுப்பதற்கும் சங்க பரிவார நிறுவனங்கள் ஏன் முன்வருவதில்லை என்ற கேள்வியை இந்தத் தலைமுறையினர் முன்வைக்கின்றனர். “பாரத் என்றோ - ஹிந்துஸ்தான் என்றோ உங்கள் விருப்பப்படி இந்த நாட்டை அழைத்துக்கொள்ளுங்கள். எங்கள் எதிர்காலம் பிறந்துவிட்டது. எங்களைப் பொறுத்தவரை இது டிஜிட்டல் இந்தியா” என்று அவர்கள் உரக்கச் சொன்னதை ஆட்சியாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

அபுல்கலாம் ஆசாதின் வாசகங்களைத்தான் இப்போது நினைவுகூர வேண்டும்: “ஆயிரம் ஆண்டுகள் நாம் சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கை நம்மை ஒரு தேசமாக உருவாக்கியுள்ளது. பல நூற்றாண்டுகளாக சத்தமில்லாமல் இயற்கை செதுக்கியதன் வெளிப்பாடே இது. இந்த உருக்கை நம் முன்னோர்கள் வார்ப்பாக வடித்தெடுத்து விட்டார்கள், காலம் தன் அதிகார முத்திரையை நம்மீது பதித்துவிட்டது. ஆம், அது உடையாமல் பார்த்துக்கொள்வது நமது கடமை.”

- சா. பீட்டர் அல்போன்ஸ்,காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x