Published : 20 Jun 2019 08:34 AM
Last Updated : 20 Jun 2019 08:34 AM

மக்களவையில் இருக்கைகளை எப்படி ஒதுக்குகிறார்கள்?- ஏன்? எப்படி?

இருக்கைகள் எப்படி ஒதுக்கப்படும்?

அதிக இடங்களை வென்று ஆட்சியைப் பிடித்த கட்சி அவைத்தலைவரின் வலது ஓரத்தில் அமரும். தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி 353 தொகுதிகளை வென்றிருப்பதால் முதல் நான்கு பத்திகளில் அவர்கள் அமர்ந்திருப்பார்கள். அதிலும் பாஜகவுக்கு முதலிடம். அந்தக் கட்சியினர் அமர்ந்து முடித்து மீதமுள்ள இடங்களில் கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் அமர்வார்கள். ஆளுங்கட்சி அமரும் இருக்கைகள் ‘கருவூல இருக்கைகள்’ என்று அழைக்கப்படுகின்றன. அவைத் தலைவருக்கு இடது புறமுள்ள இரண்டு பத்திகளில் எதிர்க்கட்சியினரான காங்கிரஸ் உள்ளிட்டவர்களும், பாஜக-காங்கிரஸ் இரண்டோடும் கூட்டணி வைத்துக்கொள்ளாத கட்சியினரும் அமர்வார்கள்.

மக்களவையில் மொத்தம் எத்தனை இருக்கைகள்?

மக்களவையில் மொத்தம் 550 இருக்கைகள் இருக்கின்றன. உறுப்பினர்களின் மொத்த அளவு 545. இந்த எண்ணிக்கை ஆங்கிலோ-இந்திய நியமன உறுப்பினர்கள் இரண்டு பேரையும் உள்ளடக்கும். ஒரு தொகுதியில் (வேலூர்) தேர்தல் நடக்காததால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 542. அவை நடைபெறுவதற்கு குறைந்தபட்சம் 10% உறுப்பினர்கள் அவையில் இருப்பது அவசியம்.

பிரதமர் எங்கே அமர்வார்?

அவைத்தலைவருக்கு வலது ஓரத்தில் முதலாவதாக அமர்வார். அவரை அடுத்து ராஜ்நாத் சிங் அமர்வார். மோடி உட்கார்ந்திருக்கும் வரிசைக்குப் பின்னுள்ள இடங்களை முதன்மையாக அமைச்சர்களும் அவர்களை அடுத்து அந்தக் கட்சியைச் சேர்ந்த எம்பிக்களும் அமர்வார்கள்.

சோனியா காந்தி எங்கே அமர்வார்?

முதல் வரிசையில் அவைத்தலைவருக்கு இடது ஓரத்தில் மக்களவைத் துணைத்தலைவர் அமர்ந்திருப்பார். அவரை அடுத்து சோனியா காந்தி அமர்ந்திருப்பார்.

நாடாளுமன்ற இருக்கைகளின் அமைப்பு எப்படி இருக்கும்?

அவைத் தலைவரின் இருக்கையை மையமாகக் கொண்டு அரை வட்டமாக இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கும். மொத்தம் ஆறு பத்திகள். அவைத்தலைவருக்கு வலது ஓரத்திலும் இடது ஓரத்திலும் உள்ள பத்திகளில் தலா 97 இருக்கைகள் இருக்கும். நடுவே உள்ள பத்திகள் ஒவ்வொன்றிலும் தலா 89 இருக்கைகள் இருக்கும்.        

முன்வரிசையில் யாரெல்லாம் தற்போது வாய்ப்பிழந்திருக்கிறார்கள்?

தேவ கவுடா, மல்லிகார்ஜுன கார்கே இருவரும் தேர்தலில் தோல்வியடைந்திருக்கிறார்கள். அதேபோல் அதிமுக எம்பியும் முன்னாள் மக்களவைத் துணைத்தலைவருமான தம்பித்துரையும் தோல்வியடைந்திருக்கிறார். எல்.கே.அத்வானி, சுஷ்மா சுவராஜ் ஆகிய இருவருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை. பிஜு ஜனதா தளத்தின் பத்ருஹரி மஹ்தாப், திரிணமூல் காங்கிரஸின் சுதீப் பந்தோபாத்யாயா ஆகிய இருவரும் தேர்தலில் வெற்றி பெற்றும் அவர்களின் கட்சிகள் போதுமான எண்ணிக்கையில் இல்லாததால் முன்வரிசை இருக்கைகளை அவர்கள் இழக்க வாய்ப்பிருக்கிறது.

முன்வரிசை யாருக்கெல்லாம்? என்ன கணக்கு?

அதிக இடங்களை வென்ற கட்சியின் இடங்களை முன்வரிசையில் உள்ள இருக்கைகளால் பெருக்கி அதை அவையின் மொத்தக் கொள்ளளவால் வகுத்துக்கொண்டால் கிடைக்கும் எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் வரிசையில் இருக்கைகள் ஒதுக்கப்படும். உதாரணத்துக்கு இம்முறை பாஜக வென்ற இடங்கள் 303; இதை முன்வரிசையில் உள்ள இருக்கைகள் 20-ஆல் பெருக்கினால் 6060. அவையின் மொத்தக் கொள்ளளவான 550-ஆல் இதை வகுத்தால் 11.01. ஆக, பாஜகவுக்கு முன்வரிசையின் 20 இடங்களில் 11 அல்லது 12 கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

எதிர்க் கட்சியினருக்கும் ஏனையோருக்கும் முதல் வரிசையில் வாய்ப்பு கிடைக்குமா?

 அவர்கள் வென்ற எண்ணிக்கையைப் பொறுத்து வாய்ப்பு கிடைக்கும். மேற்கண்ட கணக்கின்படி போன தடவையைப் போலவே காங்கிரஸுக்கு முன்வரிசையில் இரண்டு இருக்கைகள் கிடைக்கும். திமுகவுக்கு ஒரு இருக்கை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. 5-க்கும் குறைந்த தொகுதிகளை வென்ற கட்சியைச் சேர்ந்தவர்களின் மூத்த நாடாளுமன்றவாதி, பொதுப் பணியில் புகழ்பெற்றவர், முன்னாள் பிரதமர் ஆகிய வரையறைகளின் கீழ் முன்வரிசையில் ஒருவருக்கு இடம் ஒதுக்கலாம். அதுவும் அவைத்தலைவரின் முடிவுக்கு உட்பட்டதே. 2014-ல் தேவ கவுடாவுக்கு முன்வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டதை நினைவுகூரலாம். மூத்த தலைவர் என்ற அடிப்படையில் அப்போது முலாயம் சிங் யாதவுக்கும் இடம் ஒதுக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x