Published : 13 Jun 2019 07:18 AM
Last Updated : 13 Jun 2019 07:18 AM

மிஞ்சப்போவது வெறும் வரலாற்றுக் குறிப்புகளே... நீரல்ல!

மதுரை ஒரு மாநகராக அறியப்படத் துவங்கிய நாட்களில் உலகின் பல நகரங்கள் மனிதக் கற்பனையிலேயே இல்லை. இன்றோ மதுரையின் வடகரையில் இருக்கும் குடியிருப்புப் பகுதிகளுக்குக் காவிரி ஆற்றின் நீரை குடிநீராகப் பயன்படுத்தும் நிலை. அரசியல் சிக்கல்களால் அல்லல்படும் சோழ தேசத்து ஆறு, தனது கடைசிக் காலத்தில் பாண்டிய தேசத்துக்கும் படி அளக்கிறது. வைகை ஆற்றில் வெள்ளம் என்பதெல்லாம் புராணிகக் கால நினைவுகளாக, பண்டிகைகளாக எஞ்சியிருக்க, ஆற்றிலே நீர் ஓடாத ஆண்டின் பெரும்பாலான நாட்களில், வாகனங்களை நிறுத்தவும், விளையாடவும் அதைவிட மோசமாக ஆற்றை ஒரு கழிப்பிடமாகவும் பயன்படுத்துகிறோம்.

மூன்று ஆறுகள் நீர்வளம் சேர்த்த சென்னை, சோழமண்டலம் பகுதியின் மெட்ரோ நகரமாக இருந்ததற்கான சாட்சிகளாக இன்றும் பல வரலாற்றுச் சின்னங்களும், வீதிப் பெயர்களும் எஞ்சியிருக்கின்றன. நீளமான நன்னீர்க் கால்வாய் என்று அறியப்பட்ட பக்கிங்காம் கால்வாயில் மகாபலிபுரம் வரை படகுகள் சென்றதாகத் தமிழ் இலக்கியக் குறிப்புகள் உண்டு. கோட்டூர்புரம் அடையாறு ஆற்றின் கரையில் குதிரைகள் குளிப்பாட்டப்பட்டதைப் பார்த்த, இன்னும் பணிஓய்வுக் காலத்தை அடைந்திடாத பெரியவர்கள் சென்னையில் இருக்கிறார்கள். கால்வாயைத் தூர்த்துக் கட்டிய பறக்கும் ரயில் நிலையம் ஒன்றின் கீழே சாம்பல் நிறச் சேற்றில் ஒரு சாக்கு மூட்டையின் மேலே சிக்கித் தடுமாறிக் கொண்டிருந்த ஆமை ஒன்றைப் பார்த்தேன். சிற்றுயிர் அழியும் நகரத்தில் மனிதர்கள் நீரின்றித் தவிப்பது ஒரு முரணுமல்ல.

நெல்லையின் தோல் நோய்

அசோகர் காலக் குறிப்புகளில் இடம்பெற்றிருந்த தாமிரபரணி ஒன்றே இன்றும் தனது சுரப்பிகளைத் தூர்த்துவிடாமல் வைத்திருக்கிறது. ஆனால், சூழல் மாறுபாட்டால் என்றாவது தாமிரபரணிக்கு நீரளிக்கும் சோலைக்காடுகள், புல்வெளிகள் அழிந்தால் நமக்கு மிஞ்சப்போவது வெறும் வரலாற்றுக் குறிப்புகளே அன்றி, நீரல்ல. தாமிரபரணியின் நீரில் குளித்தால் தோல் வியாதிகள் நீங்கும் என்று புதுமைப்பித்தனின் கதைகளில் ஒரு வரி உண்டு. தூத்துக்குடி நகரின் தொழிற்சாலைகளுக்கும் சேர்த்தே தாமிரபரணி சுரக்கிறது. பாபநாசம் முழுக்க மனிதர்களின் ஆடைகள் கழிவாக ஆற்றில் கலக்கின்றன. பாவம் நாசமாகிறதோ இல்லையோ ஆனால், ஆறு நாசமாவது கண்கூடு. முழுக்க வேதிப்பொருட்களால் ஆன சாயங்கள் ஆற்றில் கரைவதால் முதலில் மீன்களும் இறுதியில் நாமும் பாதிப்புக்கு உள்ளாகிறோம். கொஞ்சம் முயன்றால் காப்பாற்ற முடிகிற அளவிலிருக்கும் ஒரே ஆறான தாமிரபரணி எனும் நெல்லைப் பகுதியின் தோலுக்கே இன்று நோய் பரவியிருக்கிறது.

சிறுவாணி சுவை?

உலகின் சுவையான தண்ணீர் என்று சொல்லப்படும் சிறுவாணி ஆற்றின் நீர் கேரளத்தவர்களின் தயவில் இன்றும் நமக்குக் கிடைக்கிறது என்றாலும் கோவை நகரத்தின் பல பகுதிகளுக்கும் அதன் முந்தைய சுவையோடு வருவதில்லை. நீர் அளவைக் கூட்ட நிலத்தடி நீரைக் கலக்க, பழைய சுவை அடியோடு மறக்கப்படும் நிலை. நம்மால் நீர்ப் பயன்பாட்டை அதிகரிக்க முடியுமே அன்றி, ஒருபோதும் நீர் அளவை அதிகரிக்க முடியாது. அளவையே அதிகரிக்க முடியாது எனும்போது அதன் சுவையை நாம் மறந்துவிட வேண்டியதுதான். வாகனங்களைக் கழுவவும் சிறுவாணி ஆற்றின் நீரைப் பயன்படுத்திய கோயமுத்தூர்க்காரர்களின் பழைய சொகுசு இன்று ஒரு வெற்றுப் பெருமை மட்டுமே.

காவிரி ஆற்றின் அழகைக் காண வேண்டும் என்றால் அதை ஒகேனக்கல் அருவிக்கு மேற்பகுதியிலேதான் காண முடியும். ஒகேனக்கல் அருவியின் மசாஜ் எண்ணெய், குளியல் பொருட்களோடு, மீன் பொரித்த மசால் கரைந்த நீர் மேட்டூரைக் கடந்ததும் தொழிற்சாலை, வீட்டுக் கழிவு நீரோடும் சேர்கிறது. திருச்சி மாநகரோ, காவிரி ஆற்றின் கரைகளில் நிற்கும் கோயில்களேகூட வெள்ளக் காலத்தையும், கர்நாடக அரசின் கருணைக் காலத்தையும் தவிர மணல் அள்ளும் லாரிகளின் வரிசை ஒழுங்கில் வியந்திருக்க வேண்டியதுதான். கும்பகோணத்துக்காரர்கள் ஒரு அறிவுரை சொல்கிறார்கள், காவிரி ஆற்றின் புதுவெள்ளத்தில் குளிக்கக் கூடாதென்று. அத்தனை கழிவுகளோடு வரும் புதுவெள்ளம் குளிக்கவே லாயக்கற்றது என்று. திருவையாற்றின் மணல் வரிகளிலோ இசையின் தடமில்லை, உதிரமில்லாத ஆற்றின் உலர் தசைகளே மணலாக எஞ்சியிருக்கிறது.

பாலாற்றின் சடலம்

தென்பெண்ணை ஆறு, இன்று பெங்களூரு நகரத்தின் சாக்கடை. ஒருவகையில் காவிரி ஆற்றின் நீரைக் கழிவு நீராக மாற்றி மற்றொரு ஆற்றை வாழ வைக்கிறோம். அந்த ஆற்றின் முதல் அணையான ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் வேதிக் கழிவுகளால் எழும் நுரை தூரத்திலிருந்து பார்க்க தெர்மோகோல் அட்டைகளைப் போலத் தோற்றமளிக்கிறது. கால்நடைகள் நீரருந்தாத அந்த ஆற்றின் நீரில் கிருஷ்ணகிரி மாவட்டம் முழுக்க விவசாயம் செழிக்கிறது. ஏக்கருக்கு 100 கிராம் தெளித்தால் போதுமான வீரியமிக்க ரசாயனங்களாலும், உரங்களாலும். 800 ஆண்டுகள் பழமையான ஓசூர் இராமநாய்க்கன் ஏரியில் இன்று சாலைப் பணி நடக்கிறது. இறந்தே போய்விட்டதாகச் சொல்லப்படும் பாலாற்றின் கற்கண்டு போன்ற நிலத்தடி நீரில்தான் கல்பாக்கம் அணு உலையே தன்னைக் கழுவுகிறது. ஆனால், பாலாற்றின் கட்டாந்தரையோ தன்னைக் குளிர்வித்துக்கொள்ளவே முடியாத துயரத்தில் சடலமாகக் கிடக்கிறது.

நம்மைப் பொறுத்தவரையில் ஆறுகள் புனிதமானவை. மற்றெல்லாவற்றோடு மனிதனின் பாவங்களை நீக்கும் ஒரு சிறப்புக் குணத்தையும் அதற்கு வழங்கியிருக்கிறோம். நாம் புனிதத்துக்கும் தூய்மைக்கும் வேறுபாடுகள் வைத்திருக்கிறோம். புனிதத்தைப் பற்றிக் கவலைப்படுபவர்களான நாம் தூய்மையைப் பற்றியும் நிறையவே கவலைப்பட வேண்டும். தூய்மையற்ற ஒன்று புனிதமானது ஆகுமா என்ற கேள்வி எழுப்பப்பட வேண்டும்.

- பாலசுப்ரமணியன் பொன்ராஜ், ‘துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை’ நூலின் ஆசிரியர்,

தொடர்புக்கு: tweet2bala@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x