Published : 04 Jun 2019 09:33 AM
Last Updated : 04 Jun 2019 09:33 AM

தண்ணீர் தண்ணீர்

தண்ணீர்ப் பஞ்சத்தால் தனியார் டேங்கர் லாரிகளின் வாடகை 40% உயர்ந்திருக்கிறது. 12 ஆயிரம் லிட்டர் லாரி தண்ணீருக்காக ரூ.4 ஆயிரத்திலிருந்து ரூ.5 ஆயிரம் வரை செலவழிக்கிறார்கள். நகரவாசிகளில் 40% பேர் இந்த லாரிகளைத்தான் நம்பியிருக்கிறார்கள்.

சென்னை குடிநீர் வாரியம், சிக்கராயபுரத்தில் உள்ள இரண்டு கல்குட்டைகளிலிருந்து தண்ணீர் எடுக்கிறது. இதில் ஒரு குட்டை முற்றிலும் வறண்டுவிட்டது. இன்னொரு குட்டையில் தண்ணீர் எடுக்கும் வேலைகள் தொடங்கிவிட்டன. இந்தக் குட்டை இன்னும் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே தாக்குப்பிடிக்கும்.

டெல்லி, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட 21 இந்திய நகரங்களின் நிலத்தடி நீர் 2020-ல் தீர்ந்துபோய்விடும் என்று நிதி ஆயோக் அறிக்கை (2018) தெரிவிக்கிறது. இதனால், 10 கோடி மக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாவார்கள். இதே நிலை தொடர்ந்தால் 2030-ல் குடிநீர் கிடைக்காத மக்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 40%-த்தைத் தொடும்.

உலகின் ஒட்டுமொத்த நன்னீரில் இந்தியாவின் பங்கு 4%. ஆனால், உலக மக்கள்தொகையில் இந்தியாவின் பங்கு 16%.

2002-2016 காலகட்டத்துக்குள் இந்தியாவின் நிலத்தடி நீர் மட்டம் ஆண்டுக்கு 10-லிருந்து 25 மிமீ வரை குறைந்திருக்கிறது.

சென்னையின் நீர்த் தேவையைப் பூர்த்திசெய்யும் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளின் மொத்தக் கொள்ளளவு 1,125.7 கோடி கன அடி. கடந்த ஜூன் 2 அன்று இந்த நான்கு ஏரிகளில் இருந்த மொத்த நீரின் அளவு வெறும் 5.8 கோடி கன அடிதான். அதாவது, மொத்தக் கொள்ளளவில் 0.51%. கடந்த ஆண்டில், இதே சமயத்தில் 200 கோடி கன அடி நீர் இருந்தது.

உலக அளவில் பாதுகாப்பான தண்ணீர் போதுமான அளவு கிடைக்காமல் ஒவ்வொரு ஆண்டும் 35 லட்சம் பேர் இறக்கிறார்கள். இந்தியாவில் மட்டும் இந்த எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x