Last Updated : 08 Sep, 2014 09:43 AM

 

Published : 08 Sep 2014 09:43 AM
Last Updated : 08 Sep 2014 09:43 AM

அரசியல் விழுங்கிய உரிமைக் கடல்

காலங்காலமாகக் கடலோடிகள் கடலில் எதிர்கொள்ளும் பெரும் பிரச்சினை எல்லை தவறிவிடுவது. ஒருகாலம் வரைக்கும் கப்பல்களின் பயணங்களே கரையைப் பார்த்தவாறுதான் அமைந்திருந்தன, திசை தவறி எங்கோ சென்றுவிடக் கூடாது என்று. அப்படிப்பட்ட திசை தவறிய பயணம் ஒன்றுதான் இந்தியாவைச் சென்றடைய வேண்டும் என்று கிளம்பிய கொலம்பஸை அமெரிக்காவில் கொண்டு இறக்கியது. அமெரிக்கா ஒரு காலனி நாடாகி, பின் உலகின் மிகப் பெரிய நவீன காலனியாதிக்க நாடாக உருவெடுக்க வழிவகுத்தது. ஒரு கடல் கலத்தில் ஆயிரம் வசதிகள் இருந்தாலும், அடிப்படையில் நீரோட்டமும் காற்றுமே அதை இயக்குகின்றன. இந்த இயற்கையின் இயக்கத்தைத் தனதாக வரித்துக்கொள்ள மனிதன் நடத்தும் போராட்டமே அவன் கண்டறியும் தொழில்நுட்பங்கள். ஆனால், இயற்கையின் பெரும் பிள்ளையான கடல் என்னும் பிரம்மாண்டத்தின் முன் இந்தத் தொழில்நுட்பங்களெல்லாம் எம்மாத்திரம்?

இதனாலேயே, பாரம்பரியக் கடலோர ஊர்களில், கடலோடிகள் மத்தியில் ஒரு மரபு உண்டு. திசை தவறி வருபவர்களுக்கு இளைப்பாற இடம் கொடுத்து, உதவிசெய்து ஊருக்கு வழியனுப்பிவைப்பது. தமிழகக் கடலோடிகள் இன்னும் ஒரு படி மேலே. ஒரு மனிதன் எந்த நாட்டிலிருந்து வந்து இங்கு கரையேறினாலும் சரி, அவனை உபசரித்து, உடல் தேற்றி, அவனுக்குப் புத்தாடை எடுத்துக்கொடுத்து, செலவுக்குப் பணம் கொடுத்து ஊருக்கு அனுப்பிவைப்பது தமிழகக் கடற்கரை மரபு.

கடலோடிகளுக்கு எது எல்லை?

இங்கே கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் உண்டு. இங்கே நாம் விவாதிக்கும் எல்லைகளெல்லாம் நவீன காலத்தில் நாடுகள் வகுத்திருக்கும் எல்லைகளே தவிர, கடலோடிகள் கடலைப் பிரிக்க வகுக்கும் எல்லைகளே வேறு. அது உனக்குத் தேவையானதை நீ எடுத்துக்கொள்; எனக்குத் தேவையானதை நான் எடுத்துக்கொள்கிறேன் என்கிற எல்லை. நாடுகள் வரையறுக்கும் எல்லைகளைவிடவும் சக்தி வாய்ந்தவை இந்த எல்லைகள்.

இந்தியர்கள் என்பதாலேயே ஆந்திரக் கடலோடிகளின் படகுகள் கேரளக் கடலில் வந்து மீன்பிடித்துவிட முடி யாது; தமிழக எல்லை என்பதாலேயே குமரிப் படகுகள் நாகப்பட்டினக் கடலில் வந்து மீன்பிடித்துவிட முடியாது. அவரவர் அவரவருக்கான எல்லைகளை வகுத்துக்கொண்டே தொழிலில் ஈடுபடுகிறார்கள். இதைத் தாண்டிக் கடலோடிகள் தங்கள் எல்லைகளைத் தாண்டிவிட இரு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, திசை தெரியாமல் அடித்துச் செல்லப்படுவது. இரண்டு, தமக்கான மீன்களைத் தேடி, தங்கள் எல்லையின் விளிம்பு வரை செல்லும்போது இன்னோர் எல்லைக்குள் சென்றுவிடுவது.

உலகெங்கும் கடலோடிகள் இந்த இரு காரணங்களாலும் இன்னொரு நாட்டு எல்லையில் இருக்கும்போது கைதுசெய்யப் படுகிறார்கள். இந்தியாவைச் சுற்றி எடுத்துக்கொண்டால், ஜப்பான் - சீனா இரு நாட்டுக் கடலோடிகள் இடையே இப்படியான கைதுகள் நடக்கின்றன. இந்தியா - பாகிஸ்தான் இடையே கைதுகள் நடக்கின்றன. வங்கதேசம் - மியான்மர் இடையே நடக்கின்றன. ஏன், தலைமன்னார் பக்கம் போய் நம் கடலோடிகள் எப்படி மாட்டிக்கொள்கிறார்களோ, அப்படியே இலங்கைக் கடலோடிகள் கேரளப் பக்கம் வந்து மாட்டிக்கொள்கிறார்கள். ஆனால், பிடிபடும் கடலோடிகள் வேறு எங்கும் இப்படித் தாக்கப்படுவது கிடையாது, காட்டு மிராண்டித்தனமாகச் சித்திரவதை செய்யப்படுவது கிடையாது, சுட்டுக்கொல்லப்படுவது கிடையாது. இலங்கை ராணுவம் மட்டும் இப்படி மோசமாக நடந்துகொள்ள என்ன காரணம்? இலங்கையின் சமூக உளவியலை வரலாற்றுபூர்வமாக விளக்கினார்கள் கடல் வணிகத்தில் இருக்கும் நம்மவர்கள். இவர்கள் பல தலைமுறைகளாக வாணிபத்துக்காக இலங்கை சென்று வருபவர்கள்.

ஆதிக் கதை

“ஆதி காலத்துல நாமெல்லாம் ஒண்ணா இருந்திருக் கோம்கிற உணர்வு நமக்கு எப்படி உண்டோ, அதேபோல அவங்களுக்கும் உண்டு. அது கலாச்சாரரீதியா நம்மை இணைக்குது. ஒரு பிணைப்பை உண்டாக்குது. அதேபோல, வரலாற்றுக் காலந்தொட்டே நம்ம மேல அவங்களுக்கு ஒரு அச்சம் உண்டு. அதுக்குக் காரணம் உண்டு. புராண காலத்துல ராவணன், வரலாற்றுக் காலத்துல ராஜராஜன், ராஜேந்திரன், ரகுநாதநாயக்கன்னு, இந்தியா ஒரு அமைப்பா உருவெடுத்தப்போ அந்த அச்சம் அதிகமாச்சு. இந்தியாவுக்குச் சுதந்திரம் கெடைச்சப்போ அவங்க இன்னும் பதற்றமானாங்க. அதுல நியாயம் உண்டு. ஏன்னா, இந்தியாங்கிற அமைப்பே பல நாடுகளோட தொகுப்பு. இலங்கை, தமிழ்நாட்டுப் பரப்பளவுல பாதியை மட்டுமே கொண்ட நாடு. வெறும் ரெண்டு கோடி சொச்சம் மக்கள்தொகை. இப்பிடி ஒரு குட்டி நாட்டை இவ்ளோ பக்கத்துல உள்ள எந்தப் பெரிய நாடும் விட்டுவைக்காது. போதாக்குறைக்கு ரெண்டு நாட்டுக்கும் பிணைப்பு மாரி தமிழ் பேசுற மக்கள். இதுதாம் அடிப்படைல நம்ம மேல அவங்களுக்குள்ள இருக்குற அச்சத்துக்கான அடிவேரு.

சுதந்திரத்துக்கு அப்புறம் ரெண்டு விஷயத்துல அவங்க கவனமா இருந்தாங்க. மொத விஷயம், இலங்கையோட பூர்வகுடிகளான ஈழத் தமிழர்களைக் கொஞ்சம் கொஞ்சமா ஒடுக்குறது. ரெண்டாவது விஷயம், பிற்காலத்துல இங்கே தமிழ்நாட்டுலேர்ந்து போய் தோட்டத் தொழிலுக்காக அங்கே குடியேறின மலையகத் தமிழர்களைத் தொரத்திர்றது. நேரு காலத்துலயே அவங்களை இந்தியா ஏத்துக்கணும்னு நெருக்கடி கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. அவரு ஒப்புக்கலை. இலங்கையோட வளர்ச்சியில அவங்களோட பங்கு இருக்கு, அவங்களா இந்தியா வர விரும்பாதபட்சத்துல இது சம்பந்தமா பேச முடியாதுன்னு சொல்லிட்டார். ஆனா, நேருவோட மரணத்துக்கு அப்புறம் சாஸ்திரி காலத்தை இவங்க நல்லாப் பயன்படுத்திக்கிட்டாங்க. பாகிஸ்தான்லேர்ந்து வர்ற ஒரு கோடிப் பேரை ஏத்துக்கிறீங்க. அதுல பத்துல ஒரு பங்கு ஆளுங்ககூட இங்கெ இல்ல, இவங்களையும் ஏத்துக்குங்கன்னு சொல்லி நெருக்குதல் கொடுத்தாங்க. சீனப் போர் தோல்வி பாதிப்புல இந்தியா இருந்த சமயம் அது. அப்பிடி இப்பிடின்னு சாஸ்திரிகிட்ட பேசி, கடைசியில அஞ்சே கால் லட்சம் பேரை இந்தியாவை ஏத்துக்க வெச்சிட்டாங்க. அப்புறம் இந்திரா காந்தி காலத்துல ஒரு முக்கா லட்சம் பேரை இந்தியாவை ஏத்துக்க வெச்சாங்க. சிறீமாவோ பண்டார நாயக செஞ்ச வேலை இது. அடுத்து, ஈழத் தமிழர்களைக் குறிவெச்சு நகர்த்த ஆரம்பிச்சாங்கங்கிற கதை உலகத்துக்கே தெரியும்” என்கிறார் புகாரி.

கச்சத்தீவு பறிபோன கதை

“உலகத்துலயே ரொம்ப நெருக்கமான கடல் எல்லை நமக்கு இடையில இருக்குறது. அதனால, கடல்ல தன்னோட ஆதிக்கத்தை நிலைநிறுத்திக்கிறதுலேயும் ஆரம்பத்துலேர்ந்து அவங்க குறியா இருந்தாங்க. 1956-57-ல இந்தியா தன்னோட கடல் எல்லையைப் புதுசா வரையறுத்துச்சு. அதாவது, கடற்கரையிலேந்து 6 கடல் மைல் வரைக்கும் இந்தியா வோட கடல் எல்லையின்னும், 100 கடல் மைல் பரப்பு வரைக்கும் தனக்கு உரிமை உண்டுன்னும் அறிவிச்சுச்சு. இது நடந்த கொஞ்ச காலத்துலயே இலங்கையும் தன்னோட கடற்கரையிலேந்து 6 கடல் மைல் வரைக்கும் இலங்கையோட கடல் எல்லையின்னும், 100 கடல் மைல் பரப்பு வரைக்கும் தனக்கு உரிமை உண்டுன்னும் அறிவிச்சுச்சு. அதே மாதிரி, 1967-ல எங்க கடல் எல்லை 12 கடல் மைல்னு இந்தியா அறிவிச்சதும், 1970-ல எங்க கடல் எல்லை 12 மைல்னு இலங்கையும் அறிவிச்சுச்சு. கடலை அவங்க எவ்வளவோ முக்கியமா பார்க்குறாங்கங்கிறதுக்கு இது ஒரு உதாரணம்தான்.

ராமநாதபுரம் மன்னரோட ஜமீன்ல உள்ளடக்கம் கச்சத்தீவு. கடல் வளம் அந்தப் பகுதில ஜாஸ்தி. காலா காலமா, மீன்பிடிக்கிறது மட்டும் இல்லாம, முத்துக்குளி, சங்குக்குளின்னு எல்லாம் நடந்துக்கிட்டிருந்த பகுதி. அப்படிப் போகும்போது, கலத்தைக் கரையில ஒதுக்கிட்டு, தீவுல வலையை உலர்த்திட்டு, இளைப்பாறிட்டு வருவாங்க. அங்க உள்ள அந்தோனியார் கோயில் நூறு வருஷத்துக்கு முன்னாடி நம்மாளுங்க கட்டினது. ஆரம்பத்துலேர்ந்தே இலங்கை கண்ண இது உறுத்திக்கிட்டுருந்துச்சு. அந்தத் தீவால ஒண்ணும் பெரிய பிரயோஜனம் கிடையாது. ஆனா, இந்தியாவோடதுன்னு ஒப்புக்கிட்டா, அதைக் கடந்தும் நமக்குக் கடல்ல உரிமை இருக்குன்னு ஆயிடுமே. அதனாலயே பிரச்சினை பண்ணிக்கிட்டு இருந்தாங்க.

நம்ம அரசாங்கம் நேரு காலத்திலேர்ந்தே கச்சத்தீவு விவகாரத்தை ஒரு பொருட்டா எடுத்துக்கலை. அப்புறம் பேசிக்கலாம், பேசிக்கலாம்னு தள்ளிப்போட்டுக்கிட்டே போச்சு. வங்கப் போருக்குப் பின்னாடி, அவங்க சமயம் பார்த்து அடிச்சிட்டாங்க. 1973-ல இந்திரா காந்தி கொழும்புக்கு வந்தாங்க. ராஜ வரவேற்பு. சிறீமாவோ பண்டார நாயக ரொம்ப நெருக்கமான உறவை இந்திராவோட உருவாக்கிக்கிட்டாங்க. 1974-ல சிறீமாவோ பண்டார நாயக டெல்லிக்குப் போனப்போ, கச்சத்தீவோட கதை முடிஞ்சுது. அது இலங்கையோடது ஆயிட்டு. தன்னோட அரசியல் நெருக்கடியைக் காரணமாச் சொல்லி, ஒரு அரசியல் உதவியாவே கேட்டு கச்சத்தீவை வாங்கிட்டாங்க. 1974 ஒப்பந்தத்துல, தமிழகத்தைச் சேர்ந்த பாரம்பரியக் கடலோடிகளுக்கு ஒரு பாதுகாப்பு இருந்துச்சு. தீவு மேலான அவங்களோட பாரம்பரிய உரிமைக்கு ஒரு பாதுகாப்பு இருந்துச்சு. 1976-ல போட்ட ஒப்பந்தத்துல அதுவும் போச்சு” என்கிறார் தரண்.

அந்தக் கேள்விக்கு என்ன பதில்?

“இதையெல்லாம் தாண்டி, நம்ம ஆளுங்க பக்கமும் சில தப்புங்க இருக்கு” என்று ஆரம்பித்த ஆறுமுகத்திடம் நேரடியாக அந்தக் கேள்வியைக் கேட்டேன். நாகப்பட்டினத்தில் தொடங்கி ராமேசுவரம் வரைக்கும் நான் பார்த்தவர்களிடமெல்லாம் கேட்ட கேள்வி.

“நீங்க மத்த எல்லாத்தையும் பேசறதுக்கு முன்னாடி, ஒரு கேள்விக்குப் பதில் சொல்லணும். நம்ம ஆளுங்க, நம்ம எல்லைக்குள்ள மட்டும்தான் மீன் பிடிக்கிறாங்களா இல்ல, எல்லை தாண்டியும் போறாங்களா?”

(அலைகள் தழுவும்...)

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x