Published : 19 Jun 2019 07:08 AM
Last Updated : 19 Jun 2019 07:08 AM

சுக்காம்பாறையும் சோலைவனமாகும்: நிலத்தடி நீர் பாதுகாப்புக்கு எளிய வழிமுறை

மரம் வளர்ப்பு, மழைநீர் சேகரிப்பை எளிதாக்கும். அதற்கான வழிமுறையைத் தனது பண்ணையில் வெற்றிகரமாகச் செயல்படுத்திக்கொண்டிருப்பவர் விவசாய விஞ்ஞானி இ.ஆர்.ஆர்.சதாசிவம். மண்ணின் வகையை அறிந்து அதற்கேற்ற மரங்களை நட்டால், தரிசும் விளைநிலமாகும் என்பது இவர் கோட்பாடு. காடு வளர்ப்பும் விவசாயம்தான் என்பதை ஆயிரக்கணக்கானோருக்கு சொல்லிக்கொடுத்து ஊக்கப்படுத்தியவர். அதற்காக, ‘இந்திரா பிரியதர்ஷினி விருக்ஷாமித்ரா’ விருது பெற்றவர்.

20 ஆண்டுகளுக்கு முன்பாக நான் அவரை முதன்முதலாகச் சந்தித்த நேரத்தில், தன் சொந்த ஊரான கோவை, கிணத்துக்கடவு, ஏலூர் கிராமத்திலிருந்து புதுக்கோட்டை அருகே உள்ள மு.சோழகம்பட்டி கிராமத்தை நோக்கிப் புலம்பெயரும் ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தார். அப்போது மு.சோழகம்பட்டி தரிசு நிலங்களைவிட மோசமான பூமியாக இருந்தது. ஓணான்கூட முட்டை வைக்காது என்று சொல்வார்களே அப்படி மருந்துக்கும் ஈரப்பசை இல்லாத பூமி. ஒரே ஒரு அடி தோண்டினாலே கடுமையான சுக்காம்பாறைகள் வெளிப்படும்.

தலைகீழ் மாற்றம்

அதே மு.சோழகம்பட்டியில் சமீபத்தில் சதாசிவத்தைச் சந்தித்தேன். நம்பவே முடியவில்லை. அத்தனையும் பசுமைக்காடு. கோவை பண்ணை, ஐக்கியப் பண்ணை என்ற பெயர்களில் கம்பி வேலி போடப்பட்டு பாதுகாக்கப்பட்ட சுமார் 100 ஏக்கர் விரிந்து பரந்த பண்ணைகள். அதில் மா, பலா, சப்போட்டா, நெல்லி, புளி, வேம்பு என 285 வகை மரங்கள். ஓணான் முட்டை வைக்காத பகுதியாக இருந்த அந்த நிலத்தில் இப்போது முயல், உடும்பு, காட்டுக்கோழி, மயில் போன்று இன்னபிற பறவைகள், விலங்குகள் திரிவதைக் கண்டேன்.

இரண்டு ஆழ்துளைக் கிணறுகள். அதற்கு 3 ஹெச்.பி., 2 ஹெச்.பி திறனில் மோட்டார்கள். அதற்குத் தேவையான மின்உற்பத்தி செய்யும் சோலார் மின்கட்டமைப்பு. 2, 3 மற்றும் 4 ஏக்கர் பரப்பளவுகளில் 40 அடி ஆழம், 50 அடி ஆழத்தில் நான்கு குட்டைகள். அதைச் சுற்றியே பொக்லைன் மூலம் 15 அடி ஆழம், 6 அடி அகலம் 70 முதல் 100 அடி நீளமுள்ள வாய்க்கால்கள் வெட்டப்பட்டு இலை, தழைகள் இட்டு மூடப்பட்டிருக்கின்றன. இவ்வாறு இரண்டு முறைகளில் நிலத்தடி நீர் சேமிப்பு மற்றும் நீர்ப் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

எப்படிச் சாத்தியமானது?

செம்புரை மண்ணில் (laterite soil) ஒரு அடிக்குக் கீழே மழைநீர் அவ்வளவு சுலபமாக இறங்காது. வழிந்தோடிவிடும். தஞ்சாவூர், காரைக்குடி, சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை பகுதிகளில் செம்புரை மண் தன்மையுள்ள நிலங்கள் பெருமளவு காணப்படுகின்றன. இந்த மண்ணுள்ள நிலத்தை வளமாக்க இங்கு பெய்யும் சராசரி மழையளவைக் கணக்கிட்டு, அந்த நீரைத் தேக்கும் அளவு குட்டைகளை வெட்டி இங்கேயே அதன் பயன்பாட்டை ஏற்படுத்த வேண்டும். இப்படிச் செய்தால் 3 ஆண்டுகளுக்குத் தண்ணீர்ப் பஞ்சமே ஏற்படாது.

உதாரணமாக, ஒரு உழவு மழையில் ஒரு ஏக்கருக்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கும். அதைக் கணக்கிட்டால் ஒரு குட்டையில் ஒரு சதுர அடிக்கு 4.5 லிட்டர் தண்ணீர் தேக்கலாம். ஒரு ஏக்கருக்கு 44,440 சதுர அடி குட்டை வெட்டினால், ஒரு உழவு மழைத் தண்ணீரைத் தேக்கலாம். தோராயமாக 25 ஏக்கர் நிலமிருந்தால் அதை வளமாக்க 2 3/4 ஏக்கர் அளவுக்கு 7 அடி ஆழத்துக்குக் குட்டை வெட்டினால், அதில் தேங்கும் நீர் 10 மாதங்களுக்குப் பயன்படும். அந்தக் குட்டையில் தேங்கும் நீர் அப்படியே விடப்படும்போது, அந்த ஆழத்துக்கு ஏனைய பகுதி நிலங்களிலும் நிலத்தடி நீரைப் புதுப்பிக்கிறது. ஒவ்வொரு குட்டையைச் சுற்றிலும் சுமார் 22 ஏக்கரில் வெவ்வேறு வகையிலான மரங்கள் நடும்போது, அந்த மரங்களின் வேர்களே நிலத்தில் சுரக்கும் நீரை உறிஞ்சிக்கொள்கிறது.

இலை, தழைகளும் நீர் சேமிப்பும்

இங்கே விளையும் மரங்களிலிருந்து பழுத்து உதிரும் இலை, தழைகள் அப்படியே விடப்படுகின்றன. தவிர, 100 அடி நீளத்துக்கு 15 அடி ஆழம், 6 அடி அகலத்தில் பொக்லைன் மூலம் வாய்க்கால்கள் வெட்டப்பட்டிருக்கின்றன. அதில் ஒவ்வொரு அடி ஆழத்துக்கும் உடைந்த மரக்கிளைகள், இலை, தழைகள், செடி, கொடிகள் போட்டு அதன் மீது அரை அடி உயரம் மண் இடப்படுகிறது. பிறகு, மேலும் ஒரு அடிக்கு இலை, தழை மீண்டும் அரையடி மண் இப்படியே ஏழெட்டு அடுக்குகளாக இலை, தழைகளும் மண்ணும் இடப்பட்டு நிலம் மேவப்படுகிறது. இப்படி கடந்த 18 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட வாய்க்கால்களில் இலை, தழை, மரம், செடி, கொடிகள் போட்டு மூடப்பட்டுள்ளது.

‘இலை, தழைகள் உரமாவும் ஆயிருது. நிலத்தடி நீரையும்  பாதுகாக்குது. மழை வரும்போது நிலத்தடி நீர் நன்றாக ஊடுருவுகிறது. நீர்க்கசிவை அப்படியே மக்கின இலை, தழைகள் பிடித்து வைத்துக்கொள்ளவும் செய்கின்றன. அதிலிருந்து வெளிப்படும் கசிவு மண்ணின் ஈரப்பதம் குறையாமல் பாதுகாக்கிறது. மழைக் காலத்தில் நீர் நிரம்பின குட்டைகள் முதல் ஏழெட்டு மாதங்களுக்குப் பயன்பட்டால், அதற்குப் பிறகு வானம் பொய்த்து வறட்சி வந்தால்கூட இந்த இலை, தழை வாய்க்கால் மண் மேடுகள் நிலத்தடி நீரைப் பாதுகாக்கிறது’’ என்கிறார் சதாசிவம்.

மு.சோழகம்பட்டியைச் சுற்றியுள்ள கிராமங்களில் தற்போது கடும் வறட்சி. 600 அடி, 700 அடி உள்ள ஆழ்குழாய்க் கிணறுகளில்கூடத் தண்ணீர் இல்லை. ஆனால், சதாசிவத்தின் பண்ணையில் 90 அடி ஆழத்தில் உள்ள ஆழ்குழாய்க் கிணறுகள் இரண்டிலும் தண்ணீர் வற்றவில்லை. சுற்றுப்பகுதி மக்கள் இந்தக் கிணறுகளிலிருந்துதான் தண்ணீர் எடுத்துச்செல்கிறார்கள்.

- கா.சு.வேலாயுதன்,

தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x