Last Updated : 12 Sep, 2014 11:46 AM

 

Published : 12 Sep 2014 11:46 AM
Last Updated : 12 Sep 2014 11:46 AM

வினோபா பாவே: காந்தி மெச்சிய காந்தியவாதி

காந்தியம் என்பது சாத்தியமான நடைமுறையே என்பதை நிரூபித்துக் காட்டியவர்களில் முதன்மையானவர் ‘பூதான இயக்க’த்தின் தந்தை ஆசார்ய வினோபா பாவே. “காந்தியத்தை என்னைவிட நன்கு புரிந்துகொண்டவர்” என்று காந்தியாலேயே பாராட்டப்பட்டவர் வினோபாஜி.

வினோபா பாவே, மகாராஷ்டிரத்தின் கொலாபா மாவட்டத்து ககோடா கிராமத்தில் 11.9.1895-ல் பிறந்தார். பெற்றோர் அவருக்கு இட்ட பெயர் விநாயக். இளம் வயதிலேயே மகாராஷ்டிர சித்தர்கள், சிந்தனாவாதிகளின் நூல்களைப் படித்து அறிவைப் பெருக்கிக்கொண்ட விநாயக்குக்குக் கணிதம் மிகவும் பிடிக்கும்.

ஆனால், கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது நாட்டின் நிலையை எண்ணி மன அமைதியை இழந்து, சாமியாராவதற்காக காசிக்குச் சென்றார். காசியிலேயே இருந்து சாமியாராவதா, கல்கத்தா சென்று புரட்சி வீரனாகிவிடுவதா என்று 20 வயது விநாயக்கின் மனதில் போராட்டம். ஒரு நாள், செய்தித்தாளை வாங்கிப் பார்த்தால், காசி இந்து சர்வகலாசாலையில் காந்தி ஆற்றிய உரை கண்ணில் படுகிறது. வாசிக்க வாசிக்க அவருக்கு வழி புரிந்துவிட்டது. காசியும் இல்லை, கல்கத்தாவும் இல்லை. இனி நாம் போக வேண்டிய இடம் அண்ணலின் திருவடி நோக்கி என்று அவரிடமே 7.6.1916-ல் அடைக்கலம் புகுந்தார்.

காந்தி ஆசிரமத்தில் தங்கி சேவை செய்தார். காந்தியின் கட்டளையை ஏற்று வார்தா ஆசிரமப் பொறுப்பை 8.4.1921-ல் ஏற்றார். கதர் தயாரிப்பு, கிராமத் தொழில்வளர்ச்சி, புதிய கல்வி, கிராம சுகாதாரம் ஆகியவற்றில் பயிற்சி எடுத்துக்கொண்டு, மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுத்தார். 1938-ல் பௌனார் என்ற இடத்தில் பரந்தாம ஆசிரமத்தை நிறுவினார். 1925-ல் வைக்கம் ஆலயப் பிரவேச நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க காந்தியால் கேரளத்துக்கு அனுப்பப்பட்டார்.1940-ல் தனிநபர் சத்தியாகிரகத்துக்கு வினோபாவைத்தான் காந்தி முதலில் தேர்வுசெய்து அனுப்பினார்.

வேலூர் சிறையில்…

‘வெள்ளையனே வெளியேறு’இயக்கத்தில் 1942-ல் பங்கேற்றபோது கைதுசெய்யப்பட்டு வேலூர், சியோனி ஆகிய ஊர்களில் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவர் சக கைதிகளுக்கு பகவத் கீதையை விளக்கி உரைகள் நிகழ்த்தினார். அவை ‘வினோபாவின் கீதைப் பேருரைகள்’ என்றே புத்தகமாக வெளிவந்து நன்கு வாசிக்கப்பட்டது. சிறைகளில் இருந்தபோது ‘ஸ்வராஜ்ய சாஸ்திரம்’, ‘ஈஷாவாஸ்ய விருத்தி’, ‘ஸ்திதப்பிரக்ஞன் தரிசனம்’ போன்ற முக்கியமான நூல்களையும் எழுதினார். வேலூர் சிறையில் இருந்தபோது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கு தென்னிந்திய மொழிகளையும் கற்றார். லோக நாகரி என்ற எழுத்து வடிவத்தையும் உருவாக்கினார்.

சர்வோதய சமாஜம்

1948 மார்ச்சில் காந்திஜியின் சீடர்கள் சேவாகிராமத்தில் ஒன்றுகூடி ‘சர்வோதய சமாஜம்’ என்ற அமைப்பை உருவாக்கினார்கள். தேசப் பிரிவினையால் புண்பட்ட மக்களின் மனப் புண்களை ஆற்றவும் மக்களுக்குத் தேவைப்படும் கல்வி, தொழில், சுகாதாரம் ஆகியவற்றை அளிக்கவும் சர்வோதயத் தொண்டர்கள் புறப்பட்டனர். தங்கம், பணம் ஆகியவற்றைச் சம்பாதிக்கும் ஆசையை மக்கள் துறக்க வேண்டும் என்பதற்காக ‘காஞ்சன் முக்தி’என்ற இயக்கத்தை வினோபா பாவே 1950-ல் தொடங்கினார்.

பூதான இயக்கம்

1951-ல் தெலங்கானா பகுதியில் போச்சம்பள்ளியில் அவருடைய பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வந்த தாழ்த்தப்பட்ட மக்களிடம், அவர்களின் முக்கியத் தேவை என்ன என்று வினோபா கேட்டார். விவசாயம் செய்யத் தங்களுக்கு 80 ஏக்கர் நிலம் வேண்டும் என்றார்கள். “இதற்கு உங்களுடைய பதில் என்ன?” என்று கிராமத்தாரிடம் கேட்டார் வினோபா.

“என்னுடைய 100 ஏக்கர் நிலத்தைத் தருகிறேன்” என்று ராமச்சந்திர ரெட்டி என்ற நிலச்சுவான்தார் அறிவித்தார். வியப்பிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்ந்த வினோபா பாவே, ‘பூமிதான இயக்க’த்தைத் தொடங்கினார். எதிர்பாராத வகையில், அன்றாடம் 200 ஏக்கர் முதல் 300 ஏக்கர் வரையிலான நிலங்கள் தானமாகக் கிடைத்தன. உத்தரப் பிரதேசத்தின் மங்ராத் என்ற கிராம மக்கள் தங்களுடைய முழு கிராமத்தையே கிராமதானமாகக் கொடுத்தனர்.

வினோபாஜி நாடு முழுக்க நடந்து 41,94,271 ஏக்கர் நிலங்களைத் தானமாகப் பெற்றார். அதில் 12,85,738 ஏக்கர் நிலங்கள் ஏழைகளுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டன. 18,57,398 எதற்கும் பயன்படாத களர் நிலங்களாக இருந்தன. எஞ்சியவை மீது தானம் கொடுத்தவர்களின் வாரிசுகள் வழக்கு போட்டதால் முடிவு காணப்படாமல் போய்விட்டது.

காற்று, தண்ணீர், வானம், சூரிய ஒளி போல நிலமும் இயற்கையின் கொடை. அதைத் தனிப்பட்ட நபர்கள் பேரில் சொந்த சொத்தாக அனுபவிப்பது கூடாது என்ற உயரிய நோக்கத்தை ‘பூமிதானம்’ வலியுறுத்தியது. ‘காந்தியம்’ என்பது கம்யூனிஸத்தின் அகிம்சை வடிவம் என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு.

சம்பல் பள்ளத்தாக்குக் கொள்ளையர்கள்கூட வினோபாஜியை நடைப்பயணத்தின்போது சந்தித்து, தங்களுடைய ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டுச் சரண் அடைந்தார்கள். சிறையில் தண்டனையை அனுபவித்துவிட்டு வந்து, ஆசிரமத்தில் தங்களுக்கிடும் பணியைச் செய்வதாகக் கூறிச் சென்றார்கள்.

காந்தியத்தின் வலிமை இதுதான். சத்தியத்தின் முன் எந்த ஆயுதமும் செயலிழந்துதான் போகும்!

செப்டம்பர் 11 வினோபாவின் 119-வது பிறந்த நாள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x