Published : 06 Mar 2018 10:22 AM
Last Updated : 06 Mar 2018 10:22 AM

மக்களுக்குக் காவல் நிற்குமா காவல் துறை?

மிழகக் காவல் துறை, ‘அமைதி, வளம், வளர்ச்சி’ ஆகிய மூன்று இலக்குகளை நிறைவேற்றும் வகையில் செயல்படும் என 2016-17-ம் ஆண்டுக்கான காவல் துறை மானியக் கோரிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் தற்போது நடப்பது என்ன?

தூத்துக்குடியில் சமீபத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டின்போது, பேரணியில் கலந்து கொண்ட இளைஞர்கள் மீது காவல் துறையினர் கடும் தாக்குதல் நடத்தினர். கண்டனம் எழுந்த பிறகு, சம்பந்தப்பட்ட அதிகாரி திருச்சி மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கடந்த ஜனவரியில், பொங்கல் விழாவையொட்டி சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வாரச்சந்தையில் சாலையோரம் பெண்கள் மற்றும் விவசாயிகள் கூடையில் வைத்துக் காய்கறி விற்பனை செய்துகொண்டிருந்தனர். அப்போது, காய்கறிக் கூடைகளை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த காவல் துறையினர், லத்தியைச் சுழற்றி அவர்களை விரட்டியடித்தனர். ‘ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?’ என்று கேள்வியெழுப்பிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலா ளர் எம்.கந்தசாமியைக் காவல் நிலையத்துக்குக் கொண்டுசென்று, அரை நிர்வாணமாக்கிக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். ஒரு வாரம் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறும் அளவுக்குக் கடுமையான தாக்குதல் நடந்திருக்கிறது. அனைத்துக் கட்சிகளும் இதைக் கண்டித்த பிறகு, சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இப்படி எத்தனையோ உதாரணங்களைச் சொல்ல முடியும். ஜனநாயக இயக்கங்கள் நடத்தக்கூடிய ஊர் வலத்துக்கோ, வாரச் சந்தையில் கடை விரிப்போருக்கோ பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல் துறையே, அமைதியான சூழலைச் சீர்குலைக்கும் அளவுக்கு அத்துமீறிவிடுகிறது. ஆனால், அமைதியை - பொது ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய நேரங்களில் தலையிடாமல் பார்வையாளராக மட்டுமே உள்ளது. சில நேரங்களில் குற்ற நிகழ்வுகளை மூடி மறைக்க முயற்சிக்கிறதோ என்ற சந்தேகமும் வருகிறது.

விழுப்புரம் மர்மக் கொலைகள்

சமீபகாலமாக விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பல மர்மக் கொலைகள் நடக்கின்றன. இந்தச் சம்பவங்கள் தொடர்பாக, துப்பு துலக்கப்படாமலும், வன்முறையில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யப்படாமலும் உள்ள நிலைமை மக்களுக்கு அச்சத்தையும் பீதியையும் உருவாக்கியிருக்கிறது.

திருக்கோவிலூர் வட்டம், வெள்ளையம்புத்தூரில் பிப்ரவரி 21-ம் தேதி இரவு 9 வயதுச் சிறுவனை அடித்துக் கொன்றதோடு, தாயையும் அடித்து மயக்கமுறச்செய் திருக்கிறார்கள். 13 வயது மகளைக் கூட்டுப் பாலியல் வல்லுறவுக் கொடுமைக்கு ஆளாக்கியிருக்கிறார்கள். மறுநாள் காலை அருகில் உள்ளவர்கள் காப்பாற்றிய தால் தாயும், அந்தச் சிறுமியும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 10 நாட்களுக்கு மேலாகி யும் இருவருக்கும் நினைவு திரும்பவில்லை. இதைப் போலவே இதே கிராமத்தில் இதற்கு முன்பு இரண்டு கொடூரச் சம்பவங்கள் நடந்துள்ளன.

குறவர் சமூகத்தைச் சேர்ந்த கணவன் - மனைவி, மகள் மூவரும் வீட்டில் இரவு தூங்கிக்கொண்டிருந்தபோது, தந்தையையும் தாயையும் தலையில் கடுமையாகத் தாக்கி, அவர்கள் மயக்கமுற்ற நிலையில், அவர்களது மகளைக் கூட்டு பலாத்காரக் கொடுமைசெய்துள் ளனர். தந்தையும் தாயும் சுயநினைவின்றி ஒரு மாதம் சிகிச்சை பெற்ற பிறகே வீடு திரும்பினர். இதிலும் வன்முறையாளர்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இதே கிராமத்தில் பிற்படுத்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த கணவன் - மனைவி உறங்கிக்கொண்டிருந்தபோது, கணவனைத் தாக்கிவிட்டு, மனைவியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்தச் சம்பவத்திலும் குற்றவாளிகள் கைதுசெய்யப்படவில்லை.

வெள்ளையம்புத்தூருக்கு அருகேயுள்ள வசந்த கிருஷ்ணாபுரத்தில் 31.12.2017 அன்று மூன்று தலித் இளைஞர்களை அடையாளம் தெரியாத ஒரு கும்பல் கடுமையாகத் தாக்கியதில், தலைகள் நசுக்கப்பட்டு இரண்டுபேர் இறந்துவிட்டனர். ஒருவர் நினைவு திரும்பாமல் சிகிச்சையில் உள்ளார். இந்தக் கொடூரமான படுகொலையைச் சாலை விபத்து என்று காவல் துறை பதிவுசெய்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

2017 அக்டோபர் மாதம் திருக்கோவிலூர் வட்டம், செங்கனாங்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த ஒரு தலித் மாணவி பள்ளியைவிட்டு வீட்டுக்குத் திரும்புகையில் காணாமல்போனார். பின்னர், கிராமத்துக்கு அருகில் ஒரு கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். இதைத் தற்கொலை என்றே காவல் துறை பதிவுசெய்துள்ளது.

சந்தேகத்துக்குரிய கருணை இல்லங்கள்

காஞ்சிபுரம் மாவட்டம், பாலேஸ்வரம் கருணை இல்லம் தொடர்பான தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. கடந்த வாரம் அந்த இல்லத்துக்குச் சென்றுகொண்டிருந்த ஒரு வேனில், வயதான மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டிருக்கிறது. மக்கள் கூடியபோது, அதே வேனில் மூதாட்டியுடன் ஒரு முதியவரும் ஒரு பிணமும், காய்கறிகளும் கொண்டுசெல்லப்பட்டது என்பது தெரியவந்தது.

கருணை இல்லத்தில் சந்தேகத்துக்குரிய விஷயங் கள் நடக்கின்றனவா என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி தலைமையில் ஒரு குழு 28.02.2018 அன்று நேரில் சென்று ஆய்வுசெய்தது. இல்லத்தில் இருந்த ஒரு முதியவர் “சளி அதிகமாக இருந்ததால், தாம்பரம் எலும்புருக்கி மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். அங்கிருந்து என்னை இங்கு அழைத்து வந்துவிட்டனர். என்னை வீட்டுக்கு அனுப்ப மறுக்கின்றனர்” என்று கூறினார். “இதுபோன்று பலர் பல இடங்களில் இருந்து அழைத்துவரப்பட்டுள்ளனர். விரும்பினாலும் வீட்டுக்கு அனுப்ப மறுத்துவருகின்றனர்” என்றும் அவர் கூறியதாக ஆய்வுக் குழு தனது அறிக்கையில் தெரிவித்திருக் கிறது.

அங்கு நிகழும் சம்பவங்கள் குறித்து அதிர்ச்சி யளிக்கும் செய்திகள் வெளியான பிறகும் மாவட்ட நிர்வாகம் ஏன் தலையிடவில்லை, காவல் துறை என்ன செய்கிறது என்று அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன. பலத்த சந்தேகங்கள் எழுந்திருக்கும் நிலையில், இவ்விஷயத்தில் தீவிர விசாரணை அவசியம்.

தமிழகத்தில் நிகழ்ந்துவரும் மேற்கண்ட கொலைகள், பாலியல் கொடுமைகள், மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதன் மூலமே மக்கள் மத்தியில் காவல் துறை மீது நம்பிக்கையை உருவாக்க முடியும். மாநிலத்தின் பொது ஒழுங்கையும் அமைதியை யும் பாதுகாக்க முடியும். மாநில வளர்ச்சிக்கு இவையும் அவசியம் என்பதை மாநில அரசு உணருமா?

- ஜி.ராமகிருஷ்ணன்,

அரசியல் தலைமைக் குழு உறுப்பினர், சிபிஐ (எம்)

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x