Last Updated : 26 Mar, 2018 09:26 AM

 

Published : 26 Mar 2018 09:26 AM
Last Updated : 26 Mar 2018 09:26 AM

ஜே.கிருஷ்ணமூர்த்தி: தவறவிடப்பட்ட ஞானம்!

ந்தியாவில் ஞானிகளுக்கென்று தனியிடம் உண்டு. எனினும், ஆழமான ஞானம் கொண்ட சிந்தனையாளர்கள் சிலர் பெரிய அளவில் பேசப்படாமல்போவதும் உண்டு. ஜே.கே. என்று அறியப்படும் ஜிட்டு கிருஷ்ணமூர்த்திக்கும் இது பொருந்தும். ரமணர், பரமஹம்சர், விவேகானந்தர், ஷீர்டி சாய்பாபா போன்ற ஞானிகள் அறியப்படும் அளவுக்கு, போற்றப்படும் அளவுக்கு ஜே.கே. என்று அறியப்படும் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி ஏன் பேசப்படவில்லை? ஏன் அலட்சியப்படுத்தப்பட்டுவிட்டார்? அவர் ஆங்கிலத்தில் பேசியதுதான் காரணமா? சுமாரான ஆங்கிலத்திலும் கொச்சைத் தமிழிலும் பேசியவர்களுக்கே இங்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. ஜே.கே.யின் விஷயம் வேறு.

நகைச்சுவை கலந்த பேச்சு ஜே.கே.யிடம் கிடையாது. அவரது பேச்சும் எழுத்தும் முழுக்க முழுக்க தீவிரமானவை.

ஜே.கே. ஒரு புரட்சியாளர். அவரது சொற்பொழிவு களிலும் எழுத்திலும் அலங்காரங்கள் இருக்காது. எந்த வேத நூலில் இருந்தும் மேற்கோள் இருக்காது. எந்த மகானையும் குறிப்பிட மாட்டார். அவரிடமிருந்தது எல்லாமே சொந்தச் சரக்கு மட்டுமே. இந்திய மரபில் தோன்றிய எந்த மகானையும் புகழ்ந்தோ பாராட்டியோ அவர் பேசியதில்லை. குண்டலினி சக்தி பற்றிய ஒரு கேள்விக்கு, அதை மட்டம் தட்டும் விதத்தில்தான் பதில் சொன்னார். அவர் பரவலாகப் புரிந்துகொள்ளப்படாமல் போனதற்கு இவையெல்லாமும்கூடக் காரணமாக இருக்கலாம்.

அறிந்ததிலிருந்து விடுதலை

ஆனால் அவர் எதையும், யாரையும் மேற்கோள் காட்டிப் பேசாததற்கு முக்கியமான காரணமிருக் கிறது. நமக்கான உண்மையை இன்னொருவர் மூலம் நாம் பெற முடியாது என்பதில் அவர் மிகவும் தெளிவாக இருந்தார். அவரது ‘ஃப்ரீடம் ஃப்ரம் தி நோன்’ என்ற நூலின் அல்லது பேச்சின் சாரமே அதுதான். அவரது சொற்பொழிவுகளும் கருத்துகளும் கிட்டத்தட்ட நூறு நூல்களுக்கு மேல் வரும். ஆனால், மேலே குறிப்பிடப்பட்ட ஒன்றை ஊன்றிப் படித்தால்போதும் அவரது ஆன்மாவைத் தரிசித்துவிடலாம்.

உண்மையை ஒரு வேத நூலில் இருந்தோ, குறிப்பிட்ட மதத்திலிருந்தோ, ஒரு இறைத் தூதரிடமிருந்தோ, குறிப்பிட்ட மகானிடமிருந்தோ தெரிந்துகொள்ள நாம் விரும்புகிறோம். ஆனால் அது அவர்களின் உண்மை. நமக்கான உண்மையல்ல. உண்மை ஒன்றென்றாலும் அதை நாமாகத் தனிப்பட்ட முறையில் அனுபவித்தே உணர வேண்டும். ஆனால் கடவுள், இம்மை, மறுமை, பிறப்பு, இறப்பு, ஆன்மா பற்றிய கருத்துகளையெல்லாம் நாம் அனைவரும், அல்லது நம்மில் பெரும்பாலோர் அவரவர் ஏற்றுக்கொண்டுள்ள நம்பிக்கைகளின் அடிப்படை யிலேயே புரிந்துவைத்திருக்கிறோம். இப்படிச் செய்கின்ற நாம் அனைவரும் ‘இரண்டாம்தர மனிதர்கள்’ என்கிறார் ஜே.கே. உண்மைதானே!

ஏற்கெனவே, போடப்பட்ட பாதையில் செல்கிறோம் நாம். அது யார் யாரோ போட்டுவைத்த பாதை. நாம் உருவாக்கிய, நமக்கான பாதையல்ல. இப்படி வாழ்வது ஒருவிதமான ஆன்மிக எதேச்சாதிகாரம் என்கிறார். அரசியல்ரீதியான சர்வாதிகாரத்தை எதிர்க்கும் நாம், இதை மட்டும் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்கிறார்.

வருவதையெல்லாம் வெட்டு

காளி வந்து தனக்கு நேரில் அருள் வழங்கினாள் என்று ராமகிருஷ்ணர் சொன்னபோது, புரட்சியாளராக இருந்த சீடர் நரேந்திரர் (விவேகானந்தர்) அதெல்லாம் உங்களது கற்பனை என்று கூறினார். வெறும் கற்பனைதானா என்று ராமகிருஷ்ணர் தன் முகத்தை மண் தரையில் தேய்த்துக்கொண்டு காளியிடம் அழுதபோது, காளி காட்சி கொடுத்து அவரைச் சமாதானப் படுத்தியதாக ராமகிருஷ்ணரின் வரலாறு கூறுகிறது.

அத்வைத உண்மையை அறிந்துகொள்வதற்கான இறுதிப் பயிற்சியை ராமகிருஷ்ணருக்கு தோத்தாபூரி என்ற மகான் கற்றுக்கொடுத்தார். அப்போது, ‘வருவதையெல்லாம் வெட்டு’ என்று சொன்னார் தோத்தாபூரி. வந்த எல்லா எண்ணங்களையும் வெட்ட முடிந்த பரமஹம்சரால் காளியை வெட்ட முடியவில்லை. அதையும் செய்யச் சொன்ன தோத்தாபூரி, உடைந்த கண்ணாடித் துண்டுகளால் அவர் புருவ மத்தியில் குத்தினார். பிறகுதான் பரமஹம்சருக்கு அந்த நிலை சாத்தியமானது என்று ‘காஸ்பெல் ஆஃப் ஸ்ரீராமகிருஷ்ணா’ என்ற நூல் கூறுகிறது.

நம்முடைய உண்மைகளெல்லாம் நம்முடைய மனதுக்குள் அல்லது மூளைக்குள் நாமே போட்டுக்கொண்ட, அல்லது மற்றவர்களால் போடப்பட்ட தகவல்களே என்பதை மகான்களின் வாழ்க்கை அனுபவங்கள் எடுத்துக் கூறுகின்றன.

அப்படியானால் நம்முடைய வேதங்கள், மதங்களில் சொல்லப்பட்டுள்ள கருத்துகளெல்லாம் பொய்யா என்றால் அப்படியல்ல. அவை உண்மை யாகக்கூட இருக்கலாம். ஆனால் அவை நம்முடைய அனுபவத்தில் வந்தவையல்ல. அப்படியானால் ஜே.கே. சொல்வதை ஏற்றுக்கொள்ளும்போதும் அதே பிரச்சினைதானே வரும்? ஆமாம். அதையும் அவரே சொல்கிறார். நான் பேசப்போகிறேன், எனக்கு உண்மை தெரியும், என் பேச்சைக் கேட்டு உண்மையை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள் என்று அவர் சொல்லவில்லை. ‘நாம் அனைவரும் இணைந்து ஒன்றாகப் பயணிக்க இருக்கிறோம்’ என்றுதான் தன் சொற்பொழிவுகளை அவர் எப்போதுமே தொடங்குவார்.

ஒருமுறை ரமணருக்கு கையில் வேதனை ஏற்பட்டபோது, ‘ரமணருக்குக் கை வலிக்கிறது’ என்றாராம். ‘எனக்குக் கை வலிக்கிறது’ என்று சொல்லவில்லை. ‘நான்’ என்ற சொல்லைக்கூட அவர் பயன்படுத்த வில்லை.

ஜே.கே.யும் அப்படிப்பட்டவர்தான். தூரத்திலிருந்தே குணமாக்கும் கலை உண்மையா என்று ஒருவர் கேட்டபோது, “ஆமாம், அது சாத்தியம்தான், உங்களிடம் பேசிக்கொண்டிருப்பவரே சில முறை அதைச் செய்திருக்கிறார்” என்று கூறுகிறார் ஜே.கே. நான் செய்திருக்கிறேன் என்று அவர் சொல்லவில்லை. ‘நான்’ என்ற சொல்லை ஜே.கே. தன் பேச்சிலும் சரி, எழுத்திலும் சரி பயன்படுத்தியதில்லை. அதில் நமக்கான முக்கியக் குறிப்பு உள்ளது.

உண்மையின் தரிசனம்

இந்த வாழ்க்கையில் நாம் செய்யவேண்டியதெல்லாம், கடந்த காலம், எதிர்காலத்துக்குள் நுழைந்துகொள்ளாத, நிகழ் கணத்தில் மட்டுமே இருக்கும் கலையைக் கற்றுக்கொள்வதுதான். அப்படி ஒரு மனிதன் இருக்கும்போது, அவன் முழுமையோடு இருக்கிறான். முழு ஆற்றலின் வடிவமாக இருக் கிறான். அப்போதுதான் உண்மையை ஒரு மனித னால் தரிசிக்க முடியும் என்று கூறும் ஜே.கே., அதற்கு அழகான உதாரணமும் கொடுக்கிறார்.

ஒரு அறையில் நீங்கள் தனியாக இருக்கிறீர்கள். கூடவே, ஒரு ராஜநாகமும் இருக்கிறது. அந்த மாதிரி சூழ்நிலையில் உங்கள் கவனம் சிதறுமா? உங்கள் முழுக் கவனமும் ஒவ்வொரு கணமும் இருக்கும். பரிபூரண கவனமாக நீங்கள் இருப்பீர்கள். கடந்த காலம், எதிர்காலம் எதுவுமே அப்போது உங்களுக் குள் நுழையாது. நிகழ்கணமும் நீங்களுமாக இருப்பீர்கள். அக்கணமே ஞானம் சித்திக்கும் கணமாகும், அப்போது பேராற்றலின், உண்மையான அறிவின் பிழம்பாக நீங்கள் இருப்பீர்கள் என்கிறார் ஜே.கே.

ஜே.கே. அகில உலகத்துக்கும் ஆசானாக, மைத்ரேயனாக இருக்கப்போகிறவர் என்று உள்ளுணர்வால் உணர்ந்து, அவரைத் தத்து எடுத்துக்கொண்டனர் பிரம்ம ஞான சபையின் அன்னி பெசன்ட் அம்மையாரும் லெட்பீட்டரும். ஆனால் உரிய நேரம் வந்தபோது, ‘ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் இன் தி ஈஸ்ட்’ என்ற அமைப்பைக் கலைத்துவிட்டு, தான் யாருக்கும் ஆசானாக இருக்க வந்தவனல்ல என்று சொல்லி வெளியேறி, உலகம் முழுவதும் சென்று தன் பேச்சாலும் எழுத்தாலும் உண்மையை உரக்கச் சொன்ன ஜே.கே., உண்மையான குருவல்லவா? தமிழகத்தின் பொக்கிஷங்களில் ஒன்றை நாம் தவறவிட்டு விட்டோமோ?

- நாகூர் ரூமி,

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்,

தொடர்புக்கு: ruminagore@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x