Published : 07 Mar 2018 10:27 AM
Last Updated : 07 Mar 2018 10:27 AM

‘‘ஆம், உச்ச நீதிமன்றம் தடுமாறத்தான் செய்கிறது!’’- இந்திரா ஜெய்சிங் பேட்டி

ச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவரான இந்திரா ஜெய்சிங், மும்பை உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் என்று முதலில் அங்கீகரிக்கப்பட்ட பெண், மகளிருக்கு எதிரான பாகுபாடுகளைக் களையும் ஐக்கிய நாடுகள் குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியப் பெண், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்ட முதல் பெண் என்று சாதனைகளைப் படைத்த பெருமைக்குரியவர். தொழிலாளர் நீதிமன்றங்களில் தனது பணியைத் தொடங்கியவர், மகளிர் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடிவருகிறார். அவர் அளித்த பேட்டி:

சமீபகாலமாக அதிகப் பெண்கள் தங்களுடைய உரிமைகளை நிலைநாட்ட உச்ச நீதிமன்றம் வருகின்றனர்; ஆயினும் உச்ச நீதிமன்றத்தில் ஒரேயொரு பெண் நீதிபதிதான் இருக்கிறார். உச்ச நீதிமன்றம் தன்னைத்தானே பரிசீலிக்கும் நேரம் வந்துவிட்டதா?

அதிகப் பெண்கள் நீதிமன்றம் வருவதல்ல பிரச்சினை; அமர்வுகள் எப்படி அமைக்கப்படுகின்றன என்று பார்க்க வேண்டும். கடந்த ஆறு மாதங்களாக ஒரே அரசியல் சட்ட அமர்வு மகளிரை மையமாகக் கொண்ட பல வழக்குகளை விசாரித்துவருகிறது. உச்ச நீதிமன்றத்தில் உள்ள ஒரேயொரு பெண் நீதிபதி (ஆர்.பானுமதி) ஏன் இதில் சேர்க்கப்படவில்லை? இன்னும் அதிகப் பெண்கள் இருந்தாலும் இந்த முதல் அமர்வில் அவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்பது என்ன நிச்சயம் என்றே கேட்க விரும்புகிறேன்.

முத்தலாக் வழக்கில் பல்வேறு மதங்களைச் சேர்ந்த நீதிபதிகள் கொண்ட அமர்வை தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் உருவாக்கினார், அதை ஏன் இரு பாலினரும் கொண்டதாக மாற்றவில்லை? இது தொடர்பாக வெள்ளை அறிக்கையும் இல்லை, கொள்கை ஆவணங்களும் கிடையாது. இந்நாட்டில் ஆணாதிக்கம் வலுவாகவும் தொடர்ச்சியாகவும் இருப்பதால் பல துறைகளில் பெண்களால் கால் பதிக்க முடியாமல் இருக்கிறது.

பெண் நீதிபதிகள் குழுவாகச் செயல்படுவதில்லை. அவர்கள் தங்களுக்குள் சங்கம் அமைத்துத் தங்களுடைய பிரச்சினைகளைப் பேசி அதை நீதியரங்குகளில் எழுப்ப வேண்டும். நிறையப் பெண்கள் ஏன் நீதிபதிகளாக வேண்டும், எண்ணிக்கையைச் சமப்படுத்த மட்டும்தானா? பாலின நீதி என்றால் என்ன என்று தெரியாத பெண்களை அதிகம் சேர்ப்பதால் பலன் இல்லை.

தனக்கு விருப்பமான கணவரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான சில வழக்குகளை - ஹாதியாவைப் போல – உச்ச நீதிமன்றத்தில் பார்க்கிறோம்; இவற்றுக்குக் குறுகிய காலத் தீர்வுகளைக் காண முடியாமல் உச்ச நீதிமன்றம் தடுமாறுகிறதா?

ஆம், தடுமாறுகிறது. முத்தலாக் வழக்குத் தீர்ப்பில் இது வெளிப்பட்டது. 'தனிச் சட்டங்கள் அரசியல் சட்டத்துக்கு விரோதமானவை, பாலியல்ரீதியாகப் பெண்களுக்கு அநீதி இழைக்கின்றன' என்று நீதிமன்றம் நேரடியாகக் கூறி யிருக்க வேண்டும். அச்சோதனையில் நீதிமன்றம் தோற்றுவிட்டது. முத்தலாக் முறை அரசியல் சட்டம் அளிக்கும் 14-வது கூறின்படியான உரிமைக்கு விரோதமானது என்று தீர்ப்பை எழுதிய நீதிபதி ரோஹின்டன் நாரிமன் மட்டுமே கூறினார். நம்முடைய தனிச் சட்டங்களில் பாலின அசமத்துவம் ஏன் தொடர வேண்டும்? இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கூறினார், “மாண்புமிக்க நீதியரசரே, இதில் பிரச்சினை தனிச் சட்டம் அல்ல, ஆணாதிக்கம்தான்" என்று. இந்த ஆணாதிக்கத்துக்கு எது தாய் வீடு? ஆணாதிக்கத்துக்குத் தாய் வீது தனிச் சட்டம்; தனிச் சட்டத்துக்குத் தாய் வீடு மதம்.

ஹதியாவின் வழக்கு அந்தரங்க உரிமையுடன் தொடர்புள்ளது. அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமை என்று தீர்ப்பும் கூறியது. இதை உலகமே வரவேற்றது. ஆனால் இப்படிப்பட்ட அடிப்படை உரிமையான, அந்தரங்கமான விஷயத்தில் - வயதுவந்த இருவர் செய்துகொண்ட திருமணம் செல்லாது என்று உயர் நீதிமன்றம் ரத்துசெய்தது; பெண்களுக்கு எதிரான ஆணாதிக்க உணர்வு உயர் நீதிமன்றம் வரையில் ஆழ வேரோடியிருக்கிறது. 'லவ் ஜிகாத்' என்ற வார்த்தை அத்தீர்ப்பில்தான் புதிதாகக் குறிப்பிடப்பட்டது.

‘மூத்த வழக்கறிஞர்' என்ற அங்கீகாரம் தொடர்பாகத் தொடர்ந்த வழக்கில் சமீபத்தில் வெற்றிபெற்றீர்கள்; இது சட்டத் துறையில் மட்டும் நிலவும் மனப்பாங்கா? பொதுநலன் கருதி வாதாடும் வழக்கறிஞர்கள் அங்கீகரிக்கப்படுவதில்லை என்றீர்களே?

இது வாரிசு உரிமை போலாகிவிட்டது. உங்களுடைய தந்தை 'மூத்த வழக்கறிஞர்' என்ற அடைமொழியால் அங்கீகரிக்கப்பட்டவர் என்றால், தொழிலுக்கு வந்து அதிக அனுபவம் இல்லாவிட்டாலும் நீங்களும் 'மூத்த வழக்கறிஞ’ராக மதிக்கப்படுவீர்கள்; மூத்த வழக்கறிஞர்கள், நீதிபதிகளின் வாரிசுகள் வழக்கறிஞரானால் இப்படி அழைக்கப்படுவது குறித்து இந்தத் துறையில் மிகவும் மதிக்கப்படும் மூத்த வழக்கறிஞர்கள் ஏன் பேசுவதில்லை?

பொதுநலன் வழக்கில் ஈடுபடும் வழக்கறிஞர்களில் பலர், வணிகரீதியாகச் செயல்படும் வழக்கறிஞர்களுக்கு ஈடான சட்ட ஞானம் பெற்றவர்கள். பொது நடைமுறைக்கு எதிராகச் செல்வதன் காரணமாக, பொதுநலன் வழக்காடுபவர்களுக்கு எதிர்ப்பு அதிகம். நீதிபதி பி.என். பகவதிதான் இந்தப் பொதுநலன் வழக்குகளுக்கு முக்கியத்துவம் தந்தவர். மூத்த வழக்கறிஞர் என்ற அங்கீகாரத்தை வழங்கும் நடைமுறை வெளிப்படையாக இருக்க வேண்டும். பொதுநலன் வழக்குளை நடத்துவோருக்கும், சட்ட ஆலோசனை வழங்குவோருக்கும் அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும். என் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பின் விளைவு இப்போதைக்கு உணரப்படாமல் இருக்கலாம். காலப்போக்கில் தரமான வழக்கறிஞர்கள் இந்தப் பணியைச் செய்யும் போது அவர்களுக்கும் மூத்த வழக்கறிஞர் என்ற அங்கீகாரம் வழங்கப்படும்.

சண்டிகரில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட 10 வயதுச் சிறுமியின் வழக்கு உங்களைப் பெரிதும் பாதித்தது என்று கூறியிருந்தீர்கள்…

அந்தப் பெண்ணின் நெருங்கிய உறவினரே அப்பாதகத்தைச் செய்திருந்தார். அது வீட்டுக்குள்ளேயே நடந்த கொடுமை. இதை நேருக்கு நேர் எதிர்த்துப் போராட நாம் தயாரில்லை. இதை நம் வீட்டுக் குழந்தைகளிடம் பேச நாம் தயங்கினால் நமக்குத் தெரியாமல் யாராவது ஒருவர் குழந்தையை நாசப்படுத்துவார்; இதற்கு ஒரே தீர்வு குழந்தை களுக்குப் பாலியல் ரீதியிலான தகவல்களைச் சொல்லி விழிப்புணர்வு ஊட்டுவதுதான். அடுத்தது மருத்துவத் தொழிலிலும் சீர்திருத்தங்கள் அவசியம். இந்தச் சிறுமி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது அவர்கள் திருப்பி அனுப்பிவிட்டனர். இந்திய தண்டனையியல் சட்டப்படி கருக்கலைப்பு என்பது குற்றம். இந்தக் காரணத்துக்காக மருத்துவர்கள் மறுக்கின்றனர். வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டவர் கருக்கலைப்பு செய்துகொள்ளலாம் என்று சட்டம் அனுமதிக்கிறது. கருக்கலைப்பு என்றாலே அந்தப் பெண்ணை மட்டமானவளாகப் பார்க்கிறது சமூகம். எனவே பெண்கள் போலி வைத்தியர்களிடம் செல்கின்றனர். அவர்கள் மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதபடி சேதம் ஏற்படுத்துகின்றனர், சில சமயங்களில் உயிரையே போக்கிவிடுகின்றனர். 10 வயதுச் சிறுமியை எல்லாவித பாதிப்புகளிலிருந்தும் காப்பாற்ற வேண்டுமானால் இந்தப் பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வு காணப்பட வேண்டும். இந்திய நீதி நிர்வாக முறையில், பாலினரீதியாகத் துன்புறுத்தப்பட்ட பெண்ணுக்கு அடுத் தடுத்து ஏற்படும் நெருக்கடிகளையே இந்தச் சம்பவம் நமக்கு உணர்த்துகிறது. பாலியல் வல்லுறவைத் தண்டிக்கக் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. மரண தண்டனைகூட அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தும் பெண்கள் தாக்கப்படுவதும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. குற்றமிழைப்பவர் குடும்பத்துக்குள்ளேயே இருக்கும்போது சட்டங்களால் பயன் ஏதுமில்லை.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை வன்செயல்கள் என்றோ பாலினரீதியிலானவை என்றோ இனியும் கூறிக்கொண்டிருக்கக் கூடாது. பாலியல் வக்கிரமும், கொடூரத்தன்மையும் அதிகமாகிக்கொண்டே வருகிறது. டெல்லி 'நிர்பயா' சம்பவம் இதற்கு உதாரணம். வறுமை அதிகரிப்பு, பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், இந்திய அரசியலில் மதவாதக் கலப்பு என்று அனைத்துடனும் இந்த வன் செயல்கள் தொடர்புள்ளவை.

உங்களுடைய முயற்சியால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள், பணியாளர்களின் கைக்குழந்தைகளுக்காகத் தனி தொட்டிலறை திறக்கப்படுகிறது. வேலைக்குச் செல்வது பெண்களின் அடிப்படை உரிமை என்பதையும் தாண்டி, படித்த பெண்கள் பலர் குழந்தைகளைக் கவனிப்பதற்காக வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. உழைக்கும் மகளிருக்கு மேலும் பாதுகாப்புகள் தேவைப்படுகின்றனவா?

திருமணத்துக்குப் பிறகு வேலைக்குப் போகாமலிருப் பவர்களில் அதிகம் பேர் மேல் தட்டுப் பெண்கள். அவர் களுக்கே இந்த நிலைமை என்றால் கட்டிட வேலை செய்யும் பெண்களை நினைத்துப் பாருங்கள். அவர்கள் வேலை செய்யும் இடத்துக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்கின்றனர். அங்கு குழந்தைகளுக்குப் படிக்கவோ, விளையாடவோ, இளைப்பாறவோ எந்த வசதிகளும் இருப்பதில்லை. அடுத்த வேளை சாப்பாட்டுக்காக வேலை செய்கிறவர்கள் அவர்கள். அவர்களுக்குத்தான் தொட்டில்க ளும், பராமரிப்பாளர்களும் அவசியம். சொல்லப்போனால், இந்த விவகாரத்தை நாங்கள் எழுப்பும் வரையில் உச்ச நீதிமன்றத்திலேயே இப்படியொரு ஏற்பாடு இல்லை! எனில், கட்டிட வேலைசெய்யும் பெண்களின் நிலை எப்படி இருக்கும்? வழக்கறிஞர் சங்கங்கள் இதில் ஏதுமே செய்யவில்லை. என்னுடைய ஜூனியர் அனிந்திதா பூஜாரிதான் மனுதாரர். ஒரு நாள் அவர் தனது 2 வயது மகள், ஆயா ஆகியோருடன் வந்தார். அவ்விருவரும் நீதிமன்றப் புல் தரையில் தங்கிக்கொண்டனர். என்னுடைய அறையில் வந்து தங்குமாறு கூறினேன். இது தீர்வல்ல என்றார் அனிந்திதா. பிறகுதான் தொட்டிலறை கேட்டு மனு தாக்கல் செய்தோம். இப்போது நீதிமன்ற வளாகத்துக்குள் குழந்தைகள் பராமரிப்புக்காகத் தனியிடம் கட்டப்படுகிறது.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த, மக்கள் நலன் சார்ந்த வழக்கு விசாரணை நேரடியாக ஒளிபரப்பப்பட வேண்டும் என்று நீங்கள் கேட்பது ஏன்?

ஆதார் போன்றவை தேசியப் பிரச்சினைகள். முக்கியமான இந்த விவகாரம் தொடர்பாக யார் என்ன பேசினார் கள் என்று மக்களுக்குத் தெரிவது அவசியம். பல்வேறு நாடுகளில் இப்படி வழக்கு விசாரணை நேரடியாக ஒளிபரப்பப்பட்டபோது நீதிமன்றங்கள் பாதிக்கப்படவில்லை, மாறாக நீதிமன்றங்களின் மதிப்புதான் உயர்ந்தது என்று தெரிகிறது. குற்றவியல் வழக்குகளையும் குடும்ப வழக்கு களையும் நேரடியாக ஒளிபரப்பத் தேவையில்லை, காரணம் இவற்றின் தன்மை வேறு!

உச்ச நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் பத்திரிகையாளர்களை நேரில் சந்தித்துப் பேசியதற்குப் பலன் ஏற்பட்டுவிட்டதாகக் கருதுகிறீர்களா?

ஊடகங்களிடம் பேசியதற்காக நான்கு நீதிபதிகளும் விமர்சிக்கப்பட்டனர். நீதிபதிகள் தங்களுடைய தீர்ப்புகள் தொடர்பாகப் பேசுவதற்கும், நிர்வாகப் பிரச்சினைகளைப் பேசுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. தீர்ப்புகள் குறித்துப் பேச நீதிபதிகளுக்கு உரிமையில்லை என்பதை நானும் ஏற்கிறேன். காரணம் அது நடத்தை நெறிமுறை யிலேயே உள்ளது. நிர்வாகப் பிரச்சினைகளைப் பேசத் தடையில்லை. எங்கிருந்து இந்த ஆட்சேபம் வருகிறது என்று எனக்குத் தெரியவில்லை.

நெருக்கடி நிலை காலத்தில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவிக்கு பணி மூப்பு பெற்ற மூன்று நீதிபதிகளை ஒதுக்கிவிட்டு ஏ.என். ராயை அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நியமித்ததற்கு இணையானது நான்கு நீதி பதிகளும் சுட்டிக்காட்டிய விஷயம். ராயின் நியமனத்தை அடுத்து பதவி விலகிய மூன்று நீதிபதிகளும் இன்றைக்கும் கதாநாயகர்களாகவே நம்முடைய மனங்களில் தங்கிவிட்டனர். அப்படியிருக்கும்போது நியாயத்துக்காகப் பேசிய இந்த நான்கு நீதிபதிகள் மட்டும் அவமதிக்கப்படுவது ஏன் என்று புரியவில்லை. இந்தப் பிரச்சினை இன்னமும் தீர்க்கப்படவில்லை.

நீதிபதி லோயா மரணம் தொடர்பான தகவல்கள், தடயவியல் துறையின் பதிவுகளை உச்ச நீதிமன்றம் ஆராய வேண்டுமா? விசாரணை நீதிமன்ற வேலையை அதுவும் செய்ய வேண்டுமா?

உச்ச நீதிமன்றத்தின் எந்தச் செயலும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்; நாங்கள் கேட்பதெல்லாம் அந்த மரணம் தொடர்பாக நியாயமான விசாரணை மட்டுமே; நல்ல விசாரணை முகமை அதை விசாரிக்க வேண்டும். ஏன் இந்த நடைமுறை இப்படி இழுத்துக்கொண்டே போகிறது என்று புரியவில்லை!

தமிழில்: சாரி,

C: தி இந்து ஆங்கிலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x