Published : 27 Mar 2018 09:59 AM
Last Updated : 27 Mar 2018 09:59 AM

கோடைக்கால குடிநீர்ப் பிரச்சினை: தயாராக இருக்கிறதா தமிழகம்?

கோடைக்கு முன்பே குடிநீர் பிரச்சினை தலைகாட்டத் தொடங்கிவிட்டது. மாநகரங்களைக் காட்டிலும், கிராமப்புறங்களில் நிலைமை மோசமாக இருக்கிறது. குடிநீர்த் தட்டுப்பாடு தீவிரமாகும்முன் காக்க அரசு என்ன செய்ய வேண்டும், என்ன செய்திருக்கிறது? ஒரு விரிவான அலசல்.

கோவை:

தமிழகத்தின் இரண்டாவது பெரிய மாநகராட்சியான கோவைக்கு சிறுவாணி, பில்லூர் குடிநீர்த் திட்டம் மற்றும் ஆழியாறு கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மூலமாக குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

“கடந்த ஆண்டு சிறுவாணி அணை வறண்டுவிட்டது. பில்லூர் அணையின் நீரைக் கொண்டு சமாளித்தோம். இந்த ஆண்டு, 3-வது கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகளை முன்பே தொடங்கிவிட்டோம்” என்கிறார்கள் அதிகாரிகள். ஆனால், மாநகராட்சிக்கு வெளியிலிருக்கும் பகுதிகளில், முன்னேற்பாடுகளில் தொய்வு தெரிகிறது.

நீலகிரி:

மலைப்பிரதேசம் என்பதால், ஆழ்துளைக் கிணறுகள் அதிகம் பயன்தராது. தற்போதே குன்னூர், கோத்தகிரி, கூடலூர் நகரங்களில் தண்ணீர்த் தட்டுப்பாடு தலைதூக்கியிருக்கிறது. நீர்த்தேக்கங்கள் வறண்டுவிட்டதால், மக்கள் காட்டாறுகளை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். ஒரே தீர்வு மழை மட்டும்தான் என்கிறார்கள் அதிகாரிகள்.

காப்பாற்றுமா தாமிரவருணி?

சமீபத்தில் எதிர்பாராத மழை பெய்திருந்தாலும், நெல்லை மாவட்டத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு தொடரவே செய்கிறது. பாபநாசம் அணையில் இருந்து விவசாயத் தேவைக்கு அதிகமாக தண்ணீர் திறக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்ந்தால், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் கோடை காலத்தில் குடிநீர்த் தேவையை சமாளிக்க முடியாமல் போகும். குடிநீர் வடிகால் வாரிய அதிகாரியிடம் பேசியபோது, “பாபநாசம், சேர்வலாறு அணைகளில் நீர்மட்டம் குறைந்தாலும் மணிமுத்தாறு அணையில் 83 அடிக்கு மேல் தண்ணீர் உள்ளது. அணைகளில் இருக்கும் தண்ணீர் ஜூன் மாதம் வரை சமாளிக்க போதுமானதாக இருக்கும்” என்றார். இப்போதே சேர்வலாறு, வடக்கு பச்சையாறு, கொடுமுடியாறு, அடவிநயினார் கோவில் அணைகள் வறண்டுவிட்டதையும் அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தின் குடிநீர் ஆதாரமும் தாமிரபரணியே. மாவட்ட நிர்வாகம் இதுவரை எந்த முன்னெச்சரிக்கைப் பணிகளையும் தொடங்கவில்லை. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 4-வது பைப்லைன் திட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் செயல்பாட்டுக்கு வந்ததைத் தொடர்ந்து குடிநீர்ப் பிரச்சினை மட்டுப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் கூடுதல் கவனம் தேவை.

கொள்ளளவு குறைந்த குமரி அணைகள்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, முக்கடல் அணைகளும் 2,040 பாசன குளங்களும் நீராதாரமாக விளங்குகின்றன. இவ்வளவு நீராதாரங்கள் இருந்தாலும், ஏப்ரல், மே மாதங்களில் குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதிப்படுவது தொடர்கிறது. இந்த ஆண்டு பாதிப்பு சற்று கூடுதலாக இருக்கக்கூடும். பேச்சிப்பாறை, முக்கடல் உள்ளிட்ட பல அணைகள் 50 ஆண்டுகளுக்கு மேலாகத் தூர்வாரப்படாததால் கொள்ளளவு குறைந்துவிட்டது.

திருச்சி

திருச்சி மாநகராட்சியில் குடிநீர்த் தட்டுப்பாடு பெரியளவில் ஏற்பட வாய்ப்பில்லை. “ஒருவேளை குடிநீர் பிரச்சினை நேரிட்டால் கூடுதல் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை உடனே எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது" என்கிறார்கள் மாநகராட்சி அலுவலர்கள். புறநகர்ப் பகுதிகளைப் பற்றி மாவட்ட ஆட்சியர் கு.ராஜாமணியிடம் கேட்டபோது, “இதுவரை திருச்சி மாவட்டத்தில் எந்த இடத்திலும் குடிநீர் பிரச்சினை எழவில்லை. ஒருவேளை குடிநீர்த் தட்டுப்பாடு நேரிட்டால், அதைக் களைய உடனே நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை நீண்ட காலமாகவே தொடர்கிறது. காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தவும், கடலோரப் பகுதிகளுக்கு உள்ளாட்சி நிர்வாகம் மூலமே லாரி தண்ணீர் விநியோகத்துக்கும் அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். நிரந்தரத் தீர்வுக்கும் நடவடிக்கை தேவை.

தப்புமா கரூர்?

கரூர் மாவட்டத்தில் தோகைமலை, க.பரமத்தி ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள் வறட்சிக்குப் பெயர்போனவை. இந்த ஆண்டு முன்கூட்டியே காவிரி குடிநீர், காவிரி கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலமும், வாய்ப்புள்ள இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. கரூர் நகராட்சியில், இனாம்கரூர் பகுதியில் தட்டுப்பாட்டு இருக்கிறது. “அந்தப் பகுதிக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும். கரூர் நகராட்சி பகுதியில் உள்ள 720 ஆழ்குழாய் கிணறுகளில் 636 ஆழ்குழாய் கிணறுகளில் தற்போது வரை தண்ணீர் உள்ளது. மேலும் ஆழ்குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்கிறார்கள் நகராட்சி அதிகாரிகள்.

வேலூரின் வேதனை தீருமா?

பாலாறு வறண்டதாலும் பருவமழை தவறியதாலும் வேலூர் மாவட்டத்தின் நிலத்தடி நீர் மட்டம் கடந்த 10 ஆண்டுகளில் கிடுகிடுவென இறங்கிவிட்டது. காவிரி குடிநீர்த் திட்டம் பரவலாக்கப்படாததால் பல ஊர்களில் குடிநீர் பிரச்சினை நிலவுகிறது. கடந்த ஆண்டு, முதல்வர் பழனிசாமி அறிவித்த குடிநீர்த் திட்டத்தை விரிவுபடுத்தும் பணி கிடப்பில் கிடக்கிறது. ‘‘ஊரகப் பகுதிகளில் பல இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு பெய்த மழையால், நிலத்தடி நீர்மட்டம் சற்று மேம்பட்டிருக்கிறது. கோடை கால குடிநீர்த் தட்டுப்பாட்டை சமாளிக்க நிதி கேட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம்’’ என்கிறார்கள் அதிகாரிகள்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்திலும், முதல்வரின் குடிநீர் திட்ட அறிவிப்பொன்று கிடப்பில் கிடக்கிறது. செண்பகத்தோப்பு அணை கட்டுமானப் பணி முழுமை பெறாததால், 287 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் பாதியளவே தண்ணீர் தேக்க முடிகிறது. சில மாதங்களுக்கு முன்பு ரூ.9.80 கோடியில் செண்பகத்தோப்பு அணை சீரமைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார். அப்போதே செய்திருந்தால், இந்தப் பகுதியில் குடிநீர் பிரச்சினை தலை தூக்கியிருக்காது.

அரியலூரில் என்ன நடக்கிறது?

நிச்சயம் குடிநீர் பிரச்சினை வரும் என்று முன்பே தெரியும் என்பதால், மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. “ குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டால் அதனை போக்குவதற்கான நடவடிக்கைகளைச் செய்து முடிப்பதற்கு ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைப் போல, நடப்பாண்டும் குடிநீர் தேவைக்கு ஏற்ப போர்வெல் அமைக்க ஏற்பாடு செய்துள்ளோம்” என்கிறார் மாவட்ட ஆட்சியர் எம்.விஜயலட்சுமி.

திருவாரூர் பணிகள்

கடந்த நவம்பர் மாத கனமழையின் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் ஓரளவுக்கு உயர்ந்துள்ளது. என்றாலும், கோடையின் உக்கிரத்தைத் அது தாக்குப்பிடிக்கும என்று சொல்ல முடியாது. மாவட்டத்தின் பெரிய குடிநீர்த் திட்டமான, கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டக் குழாய்களைப் பராமரிக்கும் பணிகள் தொடங்கவுள்ளன. “கடந்தாண்டு பிரச்சினை ஏற்பட்ட திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை ஒன்றிய பகுதிகளில் மின்மோட்டார்களை சரி பார்த்தல் போன்ற பணிகளுக்குத் தேவையான நிதியை அரசிடம்பெற முயன்று வருகிறோம்” என்கிறார்கள் அதிகாரிகள்.

விழுப்புரம் தப்புமா?

விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி நகராட்சிகளில் குடிநீர்தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி ஆட்சியர் இல.சுப்பிரமணியனிடம் கேட்டபோது, “கடந்த ஆண்டே திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் தற்போது நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கிராமப்புறங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது. நகராட்சிகளில் குடிநீர்த் தட்டுப்பாடு வாய்ப்பு குறித்தும், அதைச் சமாளிப்பதற்கும் திட்டமதிப்பீடு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.

ஈரோடு

மேட்டூரில் இருந்து குடிநீருக்காகத் திறக்கப்படும் நீர் வழியில் திருடப்படுவதும், ஆற்றில் கழிவுநீர் கலப்பதும் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. காவிரி குடிநீர் திட்டம் சுணக்கமடைந்துள்ளதால், இங்கிருந்து புறப்படும் 6 ரயில்களைத் தவிர இதர ரயில்களுக்கு நீர் நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை ஆழ்குழாய் கிணறுகள் வற்றிவருவதால், பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் போராட்டங்கள் தொடங்கிவிட்டன. புதிய ஆழ்குழாய் கிணறுகளை அமைப்பது தொடர்பாகவோ, குடிநீர்ப் பற்றாக்குறையை தீர்ப்பது தொடர்பாகவோ இதுவரை மாவட்ட நிர்வாகம் எவ்வித ஆலோசனையும் நடத்தவில்லை.

கவனிக்கப்படுமா கடலூர்?

கடலூர் நகராட்சிக்கும், புவனகிரி, பரங்கிப்பேட்டை பேரூராட்சிகள் மற்றும் வழியோர கிராமங்களுக்கும் கொள்ளிடம் கூட்டு குடிநீர்த் திட்டம் மூலம் தண்ணீர் வருகிறது. தட்டுப்பாடு காரணமாக கேப்பர் குவாரி மலையில் இருந்தும் குடிநீர் எடுக்கப்படுகிறது. சிதம்பரம் நகராட்சி பகுதியில் குடிநீர்த் தட்டுப்பாடு அதிக அளவில் உள்ளது. நளன்புத்தூர் பகுதியில் இருந்து வரும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் உப்பு தண்ணீராக மாறியதால் வினியோகம் நிறுத்தப்பட்டது. சிதம்பரம் நகருக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் வக்காரமாரி ஏரியும் கிட்டத்தட்ட வறண்டுவிட்டது. தற்போதைக்கு ஆழ்துளைக் கிணறுகளை வைத்து சமாளிக்கிறார்கள். கோடையில் இவை தாக்குபிடிப்பது சந்தேகம்.

மதுரையின் தாகம் தீருமா?

வைகையாறு வறண்டு கிடக்கிறது. தொடர் வறட்சியால் நிலத்தடி நீரும் இறங்கிவிட்டது. வைகை அணை மற்றும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டங்கள் இரண்டிலும் வரவேண்டிய குடிநீரில், 50% மட்டுமே கிடைக்கிறது. மதுரை மாநகராட்சியின் பல வார்டுகளில் ஒரு குடம் குடிநீரை 8 ரூபாய்க்கு வாங்குகின்றனர். முல்லைப் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேறினால், பெரியாறு அணையிலிருந்து மாநகராட்சிக்கு மட்டும் 125 மில்லியன் லிட்டர் குடிநீர் கொண்டு வரப்படும். இத்திட்டத்தில் வழியோர ஊர்களையும் இணைக்கும் திட்டமும் மாவட்ட நிர்வாகத்துக்கு இருப்பதாக கூறப்படுகிறது. வெறும் அறிவிப்போடு நில்லாமல் இத்திட்டத்தை துரிதமாகச் செயல்படுத்துவதே மதுரையின் தாகத்துக்கு நிரந்தரத் தீர்வாக அமையும்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாநகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமான ஆத்தூர் நீர்த்தேக்கம் இந்த ஆண்டு முழுமையாக நிரம்பவில்லை. காவிரி குடிநீர் திட்டமே நிலைமையைச் சமாளிக்க உதவுகிறது. கிராமப்புறங்கள் நிலத்தடி நீரை நம்பியே இருப்பதால், இயற்கை கைகொடுத்தால் ஒழிய குடிநீர் பிரச்சனையை சமாளிப்பது கஷ்டம் தான்.

தேனி

தேனி மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையில்லை என்று சொல்லலாம். முல்லை பெரியாறு ஆற்றில் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஓடிக்கொண்டிருப்பதும், வைகை அணையைச் சுற்றி நிலத்தடி நீர் இருப்பதாலும், பெரியகுளம் நகராட்சி பகுதிகளுக்கு சோத்துப்பாறை அணை, கொடைக்கானல் மலைப்பகுதியில் இருந்து தண்ணீர் கிடைத்துவிடுவதாலும் குடிநீருக்குப் பிரச்சினையில்லை. ஆனால், கிராமப்புறங்களில் மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டியதிருக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது வரை, குடிநீர்ப் பிரச்சினை தீர்ந்தபாடில்லை. ‘நரிப்பையூர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்’ செயல் இழந்ததைத் தொடர்ந்து, 2009ல் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால், காவிரி ஆற்றின் வறட்சியால் அங்கிருந்து வரும் குடிநீரின் அளவும் 30%க்கும் மேல் குறைந்துவிட்டது. அதனால் கோடை தொடங்கும் முன்னரே குடிநீர் பிரச்சினை தொடங்கிவிட்டது. இதைச் சமாளிக்க, ரூ. 7 கோடியில் திட்டங்களை நிறைவேற்ற அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் தெரிவித்தார்.

விருதுநகர்

ஆண்டு முழுக்க குடிநீர்த் தட்டுப்பாடு நிலவும் மாவட்டங்களில் விருதுநகரும் ஒன்று. ஒரு நாளைக்கு சுமார் 50 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்பட வேண்டிய விருதுநகர் நகராட்சிக்கு, ஆணைக்குட்டம் மற்றும் தாமிரபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டம் இரண்டையும் சேர்த்தே 34.50 லட்சம் லிட்டர் குடிநீர்தான் கிடைக்கிறது. அருப்புக்கோட்டை நகராட்சியில் 10 அல்லது 13 நாள்களுக்கு ஒரு முறை மட்டும் தாமிரபரணி குடிநீர் வருகிறது. ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூரில் 10 நாட்களுக்கு ஒருமுறையும், சிவகாசியில் 7 நாட்களுக்கு ஒருமுறையும் தண்ணீர் வருகிறது. சாத்தூர், திருத்தங்கல் நகராட்சிகளிலும் குடிநீர்த் தட்டுப்பாடு உள்ளது. மாவட்டம் முழுக்க தனியார் லாரிகளில் குடம் ஒன்றுக்கு 10 முதல் 14 ரூபாய் வரையில் தண்ணீர் விற்பனை செய்யப்படுகிறது. நீர் ஆதாரங்களை தூர்வாரி நீரை தேக்கிவைப்பதும், கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை துரிதமாகவும் முழுமையாகவும் முடிப்பதுமே பிரச்சினையை சமாளிக்க உதவும்.

தப்புமா சென்னை?

செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம், செங்குன்றம் ஆகிய 4 ஏரிகளும் வடகிழக்குப் பருவமழை பற்றாக்குறையால் நிரம்பவில்லை. இதற்கிடையில் வீராணம் ஏரியும் வறண்டுவருகிறது. சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, “தற்போது சென்னையில் தினமும் 650 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்த தேவையை, மீஞ்சூர், நெம்மேலி ஆகிய கடல் நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து கிடைக்கும் 200 மில்லியன் லிட்டர், வீராணத்திலிருந்து கிடைக்கும் 180 மில்லியன் லிட்டர், ஏரிகளில் இருந்து கிடைக்கும் 270 மில்லியன் லிட்டர் குடிநீர் ஆகியவற்றைக் கொண்டு பூர்த்தி செய்கிறோம். வீராணம் ஏரியில் இருந்து கிடைக்கும் நீர் குறையும் பட்சத்தில், பரவனாறு மற்றும் நெய்வேலி நீர்ப்பரப்பிலிருந்து தினமும் 60 மில்லியன் லிட்டர் நீர், திருவள்ளூர் விவசாய கிணறுகளில் இருந்து 100 மில்லியன் லிட்டர், கல் குவாரிகளில் இருந்து 30 மில்லியன் லிட்டர், போரூர் ஏரியில் இருந்து 4 மில்லியன் லிட்டர் நீர் எடுக்கும் திட்டங்கள் தயார் நிலையில் உள்ளன. தேவைப்பட்டால் அவற்றைப் பயன்படுத்துவோம். ஏரிகளில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 3 மடங்கு நீர் (5.5 டிஎம்சி) அதிகமாக உள்ளது. அதனால் ஏரி நீரைக் கொண்டே அக்டோபர் மாதம் வரையிலான நீர்த் தேவையை பூர்த்தி செய்ய முடியும்” என்றனர்.

தொகுப்பு: ’தி இந்து’ நிருபர் குழு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x