Published : 14 Mar 2018 09:58 AM
Last Updated : 14 Mar 2018 09:58 AM

ஹாதியா வழக்கு: தனிமனித சுதந்திரத்தை நிலைநாட்டிய தீர்ப்பு!

கே

ரளத்தைச் சேர்ந்த இளம்பெண் ஹாதியாவின் திருமணம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அளித் திருக்கும் தீர்ப்பு, தனிமனித சுதந்திரத்தைக் கட்டுப் படுத்தும் வகையில் அவருக்கு எதிராக எழுந்த முட்டுக்கட்டைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. தனது மத நம்பிக்கைகளைத் தேர்வுசெய்வதற்கு உரிமை இருப்பதுபோலவே, யாரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று முடிவு எடுக்கும் உரிமையும் ஹாதியாவுக்கு உண்டு என்று தெளிவுபடுத்திஇருக்கும் தீர்ப்பு இது.

அகிலா எனும் இயற்பெயர் கொண்ட ஹாதியா, மூளைச்சலவை செய்யப்பட்டு இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டதாகவும், அவரை வெளிநாட்டுக்கு அனுப்பி பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுத்த சிலர் திட்டமிட்டதாகவும் அவரது தந்தை புகார் அளித்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், ஹாதியா தனது பெற்றோரின் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், ஷஃபின் ஜஹான் எனும் இளைஞரை அவர் திருமணம்செய்தது செல்லாது என்றும் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், தனது நீதிப் பேராணை அதிகாரத்தின் அடிப்படையில், ஒரு திருமணத்தைச் செல்லாது என்று கேரள உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தவறானது என்று உச்ச நீதிமன்றம் அளித் திருக்கும் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இதன் மூலம் ஹாதியா எங்கும் சென்றுவரலாம் என்பதற்கான சுதந்திரத்தையும், தனது வாழ்க்கைத் தெரிவுகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்வதற்கான சுதந்திரத்தைத் தடுக்கும் வகையிலான நியாயமற்ற கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்திருக்கின்றன.

தனது திருமணம் நடந்த விதம் தொடர்பாக ஹாதியா சொன்ன வாதத்தின் உண்மைத்தன்மையைக் கேரள உயர் நீதிமன்றம் சந்தேகித்தது. வழக்கு விசாரணை நடந்த நாளில், உணவு இடைவேளை நேரத்தில் அவரது திருமணம் நடந்ததாகச் சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்தக் காரணங்களை மட்டும் வைத்து, அவரது திருமணம் செல்லாது என்றும் மோசடியானது என்றும் நீதிமன்றம் சொல்லிவிட முடியாது.

ஹாதியாவின் திருமணத்துக்குப் பெற்றோர் அனுமதி இருந்திருக்க வேண்டும் என்றும், சுயமாக முடிவெடுக்க முடியாத இளம் வயதில் அவரது திருமணம் நடந்தது என்றும் கேரள உயர் நீதிமன்றம் விநோதமான கருத்துகளைத் தெரிவித்திருந்தது. மேலும், தவறான போதனையின் அடிப்படையிலும், சதித் திட்டத்தாலும் அவரது திருமணம் நடந்தது எனும் அளவுக்கு உச்ச நீதிமன்றத்திலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து, ஷஃபின் ஜஹானுடனான தனது திருமணத்தில் உறுதியாக இருப்பதாக ஹாதியா தெரிவித்தார். இறுதியாக, அவரது கருத்தை நீதிமன்றம் அங்கீகரித்திருக்கிறது.

நமது நாட்டில், ஒரு பெண்ணின் வாழ்க்கைத் தெரிவுகள், திருமணம் தொடர்பாக எடுக்கும் முடிவுகளை எளிதாகக் கேள்விக்குள்ளாக்க முடிகிறது என்பது வருத்தம் தரும் விஷயம். பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆள் சேர்க்கும் பணிகள் நடக்கின்றனவா என்பதுகுறித்த சட்டபூர்வமான விசாரணை நடத்தப்படுவது அவசியம்தான். ஆனால், வெறுமனே சந்தேகத்தின் அடிப்படையில், ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரத்தை முடக்குவது நியாயமற்றது என்பதைத்தான் ஹாதியாவின் வழக்கு உணர்த்துகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x