Published : 05 Sep 2014 08:24 AM
Last Updated : 05 Sep 2014 08:24 AM

சமூகத்தின் கொண்டாட்ட தினம்

லட்சியத் தேடலை விதைக்கும் பேராற்றல் ஆசிரியர்களிடம் மட்டுமே இருக்கிறது

மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளி வாசலில் ‘மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றினார் என்னும் பெருமை உடைத்து' என்பதாக ஒரு வாசகம் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. வரலாற்றில் பல உயர்ந்த மனிதர்கள் ஆசிரியராகப் பணியாற்றியவர்கள். மிகச் சிறந்த கவிஞர்கள், எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள் பலர் ஆசிரியப் பணியில் இருந்தவர்கள். ஆசிரியராக வருவதற்கே நல்ல அருந்தவம் செய்திட வேண்டும் என்று சொல்லலாம். ஏனெனில், வாழ்வின் உன்னத நிலையை எட்டுகிற யாரும் தங்கள் ஆசிரியர்களை நினைவுகூராமல் இருப்பதில்லை.

அடுத்தடுத்த தலைமுறையினருக்குக் கற்பிக்கும் வாய்ப்பு பெற்றிருக்கும் ஆசிரியர்கள் பல நூறு இளம் உள்ளங்களோடு ஒரே நேரத்தில் ஊடாடும் மிகச் சிறந்த வரத்தைப் பெற்றிருப்பவர் கள். மாணவர்களுடைய கனவுகளை வருடிக் கொடுக்கும் கைகள் அவர்களுக்கு மட்டுமே வாய்த்திருக்கின்றன. குழந்தைகளின் இளம் நெஞ்சில் நீங்கா இடம் பிடிக்கும் தகுதி அவர் களுக்கே கிடைக்கிறது. லட்சியத் தேடலை விதைக்கும் பேராற்றல் ஆசிரியர்களிடம் மட்டுமே பொருந்தியிருக்கிறது.

முதல் திறப்பு

வகுப்பறை என்பது நீளமும் அகலமும் நிறைந்த பெரிய பொதுவெளி. வகுப்பறைக்குள் நுழையும்போது ஆசிரியர், மாணவர் களுடைய உள்ளங்களின் கதவைத் திறந்துகொண்டுதான் உள்ளே வருகிறார். முதல் திறப்பு அச்சத்தோடும், எதிர்பார்ப்போடும் அல்லது சுவாரசியமற்றும் நிகழ்ந்தாலும் ஆசிரியர் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் விதத்தில், பிறகு எப்போதும் விரும்பப்படும் மனிதராக அவரை அந்த வகுப்பறை உள்வாங்கிக்கொள்ளும் சாத்தியங்கள் உண்டு. பின் ஒருபோதும் அவரை இழப்பதற்கு அந்த வகுப்பு சம்மதிப்பதில்லை.

பேராசிரியர் ச. மாடசாமி, தன்னுடைய முதல் வகுப்பறை நுழைவு பற்றிச் சொல்வதுண்டு. கல்லூரியில் தமது முதல் வகுப்பில், “ஒரு மக்குக்கு இன்று மகுடம் சூட்டப்பட்டுவிட்டது” என்று சொல்லி அவர் தொடங்கியிருக்கிறார். ஒரு மணி நேரத்துக்குப் பின் மாணவர்களின் உள்ளத்தை ஈர்த்தவராக வெளியே வந்தவரை, கல்லூரி முதல்வர் அழைத்திருக்கிறார். இவரும் முதல்வரைக் காணச் சென்றிருக்கிறார். “உன் வகுப்பில்தான் கைத்தட்டல், சிரிப்பொலி எல்லாம் கேட்டதா?” என்று கேட்டிருக்கிறார் முதல்வர். ஆமாம் என்றதும், “போச்சு, எல்லாம் போச்சு. இந்தக் கல்லூரியின் பெருமையெல்லாம் ஒழிஞ்சது” என்று பதறினாராம் அவர். ‘ஒழுக்கம், கட்டுப்பாடு என்ற பெயரில் வகுப்பறையின் அதிகாரத்தை நிலைநாட்டாமல் மாணவரோடு எப்படித் தோழமையாக நெருங்கிப் பழகலாம்?’ என்பதுதான் அந்த முதல்வரின் கேள்வி.

இரண்டு திசைகள்

“என்முன் இரண்டு திசைகள் இருந்தன. அடக்கி ஒடுக்கும் அதி காரத்தைக் கையில் எடுக்கக் கூடாதென நான் உறுதியாக இருந்தேன்” என்பார் பேராசிரியர் ச. மாடசாமி. அதனால் தான் சந்தித்த பிரச்சினைகளையும் அவர் சொல்வதுண்டு. இந்தப் பின்புலத்தில் அவரது பணி தொடங்கியிருந்தாலும், “மாணவர்களைப் பேச வைத்துக் கேட்க எனக்குச் சில ஆண்டுகள் ஆனது. என் குரல் ஒலிப்பதன் பெருமையிலேயே சில ஆண்டுகள் கடந்துபோனது” என்றும் அவர் குறிப்பிடுவார்.

“வகுப்பறை என்பது 40 மாணவ ஆசிரியர்களையும், ஓர் ஆசிரிய மாணவரையும் கொண்டது” என்பார் புதுவை கல்வியாளர் ஜே. கிருஷ்ணமூர்த்தி. அமைதியான வகுப்பறை என்பது செயல்பாடற்ற ஓர் இருண்ட பகுதி என்பதை நமது ஒழுக்க விதிமுறை மேதாவிகள் அறிவதில்லை. ‘சைலன்ஸ்' என்று குழந்தைகள் எதிரில் கையைக் காட்டி மிரட்டுவதை விஞ்சிய வன்முறை ஆயுதம் வேறொன்றில்லை.

ஆசிரியர்களும் நானும்

ஆசிரியர்கள் வசிக்கும் பகுதிக்குச் செல்ல நேரும் ஒவ்வொரு முறையும் சிலீர் என்ற ஓர் இன்ப அதிர்ச்சியை நான் உணர்ந்ததுண்டு. பெற்றோர் கையைப் பிடித்துக்கொண்டு நடந்த காலத்தில் எந்தக் கூச்சமுமின்றி அவர்களிடம் எனது ஆசிரியரை பரஸ்பரம் அறிமுகம் செய்விக்க முடிந்தது இயற்கையின் அருளன்றி வேறென்ன!

ஐந்தாம் வகுப்பு மனோ டீச்சரை எனது வீட்டில் எல்லோருக்கும் தெரியும். என் அப்பா ‘டீச்சர் டீச்சர் மனோ டீச்சர் குண்டு டீச்சர்' என்று ராகம் போட்டுப் பாடினால், நான் கோபித்துக்கொண்டு சாப்பிட மாட்டேன் என்று ரகளைசெய்ததாகக்கூட நினைவில் இருக்கிறது. ஆறாம் வகுப்பு ஆங்கில ஆசிரியர் சீனிவாசன் என் வாழ்வுப் பாதையில் தடம் அமைத்துக்கொடுத்த அற்புத மனிதர். நான் எந்தெந்த ஊருக்கு மாற்றலில் செல்ல நேர்ந்தபோதும் அஞ்சல் அட்டையில் எனக்குக் கடிதம் எழுதுவார். அவருக்கு என்னை ஆங்கிலத்தில் பதில் போடச் சொல்வார். ஒரு பண்பாட்டு நடவடிக்கையை எனக்குள் தொடக்கி வைத்தவர் அவர்.

எனக்குப் பல ஆசிரியர்களோடு பிணக்கு இருந்தது. அவை நெருக் கத்தின் காரணமாக அவ்வப்போது பேசித் தீர்க்கப்பட்டவை. இது கல்லூரி நாட்களில் தமிழ் ஆசிரியர்களோடு தீவிர விவாதங்கள், சண்டைகள் போடுவது வரை தொடர்ந்தது. இப்போதும் ஆசிரியர் என்று யார் சொல்லிக்கொண்டாலும் அவர்களை உற்சாகத்தோடு பார்த்து நட்புறவுகொள்ள ஏங்கும் உள்ளம் அமைந்ததற்கு நான் கடந்து வந்த என் அருமையான ஆசிரியர்களே காரணம்.

சமூகத்தின் கொடை

மூன்று மாதங்கள் ஒரு பள்ளியில் தற்காலிகப் பணிக்குப் போன எனது தங்கை, அந்தப் பணி முற்றுப்பெற்ற நாளில் தாங்க மாட்டாத பரிசுப் பொருட்களால் சூழப்பட்டதற்கு முக்கியக் காரணம், பிரம்பைக் கையில் எடுத்துக்கொண்டு வராத ஒருவராக அவர் அடையாளம் காணப்பட்டதுதான். அன்பின் அருளாசியை அள்ளி அள்ளி வழங்கும் ஆசிரியர்கள் எந்தக் காலத்திலும் கொண்டாடப்படுகின்றனர். தங்கள் சொந்த வலி, வேதனை, துயரங்களை மீறியும் இன்முகத்தோடு பள்ளிக்குள் நுழையும் ஆசிரியர்கள் எல்லாக் காலத்திலும் இருக் கின்றனர். அவர்கள் பேசப்பட வேண்டும். 80 வயதைக் கடந்த நிலையிலும், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான கல்வியாளர் ச.சீ. ராஜகோபாலன் வற்றாத நேயத்தோடு கல்விகுறித்து எழுதியும், பேசியும் வருவது சமூகத்தின் கொடை.

சென்னைக்கு அருகே உள்ள பள்ளி மாணவர் ஒருவரது கவிதையை நாளிதழ் ஒன்றின் மாணவர் பக்கத்தில் பார்த்துப் பாராட் டிக் கடிதம் எழுதியிருந்தேன். அந்த மாணவரின் பெயர் பாலாஜி. அவருடைய ஆசிரியை என்னை அழைத்து, அந்தச் சிறுவனை ஊக்குவித்ததற்காகத் தனது நன்றியை என்னிடம் தெரிவித்தபோது, மிகவும் சிலிர்ப்பாக இருந்தது. வளமான எதிர்காலத்தை இப்படியான ஆசிரியப் பெருமக்கள் தன்னியல்பாக உருவாக்கிக் கொடுக்கத்தான் செய்கின்றனர்.

சாதி, இனம், மதம்,மொழி... இன்ன பிற வேற்றுமைகளின் மடியில் ஒரே பள்ளியில் வந்து குழுமும் மாணவர்களைப் பேதமின்றிப் பார்க்கும் பொதுத் தன்மையும், அவர்களின் ஆற்றலைத் தனது அன்பின் அளவுகோல் கொண்டு மட்டுமே அளக்கத் தக்க பக்குவமும், எல்லோரையும் ஏற்றுப் பழகும் உளப்பாங்கும் ஆசிரியர் உலகின் அடிப்படை அம்சங்களாகத் திகழ்ந்தால், கொண்டாட்டமான கல்வி அரங்கேறுவதற்கு ஒரு தடையும் அங்கே இருப்பதில்லை. சோர்வாக உள்ளே நுழையும் குழந்தைகூடப் புன்னகையோடு வீடு திரும்ப முடிகிறது.

செப்டம்பர் 5: ஆசிரியர் தினம் என்பது உள்ளபடியே குழந்தை களையும் பெற்றோரையும் சமூகத்தையும் சேர்த்துக் கொண்டாடும் தினம்தான். ஆசிரியர்களைக் கொண்டாடும் எந்தச் சமூகமும் தன்னைச் சிறப்பித்துக்கொண்டதாகிறது. அதற்காக ஒவ்வோர் ஆண்டும் இந்த தினத்துக்காகக் காத்திருக்கக்கூட வேண்டியதில்லை. அதேபோல், பள்ளி, கல்லூரி ஆசிரியர்களை மட்டுமல்ல, அடுத்தவருக்குக் கற்பிக்கும் ஆர்வமும், எப்போதும் கற்கத் துடிக்கும் பேரார்வமும் கொண்டிருக்கும் யாரையும் ஆசிரியர் என்று கொண்டாட முடியும்.

- எஸ்.வி. வேணுகோபாலன், எழுத்தாளர், தொடர்புக்கு: sv.venu@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x