Last Updated : 22 Mar, 2018 09:41 AM

 

Published : 22 Mar 2018 09:41 AM
Last Updated : 22 Mar 2018 09:41 AM

வங்கி மோசடிகளுக்கு தனியார்மயம் எப்படித் தீர்வாக முடியும்?: தாமஸ் ஃப்ராங்கோ பேட்டி

னைத்திந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரான தாமஸ் ஃப்ராங்கோ, பாரத ஸ்டேட் வங்கியின் மூத்த அதிகாரி. பஞ்சாப் நேஷனல் வங்கியில் சமீபத்தில் நடந்த மோசடிகளின் பின்னணி பற்றி அவர் அளித்த பேட்டியிலிருந்து:

பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) ஊழல் பற்றிய உங்களது புரிதல் என்ன?

பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழல் நடத்தப்பட்ட விதம் அனைவருக்கும் தெரியும். இது முன்பே பல முறை, வெவ்வேறு தருணங்களில் பல வங்கிகளில் நடந்துள்ளது. இருந்தும் இவற்றைத் தடுக்கும் வகையில் அமைப்பு ரீதியான திருத்தங்கள் எதுவும் செய்யப்படவில்லை. ஒரு பொறுப்புள்ள தொழிற்சங்கமாக, நாங்கள் இதுபோன்ற விவகாரங்களை ரிசர்வ் வங்கி, நிதி அமைச்சகத்தின் பார்வைக்கு எடுத்துச் சென்றுள்ளோம். அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும், கண்காணிப்பு வலுவாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும், தொழில்நுட்பத்தை மேம் படுத்த வேண்டும் என்று பல முறை கூறியுள்ளோம்.

உங்களுக்கும் உங்களது சக ஊழியர்களுக்கும் இதுபற்றி எப்போதிலிருந்து தெரியும்?

1999-ல் கொல்கத்தாவில் உள்ள ஸ்டேட் வங்கியில் நடந்த ஒரு நிகழ்வு எனக்குத் தெரியும். அப்போது ஒரு வங்கியின் அனைத்துக் கிளைகளுக்கும் பொதுவான மையமாக்கப்பட்ட அமைப்பு (சிபிஎஸ்) இருக்கவில்லை என்றாலும், ஸ்விஃப்ட் இருந்தது. யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் பரோடா ஆகிய வங்கிகளிலும் இது நிகழ்ந்துள்ளது. இருந்தாலும் மேலும் மேலும் சமரசம் செய்துகொள்ளப்படும் அமைப்புடனேயே நாம் தொடர்ந்துகொண்டிருக்கிறோம். சில வங்கிகளில் சிபிஎஸ், ஸ்விஃப்ட் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. பல வங்கிகளில் இல்லை. பணப் பரிவர்த்தனைகளுக்கான பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டியது ரிசர்வ் வங்கியின் கடமை. பல தளங்களில் கண்காணிப்பு மற்றும் தடுப்பு வழிமுறைகள் இருந்திருக்க வேண்டும். அவற்றுக்கெல்லாம் என்ன ஆனது?

நீரவ் மோடியின் நிறுவனங்களுக்கு 2011-லிருந்து வழங்கப்படும் கடன் உறுதியேற்புக் கடிதங்களுக்கான (எல்ஓயு) வரம்பை அப்போது நிறுவியிருக்க முடியாது என்பது வெளிப்படை. காலப்போக்கில் அது அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், எல்ஓயுக்களின் மதிப்பு அதிகரித்திருப்பது வங்கியின் உயரதிகாரிகளின் கவனத்துக்கு வராமல் போனது

எப்படி?

அதிகரிக்கப்பட்ட வரம்புகளுடன் எல்ஓயுக்கள் நீட்டிக்கப்படுவது காலப்போக்கில் நடந்திருக்கலாம். இந்த ஒட்டுமொத்தச் செயல்முறையில் வங்கியைச் சேர்ந்த நான்கு பேராவது ஈடுபடுவார்கள். கூட்டுச்சதியைத் தடுப்பதற்காகவே இப்படி நடத்தப்படுகிறது. ஆனால் இந்த விஷயத்தில், ஒட்டுமொத்தச் செயல்முறையும் வங்கியின் வாடிக்கையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது. இவை தவறான எல்ஓயுக்கள் என்பதால் வங்கி உயர் அதிகாரிகளின் கவனத்துக்குப் போகாமல் தப்பித்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் வாடிக்கையாளர், எல்ஓயுக்களைப் பணமாக்க வெளிநாட்டு வங்கிக்குச் சென்றபோது, அந்த அந்நிய வங்கியுடனான பிஎன்பி-ன் நாஸ்ட்ரோ கணக்கில் வரவு வைத்திருப்பார்கள். அந்த நாஸ்ட்ரோ கணக்கைச் சோதித்திருந்தால், பிஎன்பியின் பார்வையிலிருந்து இந்தப் பரிவர்த்தனைகள் தப்பியிருக்காது. மற்ற வங்கிகளும் (எதிர்த்தரப்பு) சமரசமாக்கப்பட்டிருக்கலாம்.

கடந்த 25 ஆண்டுகளில் இந்தியாவில் நடந்த பெரிய மோசடிகள் பலவும், வங்கிகள் தொடர்பானவை - 1990-களில் ஹர்ஷத் மேத்தா, 2000-களில் கேதன் பரேக் இப்போது பிஎன்பி (நீரவ் மோடி) என அனைவரும் பெருந்தொகையைக் கடனாக வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தத் தவறியவர்கள்தான். இவற்றிலிருந்து தற்போதைய மோசடி எந்த விதத்தில் வேறுபடுகிறது?

என்பிஏ மோசடி என்று நீங்கள் சொல்வது மற்றவற்றிட மிருந்து வேறுபடுகிறது. வாராக் கடன்களால் ஏற்படும் நஷ்டங்களுக்கு ரிசர்வ் வங்கியின் கொள்கைகள்தான் முக்கியக் காரணம். கறாராகப் பார்த்தால் அவற்றை வங்கி மோசடி என்று சொல்ல முடியாது. என்பிஏ மோசடிகள் ரிசர்வ் வங்கியால் ஊக்குவிக்கப்பட்டவை என்பேன். பெரு நிறுவனங்களைத் தப்பிக்கவிட்டு, கொடுத்த கடனைவிட குறைவான தொகையைத் திரும்பப் பெற வங்கிகளை நிர்ப்பந்தித்தது ரிசர்வ் வங்கிதான். வாராக்கடன் சொத்துக்களை வகைப்படுத்துவது தொடர்பான ரிசர்வ் வங்கியின் நடைமுறைகள்தான் பொதுத் துறை வங்கிகளை அழிவின் விளிம்பில் நிற்க வைத்துள்ளன. 2017-18ன் முடிவில் இந்த வங்கிகளின் நிகர நஷ்டம் ரூ.88,000 கோடிக்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இதற்கு முக்கியமான காரணம், வங்கிகளின் வாராக் கடன்களில் 50 சதவீதத்துக்கு நடப்பாண்டிலும் மீதத்துக்கு அடுத்த ஆண்டிலும் ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதில் மிகப் பெரிய மோசடி அடங்கியுள்ளது. கடன் வாங்கியவர்கள் எந்தப் பாதிப்பும் இல்லாமல் தப்பிக்கப்போகிறார்கள்.

பிஎன்பி மோசடிக்குப் பின் வங்கிகளை தனியார்மயமாக்க வேண்டும் என்ற குரல் உரத்து ஒலிக்கத் தொடங்கியிருக்கிறதே?

இந்தியாவைப் போல் வேறெங்கும் தனியார் வங்கிகள் இவ்வளவு மோசமாகத் தோற்றதில்லை. இந்த வங்கிகளி லும் வாராக் கடன்கள் அதிகரித்துவருகின்றன. பழைய தலைமுறை தனியார் வங்கிகள் ஏற்கெனவே நெருக் கடியில் உள்ளன. புதிய தலைமுறை வங்கிகள் அதைவிட நல்ல நிலையில் இருப்பதுபோல் தோன்றலாம். ஆனால், இது ஒரு மாயத்தோற்றம். கொஞ்சம் உற்றுநோக்கினால் இந்த வங்கிகளில் இன்னும் பெரிய சிக்கல்கள் இருப்பது தெரியவரும். உலகம் முழுவதும் ஒட்டுமொத்த வங்கிச் செயல்பாடுகளும் பொருளாதாரமும் வீழத் தொடங்கியி ருப்பது தனியார் வங்கிகளால்தான். வங்கித் துறை சிக்கல்களுக்கான தீர்வு தனியார்மயம்தான் என்ற வாதம் விபரீதமானது.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் வங்கிகள், வங்கி ஊழியர்கள் மட்டுமல்லாமல் வங்கிகளை ஒழுங்குபடுத்தும் அமைப்புக்கும் 2017-ம் ஆண்டு பெரும் தலைவலியாக இருந்திருக்கும். வங்கிகள் இது சார்ந்த பணிகளிலேயே மூழ்கியிருந்ததால் அவற்றால் வேறெதையும் செய்ய முடியவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். இதனால் இந்த மோசடியைத் தடுக்க அவர்கள் கவனித்திருக்க வேண்டிய விஷயங்களில் கவனம் செலுத்த முடியாமல் போயிருக்கக்கூடுமா?

நிச்சயமாக. வங்கிகளுக்குள் கண்காணிப்பும் ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை நடவடிக்கைகளும் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின் தளர்ந்துள்ளன. இந்திய வங்கி கள் மிக மோசமான சூழலில் இருக்கின்றன. வங்கி ஊழியர்கள் அவர்களின் அன்றாடப் பணிகளைத் தவிர, வேறு பல பணிகளில் ஈடுபடுத்தப்பட்டார்கள். அவர்களது முக்கியமான பணிகளைச் செய்வதற்கான நேரம் இவற்றில் பறிபோனது.

பணமதிப்பு நீக்கத்துக்குப் பின் மூன்று-நான்கு மாதங் களுக்கு வங்கி ஊழியர்கள் பணத்தை வாங்குவது, விநியோகிப்பதைத் தவிர வேறெந்த வேலையும் செய்யவில்லை. நாங்கள் அரசு கடன் பத்திரங்களிலும் மற்ற பத்திரங்களிலும் பணத்தை முதலீடு செய்தோம். பொதுத் துறை வங்கிகள் நஷ்டக் கணக்கு காட்டத் தொடங்கியிருப்பதற்கு இந்த முதலீடுகள்தான் முக்கியக் காரணம். ஸ்டேட் வங்கி யைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட 80% வைப்புத் தொகை சந்தையில் முதலீடு செய்யப்பட்டுவிட்டது. ஒரே காலாண்டில் வங்கி ரூ.4,400 கோடியை இழந்தது.

பணமதிப்பு நீக்கத்துக்குப் பின் வங்கி ஊழியர்கள் புதிதாகக் கடன் கொடுப்பதில் கவனம் செலுத்தவில்லை. வாராக் கடன்களைப் பின்தொடரும் ஏற்பாடும் குலைந்துவிட்டது. எதிர்காலத்தைப் பற்றிச் சிந்தித்து மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளும் சமரசம் செய்துகொள்ளப்பட்டன. வங்கிகளில் இன்னொரு பெரிய மோசடி பதுங்கியுள்ளது. வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்குக் காப்பீட்டுத் திட்டங்களை விற்பது போன்ற துணை விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. பல வங்கிகள் இப்போது காப்பீட்டுத் தொழிலிலும் ஈடுபடுகின்றன. இதர வங்கிகள், பல காப்பீட்டு நிறுவனங்களுடன் வர்த்தகக் கூட்டணி வைக்கத் தொடங்கிவிட்டன. இன்று கிட்டத்தட்ட ஒவ்வொரு கடனுடனும் சேர்த்து ஒரு காப்பீட்டுத் திட்டத்தை வாங்க வாடிக்கையாளர் நிர்ப்பந்திக்கப்படுகிறார்.

இதுபோன்ற துணை விற்பனைகள், பற்று-வரவு அறிக்கையில் தங்களது இதர வருமானங்களை அதிகமாகக் காண்பிக்க உதவுவதாக வங்கி நிர்வாகிகள் சொல்கின்றனர். இதே வாதம் வங்கி நிர்வாகங்களை எல்ஓயு-க்கள் விஷயத்திலும் ஈர்த்திருக்கலாம். ஏனென்றால், அதுபோன்ற பத்திரங்களால் வங்கிகளுக்குக் கட்டணமும் தரகுத் தொகையும் கிடைக்கும். இதுபோன்ற வருமானங்களை அதிகரிப்பதிலேயே கவனம் செலுத்தும்போது கடன்கொடுப்பு விதிகள் நீர்த்துப்போவதைத் தவிர்க்க முடியாது. கடந்த காலத்தில் வாங்கிய கடனைக் கட்டத் தவறியவர்கள் இதுபோன்ற காப்பீட்டுத் திட்டத்தை வாங்கினார்கள் என்பதற்காகவே கடன் கொடுக்கப்பட்ட நிகழ்வுகளை அறிவேன். ரிசர்வ் வங்கி, ஐஆர்டிஏ (காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சிக்கான நிறுவனம்), சிவிசி (மத்திய ஊழல் தடுப்பு ஆணையம்) ஆகிய அமைப்புகளுக்கு, இந்த அழிவுக்கு வழிவகுக்கும் செயல்பற்றி கடிதம் எழுதியுள்ளேன். எதுவும் நடக்கவில்லை.

இந்த மோசடிக்கான பொறுப்பு அல்லது பொறுப்பின்மையை வங்களின் நிர்வாகங்கள், ரிசர்வ் வங்கி மற்றும் அரசுக்கிடையே பங்கிடச் சொன்னால் எப்படிச் செய்வீர்கள்?

முதலில் குற்றம்சுமத்த வேண்டியது ரிசர்வ் வங்கி மீதுதான். அமைப்புகளையும் செயல்முறைகளையும் பின்பற்றத் தவறியுள்ளது அது. ‘ஸ்விஃப்ட்’டும் ‘சிபிஎஸ்’ஸும் இணைக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்யத் தவறியது, அதன் கவனக் குறைவைக் காண்பிக்கிறது. நாஸ்ட்ரோ கணக்குகளில் அந்நியச் செலாவணி நிலுவைத் தொகைகளைக் கட்டுப்படுத்தத் தவறியதற்கும் ரிசர்வ் வங்கியைத்தான் பொறுப்பாக்க வேண்டும். நகை வணிகத் துறையில் எல்லை தாண்டிய பணப் பரிமாற்றங்களைச் சரிபார்க்கத் தவறியது மற்றொரு தவறு.

பொதுத் துறை வங்கிகளைக் கட்டுப்படுத்தும் நிதி அமைச்சகமும் முழுதாகத் தோற்றுள்ளது. வங்கிகளில் என்ன நடந்துகொண்டிருக்கின்றன என்பது பற்றிய அறிக்கைகளைக் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அமைச்சகம் பெற்றிருக்க வேண்டும். வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குழுமங்களில் அமைச்சகத்தின் பிரதிநிதிகள் இருக்கிறார்கள். இவையெல்லாம் நடக்கும் போது அவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? இவற்றுக்கு மாறாக, வங்கிகள் அவற்றின் வழக்கமான பணிகளுக்கு அப்பாற்பட்ட வேலைகளைச் செய்ய வைப்பதிலேயே அரசு கவனம் செலுத்திவந்தது. ஜன்தன் கணக்குகள், அடல் பென்ஷன் யோஜனா, மக்களை ஆதாரில் இணைப்பது தொடர்பான பணிகள் வங்கி ஊழியர்கள் மீது திணிக்கப்பட்டன. ஆதார் இணைப்பு, வங்கிகள் செய்ய வேண்டிய வேலை அல்ல என்று சொல்வேன். வங்கிகளே மக்களை ஆதாரில் இணைத்து அவர்களது வங்கிக் கணக்கையும் ஆதாருடன் இணைக்கும் வேலையை வங்கியே செய்வது எந்த அளவு பாதுகாப்பானது? வங்கி நிர்வாகங்களும் இதற்கெல்லாம் பொறுப்பேற்க வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

© ப்ரண்ட்லைன்,

சுருக்கமாகத் தமிழில்: கோபாலகிருஷ்ணன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x