Published : 19 Mar 2018 08:58 AM
Last Updated : 19 Mar 2018 08:58 AM

தெலுங்கு தேசம் விலகல்: பாஜக அரசுக்கு நெருக்கடியா?

பா

ஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி யிலிருந்து விலகுவது என்று முடிவெடுத்திருக்கிறது தெலுங்கு தேசம் கட்சி.

மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரவும் அது நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸை அக்கட்சி சேர்த்துக்கொள்ளவில்லை என்பது கவனிக்கத்தக்கது. ஆந்திர மக்களுக்காக மத்திய அரசுடன் போராடவும் சலுகைகளை அதிகம் கேட்கவும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸைவிடத் தன்னால் முடியும் என்று காட்டுவது தான் இந்த நடவடிக்கைகளுக்கெல்லாம் காரணம் என்று தெரிகிறது.

தங்களுடைய தீர்மானத்தால் பாஜக அரசு கவிழ்ந்துவிடாது என்று தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்குத் தெரியும். தேர்தல்ரீதியாகப் பார்த்தால், பாஜகவுடன் சேர்ந்திருப்பதே தெலுங்கு தேசத்துக்கு ஆதாயமாக இருந்துவந்திருக்கிறது. காங்கிரஸுக்கு எதிராக இரு கட்சிகளுடைய வாக்குகளும் சேர்ந்து வெற்றியை ஈட்டித்தந்தன. 2014 வரையில் தெலுங்கு தேசத்துக்கு காங்கிரஸ்தான் போட்டியாளராக இருந்தது. காங்கிரஸிலிருந்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பிரிந்த பிறகு நிலைமை மாறியது. பாஜகவுடன் கூட்டணி வைக்க ஒய்எஸ்ஆர் காங்கிரஸுக்குத் தயக்கம் ஏதுமில்லை. ஒய்எஸ்ஆர் காங்கிரஸுடன் பாஜக இணக்கமாக இருப்பது தெலுங்கு தேசத்துக்குப் பிடிக்கவில்லை. எனவே, பாஜகவை எதிர்க்க, ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் வழியிலேயே செல்கிறது.

ஆந்திர மாநில சட்ட மன்றத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஆந்திரத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்க மறுக்கும் பாஜகவின் தோழமைக் கட்சியாக இருக்க தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் இரண்டுமே விரும்பவில்லை. ஆந்திரத்துக்காக மத்திய அரசு என்ன சலுகைகளை அளித்தாலும் போதாது - இன்னமும் வேண்டும் என்றே இரு கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு கேட்கும். பாஜகவைவிட்டு விலகுவதால் சில ஆயிரம் வாக்குகள் குறைந்தாலும் அரசியல்ரீதியாக நல்ல பலனையே தரும் என்று தெலுங்கு தேசம் நம்புகிறது. இதனால்தான், “தென் மாநிலங்களிடமிருந்து அதிக வரி வருவாயை எடுத்துக்கொள்ளும் மத்திய அரசு, அதை வட மாநிலங்களின் வளர்ச்சிக் குப் பயன்படுத்திக் கொள்கிறது, தென் மாநிலங்களுக்குக் குறைவாகவே நிதி ஒதுக்கப்படுகிறது” என்று பேசியிருக்கிறார் சந்திரபாபு நாயுடு. தெலுங்கு தேசம் போன்ற மாநிலக் கட்சிகளின் செயல்பாட்டால் தமிழ்நாட்டைப் போலவே ஆந்திரத்திலும் இனி தேசியக் கட்சிகள் ஓரங்கட்டுப்பட்டுவிடுமா என்று பார்க்க வேண்டும்.

மகாராஷ்டிரத்தில் தோழமைக் கட்சியான சிவசேனை சட்டமன்றத் தேர்தலின்போது குறைந்த தொகுதிகள்தான் தர முடியும் என்று பிடிவாதம் பிடித்ததால், கடைசி நேரத்தில் தனித்துப் போட்டி யிட முடிவுசெய்து சிவசேனையைவிட அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது பாஜக. ஆந்திரத்திலும் அப்படி முயற்சிசெய்து பார்க்கலாம் என்று அக்கட்சி நினைப்பதைப் போலத் தெரிகிறது. மகாராஷ்டிரத்தில் நடந்தது ஆந்திரத்தில் நடக்காது. உண்மையில், ஆந்திர நலனில் அக்கறையுள்ளவர்கள் யார் என்று காட்டுவதில் தெலுங்கு தேசத்துக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸுக்கும் இடையில் ஏற்பட்ட போட்டி காரணமாக பாஜகவுக்குத்தான் இழப்பு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x