Last Updated : 20 Mar, 2018 09:45 AM

 

Published : 20 Mar 2018 09:45 AM
Last Updated : 20 Mar 2018 09:45 AM

இடதுசாரிகளுக்கு காங்கிரஸ் தேவையா?

தி

ரிபுராவில் இடதுசாரிகளின் தோல்வியை, தாராளவாதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் ஆரவார அஞ்சலிகளாகப் பக்கம் பக்கமாக எழுதித் தீர்த்து ஒரு வாரம்கூட ஆகவில்லை. அந்தக் கட்டுரைகளின் குறியீடுகள் எதைச் சுட்டுகின்றன? சூரிய அஸ்தமனம் சிவப்பாகவும் சூரிய உதயம் காவியாகவும் இருக்கப்போகிறது என்றா? சமீபத்தில் காலை சூரியன் உதித்ததில் தொடங்கி மறையும் வரைக்கும் நாட்கணக்கில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 30 ஆயிரம் விவசாயிகள் இந்தியாவின் வர்த்தகத் தலைநகரத்தில் சிவப்புக் கொடிகளை அசைத்தபடி அணிவகுத்த நிகழ்ச்சியும் நடந்துள்ளது. தங்கள் வீட்டின் குளிர்சாதனப் பெட்டிகளில் வைக்கும் காய்கறி, பழங்களை உற்பத்திசெய்யும் மக்கள் மீது துளி மரியாதையும் இல்லாத ஆளும் வர்க்கத்தினரிடம், விவசாயிகள் தங்கள் உரிமைகளைக் கோரிய போராட்டம் அது.

அப்படியென்றால் இடதுசாரித்துவம் இன்னும் இறக்கவில்லையா? திரிபுரா தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சிக்குக் கிடைத்த தோல்வி இடதுசாரித்துவத்துக்கு விழுந்த பெரிய அடியில்லையா? அடுத்த சட்ட மன்றத் தேர்தலில் கேரளத்திலும் அதிகாரத்தை அவர்கள் இழந்தால் என்னவாகும்? தற்போதைய வெகுஜன அரசியல் ஞானத்தின் அடிப்படையில் பார்த்தால், இடதுசாரி அரசியல், செயற்கை சுவாசத்தில் இருக்கிறது. அத்துடன் அது பிழைத்திருப்பது ஏற்கெனவே அது எதிர்கொண்டிருக்கும் அல்லாட்டத்துக்கான பதிலில் இருக்கிறது: காங்கிரஸுடன் கூட்டாளியாக வேண்டுமா, வேண்டாமா என்ற கேள்விகளே அவை.

முன்வைக்கப்படும் வாதங்கள்

திரிபுராவில் மார்க்சிஸ்ட் கட்சி அடைந்த தோல்வி உண்மையிலேயே பெரும் பின்னடைவுதான். வேறு மாதிரியாக நம்புவதென்பது அஞ்ஞானம். ஆனால் காங்கிரஸுடன் கூட்டுசேர்வதற்கு இந்தத் தோல்வி காரணமாக இருக்குமென்றால் அது துயரமுடிவாகவே இருக்கும்.

அப்படியான ஒரு கூட்டணிக்கு ஆதரவாக இரண்டு வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. இடதுசாரிகள் மேலும் மேலும் விளிம்புக்குத் தள்ளப்படுவதாகவும், தனியாகத் தேர்தலைச் சந்திப்பதற்கான வலுவான நிலையில் இல்லை என்றும் சொல்லப்படுகிறது. சமூக ரீதியாகப் பிரிவினையை ஏற்படுத்தும் இந்துத்துவ சக்திகள் 2019-ல் மீண்டும் அதிகாரத்துக்கு வருவதைத் தடுக்கும்விதமாக அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் கைகோக்க வேண்டுமென்பது இரண்டாவதாகக் கூறப்படும் காரணம்.

குறுகிய காலப் பயனை அளிக்கும் தேர்தல் கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால் இரண்டு காரணங்களும் பெருமதியானவையாக இருக்கலாம். ஆனால் நீண்ட கால அடிப்படையில் பார்த்தால், காங்கிரஸுடன் கூட்டணி சேர்வது என்பது வியூக ரீதியாக பேத்தலான முடிவாக இருக்கும். அத்துடன் முற்போக்கு அரசியலுக்குச் சுருங்கிவரும் வெளியை மேலும் சுருக்குவதோடு, அதிதேசியவாத வெறுப்பு அரசியல் வியாபாரிகளைப் பலப்படுத்தவும் செய்யும்.

கடந்த காலத்திலிருந்து பாடம்

எதிர்கால வாய்ப்புகள் குறித்து தலையைப் பிய்த்துக்கொள்ளும் அலசல்களிலெல்லாம் மார்க்சிஸ்ட் கட்சி ஈடுபட வேண்டியதில்லை. உலகெங்கும் தங்கள் சக அமைப்புகளின் வரலாறைப் பரிசீலனைசெய்வதே போதுமானது. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய மேற்கு ஐரோப்பாவின் மிகப் பெரிய கம்யூனிஸ்ட் கட்சியான, இத்தாலியக் கம்யூனிஸ்ட் கட்சி, 1976-ல் நடந்த தேசியத் தேர்தல்களில் 34.4% வாக்குகளைப் பெற்றது. அடுத்து, இந்தியாவின் காங்கிரஸ் கட்சிக்கு நிகரான, மையவாத கிரிஸ்டியன் டெமாக்ரசி கட்சியுடன் கூட்டணி சேர்ந்து மிகப்பெரும் சமரசத்தைச் செய்தது. இடதுசாரிக் கொள்கைகளை மேலும் செயல்படுத்த தனது வெற்றியைப் பயன்படுத்த நினைத்துச் செய்த சமரசம் இது. ஆனால், இந்தக் கூட்டணி ஆட்சியில், கம்யூனிஸ்ட்கள்தான் வலதுசாரிக்கு மாற நேரிட்டது. மதச்சார்பற்ற, முற்போக்கான இத்தாலியக் கம்யூனிஸ்ட் கட்சி விவாகரத்து, கருக்கலைப்பு போன்ற பிரச்சினைகளில் கிரிஸ்டியன் டெமாக்ரசி கட்சியின் ஆதரவாளர்களான நடுத்தர வர்க்க கத்தோலிக்க வாக்காளர்களைச் சங்கடப்படுத்தக் கூடாதென்பதே காரணம். இத்தாலியின் நாடாளுமன்ற இடதுசாரி அரசியல் இந்தக் கூட்டணியை அடுத்து திரும்ப மீளவேயில்லை.

இந்தியாவில் இடதுசாரிகளுக்குக் காங்கிரஸ் தேவைப்படுவதைவிட காங்கிரஸுக்கே இடதுசாரிகள் அதிகமாகத் தேவைப்படுகின்றனர். காங்கிரஸ் கட்சி எப்போதும் இடதுசாரி, வலதுசாரி இரண்டு பிரிவினருடனும் இணைந்து பணியாற்றியுள்ளது. எப்போது எந்தப் பிரிவு ஆதிக்கம் செலுத்துவதாக உள்ளதோ அதைப் பிரதிபலிப்பதே அதன் அரசியல் குணம். குறிப்பாக ஜவாஹர்லால் நேரு காலத்தையும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் முதல் எட்டாண்டுகளையும் காங்கிரஸின் உச்ச முற்போக்குக் காலகட்டங்களாகச் சொல்லலாம். கொள்கைரீதியாக அர்ப்பணிப்பு கொண்ட இடதுசாரிகள் நாடாளுமன்றத்துக்குள்ளேயும் வெளியேயும் இருந்திராவிடில் மக்கள் நலன் சார்ந்த அத்தனை சட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்காது.

சக்திவாய்ந்த நிலையிலிருந்த இடதுசாரிகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்திராத நிலையில் காங்கிரஸ் வலது பக்கத்தில் தாறுமாறாகப் போயிருக்கும்- பொருளாதார ரீதியாக மட்டுமல்ல சமூகரீதியாகவும். தற்போதைக்கு அது கொண்டிருக்கும் முற்போக்கு ரீதியான ஆற்றலை இழந்து பாஜகவின் வெளிறிய வடிவாகத் தேய்ந்துபோயிருக்கும்.

வளைந்துகொடுக்கும் தன்மை

ஜிக்னேஷ் மேவானி, ஹர்திக் பட்டேல் மற்றும் அல்பேஷ் தாகோர் போன்றவர்களுடன் சென்ற ஆண்டு ஏற்பட்ட புரிதலால் மீண்டும் முற்போக்கு அணுகுமுறைகளை உயிர்ப்பிக்கும் முன்னர் குஜராத்தில் காங்கிரஸின் நிலை அதுவாகவே இருந்தது. இடதுசாரிகளின் சமூகத் தளம் சார்ந்த நோக்கங்களைப் பண்படுத்திக்கொண்டிருப்பவர்கள் இவர்கள்தான். தலித் மக்கள், வேலைவாய்ப்பற்ற கூலி வர்க்கத்தினர், விளிம்புநிலை விவசாயிகள் ஆகியோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு எதிராகப் போராடிக்கொண்டிருப்பவர்கள் இவர்கள்தான். அவர்கள் தலைமையேற்று செயல்படும் இயக்கங்களின் மறுவிநியோக அரசியலானது இடதுசாரிகளுடன் இயற்கையான பந்தத்தைப் பகிர்வது. ஆனால் குஜராத்தில் இடதுசாரிகளின் தாக்கம் கிட்டத்தட்ட இல்லாத நிலையில், மேற்சொன்ன குழுக்களின் நலன்களைப் பாதுகாப்பதில் தவறுகள் செய்த கட்சியாக இருந்தும், காங்கிரஸை நோக்கி அவர்கள் சென்றனர். அப்படியான வளைந்துகொடுக்கும் தன்மை காங்கிரஸுக்கு மட்டுமே, தாராளவாதத்துக்கு மட்டுமே உண்டு. இதைத்தான் காங்கிரஸ் உயர்த்திப்பிடிக்கிறது.

உலகெங்கும் உள்ள ஜனநாயக நாடுகள் அனைத்திலும், சமூகத் தளத்தில் இடதுசாரிகள் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் மட்டுமே தாராளவாத அரசியல் தழைக்க முடியும். 20-ம் நூற்றாண்டில் முதலாளித்துவத்தை எதிர்கொண்டு தொழிலாளர் இயக்கங்கள் அடைந்த வெற்றிக்குப் பின்னால் இருந்தது இடதுசாரிகளின் ஆதிக்கம்தான்.

மேற்கின் அதிவளர்ச்சியடைந்த முதலாளித்துவப் பொருளாதாரங்களை வரையறைசெய்த பெருந்தன்மை மிகுந்த மக்கள் நல அரசு என்பது தாராளவாதத்தின் பரிசு அல்ல, இடதுசாரித்துவம் அளித்த பரிசு அது. இந்த நலவாதம், சோவியத் ஒன்றியம் சிதறியவுடனேயே வாடி உலரத் தொடங்கியது. அத்துடன் இடதுசாரிகளும் உலகளாவிய அளவில் தங்களை ஓட்டுக்குள் சுருக்கிக்கொண்டனர். ஒவ்வொரு வளர்ச்சிப் பிரச்சினைக்கும் தீர்வாக புதிய தாராளவாத சம்பிரதாயத்தைப் பிரச்சாரம் செய்வதற்குத் தாராளவாதிகளையும் அவிழ்த்துவிட்டனர்.

அசலான இடதுசாரித்துவம் தேவை

இடதுசாரி அரசியலின் வீழ்ச்சிக்கும் வலதுசாரி வெறுப்பு அரசியலுக்கும் நேரடியான தொடர்பு இருக்கிறது. நாஜி ஐரோப்பா முதல் சமகால கிரேக்கம், ஜெர்மனி வரை, தாராளவாதிகள் ஒருபோதும் ஜனநாயக மதிப்பீடுகளைத் தீவிரமாகப் பாதுகாப்பவர்கள் அல்ல என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகிவருகிறது.

நவீனவாத பாசிஸ்டு சக்திகளை எதிர்த்து தெருவுக்கு வந்து போராடுபவர்கள் எப்போதும் இடதுசாரி அரசியலுடன் தொடர்புடைய குழுக்களாகவே இருக்கிறார்கள். இந்தியாவிலும் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் தொடங்கி கேரளம் வரை இதைத்தான் பார்த்து வருகிறோம்.

காரணம் மிகவும் எளிமையானது. பெரும் முதலீட்டுக்கும் வலதுசாரி தேசியவாதத்துக்கும் (அல்லது பாசிசம்) இடையிலான இயல்பான பிணைப்பையும், தொழிலாளர் வர்க்கம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கும் சர்வாதிகார வெகுஜன அரசியல் கவர்ச்சிக்கும் இடையிலான தொடர்பையும் மதிப்பிடுவதற்கான தத்துவார்த்த வலிமையோ, குறைந்தபட்ச ஒருங்கிணைவோ தாராளவாதத்திடம் இல்லை. மாறாக, திறந்த சந்தை மற்றும் நுகர்வுவாதம் வழியாக சாதியக் கொடூரங்களையும் பிரிவினைவாதத்தையும் தீர்த்துவிடலாம் என்று அது நம்புகிறது.

இதனால்தான் இந்துத்துவப் படையினர், தங்கள் பகைமையை தாராளவாதிகள் மீது காட்டாமல் இடதுசாரிகளின் மீது காட்டுகிறார்கள். இந்தியாவின் இடதுசாரிக் கட்சிகளைப் பொறுத்தவரை, அவர்கள் செய்யவேண்டியது இதுதான்: தெருவுக்குச் சென்று போராடுவது; நாடு முழுவதும் முளைக்கும் மக்கள் இயக்கங்களுக்கு, தங்கள் வளங்களையும் ஒருங்கிணைப்புத் திறன்களையும் வழங்குவது. விவசாயிகளைத் திரட்டுவது முதல் ஆசிரியர் போராட்டங்கள், மாணவர் கொந்தளிப்பு, தலித், ஆதிவாசி இயக்கங்கள் போன்றவற்றை அவர்கள் வலுப்படுத்த வேண்டும்.

மகாராஷ்டிர விவசாயிகள் பேரணியை மார்க்சிஸ்ட் கட்சியின் கிளை அமைப்பான அகில இந்திய விவசாயிகள் சங்கம் வெற்றிகரமாக ஒருங்கிணைத்திருப்பது என்பது, தேர்தல் தொடர்பான கவலைகளை ஒதுக்கிவைத்துவிட்டு, அரசியல் அணிதிரட்டலுக்கான பணிகளில் இடதுசாரிகள் இறங்கினால் அவர்கள் சாதிக்கக்கூடியது என்ன என்பதைக் காட்டியிருக்கிறது. அந்தப் பேரணி, இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரமான மும்பைக்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நுழைந்தபோது, இடதுசாரி அல்லாதவர்களும் இடதுசாரிகளுக்கு எதிரான கட்சிகளும்கூட அந்த ‘சிவப்புக் கட’லுக்குள் குதித்தனர். காங்கிரஸ், மகாராஷ்டிர நவ்நிர்மாண் சேனையுடன் சிவசேனாவும் தனது ஆதரவை அளித்தது.

காங்கிரஸும் இடதுசாரிகளும் சேர்ந்து ஒரு ஒற்றை முன்னணியாகத் திரள்வதைவிட, பாஜகவுக்கு எதிராக இரண்டு அணிகளாக, இடதுசாரிகளும், காங்கிரஸ் கூட்டணியும் தனித்தனியாகத் திரள்வதே சரியானதாகத் தெரிகிறது. சமூகக் கலாசார அமைவில் அதி தீவிர வலதில் இருக்கும் பாஜகவை அதன் சரியான இடத்தில் நிறுத்தி அறைவதற்கு அதுவே வசதியாக இருக்கும். தேர்தல் அடிப்படையில் எவ்வளவுதான் ஆதிக்கம் செலுத்தினாலும்,இந்த உத்தியினால் ஒரு இந்துத்துவக் கட்சி, வலதுக்கும் இடதுக்கும் மத்தியிலுள்ள இடத்தை ஆக்கிரமிக்காமல் இருக்கச் செய்ய முடியும். அந்த இடத்திலிருந்துதான் அது இடதுசாரிகளை வெளியே தள்ளுவதும் நடக்கிறது. உத்தர பிரதேசத்திலும் பிஹாரிலும் நடந்த இடைத்தேர்தல் முடிவுகள், பெரும்பான்மைவாத அரசியலும் பலன் அருகும் விதிக்கு உட்பட்டதுதான் என்பதைச் சரியான தருணத்தில் நினைவூட்டுபவை.

காங்கிரஸைப் பொறுத்தவரை, எந்த நிறத்தின் துணையுடனும் வரைய முடிந்த ‘கை’தான் அது. ஆனால், துணிச்சலான விவசாயிகள் மும்பையில் செய்துகாட்டியதைப் போல், சிவப்பை வெளிக்கொண்டுவருவதற்குச் சுயாதீனமான இடதுசாரிகள் இல்லை என்றால், வண்ணத் தொகுப்பு முழுவதும் காவி நிறத்தீற்றலாக மாறுவதற்கு அதிக நேரம் பிடிக்காது!

© ‘தி இந்து’ ஆங்கிலம், தமிழில்: ஷங்கர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x