Published : 31 May 2019 08:13 AM
Last Updated : 31 May 2019 08:13 AM

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கலாமா?

பொறியியல் படிப்பில்  சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல்ஸ் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பாடங்கள்  முக்கிய பாடப்பிரிவுகளாக (Core branches) கருதப்படுகின்றன. அனைத்து பொறியியல் கல்லூரிகளிலுமே இப்பாடப்பிரிவுகள் இருக்கும். பொதுவாக, பொறியியல் சேரும் மாணவ-மாணவிகளின் விருப்பப் பட்டியலில் இருப்பவை எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் (இசிஇ), ஐ.டி. எனப்படும் இன்பர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ், மெக்கானிக்கல் படிப்புகள்தான். கலந்தாய்வின்போது கல்லூரிகளுக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவம் குறிப்பிட்ட பாடப்பிரிவுக்கும் கொடுக்கப்படுவதை ஒவ்வொரு ஆண்டும் பார்க்கலாம். அதிக கட் ஆப் மதிப்பெண் பெறும் மாணவர்கள், மாணவிகளில் பெரும்பாலானோர் இசிஇ, ஐடி உள்ளிட்ட பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்தாலும் கணிசமான மாணவர்கள் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவைத் தேர்வுசெய்வதில் ஆர்வமாக இருப்பார்கள். வகுப்பறையை விட பணிமனைகளில்தான் அதிகம் படிக்க வேண்டும் என்பதால் பொதுவாக மாணவிகள் மெக்கானிக்கல் பிரிவைத் தவிர்த்து விடுவர். அதையும் தாண்டி ஆர்வத்தோடு மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் சேரும் மாணவிகளும் உண்டு.  

அடிப்படையில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் என்பது இயந்திர அமைப்புகளை வடிவமைப்பது, உருவாக்குவது, நிர்வகிப்பது, பகுப்பாய்வு செய்வது போன்ற பணிகளைக் குறிக்கும். இது, பெரிய பெரிய இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் இயக்கம், உற்பத்தி மற்றும் வடிவமைப்பு போன்றவற்றுக்கு, வெப்பம் மற்றும் மெக்கானிக்கல் ஆற்றலைப் பயன்படுத்துவது மற்றும் உற்பத்தி செய்தல் ஆகியவை தொடர்பான ஒரு பொறியியல் பிரிவு. இதில் இயற்பியல், மெட்டீரியல் அறிவியல் கோட்பாடுகள் அதிகம்  பயன்படுத்தப்படுகின்றன.  பொறியியல் பிரிவுகளில் மிகவும் பழமையான மற்றும் தலையாய துறை மெக்கானிக்கல் பிரிவுதான். 4 ஆண்டு காலம் கொண்ட இப்படிப்பில்  மெக்கானிக்ஸ், தெர்மோடைனமிக்ஸ், மெட்டீரியல் சயின்ஸ், ஸ்ட்ரக்சுரல் அனலிசிஸ் முதலிய பாடங்கள் இடம்பெறும். வகுப்பறையை விட பணிமனைகளில்தான் அதிக நேரத்தை செலவிட வேண்டியிருக்கும். காரணம் இப்படிப்பில் தியரியைக் காட்டிலும் செய்முறைகளே அதிகம் இருக்கும்.

கணினி மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் உற்பத்தி சாதனங்கள், தொழிற்சாலை உபகரணங்கள், ராட்சத இயந்திரங்கள், சூடாக்குதல் மற்றும் குளிராக்குதல் அமைப்புகள், போக்குவரத்து சாதனங்கள், ஏர்கிராப்ட், வாட்டர்கிராப்ட், ரோபோட்டிக்ஸ், மருத்துவ உபகரணங்கள் போன்றவற்றை வடிவமைத்து உருவாக்குபவர்கள் மெக்கானிக்கல் இன்ஜினியர்கள்தான். அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து சாதனங்களிலும் அவர்களின் கைவண்ணம் நேரடியாகவோ, மறைமுகமாக கண்டிப்பாக இருக்கும்.

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட பொறியியல் கல்லூரிகளில் பிஇ மெக்கானிக்கல் சேர பிளஸ் 2 மதிப்பெண் போதும். கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய 3 பாடங்களில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். அதேநேரத்தில் ஐஐடி, ஐஐஐடி போன்ற உயர்தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் ஜெஇஇ நுழைவுத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடிப்பவர்களுக்கு அரசு மற்றும் தனியார்த் துறைகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள்  இருக்கின்றன. தொழிற்சாலைகள், கார் தயாரிப்பு நிறுவனங்கள், ஆட்டோமொபைல் சாதன உற்பத்தி மையங்கள் போன்றவற்றில் வேலைவாய்ப்பு பெறலாம். என்எல்சி, ஓன்ஜிசி, ஐஓசி, இந்தியன் ஆயில் போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் உதவி இன்ஜினியர் அந்தஸ்தில்  பணியில் சேரலாம். இதற்கு ‘கேட்’ (GATE) நுழைவுத்தேர்வு எழுத வேண்டியது அவசியம். டிஆர்டிஓ, இஸ்ரோ போன்ற மத்திய அரசு நிறுவனங்களில் பணிவாய்ப்புகள் உள்ளன. யுபிஎஸ்சி நடத்தும் ஐஇஎஸ்

(Indian Engineering Service-IES) தேர்வெழுதி இந்திய ரயில்வே, பாதுகாப்புத்துறை, மத்திய பொதுப்பணித்துறை போன்றவற்றில் உயர் அதிகாரியாக பணியில் சேரலாம். ஓராண்டு டிப்ளமா முடித்துவிட்டு மரைன் இன்ஜினியர் ஆகலாம்.

டிஎன்பிஎஸ்சி தேர்வெழுதி தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உதவி இன்ஜினியர்  பணியில் சேரலாம்.  அரசுப் போக்குவரத்துக்கழகங்கள், தமிழ்நாடு மின்சார வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் மெக்கானிக்கல் இன்ஜினியர்களுக்கு பணிவாய்ப்புகள் இருக்கின்றன.  பிஇ மெக்கானிக்கல் முடித்தவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும்  போட்டித் தேர்வெழுதி  அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் ஆகலாம். இதற்கு முதுநிலை பட்டமோ அல்லது ‘நெட்’ தகுதித்தேர்வு தேர்ச்சியோ அவசியமில்லை.  மேற்படிப்பு என்று பார்த்தால் எம்இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மட்டுமின்றி, டிசைன் இன்ஜினியரிங், டூல் டிசைன், ரொபாட்டிக்ஸ், மெக்கட்ரானிக்ஸ், நானோடெக்னாலஜி, ஆட்டோமேசன் இன்ஜினியரிங், ஆட்டோமேசன் ரொபாட்டிக்ஸ்,  செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்,  இண்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங், மேனுபேக்சரிங் இன்ஜினியரிங், மெட்டலர்ஜி, தெர்மல் எனர்ஜி, என்விரான்மென்டல் இன்ஜினியரிங் என பல்வேறு பிரிவுகளில் எம்டெக், எம்இ படிக்கலாம். ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட உயர் தொழில்நுட்ப நிறுவனங்களில் எம்டெக் படிப்பில் சேர ‘கேட்’ நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். எம்இ, எம்டெக் முடித்துவிட்டு, சிஎஸ்ஐஆர் ‘நெட்’ தகுதித்தேர்வில் தேர்ச்சிப் பெற்று, அரசு பொறியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் ஆகலாம்.

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு சிறப்பான எதிர்காலம்

டாக்டர் கே.துரைவேலு,

டீன், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம், வடபழனி வளாகம், சென்னை.

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையானது எந்தவொரு காலகட்டத்திலும் தொழில்நுட்பத் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய மகத்தான துறை ஆகும். இது, உற்பத்தி, ஆட்டோமொபைல், ரொபாட்டிக்ஸ், ஏரோநாட்டிக்கல், மரைன், விண்வெளி, எரிசக்தி, கட்டுமானம், உலோகவியல், டெக்ஸ்டைல் என பல்வேறு உட்பிரிவுகளைக் கொண்ட தனிச்சிறப்பு வாய்ந்தது. மற்ற பொறியியல் துறைகளைப் போல் அல்லாமல் எந்தவொரு தொழில்நுட்பத்தையும் பார்த்து உணர்ந்து அதன் அடிப்படையில் கற்றுக்கொள்ளும் எளிமை உடையது. சிஎன்சி, கேட், கேம், ரொபாட்டிக்ஸ் என புதிய தொழில்நுட்பங்களை உள்வாங்கி மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்திருக்கிறது. இத்தகைய சூழலில் அதிக வேலைவாய்ப்புகள் நிறைந்த ஒரு பொறியியல் பிரிவாக உருவெடுத்துள்ளது.

எனவே, இன்றைய நிலையில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கான தேவை மிக அதிகம். வரும்காலத்தில் மருத்துவம், விவசாயம், விண்வெளி, எரிசக்தி, நீர் மேலாண்மை, உணவு பதப்படுத்துதல், மரபுசாரா எரிசக்தி உற்பத்தி உள்ளிட்ட துறைகளுக்கு தேவையான புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் உபகரணங்களை வடிவமைத்து உற்பத்தி செய்வதில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறை முக்கிய பங்கு வகிக்கும்.

தற்போது நடந்துகொண்டிருப்பதை 4-ம் நிலை தொழில்புரட்சி (4.0) என்று அழைக்கிறார்கள். அதாவது அனைத்து இயந்திரங்களும் நெட்வொர்க்கிங் மூலம் இணைக்கப்பட்டு, ரொபாட்டிக்ஸ் மற்றும் ஸ்மார்ட் மேனுபேக்சரிங் மூலம் கையாளப்பட்டு முற்றிலும் தானியங்கி (Automation) உற்பத்தி செய்யப்படுகிறது. இத்தகைய சூழலில் 4-வது தொழில்புரட்சிக்கு ஏற்ப ஆட்டோமேஷன் மற்றும் ஸ்மார்ட் மேனுபேக்சரிங் போன்ற சிறப்பு அம்சங்களை உள்ளடக்கிய புதிய பொறியியல் படிப்புகளைப் படிப்பது வேலைவாய்ப்புகளை மேலும் அதிகப்படுத்தும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x