Published : 01 May 2019 09:31 AM
Last Updated : 01 May 2019 09:31 AM

இப்படிக்கு இவர்கள்: அதிகார அத்துமீறல்

ஆட்டத் திருப்பர்கள்:

நல்ல தொடக்கம்

தேசியக் கட்சிகளைக் காட்டிலும் மாநிலக் கட்சிகளே இப்போது பெருவாரியான மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன எனும் செய்தியை சில தினங்களுக்கு முன்பு ‘இந்து தமிழ்’ நடுப்பக்கத்தில் படித்திருந்தேன். அதன் நீட்சியாக இருந்தது ‘எங்கே போகிறது ஆம் ஆத்மி?’ கட்டுரை. இக்கட்டுரை ஆம் ஆத்மியின் சமகாலச் சிக்கல்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஒரு பெரும் அலைபோல திடீரென எழும் மாநிலக் கட்சிகளில் சில விதிவிலக்குகள் தவிர பெரும்பாலானவை அடுத்தடுத்து நகர முடியாமல் அமிழ்ந்துபோகும் சூழல் நிலவுகிறது. மாநிலக் கட்சிகளின் கரங்கள் ஓங்குவது நல்ல அறிகுறிதான். அவை மக்களிடம் பெரும் செல்வாக்கைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கட்டுரை கூட்டணி அரசியலைப் பேசும் அதேவேளையில் மறைமுகமாகப் பல்வேறு விஷயங்களை உணர்த்திச்செல்கிறது. ‘ஆட்டத் திருப்பர்கள்’ தொடரில் இது ஒரு நல்ல தொடக்கம். இந்தத் தொடர் ஒரு முக்கியமான ஆவணமாக இருக்கும் என்பதை முதல் கட்டுரையிலேயே ஊகிக்க முடிகிறது.

- அசோக் குமார், மாதவரம்.

அதிகார அத்துமீறல்

ஏப்ரல் 29 அன்று வெளியான ‘ஈரான் எண்ணெய்க்குத் தடை: இந்தியாவுக்கு நெருக்கடி’ தலையங்கம் படித்தேன். இந்தியாவுக்கு ஈரான் நட்பு நாடாகவே இருந்துவருகிறது. வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைவிதித்தபோதும்கூட ஈரான் கச்சா எண்ணெய் வழங்கி உதவியது. அதை இந்திய அரசு மறக்கலாகாது. அமெரிக்கா தன் வல்லமையைக் காட்ட அதிகார அத்துமீறல் செய்வதற்காகப் பிற நாடுகள் மீது பொருளாதாரத் தடை என்ற பெயரில் மிரட்டல் விடுப்பது சர்வதேச அளவில் விமர்சனமாகியிருக்கிறது. இந்தியா போன்ற உழைக்கும் மக்களை அதிகம் கொண்ட நாடுகள் இதை எதிர்கொள்வது சவால் நிறைந்ததுதான்.

- சு.பாலகணேஷ், மாதவன்குறிச்சி.

வரிவிதிப்புக் கொள்கைகளைத் திருத்த வேண்டும்

பால் க்ரூக்மேனின் ‘ஏன் பெரும் பணக்காரர்கள் தொடர்பான விவாதம் முக்கியமானது ஆகிறது?’ எனும் கட்டுரை தக்க சமயத்தில் வெளியாவது கண்டு மகிழ்ச்சி. ஒரு சதவீதத்தினரின் செல்வக் குவியல் மலைக்கவைக்கிறது. “பணக்காரர்கள் அதிக வரி செலுத்த வேண்டும். பெரும் பணக்காரர்கள் அதைவிட அதிகமாக வரி செலுத்த வேண்டும்” என்கிறார் க்ரூக்மேன். சிங்கப்பூர் தன் நாட்டில் கார் பயன்பாட்டைக் குறைப்பதற்காக வெவ்வேறு படிநிலைகளில் மிக அதிகமாக வரிவிதிக்கிறது. இதுபோல பல்வேறு உதாரணங்களை நாம் சொல்ல முடியும். இந்தியாவில் இதற்கு நேர்எதிரான நிலைதான் உள்ளது. இந்தியாவில் உள்ள வரிவிதிப்புக் கோளாறுகளைக் களைய வேண்டியதென்பது மிக மிக அவசியமானது.

- ம.கதிரேசன், மின்னஞ்சல் வழியாக...

ஆம் ஆத்மியின் அரசியல்

டெல்லியில் முதலில் ஆட்சிக்கு வந்தவுடன், நாடு முழுக்கத் தனக்கு ஆதரவு பெருகிவிட்டதாகக் கணக்கிட்டு 2014 மக்களவைத் தேர்தலில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிட்ட கட்சிதான் ஆம் ஆத்மி. பிறகு, மீண்டும் டெல்லியில் போட்டியிட்டு

70-க்கு 67 இடங்களை வென்றதும் சொந்தக் கட்சியிலேயே பலரை நீக்கியும் தாழ்த்தியும் ஜனநாயகம் இல்லாமல் நடந்துகொண்டது. ஆம் ஆத்மி என்பது மூன்றாவது சக்தியல்ல; மாயமான். டெல்லியிலேயே இது அம்பலமாகப்போகிறது.

- சுந்தரேசன், திருநின்றவூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x