Published : 12 May 2019 10:11 AM
Last Updated : 12 May 2019 10:11 AM

மகத்தான மரைன் இன்ஜினியரிங்

பல்வேறு பாடப்பிரிவுகளை உள்ளடக்கிய இன்ஜினியரிங் துறையில் ஏரோஸ்பேஸ் மற்றும் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படிப்புகள் குறித்த தகவல்களை கடந்த வாரம் பார்த்தோம். தற்போது, மரைன் இன்ஜினியரிங் மற்றும் அதுசார்ந்த இதர படிப்புகளை தெரிந்துகொள்ளலாம்.  இன்ஜினியரிங்க் துறையில் அண்மைக்காலமாக அதிகம் விரும்பப்படும் படிப்புகளில் மரைன் இன்ஜினியரிங்கும் ஒன்று.  இது, கப்பல், நீர்மூழ்கி கப்பல் உள்ளிட்ட கடல்சார் போக்குவரத்து சாதனங்களின் வடிவமைப்பு, அவற்றுக்கான தொழில்நுட்பங்கள் தொடர்புடைய படிப்பு ஆகும். கப்பல் கட்டுமானம். இன்ஜின் செயல்பாடு, பராமரிப்பு, கடல் அமைப்பு, பன்னாட்டு கடல்சார் விதிமுறைகள், கடல்சார் தொழில்நுட்பம் போன்றவை இப்படிப்பில் இடம்பெறும். ஓசன் இன்ஜினியரிங், நேவல் ஆர்க்கிடெக்சர், நாட்டிக்கல் சயின்ஸ் உள்ளிட்டவை மரைன் இன்ஜினியரிங் சார்ந்த இதர படிப்புகள். சர்வதேச அளவில் கடல்சார் போக்குவரத்து மிக வேமாக அதிகரித்து வரும் இன்றைய காலகட்டத்தில் மரைன் இன்ஜினியரிங் மற்றும் அது தொடர்பான படிப்புகளை படிப்பவர்களுக்கு பிரகாசமான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. கடல் பயணம், சாகசம், பன்னாட்டுச்சூழல் போன்றவற்றில் ஆர்வம் உடைய மாணவர்களுக்கு இது ஏற்ற படிப்பாகும்.

மரைன் இன்ஜினியரிங் படிப்பானது ஒருசில கல்வி நிறுவனங்களில் பிடெக் படிப்பாகவும், இன்னும் சில கல்லூரிகளில் பிஇ படிப்பாகவும் வழங்கப்படுகிறது. பிளஸ் 2-வில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்கள் படித்துள்ள மாணவர்கள் இப்படிப்பில் சேரலாம்.  அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகள் எனில் பிளஸ் 2 மதிப்பெண் (கணிதம், இயற்பியல், வேதியியல்) அடிப்படையிலும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் எனில் அவை நடத்தும் சிறப்பு நுழைவுத்தேர்வு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு மூலமாகவும், ஐஐடி எனில் ஜெஇஇ நுழைவுத்தேர்வு மூலமாகவும் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். சென்னையில் உள்ள மத்திய அரசு பல்கலைக்கழமான இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் பிடெக் மரைன் இன்ஜினியரிங், பி.டெக். நேவல் ஆர்க்கிடெக்சர் மற்றும் ஓசன் இன்ஜினியரிங் படிப்புகளுக்கு சிறப்பு நுழைவுத்தேர்வை நடத்துகிறது.

கல்விக்கட்டணத்தைப் பொருத்தவரையில், மரைன் இன்ஜினியரிங் படிப்புக்கு ஓராண்டுக்கு ரூ.2 லட்சம் முதல் செலவாகும். உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்ப இந்த கட்டணம் கல்லூரிக்கு கல்லூரி சற்று மாறுபடும். கல்விக்கட்டணம் அதிகமாக இருக்கிறதே என்று கவலைப்படத் தேவையில்லை. மரைன் இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களுக்கு வங்கிகள் தாராளமாக கல்விக்கடன் கொடுக்கின்றன. இதர பொறியியல் படிப்புகளுடன் ஒப்பிடும்போது படிப்புக்கான செலவு அதிகம் என்றாலும் படித்து முடித்ததும் சம்பளமும் அதிகம் என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும். மரைன் இன்ஜினியர்கள் பயிற்சி நிலையிலேயே ரூ.40 ஆயிரம் சம்பளம் பெறலாம். பணியில் சேர்ந்ததும் ஆரம்ப நிலையில் ரூ.60 ஆயிரம் முதல் ரூ.1.5 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும்.  அனுபவமும், பதவி உயர்வுகளும் வர வர  சம்பளமும் லட்சத்தில்தான் அதிகரிக்கும். மரைன் இன்ஜினியர்களுக்கு அரசு துறைகளிலும் தனியார் நிறுவனங்களிலும் நியறைய வேலைவாய்ப்புகள் உள்ளன.  இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்புகள் மிகுதி. வெளிநாட்டு கப்பல்களில் வேலை என்றால்  ஊதியம் அதிகமாக இருக்கும் என்பதை சொல்லவே வேண்டாம்.

நவீன சாதனங்கள் மற்றும் எலெக்ட்ரானிக் நேவிகேஷன் உள்ளிட்ட  அம்சங்களால் மரைன் இன்ஜினியரிங்கில் பணியின் தன்மை பரந்து விரிந்துள்ளது. அவற்றுள் கடல்சார் போக்குவரத்து, நேவல் ஆர்க்கிடெக்சர், பாதுகாப்பு, தொலையுணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சர்வதேச பருவநிலை கண்காணிப்பு போன்றவை குறிப்பிடத்தக்கவை. மரைன் இன்ஜினியரிங் மற்றும் அதுசார்ந்த படிப்புகளுக்கு உயர்கல்வி வாய்ப்புகளும் மிகுதியாகவே உள்ளன. இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் எம்டெக் மரைன் இன்ஜினியரிங், எம்டெக் நேவல் ஆர்க்கிடெக்சர் படிக்கலாம்.  சென்னை மற்றும் கரக்பூர் ஐஐடியில் ஓசன் இன்ஜினியரிங்கில் எம்டெக் படிப்பு வழங்கப்படுகிறது.  சென்னை அமெட் நிகர்நிலை பல்கலைக்கழகம் உள்பட குறிப்பிட்ட சில கல்லூரிகள் மரைன் இன்ஜினியரிங்கில் எம்டெக் படிப்பை வழங்குகின்றன.

எங்கு படிக்கலாம்?

பி.இ. (மரைன் இன்ஜினியரிங்)

அமெட் நிகர்நிலை பல்கலைக்கழகம், கானாத்தூர், சென்னை

வேல்ஸ் பல்கலைக்கழகம், சென்னை

ஸ்ரீவெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி, ஸ்ரீபெரும்புதூர்

ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி,

தண்டலம், சென்னை

ஜிகேஎம் மரைன் தொழில்நுட்பக் கல்லூரி,  பெருங்களத்தூர், சென்னை

முகமது சதக் இன்ஜினியரிங் கல்லூரி, ராமநாதபுரம்

பிஎஸ்என் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, திருநெல்வேலி

நூருல் இஸ்லாம் பொறியியல் கல்லூரி, கன்னியாகுமரி

முகமது சதக் பொறியியல் கல்லூரி, கீழக்கரை, ராமநாதபுரம்

பி.டெக். (மரைன் இன்ஜினியரிங்) வழங்கப்படும் முக்கிய கல்வி நிறுவனங்கள்

இந்திய கடல்சார் பல்கலைக்கழகம், உத்தண்டி, சென்னை

பார்க் கடல்சார் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், கோவை

கோவை மரைன் கல்லூரி, கோவை

சென்னை மற்றும் கரக்பூர் ஐஐடியில் பி.டெக். நேவல் ஆர்க்கிடெக்சர் மற்றும் ஓசன் இன்ஜினியரிங் படிப்பு வழங்கப்படுகிறது.

மரைன் இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்புகள்

பேராசிரியை மகாலட்சுமி, மரைன் இன்ஜினியரிங் துறை

மரைன் இன்ஜினியரிங் பட்டப் படிப்பை முடிப்பவர்களுக்கு  தற்போது வேலைவாய்ப்புகள் மிகுதியாக உள்ளன. பிஇ அல்லது பிடெக் மரைன் இன்ஜினியரிங் பட்டதாரிகள் படித்து முடித்ததும் கப்பல்களில் தொழில்நுட்பப் பிரிவில் (Engine Side) கிளாஸ்-4 இன்ஜினியராக பணியில் சேரலாம். அப்போது சம்பளம் ரூ.50 ஆயிரம் அளவில் இருக்கும். சுமார் ஒன்றரை ஆண்டு கால கடல் அனுபவம் பெற்ற பின்னர் அவர்கள் கிளாஸ்-3 இன்ஜினியர் பதவி உயர்வுக்கான தேர்வை எழுத வேண்டும்.

பதவி உயர்வு தேர்வுகளை மெர்க்கன்டைல் மரைன் துறை (Mercantile Marine Department-MMD) நடத்துகிறது. கிளாஸ்-3 இன்ஜினியர்களுக்கு ரூ,.80 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும். 6 முதல் 9 மாத கால பணி அனுபவத்துக்கு பின்னர் மீண்டும் பதவி உயர்வு தேர்வெழுதி  கிளாஸ்-2 இன்ஜினியர் ஆகலாம். அப்போது சம்பளம் ரூ.1 லட்சத்தை எட்டிவிடும். இவ்வாறு கிளாஸ்-1 இன்ஜினியர் ஆகி இறுதியாக சீப் இன்ஜினியர் ஆக முடியும்.  சீப் இன்ஜினியர்கள் ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை சம்பளம் பெறலாம்.

சாதாரணமாக மரைன் இன்ஜினியரிங் பட்டப் படிப்பை முடித்து பணியில் சேருவோர் 7 ஆண்டுகளில் சீப் இன்ஜினியர் ஆகிவிடலாம். அவர்கள் பயணியர் கப்பல், சரக்கு கப்பல் (Cargo ship),டேங்கர் கப்பல் (எண்ணெய், இயற்கை எரிவாயு) என பல்வேறு வகையான கப்பல்களில் பணியாற்ற முடியும். அதற்கேற்ப பணியின் தன்மையும் மாறுபடும்.

 மேலும், பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டதாரிகளும்  மரைன் இன்ஜினியர் ஆக முடியும். அவர்கள் கிராஜுவேட் இன் மரைன் இன்ஜினியரிங் என்ற ஓராண்டு கால படிப்பை முடித்துவிட்டு கிளாஸ்-4 மரைன் இன்ஜினியராக பணியில் சேரலாம். 

4 ஆண்டு காலம் கொண்ட மரைன் இன்ஜினியரிங் படிப்பை முடிக்க கல்லூரிக்கு தக்கவாறு ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை செலவாகும். மரைன் இன்ஜினியரிங் படிப்புக்கு வங்கிகள் போட்டிப்போட்டுக்கொண்டு கல்விக்கடன் வழங்குகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x