Published : 30 May 2019 09:18 AM
Last Updated : 30 May 2019 09:18 AM

இந்தியப் பாரம்பரியம் குறித்து நான் பெருமைப்படுகிறேன்!

பாஜகவுக்கு மக்களவைப் பொதுத் தேர்தலில் கிடைத்துள்ள அமோக வெற்றிக்குப் பிறகு கடந்த திங்கள்கிழமை அன்று காசி விசுவநாதர் ஆலயத்துக்கு வழிபடச் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி. அதைத் தொடர்ந்து, பாஜக தொண்டர்களிடையே நடைபெற்ற கூட்டத்தில் யோகி ஆதித்யநாத், அமித் ஷாவை அடுத்து மோடி பேச எழுந்ததும், ‘மோடி... மோடி’ என்று அரங்கம் அதிரக் கூட்டம் ஆர்ப்பரித்தது. ‘ஹர ஹர மகாதேவ்’ என்று ராகத்தோடு மோடி பாடத் தொடங்கவும் அவரோடு கூட்டமும் சேர்ந்துகொண்டது. ‘வந்தே மாதரம்’, ‘பாரத் மாதா  கீ ஜெய்’ என்றெல்லாம் முழக்கமிடும் மோடி, முதல் முறையாக சைவ அடியார்களின் மந்திரத்தை முழங்கியிருக்கிறார். சுமார் ஒரு மணி நேரம் நீண்ட மோடியின் உரையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் இவை.

“2014, 2019 மக்களவைப் பொதுத் தேர்தல்களிலும், ஏராளமான சட்டமன்றப் பொதுத் தேர்தல்களிலும் பாரதிய ஜனதா கட்சி பிரம்மாண்ட வெற்றி பெற்றுவந்தாலும் அவற்றையெல்லாம் கவனிக்க மனமில்லாமலும் துணிவில்லாமலும் இந்த அறிவுஜீவிகள் கண்களையும் காதுகளையும் மூடிக்கொண்டிருந்தனர். அவர்கள் இன்னமும் 20-வது நூற்றாண்டு காலத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

மக்களுக்காக அரசாங்கத்தை அர்ப்பணிக்கிறோம்

அந்த நூற்றாண்டுக்கே மிகவும் பொருத்தமான எண்ணங்களோடும் சிந்தனைகளோடும் வாழும் அவர்கள், 21-வது நூற்றாண்டை நோக்கி இன்னமும் நகரவே இல்லை. கல்வித் துறையிலும் அவரவர் ஆய்வுத் துறையிலும் இந்தப் பெரியவர்கள் ஏராளமான சாதனைகளைப் படைத்திருக்கலாம்; அவர்கள் ஒவ்வொருவரையும் பற்றிய சுயவிவரக் குறிப்புகளே 50 பக்கங்களுக்கும் மேல் இருக்கலாம். ஏராளமான ஆராய்ச்சிகளையும் அவர்கள் மேற்கொண்டிருக்கலாம். அவர்களைவிட ஏழையாக இருந்தாலும் - விவரம் தெரிந்த பாமரர்கள் இந்த நூற்றாண்டின் பிரச்சினைகள் என்ன, அதற்குத் தீர்வுகள் என்ன என்று புரிந்துகொண்டு அதற்கேற்ப முடிவுகளைச் சரியாகவே எடுக்கின்றனர்.

இப்படிப் பிரச்சினைகளை நன்கு புரிந்துகொண்டவர்களால்தான் மக்களுடைய தேவைகளுக்கேற்பச் செயல்பட முடியும். கள யதார்த்தம் என்னவென்று புரிந்துகொண்டவர் களிடமிருந்து அதிகபட்ச உழைப்பைப் பெற்று, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கே நம்முடைய அரசாங்கத்தை அர்ப்பணிக்கிறோம். மக்களுக்குத் தேவைப்படுபவற்றை எல்லாம் அளிக்க வேண்டும் என்ற உறுதியோடு வேலைகளைத் தொடர்கிறோம்.

மேற்கத்திய ஊடகங்களில் இந்திய அரசியல் குறித்து வெளியாகும் கட்டுரைகள் தவறான கண்ணோட்டத்துடனேயே எழுதப்படுகின்றன. இந்திய அரசியல் கட்சிகளையும் தலைவர்களையும் மிகவும் அற்பமாகக் கருதி, உண்மைக்குப் பொருத்தமில்லாமல் எழுதுகின்றனர். பாதி உண்மைகள், பொய்கள், தவறான தகவல்கள், யூகங்கள், தவறான விளக்கங்களை நிரப்பி எழுதுகின்றனர். அரசியலில் முக்கிய இடம் ‘கண்ணோட்டம்’ என்பதற்கு உண்டு. ஒருவர் ஒரு தலைவரைப் பற்றியோ, கட்சியைப் பற்றியோ என்ன நினைக்கிறார் என்பதைப் பொறுத்தே தலைவர்களுடைய பேச்சையும் செயலையும் புரிந்துகொள்வார்கள்.

தவறான கோணத்தில் பார்க்காதீர்கள்

தவறான கோணத்தில் பார்க்கிறவர்களால் கடைசி வரை நல்லவிதமாக எழுத முடியாது. ஒருவரைப் பற்றித் தவறாகச் சித்தரித்து கட்டுரை எழுதுவது அல்லது அவரைப் பற்றி நல்ல அபிப்ராயமே ஏற்பட்டுவிடாமல் எழுதுவது ஆகியவற்றை உத்தியாகவே செய்கின்றனர். காரணம், தவறாகச் சித்தரித்துவிட்டாலே தங்களுடைய நோக்கத்தில் பெரும் வெற்றியைப் பெற்றுவிடுகிறார்கள். அரசியல் என்பதே கண்ணோட்டம் சார்ந்ததுதான். ஒரு கருத்தை அல்லது வெறுப்பை விதைத்துவிட்டால் அந்தக் கருத்துப் போரில் முதல் பாதியை எளிதாக வென்றுவிட முடியும்.

புதுமை என்றால் அது மேற்கத்திய நாடுகளில் புழக்கத்தில் இருப்பது, அவர்களால் ஆராதிக்கப்படுவது, அவர்கள் ஏற்பது மட்டுமே என்று இங்கே புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. இந்தியாவில் பாரம்பரியமாகத் தொடர்ந்துவரும் மக்களுடைய நாகரிகங்களையும் அவர்களுடைய கருத்துகளையும் ‘இருண்டவை’ என்றே பார்க்கின்றனர். இப்படியே தொடர்ந்தால் அது இருண்ட காலத்துக்கு இட்டுச்சென்றுவிடும் என்று எச்சரிக்கையும் விடுக்கின்றனர்.

நிலைத்து நிற்கும் இந்தியப் பாரம்பரியம்

இந்த நாட்டின் பாரம்பரியம் நம்முடைய ரிஷிகள், ஆசார்யர்கள், போதகர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், விஞ்ஞானிகள், வேதாந்திகள், ஆன்மிகச் செம்மல்கள் போன்றோரால் வளர்க்கப்பட்டு, செழுமைப்படுத்தப்பட்டவை. எத்தனையோ நூற்றாண்டுகளைக் கடந்தும் இந்தியப் பாரம்பரியம் நிலைத்து நிற்கிறது. இந்தியாவின் பழம்பெருமை என்றாலே பலருக்குப் பேசவும் நினைக்கவும்கூட அவமானமாக இருக்கிறது; நானோ அவை குறித்துப் பெருமைப்படுகிறேன். இந்தியப் பாரம்பரியம் அவமானப்படத்தக்கது என்று அறிவுஜீவிகள் கருதினால், அது அவர்களுடைய பிரச்சினை.

இந்நாட்டில் பிறந்த மகான்கள் உலக நன்மைக்காகப் பலவற்றை விட்டுச் சென்றிருக்கிறார்கள் என்றே நாம் பெருமையுடன் நம்புகிறோம். அவர்கள் விட்டுச் சென்றவை நாம் பெருமைப்படத்தக்கவை. நமக்குக் கிடைத்துள்ள இந்தப் பாரம்பரியக் கலாச்சாரத்தையும் நவீனப் பார்வையையும் நாம் ஒருங்கே பயன்படுத்த வேண்டும்.

இந்து கலாச்சாரப் பழக்கங்களும் நாகரிகப் பாரம்பரியமும், ‘புதிய இந்தியா’ பின்பற்ற வேண்டிய பாதையும் ஒன்றுக்கொன்று ஆதரவானவை, பயன்படக்கூடியவை - சில அறிவுஜீவிகளும் அரசியல் பண்டிதர்களும் சித்தரிப்பதைப் போல முரண்பட்டவை அல்ல!”

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x