Last Updated : 29 May, 2019 08:57 AM

 

Published : 29 May 2019 08:57 AM
Last Updated : 29 May 2019 08:57 AM

இடதுசாரிகள் நம் தோல்வியை வெளிப்படையாக விவாதிப்போம்!

மக்களவைத் தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளுக்கு – குறிப்பாக, இடதுசாரி இயக்கங்களுக்கு – இனி புதிய முடிவுகள் எடுத்தாக வேண்டிய வரலாற்றுக் கட்டாயத்தை உருவாக்கியுள்ளன. “இடதுசாரிகளின் வீழ்ச்சி ஜனநாயகத்துக்கு நல்லதல்ல” என்ற குரல் இன்றைக்கு இடது சிந்தனையோடு தன்னைப் பொருத்திக்கொள்ளாதவர்களின் மத்தியிலும்கூடக் கேட்கிறது.

சுயவிமர்சனமும் மறுபரிசீலனையும் இடதுசாரிகளான நமக்குப் புதிது அல்ல. ஆனால், ஒரு தீவிரமான அறுவைச் சிகிச்சைக்கு இயக்கம் தன்னை உட்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கும் நிலையில், நம்மைச் சுற்றிலும் ஒலிக்கும் எல்லாக் குரல்களுக்கும் முக்கியத்துவம் அளிப்பதே மாற்றத்தின் முதல் படியாக இருக்கும்.

இடதுகளின் வரலாறு

இன்றைய தலைமுறையினரில் எத்தனை பேருக்கு இது தெரியும் என்று தெரியாது; 1952-ல் நடைபெற்ற சுதந்திர இந்தியாவின் முதல் மக்களவைத் தேர்தலில் முதன்மை எதிர்க்கட்சியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. 489 உறுப்பினர்கள் கொண்ட மக்களவையில் கம்யூனிஸ்ட்டுகளின் எண்ணிக்கை 16. இன்றைய பாஜகவின் தாயான அன்றைய ஜனசங்கம் அந்தத் தேர்தலில் மூன்று இடங்களை மட்டுமே பெற்றிருந்தது என்பதோடும், 1991 தேர்தலில்தான் முதல் முறையாக மூன்று இலக்கங்களை – 120 தொகுதிகள் - பாஜக தொட்டது என்பதோடும் ஒப்பிட்டால் இடதுசாரிகளின் பயணத்தை உணர்ந்துகொள்ளலாம்.

அங்கு தொடங்கினால் படிப்படியாக நாடாளுமன்றத்தில் இடதுசாரிகளின் எண்ணிக்கை முன்னேறியேவந்தது. 1964-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைந்த பிறகும்கூட, கூட்டுத்தொகையில் இடதுசாரிகளின் எண்ணிக்கை ஏற்றஇறக்கித்தினூடாக உயர்ந்ததே தவிர வீழவில்லை. 2004 தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 10, மார்க்ஸிஸ்ட் கட்சி 43 இடங்கள் என இரண்டுமாகச் சேர்த்து 53 இடங்களில் வென்றன. சுதந்திர இந்தியாவின் ஆட்சியிலேயே நல்லாட்சி என்று விமர்சகர்களாலும்கூட மெச்சப்பட்ட காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி சாத்தியமானதே இடதுசாரிகள் பெற்ற இந்தப் பலத்தினால்தான். ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவளித்தவர்கள் அரசு தவறான திசை நோக்கி நகர்ந்துவிடாதவாறு சுக்கானையும் பிடித்து வைத்திருந்தார்கள்.

அதற்குப் பின் இடதுசாரிகள் தொடர் இறக்கத்தைச் சந்தித்துவருகிறார்கள். 2019 தேர்தல் ஒட்டுமொத்தமாகவே இடதுசாரி கட்சிகளின் எண்ணிக்கையை ஐந்தாகச் சுருக்கிவிட்டது. ஒருகாலத்தில் இடதுசாரிகளின் கோட்டையாக இருந்த வங்கத்தில் கட்சி இன்றைக்கு மூன்றாவது இடத்துக்குச் சென்றுவிட்டது; இன்னொரு கோட்டையான திரிபுராவிலும் ஒரு இடம்கூட வெல்ல முடியவில்லை. மாநில ஆட்சியைக் கையில் வைத்திருக்கும் கேரளத்திலும்கூட ஒரு இடம் மட்டுமே கிடைத்திருக்கிறது.

இன்று இடதுசாரிகள் அடைந்திருக்கும் வீழ்ச்சிக்கான காரணங்கள் இடதுசாரிகளால் உணர முடியாதது அல்ல; கடந்த காலங்களிலும் நிறையவே நாம் விவாதித்திருக்கிறோம். ஆனால், தலைகீழ் மாற்றங்களை நாம் முயன்றது இல்லை. சுற்றிலும் கொஞ்சம் காது கொடுத்துக் கேட்டால், மக்கள் நம்மிடமிருந்து என்னவெல்லாம் எதிர்பார்க்கிறார்கள் என்று நிறைய யோசனைகள் வருகின்றன. அவை தலைகீழ் மாற்றங்களைத்தான் கோருகின்றன.

நம்முடைய நீண்ட பயணத்தில் எங்கோ நாம் மக்களிடமிருந்து இயல்பாகப் பேசும் மொழியைத் தொலைத்துவிட்டோம் என்றுகூடத் தோன்றுகிறது. தேர்தல் பாதையை நாம் ஏற்றுக்கொண்டுவிட்ட நிலையில், தேர்தல்களை இரண்டாம்பட்சமாகக் கருதாத மனநிலை நமக்கு வேண்டும் என்று தோன்றுகிறது. தேர்தல் பிரச்சார செய்தி சேகரிப்புக்காகச் சென்றிருந்தபோது எனக்குக் கிடைத்த அனுபவம் இது. மக்களிடம் ஓட்டு கேட்டுச் சென்ற கம்யூனிஸ்ட் வேட்பாளர் தன்னுடைய உரையை இப்படித் தொடங்கினார். “நாங்கள் தேர்தலுக்காக உங்களிடம் வருகிறவர்கள் அல்ல…” உடன் வந்த கூட்டணிக் கட்சித் தலைவர் பதறிப்போனார். “அண்ணே தத்துவம் பேசுற இடமா இது? இப்ப இங்க நாம தேர்தலுக்காகத்தான் வந்திருக்கோம்… ஓட்டு கேட்கத்தான் வந்திருக்கோம்… அதைப் பேசுங்கண்ணே!”

மக்களோடு இடைவெளி

வேடிக்கையாகக் கடந்துவிடக்கூடிய இந்தச் சம்பவம் மக்களிடம் நாம் நம்மை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதையும் சேர்த்தே சொல்லிவிடுவதுதான். பெருமளவில் நமக்குள்ளேயேதான் நாம் பேசிக்கொண்டிருக்கிறோமோ என்றுகூடத் தோன்றுகிறது.

மக்களுக்கான மாற்று இயக்கம் என்ற அக்கறையோடு கூடுகிற பல்வேறு தோழமை அமைப்புகளின் நிகழ்வுகளில் நான் ஒரு கருத்தைக் கூறிவந்திருக்கிறேன். இடதுசாரிகளின் அரங்க நிகழ்வுகள், பொதுக்கூட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகளில் மக்களின் பங்கேற்பு நாளுக்கு நாள் குறைந்துவருகிறது. ‘மக்கள் சந்திப்புப் பயணங்கள்’ என்றெல்லாம்கூட நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். எவ்வளவோ சிரமங்கள், அர்ப்பணிப்பு மிக்க உழைப்புக்குப் பின் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டாலும் உண்மையிலேயே இவை மக்களைச் சந்திக்கிற பயணங்கள்தானா என்ற கேள்விகூட எனக்கு உண்டு. ஏனென்றால், அந்தந்த ஊர்களில் இயக்கம் சார்ந்தவர்களும் ஆதரவு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் மட்டும் கூடியிருக்க, அவர்களிடையே உரையாற்றிவிட்டு அடுத்த ஊர் செல்வது எப்படி உண்மையிலேயே மக்கள் சந்திப்பாக இருக்க முடியும் என்ற எண்ணம் அங்கு பங்கேற்பவர்களின் முகங்களைப் பார்க்கும்போது பல முறை எனக்கு ஏற்பட்டிருக்கிறது. வெற்று அடையாளப் போராட்டங்கள், அடையாளக் கூட்டங்களிலிருந்து முதலில் நாம் வெளியே வர வேண்டும்.

நாடெங்கிலும் உள்ள சில தலைவர்கள் சமூக ஊடகங்கள் வழியாக மக்களிடமிருந்து ஆலோசனைகளைக் கேட்டுள்ளனர். “இப்படிப் பொதுவெளியில் பொதுமக்களிடம் ஆலோசனை கேட்பது சரியா, கட்சித் தலைமை அல்லவா விவாதித்து முடிவெடுத்து வழிகாட்ட வேண்டும்!” என்று அதற்கும்கூடக் கடுமையாக எதிர்வினையாற்றும் போக்கை சமூக ஊடகங்களில் காண முடிந்தது. பொதுமக்களுக்காக இயங்கும் பொதுவுடைமை இயக்கம் பொதுவெளியில் கருத்துக் கேட்பது ஆரோக்கியமான வளர்ச்சிப் போக்குதான். இந்த வளர்ச்சிப் போக்கு எல்லா வகையிலும் பிரதிபலிக்க வேண்டும். இயக்கத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ஒலிக்கிற மாற்றுக் கருத்துகளை உள்வாங்க வேண்டும். எதிரிகள் வெளிப்படுத்துகிற விமர்சனங்களையும்கூடக் கேட்கிறபோதுதான் களத்தில் உறுதியாகக் காலூன்ற முடியும்.

சுற்றிலும் குரல்களைக் கேட்போம்

சுற்றிலும் காது கொடுப்போம். “மண்ணுக்கேற்ற மார்க்ஸியம் வேண்டும்” என்ற குரலைச் சிலர் வலியுறுத்துகிறார்கள். “வர்க்கப் பார்வை என்ற பெயரில் பொருளாதார அடிப்படையிலேயே சமூகப் பிரச்சினைகளை அதிகம் அணுகிப் பழகிவிட்டோம்; மாறாக, சமூகப் பிரச்சினைகளில் உரிய கவனம் அளிக்க வேண்டும்; இந்திய யதார்த்தத்தில் சமூகநீதிக்கும் மொழி உரிமைக்கும் கூடுதல் கவனம் அளிக்க வேண்டும்” என்ற குரலைச் சிலர் வலியுறுத்துகிறார்கள். “போராட்டங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைத் தொண்டுக்கு அளிப்பதில்லை; தொண்டு எத்தகைய சமூக மாற்றத்தை உண்டாக்கும் என்பதை சுதந்திரப் போராட்ட வரலாற்றில் காந்திய உதாரணத்தின் வழி பார்க்க வேண்டும்” என்று சிலர் வலியுறுத்துகிறார்கள். இந்தக் குரல்கள் நமக்குப் புதிதல்ல; ஆனாலும், கேட்போம்.

“இயக்கத்தின் பெயரையே இந்தியத் தன்மைக்கு ஏற்ப மாற்ற வேண்டும்; வாலிபர் சங்கம், மாதர் சங்கம், மாணவர் சங்கம் உள்ளிட்ட வெகுமக்கள் அமைப்புகள் தனித்தனி பெயர்களில் இயங்குவதால் இயக்கத்துக்கு நேரடிப் பலன் கிடைக்காமல் போய்விட்டது, ஆகவே, இனி அந்த அமைப்புகளைக் கட்சியின் இளைஞர், மகளிர் மாணவர் பிரிவுகளாகவே அறிவித்துவிடலாம்” என்ற குரல்கள்கூடக் கேட்கின்றன. உண்மையாகவே எவையெல்லாம் ஏற்கக்கூடியவையோ அவற்றையெல்லாம் உடனே அமலாக்குவது தொடர்பில் யோசிப்போம்.

உலக அளவிலேயே இடது சிந்தனையில் இன்று பெரும் அரிமானம் ஏற்பட்டிருக்கிறது. பொருளாதார உலகமயமாக்கல் ஆழிப் பேரலைபோல இடதுசாரி சக்திகளை அரித்து, அந்த இடத்தில் வலதுசாரி சக்திகளை முன்னிறுத்தியிருக்கிறது. வரலாற்றிலிருந்து இதற்குப் பதில் தேடுவது சரியாக இருக்க முடியாது; சமகாலத்திலிருந்து பதில் தேடுவோம். திறந்த உரையாடல்களும் மாற்றுச் சிந்தனைகளுக்கு இடமளிப்பதுமே இந்த இறக்கத்திலிருந்து மீள முதல் வழி; காதுகளைத் திறந்து வைத்துக்கொள்வோம்.

- அ.குமரேசன், இடதுசாரி இயக்கத்தில் பணியாற்றிவருபவர், ‘தீக்கதிர்’ நாளிதழின் முன்னாள் ஆசிரியர்.

தொடர்புக்கு: theekathirasak@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x