Last Updated : 02 May, 2019 09:11 AM

 

Published : 02 May 2019 09:11 AM
Last Updated : 02 May 2019 09:11 AM

என்னை மாதிரி நிறைய பேர் இருக்காங்க... அவங்க வெளியே வர உதவுங்க!- கோமதி மாரிமுத்து பேட்டி

திருச்சியிலிருந்து முடிகண்டத்திலுள்ள கோமதியின் வீட்டுக்குச் செல்லும் வழி அவர் எவ்வளவு தடைகளைக் கடந்து இந்த இடத்துக்கு வந்திருக்க வேண்டும் என்ற இடர்களைச் சொல்கிறது. வெக்கைக்காட்டுக்குள் நுழைவது மாதிரிதான் இருக்கிறது அவர் வீடு இருக்கும் பகுதி. பத்துக்குப் பத்து அளவுள்ள வீட்டில்தான் பிறந்து வளர்ந்திருக்கிறார். ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்று சொந்த ஊருக்கு அவர் திரும்பிய முதல் நாளில் அவரைச் சந்தித்துவிடத் திட்டமிட்டிருந்தோம். கிராமத்தின் குறுகிய சாலையில் ஏராளமான வாகனங்கள் வந்து திரும்பிக்கொண்டிருந்தன. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் வருவதும் வாழ்த்துவதுமாக இருந்தனர். நாங்கள் அவரைச் சந்தித்தபோது இரவு பத்து மணியை நெருங்கிக்கொண்டிருந்தது. அப்போதுதான் வந்தவர்களுக்கெல்லாம் நன்றி சொல்லி அனுப்பிவிட்டு வீட்டு வாசலில் குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார். நிறைய பேச நேரம் இல்லாத நிலையில் சந்தோஷத்தை மட்டும் பகிர்ந்துகொண்டார்.

பொதுவாக நம்மூரில் படிப்பில்தான் கவனம் செலுத்தச் சொல்வார்கள். உங்களிடம் இருந்த ஓட்டத் திறமையை முதலில் கண்டுபிடித்ததும், விளையாட்டில் முழுக் கவனம் செலுத்தலாம் என்று முடிவெடுத்ததும் யார்; நீங்களா, குடும்பமா, பள்ளிக்கூடமா?

தெரியலைண்ணே. சின்ன வயசு முதலா ஓடியாடிக்கிட்டே இருப்பேனாம். எனக்கு விவரம் தெரிஞ்ச பிறகும் நான் விளையாடிக்கிட்டே இருந்த நேரம்தான் அதிகம். ஆனா, ‘பொட்டப்புள்ள என்னடி ஓடிக்கிட்டு திரியுற?’ன்னு எங்க வீட்டுல யாரும் என்னை முடக்கலை. ‘விளையாட்டையும் பாத்துக்க; படிப்பையும் விட்டுறாத’ன்னு மட்டும் வீட்டுல சொல்வாங்க. பள்ளிக்கூடத்துல படிக்குறப்போலேர்ந்து ஓட்டம் உண்டுன்னாலும், ரொம்பப் பிற்பாடுதான் விளையாட்டுக்கு முக்கியமான கவனம் கொடுத்தேன்னு சொல்லணும். கல்லூரிக்கு வந்த பிறகுதான் முறையா விளையாட்டை அணுக ஆரம்பிச்சேன். சுத்தியிருந்த எல்லோருமே ஊக்குவிச்சாங்கன்னாலும் வீட்டுக்குத்தான் முதல் நன்றி சொல்லணும். ஏன்னா, எவ்வளவு கஷ்டமான சூழல்நிலைன்னாலும், ‘உனக்கெல்லாம் ஏன் விளையாட்டு?’ன்னு யாரும் என்னைக் கேட்கலை. அப்பா ரொம்ப எனக்காகக் கஷ்டப்பட்டிருக்கார். வீடு என்னை ஊக்குவிக்கலைன்னா இந்த இடத்துக்கு நான் வந்திருக்கவே முடியாது. நான்னு இல்லை; இங்கே எந்தப் பொண்ணுக்கும் இதுதான் நிலைமை. வீட்டுல கொடுக்குற உற்சாகம்தான் பெண்களை மேல கொண்டுவர்ற முதல் உந்துசக்தி.

ஒவ்வொரு வெற்றி வீரரும் ஒவ்வொரு வழிமுறையைக் கையாள்வார்கள். உங்களுடைய பிரத்யேகமான வழிமுறை என்று எதைச் சொல்வீர்கள்?

படிக்கும்போதும் சரி, விளையாட்டிலேயும் சரி; ஆசிரியர்கள் என்ன சொல்றாங்களோ அதை முழுசா கேட்பேன். என்னோட உருவாக்கத்துல, இன்னைய வெற்றியில என்னோட பயிற்சியாளர்களுக்குப் பெரிய பங்கிருக்கு. அவங்கச் சொல்றதைக் கொண்டுவரணுங்கிறதுக்காக எவ்வளவும் உழைப்பேன். எந்தக் காரணத்துக்காகவும் பயிற்சியை இடையில நிறுத்த மாட்டேன்; தள்ளிப்போட மாட்டேன். ஆனா, ஒண்ணு. பயிற்சிக்கு இணையா ஓய்வுக்கும் முக்கியத்துவம் கொடுப்பேன். உடம்பு என்ன சொல்லுதோ அதைக் கேட்கணுண்ணே. அது ஓய்வு கேட்கும்போது கொடுத்திடணும். அப்போதான் மனசு சொல்லும்போதெல்லாம் அது உழைக்கும்.

முருங்கைக்கீரையும், முட்டையும்தான் உங்கள் சிறப்புணவு என்று உங்கள் தாய் ராசாத்தி சொல்லியிருக்கிறார். அது மட்டுமே போதுமானதா என்ன?

நமக்கு அதைத் தாண்டி அன்னைக்கெல்லாம் வேறு எதுவும் கிடைக்காதுண்ணே. ஓட்டப்பந்தயத்துக்குத் தயாராகுற ஒருத்தர் என்ன மாதிரியான உணவு வகைகளை எடுத்துக்கணும்கிறதெல்லாம் பின்னாடிதான் தெரியும். இப்போ நான் விரும்பினதை வாங்கிச் சாப்பிடுற வசதிக்கு முன்னேறியிருக்கேன். ஆனா, அம்மா கொடுத்த முருங்கைக்கீரையும் முட்டையும் லேசுபட்டதுன்னு சொல்ல மாட்டேன். கிராமத்துல கொஞ்சம் சோவையா யாரு தென்பட்டாலும், முருங்கைக்கீரையும் முட்டையும் கொடுங்கன்னு சொல்வாங்க. அது ரொம்ப நல்ல உணவுதான்.

இடையில் ஒருகட்டத்தில் மிகவும் மனம் தளர்ந்து விளையாட்டைவிட்டே வெளியேற நீங்கள் முடிவெடுத்தீர்கள் என்றெல்லாம்கூட அறிந்தோம். சமூக, பொருளாதார அழுத்தங்களை எப்படிக் கடந்துவந்தீர்கள்?

சமூகப் பின்னணி, பொருளாதாரப் பின்னணி இதையெல்லாம் நெனைச்சா நாம வீட்டுலேயே முடங்கிட வேண்டியதுதாண்ணே. எல்லாத்தையும் உடைக்கணும்னா கவனத்தை ஒருங்கிணைக்கணும். அப்படித்தான் ஓடிட்டுருந்தேன். ஆனாலும், ஒருகட்டத்துல பொருளாதார நெருக்கடியைத் தாங்க முடியலை. இன்னொரு பக்கம் என் மேல பெரிய நம்பிக்கை வெச்சுருந்த ரெண்டு பேர் அடுத்தடுத்து இறந்துபோனாங்க. முதல்ல அப்பா, அடுத்து என்னோட பயிற்சியாளர் காந்தி சார். காந்தி சாரைப் பத்தி சொல்ல என்கிட்ட வார்த்தைகளே கிடையாது… (கண் கலங்குகிறார்) எங்க அப்பா மாதிரி அவர். ஓடுற இடத்துல ‘ஸ்டார்ட்’ சொல்லிட்டு நின்னுடற பயிற்சியாளர் இல்லை அவர். ‘கோமதி நீ ஓடும்மா, இன்னும், இன்னும்’னு சொல்லி நான் ஓடும்போது பக்கவாட்டிலேயே சைக்கிள்ல வருவார். அவ்ளோ மெனக்கெடுவார். அப்பாவும் போய், அவரும் போனப்போ வாழ்க்கையே இருண்டுட்ட மாதிரி இருந்துச்சு. ஆனா, ஒரு கேள்வி இருந்துச்சு. இதோட நிறுத்திட்டேன்னா, என்னோட அப்பாவோட, காந்தி சாரோட உழைப்பு, இன்னும் பல பயிற்சியாளர்கள், நான் ஜெயிக்கணும்னு நினைச்சவங்க இருக்காங்க; பாட்டியா சார், ஜெயக்குமார் சார், ராஜாமணி அண்ணா, அக்கா பிரான்சிஸ் மேரி, என் குடும்பம், முக்கியமா எங்க அப்பா... இவங்களோட அர்ப்பணிப்பு இதுக்கெல்லாம் என்ன அர்த்தம் இருக்கும்? இந்தக் கேள்விதான் என்னை இன்னைக்குத் தங்கத்தை நோக்கி அழைச்சுக்கிட்டு வந்துருக்கு. ஒலிம்பிக் நோக்கி துரத்திக்கிட்டிருக்கு.

நீங்கள் ஒலிம்பிக்கிலும் தங்கம் வெல்ல ‘இந்து தமிழ்’ நாளிதழ், வாசகர்கள் சார்பில் வாழ்த்துகிறோம். தமிழக அரசிடமிருந்தும் மத்திய அரசிடமிருந்தும் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

எனக்குத் தேவைப்படுற உதவிகளைச் செஞ்சு தர்றதா அரசு தரப்புலேர்ந்து சொல்லியிருக்காங்க. வெளியிலேர்ந்தும் அன்பைக் காட்டுற நிறைய பேர் உதவ இருக்காங்க. இந்த உதவிகளை வெச்சுக்கிட்டே என்னால அடுத்தக்கட்டத்துக்குப் போய்ட முடியும். நான் அரசுக்கு வைக்கிற வேண்டுகோள் என்னன்னா, தமிழ்நாட்டோட ஒவ்வொரு மூலையிலும் என்னை மாதிரி நிறைய பேர் இருக்காங்க. அவங்களுக்கெல்லாம் இந்தக் கவனமோ, உதவியோ எதுவும் கெடைக்கலை. அவங்களை வெளியே கொண்டுவர அரசு முயற்சிக்கணும். சமூகம் உதவுணும்!

- ஜெ.ஞானசேகர்,

தொடர்புக்கு: gnanasekar.j@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x