Published : 12 May 2019 10:17 AM
Last Updated : 12 May 2019 10:17 AM

உடனடி வேலைவாய்ப்பு தரும் ஹோட்டல் மேனேஜ்மென்ட்

உணவு என்பது மனித உணர்வோடு இரண்டற கலந்துவிட்ட ஒன்று.  சுவையான, ருசி நிறைந்த உணவுகளை எப்படி சமைக்க வேண்டும், சமைத்த உணவுகளை எப்படி அழகாக, பக்குவமாக பரிமாற வேண்டும் என்பது தொடர்பான ஒரு படிப்பு கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு.  அடிப்படையில் இது ஒரு தொழில்சார்ந்த படிப்பு. இதன் முக்கிய அம்சமே விருந்தோம்பல்தான். கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட  பிஎஸ்சி பட்டப் படிப்பாகவும் வெவ்வேறு பாடப்பிரிவுகளில் டிப்ளமா மற்றும் முதுநிலை டிப்ளமா படிப்பாகவும் வழங்கப்படுகிறது. மூன்று ஆண்டு கால பிஎஸ்சி படிப்பில் பிளஸ் 2 முடித்தவர்களும்,  6 மாதம் அல்லது ஓராண்டு காலம் கொண்ட டிப்ளமா படிப்புகளில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் சேரலாம். மேலும், கல்வித்தகுதி குறைவாக உள்ளவர்கள் ஃபுட் புரொடக் ஷன், ஃபுட் & பெவரேஜ் சர்வீஸ்,  ஹவுஸ்கீப்பிங் மேனேஜ்மென்ட் போன்றவை தொடர்பான சான்றிதழ் படிப்புகளில் சேரலாம்.

பி.எஸ்சி. கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மானேஜ்மென்ட் படிப்பில் கிச்சன், பிரண்ட் ஆபீஸ், ஹவுஸ் கீப்பிங், சர்வீஸ் ஆகியவைதான் தலையாய பாடங்களாக இருக்கும். கடைசி 6 மாதங்கள் நட்சத்திர ஹோட்டல்களில் பயிற்சி பெற வேண்டும். மொத்தத்தில் இப்படிப்பானது 60 சதவீதம் தியரி, 40 சதவீதம் செயல்முறை பயிற்சி கொண்டதாக இருக்கும்.  கேட்டரிங் துறையானது இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. எனவே, கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் பட்டதாரிகளுக்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்புகள் அதிகம். கப்பல்களிலும்  ஸ்டார் ஹோட்டல்களிலும் பணியாற்றலாம். நல்ல தகவல் தொடர்புத்திறன் (Communication Skill) இருப்பின் கேட்டரிங் துறையில் வளர்ச்சி மிகுதியாக இருக்கும்.

ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை பொருத்தவரையில் சேருகிற கல்லூரியின் தரம் முக்கியம். அங்கு தேவையான உள்கட்டமைப்பு வசதி இருக்கிறதா, இண்டஸ்ட்ரியல் கிச்சன், ரெஸ்டாரன்ட், அதற்கான சாதனங்கள், ஹவுஸ் கீப்பிங்குக்கான இடம்  இருக்கின்றனவா, அனுபமும் திறமையும் மிக்க ஆசிரியர்கள் உள்ளனரா என்பதையெல்லாம் அங்கு படித்த மாணவர்களிடம் நன்கு விசாரித்துக்கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக,  அரசு அங்கீகாரம் பெற்றகல்வி நிறுவனமா என்பதை உறுதிபடுத் திக்கொள்ள வேண்டி யதும் அவசியம். பொதுவாக, கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு குறித்து கூறுகையில், படித்துக்கொண்டிருக்கும் போதே சம்பாதிக்கலாம், படித்து முடித்தவுடன் கைநிறைய சம்பளத்தில் வேலைகிடைக்கும் என்பார்கள்.  கேட்டரிங் துறை உடனடி வேலைவாய்ப்புள்ள ஒரு துறை என்பதிலும், நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை. ஆனால், இவையனைத்தும் படித்து முடித்தவுடனே கிடைத்துவிடுவதில்லை.  ஒரேநாளில் கேட்டரிங் மானேஜர் ஆகிவிட முடியாது.  பணியில் சேர்ந்த ஆரம்ப காலத்தில் கஷ்டப்பட வேண்டியிருக்கும்.

கிச்சன் பிரிவில் முதலில் வெங்காயம் வெட்ட வேண்டும். கிச்சனை சுத்தம் செய்ய வேண்டும். சர்வீஸ் பிரிவில் பிளேட்டை  துடைக்க வேண்டும். ஹவுஸ் கீப்பிங் பிரிவு எனில் போர்வை மடிக்க வேண்டும். பயிற்சிக் காலத்தில், நேரம் பார்க்காமல் வேலைபார்க்க வேண்டும். தினமும் 12 மணி நேரம்கூட வேலைசெய்ய நேரிடும். ஆரம்ப காலங்களில் சம்பளம் குறைவாகத்தான் இருக்கும். கேட்டரிங் துறையில் வாய்ப்புகள் இருப்பது உண்மைதான். தொழில்திறமையையும் தகவல் தொடர்புத்திறனையும் வளர்த்துக்கொண்டால் இத்துறையில் வளர்ச்சியானது மின்னல் வேகத்தில் இருக்கும். அடுத்தடுத்து பெரிய பொறுப்புகளுக்குச் செல்ல முடியும். அப்போது சம்பளமும் கணிசமாக இருக்கும்.

பொருளாதார வளர்ச்சி, புதுப்புது சுற்றுலா தலங்கள், அதிகரித்து வரும் சுற்றுலா ஆர்வம் போன்றவை காரணமாக ஹோட்டல் துறை நன்கு வளர்ச்சி பெற்று வருகிறது. வரும்காலத்தில் இத்துறையில் உலகம் முழுவதிலும் 16 கோடி புதிய வேலைவாய்புகள் உருவாகும் என உலக மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டு களில் இந்தியாவில் சுற்றுலா துறை 200 சதவீத வளர்ச்சியை கடந்து 5 கோடியே 81 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாகும் என இந்திய பயண மற்றும் சுற்றுலா நிறுவனம் அறிவித்துள்ளது.  எனவே, கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் பட்டதாரிகளுக்கு வரும்காலத்தில் வேலைவாய்ப்புகள் ஏராளமாக இருக்கும். இத்துறையில் மேற்படிப்பு படிக்க விரும்புவோருக்கு அதற்கான வாய்ப்புகளும் உள்ளன. அவர்கள் நேரடியாக மாஸ்டர்ஸ் இன் ஹாஸ்பிடாலிடி மேனேஜ்மென்ட், மாஸ்டர்ஸ் இன் டிராவல் & டூரிஸம் மேனேஜ்மென்ட் மற்றும் எம்பிஏ ஹோட்டல் மேனேஜ்மென்ட் போன்ற படிப்புகளில் சேரலாம்.

எங்கு படிக்கலாம்?

கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு வழங்கும் முக்கிய கல்வி நிறுவனங்கள்

இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி, மற்றும் அப்ளைடு நியூட்ரிசன், சென்னை

எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட், சென்னை

மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி, சென்னை

வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட், சென்னை

அமிர்தா இண்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி, சென்னை

எங்கு படிக்கலாம்?

கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு வழங்கும் முக்கிய கல்வி நிறுவனங்கள்

இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி, மற்றும் அப்ளைடு நியூட்ரிசன், சென்னை

எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட், சென்னை

மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி, சென்னை

வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட், சென்னை

அமிர்தா இண்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி, சென்னை

உலகமயமாக்கலின் மிகப்பெரிய வளர்ச்சியை சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறை பெற்றுள்ளது. மிக பிரபலமான சுற்றுலா இலக்குகளைப் பொக்கிஷமாக  பெற்றுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருப்பதால் இந்திய அரசு இத்தகைய தொழில்கள் முன்னேறுவதற்கு ஊக்கமும் முதலீடும் செய்கிறது. இன்றைய காலகட்டத்தில் விருந்தோம்பல் துறையின் மிக முக்கிய பகுதியாக ஹோட்டல் தொழில் வானளாவிய முன்னேற்றத்தை அடைந்து வருகிறது. உணவக மேலாண்மை துறையின் வல்லுநர்களுக்கான தேவை இந்தியா மற்றும் உலகமெங்கும்  பெருகி வருகின்றது. ஹோட்டல்கள் அதிகரித்து வரும் நிலையில் தேவை இன்னமும் அதிகரிக்கும். உணவக மேலாண்மை துறையின் மூலமாக கிடைக்கும் தொழில் வளர்ச்சி லாபகரமாகவும்  மற்றும் சிறப்பானதாகவும் அமைந்து மாணவர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.

ஹோட்டல் மேனேஜ்மென்ட் பட்டதாரிகளும் டிப்ளமா முடித்தவர்களும் ஹோட்டல் மற்றும் உணவக விடுதிகளில் வேலைகள் தவிர, பின்வரும் பிரிவுகளில் நல்ல வேலைவாய்ப்புகளைப்  பெறலாம்.

விமான கேட்டரிங் (விமான சமையலறை) மற்றும் கேபின் சேவைகள்

கிளப் மேலாண்மை

குரூஸ் கப்பல்

மருத்துவமனை நிர்வாகம் மற்றும் கேட்டரிங்

ஹோட்டல் மற்றும் சுற்றுலா சங்கங்கள் (எ.கா: மாநில சுற்றுலா வளர்ச்சி நிறுவனங்கள்)

இந்திய கடற்படையில் விருந்தோம்பல் சேவைகள்

பல்வேறு பன்னாட்டு நிறுவனஙகளில் விருந்தோம்பல் சேவைகள்

சமையலறை முகாமைத்துவம் (கல்லூரி, பள்ளிகள், தொழிற்சாலைகளில், நிறுவனத்தின் விருந்தினர் இல்லங்கள் போன்ற ஹோட்டல்களில் அல்லது உணவக விடுதிகளில் இயங்கும்)

 ரயில்வே, வங்கிகள், ஆயுதப்படை, கப்பல் நிறுவனங்கள் போன்றவற்றின் கேட்டரிங் துறைகள்.

 ஹோட்டல் மற்றும் கேட்டரிங் நிறுவனங்கள் (ஒரு மேலாண்மை பயிற்சி / விற்பனை அல்லது விற்பனை நிர்வாகியாக)  சுய வேலைவாய்ப்பு (ஒரு தொழிலதிபராக)

- டி.அந்தோணி அசோக் குமார்,இயக்குநர்,

எஸ்ஆர்எம் உணவக மேலாண்மை கல்வி நிறுவனம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x