Last Updated : 16 Apr, 2019 09:38 AM

 

Published : 16 Apr 2019 09:38 AM
Last Updated : 16 Apr 2019 09:38 AM

இதுதான் இந்த தொகுதி: கன்னியாகுமரி

இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள தொகுதி. திருவிதாங்கூர் மன்னர்கள் கட்டுப்பாட்டில் இருந்த கன்னியாகுமரி மாவட்டம், தமிழகத்துடன் இணைந்த பின்பும் கேரளாவைப் போன்றே தேசியக் கட்சிகளின் ஆதிக்கம் மேலோங்கி நிற்கிறது. முக்கடலும் சங்கமிக்கும் இடம், மேற்குத் தொடர்ச்சி மலை என்று சர்வதேசச் சுற்றுலா மையமாகத் திகழ்கிறது. தொடக்கத்தில் நாகர்கோவில் தொகுதியாக இருந்தது, 2008 தொகுதி மறுசீமைப்புக்குப் பின்னர் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியாக மாற்றப்பட்டது. கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், கிள்ளியூர், விளவங்கோடு, பத்மநாபபுரம் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் இதில் உள்ளன.

பொருளாதாரத்தின் திசை:   குமரியில் கிடைக்கும் இயற்கை ரப்பர் தெற்காசியாவிலே தரமான ரப்பர் என்ற சிறப்பு பெற்றது. ரப்பர் விவசாயம் மூலம் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வாழ்வாதாரம் பெற்றுள்ளனர். ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையுள்ள 54 மீனவ கிராமங்களிலும் மீன்பிடித் தொழில் பிரதானம். குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம், சின்னமுட்டம் ஆகிய நான்கு மீன்பிடித் துறைமுகங்களைத் தங்குதளமாகக் கொண்டு ஆழ்கடலில் பிடிக்கப்படும் தரமான மீன்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.1,000 கோடிக்கு மேல் அந்நிய செலவாணியை ஈட்டிக் கொடுக்கிறது. தினமும் 100 டன்னுக்கு மேல் பூ வர்த்தகம் நடைபெறுகிறது. தென்னை, நெல், வாழை விவசாயம், முந்திரித் தொழிற்சாலைகள் மூலம் மக்கள் வருவாய் பெற்றுவருகின்றனர். நேந்திரன் வாழைக்காய் சிப்ஸ் இந்தியா மட்டுமின்றி பிற நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது.

தீர்மானிக்கும் பிரச்சினைகள்: சர்வதேச வர்த்தகத் துறைமுகம் கன்னியாகுமரியில் அமைவதற்கு மீனவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பும், பிற பகுதி மக்களிடம் ஆதரவும் நிலவிவருகிறது. முக்கடல் அணையை மட்டுமே குடிநீருக்காக நம்பியுள்ள நாகர்கோவில் நகரம், சுற்றுப்புறப் பகுதி மக்களின் குடிநீர்த் தட்டுப்பாட்டுக்கு மாற்றான திட்டம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.  நீராதாரங்களைக் கோடைகாலத்துக்குத் தட்டுப்பாடின்றி விவசாயத்துக்கும், குடிநீருக்கும் பயன்படுத்தும் மேல்நோக்குத் திட்டங்கள் இதுவரை நிறைவேற்றப்படாதது இத்தொகுதியில் பெரும் குறையாகவே உள்ளது. தென்னை சார்ந்த சிறு தொழிற்சாலைகள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளன. செயற்கை ரப்பர் இறக்குமதி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நீண்ட காலக் கோரிக்கைகள்:  குமரி மேற்கு மாவட்டத்தில் கனரக ரப்பர் தொழிற்சாலை; வர்த்தகத் துறைமுகம்; கேரளத்தின் நெய்யாறு இடதுகரைக் கால்வாய் மூலம் குமரி எல்லைப் பகுதிகளுக்குப் பாசன நீர் வழங்கும் திட்டம்; தென்னைசார் தொழிற்சாலை; தோவாளையில் மலர் நறுமணத் தொழிற்சாலை எனப் பல்வேறு கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன. கன்னியாகுமரி கடலில் சரக்குப் பெட்டக மாற்று முனையம் அமைப்பதற்கு மீனவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவிவருகிறது.  அரசின் நெல் ஈரப்பத விதிமுறை, குமரி மாவட்டத் தட்பவெப்ப நிலைக்கு ஒத்துவராததால் அதைத் தளர்த்த வேண்டும்; நெல் உலர்கிடங்கு ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் உள்ளன.

ஒரு சுவாரஸ்யம்: 1980 முதல் 1998 வரை நடந்த ஆறு தேர்தல்களில் வெற்றி பெற்ற டென்னிஸ், அதிக முறை கன்னியாகுமரி தொகுதியைக் கைப்பற்றியவர் என்ற சிறப்பைப் பெற்றவர். இதில் நான்கு முறை காங்கிரஸ் சார்பிலும், இரண்டு முறை தமாகா சார்பிலும் வெற்றி பெற்றார்.

வெற்றியைத் தீர்மானிக்கும் சமூகங்கள்: இங்கு நாடார் சமூகத்தினரே பெரும்பான்மையாக உள்ளனர்.  அதேநேரம் அனைத்து தேர்தல்களிலும் சாதிரீதியான வாக்குகளைவிட மதரீதியான வாக்குகளே தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கின்றன. மீனவ சமுதாயத்தினரும் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். முஸ்லிம்கள், வெள்ளாளர், கிருஷ்ணவகை, நாயர், விஸ்வகர்மா, செட்டியார், பட்டியலினத்தவர், யாதவர், மலை ஜாதியினரும் பரவலாக உள்ளனர்.

அதிக வெற்றியை ருசித்தவர்கள்: கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கோட்டை என்ற பெருமை பெற்றது. 1969 இடைத்தேர்தலிலும், 1971 தேர்தலிலும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு காமராஜர் வெற்றி பெற்றார். 1991 தேர்தலுக்குப் பிறகு பிற கட்சிகள் கன்னியாகுமரி தொகுதியைக் கைப்பற்றின. குமரியில் காங்கிரஸ் தொண்டர்கள் ஆதரவுடன் தேர்தலை சந்தித்த தமாகா 1996, 1998 தேர்தலில் வெற்றி பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திமுக தலா ஒரு முறையும், பாஜகவின் பொன் ராதாகிருஷ்ணன் இரு முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.

களம் காணும் வேட்பாளர்கள்

பாஜக: பொன் ராதாகிருஷ்ணன்

காங்கிரஸ்: ஹெச்.வசந்தகுமார்

மக்கள் நீதி மய்யம்: ஜெ.எபினேசர்

அமமுக: லெட்சுமணன்

வாக்காளர்கள் யார்?

மொத்தம் 14,77,161

ஆண்கள்  7,45,626

பெண்கள்  7,31,387

மூன்றாம் பாலினத்தவர்கள் 148

சமூகங்கள் என்னென்ன?

இந்துக்கள்: 49%

முஸ்லிம்கள்: 4%

கிறிஸ்தவர்கள்: 46.9%

பிற சமயத்தவர்: 0.1%

எழுத்தறிவு எப்படி?

மொத்தம் 97.6%

ஆண்கள் 96.5%

பெண்கள் 98.6%

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x