Published : 10 Apr 2019 09:54 AM
Last Updated : 10 Apr 2019 09:54 AM

ராகுல் காந்தியின் ஆபத்தான அரசியல் சாகசம்!

உத்தர பிரதேசத்தின் அமேதியுடன், கேரளத்தின் வயநாடு மக்களவைத் தொகுதியிலும் போட்டியிடுவது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முடிவெடுத்துவிட்டார். கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்கள் சந்திக்கும் இடத்தில் வயநாடு இருப்பதால், ராகுல் இங்கே போட்டியிடுவது மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிக்குப் புத்துணர்வை அளிக்கும் என்று கேரள மாநில காங்கிரஸ் தலைவர்கள் கூறிய ஆலோசனையை ஏற்றுக்கொண்டுவிட்டார். 2009 பொதுத் தேர்தலில் கேரளத்தின் 20 மக்களவைத் தொகுதிகளில் 16-ல் காங்கிரஸ் கூட்டணி வென்றது. அதேபோல, இம்முறையும் வெற்றி கிட்டும் என்று அது எதிர்பார்க்கிறது.

எதிர்க்கட்சிகள் இடையிலான ஒற்றுமைக்கு ஆபத்து ஏற்படும் என்ற நிலையிலும், கேரளத் தலைவர்களின் இந்த யோசனையை ஏன் ஏற்றுக்கொண்டார் ராகுல்? ஒரு காரணம், தென்னிந்தியாவில் அவருக்கு மக்களிடையே ஆதரவு அதிகம். அத்துடன் கடந்த இரண்டு மக்களவைப் பொதுத் தேர்தல்களில் காங்கிரஸ் வென்ற தொகுதி வயநாடு. இது மிகவும் பாதுகாப்பான தொகுதி என்று கூறிவிட முடியாது; ஆனால், ராகுல் போட்டியிடுவதால் வெற்றிவாய்ப்புகள் இன்னும் பிரகாசமாகின்றன.

காங்கிரஸின் வயநாடு உத்தி

தென்னிந்தியர்கள் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாகக் கருதக் கூடாது என்பதற்காக ராகுல் இங்கே போட்டியிடுகிறார் என்றும் ஒரு காரணம் கூறப்படுகிறது. கட்சியைக் கட்டுக்குள் வைத்திருக்க காங்கிரஸுக்கு ஆட்சியதிகாரம் தேவைப்படுகிறது. அதிகாரத்தில் இல்லாதபோது செயலிழந்துவிட்டதாகக் கருதுகிறது. 2014-ல் படுதோல்வி கண்டதால் காங்கிரஸுக்குப் பழைய முக்கியத்துவத்தை மீட்டுத்தருவது முக்கிய லட்சியமாக இருக்கிறது. கூட்டணிகள் அவசியம்தான்; ஆனால், தங்களது தனிப்பட்ட வெற்றியை அதிகரித்துக்கொள்ள வாய்ப்புகள் இருக்கும்போது கூட்டணி முக்கியமில்லை என்று கருதுகிறது காங்கிரஸ்.

காங்கிரஸின் இந்த முடிவு அடுக்கடுக்காகப் பல கேள்விகளை எழுப்புகிறது. வயநாட்டைப் பொறுத்தவரை அங்கே பாஜக பிரதான எதிராளி அல்ல. இடதுசாரி முன்னணி, அதிலும் குறிப்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சிதான் முக்கியப் போட்டியாளர். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மாற்றாக வலுவான மதச்சார்பற்ற கூட்டணி ஏற்பட வேண்டும் என்று அது பாடுபடுகிறது. கேரளத்தில் 20 தொகுதிகளிலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி போட்டியிடுவது உண்மைதான்; ஆனால், அதில் ஒரு தொகுதியில் காங்கிரஸ் தலைவரே போட்டியிடுவது அமேதியில் பிரதான போட்டியாளராக பாஜக இருப்பதைப் போல இடதுசாரிகளும் போட்டியாளர் என்றே அக்கட்சி கருதுவதாகப் பார்க்கப்படும்.

2019 மக்களவைப் பொதுத் தேர்தலின் முடிவு எப்படியிருக்கும் என்பது தெரிந்துள்ள வேளையில், காங்கிரஸ் தலைவரே வயநாட்டில் போட்டியிடுவது தவறு என்று சொல்ல நாம் தேர்தல் கணிப்பாளராகவோ நிபுணராகவோ இருக்க வேண்டியதில்லை. தென்னிந்தியாவில் காங்கிரஸை வலுப்படுத்துவதுதான் நோக்கம் என்றால் அதற்குக் கேரளத்தைத் தேர்ந்தெடுத்திருப்பது வினோதம். காரணம், அங்கே காங்கிரஸ் ஏற்கெனவே வலுவாக இருக்கிறது. தென்னிந்தியாவில் போட்டியிட்டால்தான் பக்கத்து மாநிலங்களில் ‘அலைவட்ட விளைவு’ ஏற்படும் என்றால், கர்நாடகத்திலிருந்து போட்டியிட்டிருக்கலாம். கடந்த காலத்தில் தெலங்கானாவின் மேடக்கில் இந்திரா காந்தியும், கர்நாடகத்தின் பெல்லாரியில் சோனியாவும் போட்டியிட்டுள்ளனர்.

குழப்பம் தரும் சமிக்ஞை

கேரளத்தில் போட்டியிடுவதன் மூலம் இரட்டைத் தகவலை ராகுல் தெரிவிக்கிறார். மத்திய அரசு தனது அதிகாரம் மூலம் தலையிட முயன்றாலும் தென்னிந்திய மாநிலங்களுக்கு அரணாக காங்கிரஸ் நிற்கும்; அடுத்து, முக்கியத்துவம் வாய்ந்த இத்தேர்தலில் வலதுசாரி சக்திகளை எதிர்ப்பதற்குத்தான் முன்னுரிமை தர வேண்டும் என்றாலும் இடதுசாரிகளையும் எதிர்க்கிறார். இது குழப்பம் தரும் சமிக்ஞை. பாஜகவையும் காங்கிரஸையும் வேறுபடுத்திப் பார்க்க இது உதவாது. இது பாஜகவுக்கு எதிராகக் கட்சி எடுக்க வேண்டிய உறுதியான நிலையை நீர்த்துப்போகச் செய்வதுடன், 2019-ல் இந்துத்துவ சக்திகள் மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கத் தேவைப்படும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்குக் குந்தகமாகவும் அமைகிறது. மத அடிப்படையில் மக்களைத் திரட்டும் இந்து வலதுசாரிகளுக்கு எதிராக அணி திரள வேண்டும் என்பதைப் பிற கட்சிகளும் அங்கீகரிக்க வேண்டும்; வயநாட்டில் ராகுல் போட்டியிடுவதால் முரண்பாடு வலுவடையவே செய்யும்.

இடதுசாரிகளை விட்டு காங்கிரஸ் விலகுவதால் ஏற்படும் விளைவுகளை, வரலாற்றில் சற்று முன்னோக்கிச் சென்றால் காணலாம். 1991-க்குப் பிறகு காங்கிரஸ் கட்சி மிகவும் முற்போக்காகச் செயல்பட்ட காலம் என்றால் அது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதல் ஐந்தாண்டுகளே

(2004-09). இடதுசாரிகள் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் அளித்த ஆதரவு காரணமாக, வரலாற்றில் இடம்பெறத்தக்க பல சட்டங்களை ஐமுகூ அரசு நிறைவேற்றியது. அந்த முன்னணியை அமைத்ததிலும், குறைந்தபட்சப் பொதுச் செயல்திட்டத்தைத் தயாரித்ததிலும் இடதுசாரிகளுக்குக் குறிப்பிடத்தக்க பங்கு உண்டு. முதல் ஐந்தாண்டு காலத்தில் தோன்றிய நலவாழ்வுத் திட்டக் கொள்கைகள், 2008-ல் இடதுசாரிகள் அரசுக்கு அளித்த ஆதரவை விலக்கிக்கொண்ட பிறகு அமைந்த இரண்டாவது ஐமுகூ ஆட்சியில் (2009-14) உதிரத் தொடங்கின. அத்துடன் புதிய தாராளமயக் கொள்கைகளை அரசு கடைப்பிடிக்கத் தொடங்கியது.

இடதுசாரிகளின் ஆதரவு அவசியம்

காங்கிரஸும் இடதுசாரிகளும் இணைந்தது காங்கிரஸுக்கு மட்டுமல்ல இடதுசாரிக் கட்சிகளுக்கும் நன்மையைத் தந்தன. இரு கட்சிகளுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு, வளர்ச்சிக்கு சாதகமாகவே இருந்தது; சமூகநல நடவடிக்கைகளை எடுப்பது பொருளாதார வளர்ச்சியைத் தடுத்துவிடாது என்பதையும் அது நிரூபித்தது. இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐமுகூ அரசுக்கு அளித்த ஆதரவை இடதுசாரிகள் விலக்கிக்கொண்டது சமூகத்துக்குக் கிடைத்த நல்ல பயன்களை முடிவுக்குக் கொண்டுவந்தது. அதேசமயம், இடதுசாரிகளின் செல்வாக்கும் குன்றியது. 2004-ல் 60 தொகுதிகளில் வென்ற இடதுசாரிகள், 2009-ல் பாதியாக 30-க்குக் குறைந்துவிட்டனர். 2014-ல் ஒற்றை இலக்கமாகிவிட்டனர்.

ராகுலின் வயநாடு போட்டி நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிட்டது. இடதுசாரிகளின் தேய்வை இது துரிதப்படுத்தக்கூடும். இப்போது கேரளத்தில் மட்டுமே இடதுசாரி முன்னணி ஆட்சியில் இருக்கிறது. இங்குமே ஆட்சியில் இருப்பதால் மக்களுக்கு ஏற்படும் அதிருப்தியைச் சந்திக்கக்கூடிய நிலைமை காணப்படுகிறது. அடுத்து அமையவுள்ள அரசுக்கு இடதுசாரிகளின் ஆதரவு மிகவும் அவசியம். அது மட்டுமல்லாமல் விவசாயிகள், தொழிலாளர்களின் உரிமைகள், வேலையில்லாத் திண்டாட்டம், தலித்துகளுக்கு எதிரான தாக்குதல்கள், பசு குண்டர்களின் அராஜகம், கும்பல்கள் அடித்துக் கொல்வது ஆகியவற்றுக்கு எதிராக இடதுசாரிகளும் எண்ணற்ற மக்கள் இயக்கங்களும் போராடிவருகின்றன. இவற்றில் பலவற்றுக்கு எதிராக காங்கிரஸ் குரல் எழுப்பத் தவறிய நிலையிலும் இடதுசாரிகளும் மற்றவர்களும் போராடினர். இவைதான் கடந்த ஐந்தாண்டுகளில் நரேந்திர மோடிக்கு எதிரான அரசியல் நிலைப்பாடு உருவாக உதவின. இந்தப் பின்னணியில்தான் இடதுசாரிகளிடமிருந்து காங்கிரஸ் விலகுவதைப் பார்க்க வேண்டும். காங்கிரஸின் வயநாடு முடிவு பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.

தேர்தல் வியூகம்

ராகுலின் இந்த சர்ச்சைக்கிடமான முடிவு மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியால் கடுமையாகக் கண்டிக்கப்பட்டிருக்கிறது. வங்கத்திலும் திரிபுராவிலும் ஏற்படக்கூடிய தேர்தல் இழப்புகளை கேரளத்தில் அதிகத் தொகுதிகளில் வெல்வதன் மூலம் குறைக்க வேண்டும் என்று இடதுசாரி முன்னணி விரும்பியது.

வயநாடு முடிவுக்காக இடதுசாரிகளும் காங்கிரஸும் வார்த்தைப் போரில் இறங்கக் கூடாது. இடதுசாரிகளுக்கு எதிராக விஷம் கக்கும் பிரச்சாரத்தை காங்கிரஸ் தவிர்க்க வேண்டும். இந்தியாவின் பன்மைத்துவத்தைக் காப்பதிலும் இந்து பெரும்பான்மைவாதத்துக்கு எதிராக நிற்பதிலும் இடதுசாரிகள் தங்களுக்கு உற்ற துணை என்பதை காங்கிரஸ் அங்கீகரிக்க வேண்டும். பாஜகவை எதிர்ப்பதில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. சில மாநிலங்களில் மாநிலக் கட்சிகளுடன் சேர்ந்து, பிற கட்சிகளுக்கு எதிராக வங்கம், கேரளம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் போட்டியிடுகிறது. பொதுத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியால் பெரும்பான்மை இடங்களைப் பெற முடியாமல்போகும் பட்சத்தில் மாற்று மதச்சார்பற்ற அரசை அமைக்க இந்த அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமை பராமரிக்கப்படுவது மிகவும் அவசியம்.

-ஜோயா ஹசன்

(கட்டுரையாளர் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக அரசியல் ஆய்வு மையப் பேராசிரியர்)

© ‘தி இந்து’ ஆங்கிலம், தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x