Last Updated : 23 Apr, 2019 09:40 AM

 

Published : 23 Apr 2019 09:40 AM
Last Updated : 23 Apr 2019 09:40 AM

மீண்டும் பாஜக வெல்லும்: ரமண் சிங் பேட்டி

சத்தீஸ்கர் 2000-ல் புதிய மாநிலமாக உருவாக்கப்பட்டது. அதன் பிறகு நடந்த 2004, 2009, 2014 மூன்று மக்களவைத் தேர்தல்களிலும் பாஜகவுக்குப் பெரும் ஆதரவு தந்த மாநிலம் இது. மும்முறை முதல்வராக அங்கு ஆட்சியில் இருந்த ரமண் சிங், பாஜகவுக்குக் கடந்த மூன்று தேர்தல்களிலுமே மாநிலத்தின் 11 மக்களவைத் தொகுதிகளில் 10 இடங்களில் கட்சி வெல்ல முக்கியமான காரணமாக இருந்தார். சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸிடம் ஆட்சியை இழந்துவிட்ட நிலையில், இப்போது மக்களவைத் தேர்தலில் கட்சி வென்ற இடங்களை அப்படியே தக்கவைக்கக் கடுமையாகப் போராடி வருகிறார். தேர்தல் களத்தில் உற்சாகமான பணிகளில் இருந்தவரிடம் நேர்கண்ட பேட்டியிலிருந்து...

சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்குப் பிறகு மூன்றே மாதங்களில் அடுத்த தேர்தலை எதிர்கொள்கிறீர்கள்; மீண்டும் வெற்றிப் பாதையில் பாஜக செல்ல இந்த அவகாசம் போதுமா?

மிகவும் குறுகிய காலம்தான்; ஆனால், பூபேஷ் பகேல் தலைமையிலான காங்கிரஸ் அரசு செய்துள்ள சில தவறுகள் எங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்று நம்புகிறேன். தேர்தலுக்கு முன் வாக்குறுதி அளித்ததற்கு நேர் எதிரான திசையில் காங்கிரஸ் அரசு செல்கிறது. மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்றார்கள். இப்போது மது விலை உயர்த்தப்பட்டு, மேலும் பல கடைகளைத் திறந்துள்ளனர். வேலை கிடைக்காத 23 லட்சம் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்றார்கள். இன்னும் 23 பேருக்குக்கூட ஒரு நயா பைசா சென்றடையவில்லை. விவசாயக் கடன் தள்ளுபடியும் சில விவசாயிகளுக்குத்தான் கிடைத்திருக்கிறது. டெண்டு மரத்திலிருந்து பீடி சுற்ற இலைகளைச் சேகரிக்கும் தொழிலாளர்களுக்குக் காலணி வழங்க, பாஜக அரசு கொண்டுவந்த ‘சரண் பாதுகா திட்டம்’கூடக் கைவிடப்பட்டுவிட்டது. அரசின் வருவாய்க்கும் செலவுக்குமான பற்றாக்குறை 6% ஆக உயர்ந்திருக்கிறது. மாநிலக் கருவூலம் காலியாக இருக்கிறது. மாத ஊதியம் தரக்கூடப் பணமில்லை.

உங்கள் மகன் உள்பட, கடந்த முறை வென்ற எல்லா மக்களவை உறுப்பினர்களையும் பாஜக மாற்றிவிட்டது; இதன் மூலம் கட்சி உணர்த்துவது என்ன?

2003 முதல் மாநிலத்தில் ஆட்சியில் இருந்தோம். கூடவே, நாடாளுமன்றத் தேர்தல்களிலும் வென்றோம். இதனால், பலர் பழைய முகங்களாகிவிட்டனர். தொடர்ந்து பதவியில் இருக்கிறார்கள் என்ற அதிருப்தியை மாற்ற புதியவர்களுக்கே வாய்ப்பு தர கட்சி முடிவெடுத்திருக்கிறது. இந்த முடிவுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

விவசாயக் கடன் தள்ளுபடி என்ற காங்கிரஸின் திட்டத்துக்கு மாற்றாக, பிரதான் மந்திரி ‘கிஸான் யோஜனா’ அறிவித்திருக்கிறீர்கள். விவசாயிகளிடம் ஆதரவு பெற இது போதுமா?

கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதியை காங்கிரஸ் அளித்தது. ஆனால், கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாகச் சான்றிதழ்களை மட்டுமே விநியோகித்தனர். வங்கிகளுக்குத் தரப்பட வேண்டிய தொகையை இதுவரை தரவில்லை. எங்களுடைய பிரதான் மந்திரி கிஸான் யோஜனாவுக்கு மாநிலம் முழுவதும் விவசாயிகளிடம் வரவேற்பு நிச்சயம் இருக்கும். இந்தத் திட்டத்துக்கான தரவுகளை மத்திய அரசு திரட்டவிடாமல் மாநில அரசு தடைகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இதனால், விவசாயிகளின் விரோதத்தைச் சம்பாதித்துக்கொள்ளப்போகிறார்கள். பிரதான் மந்திரி கிஸான் யோஜனா மட்டுமில்லை, விவசாயிகளுக்கு வட்டியே இல்லாத கடன் திட்டமும் அறிவித்திருக்கிறோம். இதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது.

காங்கிரஸின் கோட்டையான தந்தேவாடாவில் உங்களுடைய கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பீம் மண்டாவி, நக்ஸல்களால் கொல்லப்பட்டுவிட்டார். இதன் அரசியல் எதிரொலி என்னவாக இருக்கும்?

அவருடைய மரணம் எங்களுக்கு மட்டுமான இழப்பு அல்ல; மாநிலம் முழுவதுக்குமான இழப்பு. பஸ்தார் பகுதியை நக்ஸல்கள் மீட்டுவிட்டதால் இப்போது சாலையில் செல்வது பாதுகாப்பானதாக இல்லை; கடந்த 15 ஆண்டுகளில் செய்த செயல்கள் அனைத்தையும் இந்த அரசு தலைகீழாக மாற்றிவருகிறது.

பதினைந்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்தீர்கள், உங்களால் ஏன் நக்ஸல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை?

எங்கள் முயற்சியில் கிட்டத்தட்ட வெற்றி பெற்றுவிட்டோம். சர்குஜா மண்டலத்திலிருந்து அவர்களை விரட்டிவிட்டோம். பஸ்தாரிலும் ஒரு மூலைக்கு அவர்கள் விரட்டப்பட்டனர். இப்போது நக்ஸல்கள் மாநிலத்தின் எல்லாப் பகுதிகளிலும் சுதந்திரமாக நடமாடுகின்றனர். தங்களுடைய அரசே ஆட்சிக்கு வந்துவிட்டதைப் போல துணிச்சலுடன் இருக்கின்றனர்.

2014-ல் வளர்ச்சியைத் தருவோம் என்று சொல்லித்தான் மோடியும் பாஜகவும் பிரச்சாரம் செய்தன; இப்போது ஏன் தேசியப் பாதுகாப்பு பற்றி மட்டும் பேசுகிறீர்கள்?

இந்த விவாதத்தை இப்படித் தொடங்கியதே காங்கிரஸ்தான். தேச விரோதச் சட்டப் பிரிவைத் திருத்துவோம், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்துக்குத் திருத்தம் கொண்டுவருவோம் என்று காங்கிரஸ் அறிவித்த பிறகு, அது தொடர்பாகப் பேசாமல் எப்படி மவுனம் சாதிக்க முடியும். என்னுடைய அரசுக்குத் தேச பாதுகாப்புதான் முதல் முன்னுரிமை என்று மோடி அறிவித்தார். இதை நீர்த்துப்போகச் செய்யவே முடியாது.

உங்கள் மருமகன் புனீத் குப்தாவுக்கு எதிராக மோசடி வழக்கை சத்தீஸ்கர் போலீஸார் பதிவுசெய்துள்ளனர். உங்கள் ஆட்சியில் நடந்த சில ஊழல்கள் குறித்து விசாரிக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழு நியமிக்கப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் உங்களுக்குக் கவலை அளிக்கின்றனவா?

என்னையும் என் குடும்பத்தாரையும் வழக்கில் சிக்க வைக்க அரசியல் உள்நோக்கம்தான் காரணம்; நீதிமன்ற விசாரணையில் இந்த வழக்குகள் அடிபட்டுப்போய்விடும்.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?

2014 தேர்தலில் மொத்தமுள்ள 11-ல் 10 தொகுதிகளைக் கைப்பற்றினோம். இம்முறையும் அதற்கு நெருக்கமாக வருவோம். சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மக்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்காது. நாங்கள் மாநிலத்தில் தொடர்ந்து ஆட்சியில் இருந்ததால் ஏற்பட்ட அதிருப்தியும் சேர்ந்துதான் சட்டமன்றத் தேர்தலில் அடைந்த தோல்விக்குக் காரணமாக இருந்தது. சட்டமன்றத் தேர்தலின்போது, ‘மாற்றம் வேண்டும்’ என்று மக்கள் காங்கிரஸுக்கு வாக்களித்தார்கள். இப்போது ‘மோடி (மீண்டும்) வேண்டும்’ என்று பாஜகவுக்கு வாக்களிப்பார்கள்.

தமிழில்: ஜூரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x