Published : 03 Sep 2014 08:54 AM
Last Updated : 03 Sep 2014 08:54 AM

களத்திலிருந்து யோசியுங்கள் மோடி!

இந்தியாவுக்குத்தான் முதலிடம். உலகிலேயே அதிகமானோர் திறந்தவெளியில் மலம் கழிப்பதில். சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகளுக்குப் பின்னரும், 62 கோடிப் பேர் இன்னும் கழிப்பிட வசதி இல்லாமல், திறந்த வெளியில் மலம் கழிக்கின்றனர். இந்தச் சூழலில், “திறந்தவெளிகளில் மலம் கழிக்கும் நிலை மாற வேண்டும். முதல்கட்டமாகப் பள்ளிகளில் கழிப்பிடங்களைக் கட்டித்தர இந்தியத் தொழில் நிறுவனங்கள் முன்வர வேண்டும்” என்று மோடி பேசியிருக்கிறார். நம் தலைவர்களிடம் பெரிய பிரச்சினை என்னவென்றால், அவர்கள் புள்ளிவிவரங்களைக் கையில் வைத்துக்கொண்டு பேசுகிறார்களே தவிர, கள யதார்த்தத்தை வைத்துக்கொண்டு அல்ல என்பதுதான்.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். தன்னுடைய ஆட்சிக் காலத்தில், பொது இடங்களில் கழிப்பறை கட்டிக்கொடுக்கும் திட்டத்தைக் கொண்டுவந்தார். நல்லெண்ண முயற்சி. ஆனால், அது எதிர்பார்த்த வெற்றி அடையவில்லை. ஏன் என்று ஆராய்ந்தபோது, மக்கள் வெளிப்படுத்திய காரணங்கள் என்றென்றைக்கும் நம் அதிகார வர்க்கத்துக்குப் பாடம் சொல்லக் கூடியவை. 1. போதிய தண்ணீர் வசதி அங்கே இல்லை. 2. கிராமங்களில் ஊர் மந்தைகளில் பெரும்பாலும் கழிப்பறைகளைக் கட்டிவிட்டார்கள்; நான்கு பேர் பார்த்திருக்க எப்படிச் சொம்பைத் தூக்கிக்கொண்டு செல்ல முடியும்? 3. எல்லோரும் போகும் இடத்தில் அதைச் சுத்தப்படுத்துவது யார்? - இப்படியெல்லாம் காரணங்களை அடுக்கினார்கள் மக்கள். கள யதார்த்தத்துக்கும் புள்ளிவிவரங்கள் அடிப்படையிலான திட்டங்களுக்கும் இடையே உள்ள இடைவெளி இது.

பொது இடங்களில் மலம் கழிப்போரைப் பார்த்தவுடன் அருவருப்புடன் முகத்தைத் திருப்பிக்கொள்வோர் இந்த விஷயத்தை உணர்வதில்லை: இந்த நாடும் ஆட்சியாளர்களும்தான் அவர்களை அங்கே நிறுத்தியிருக்கிறார்கள். கிராமங்களை விடுங்கள், நகரங்களில் உள்ளாட்சி அமைப்புகள் மாற்றி மாற்றிக் கட்டும் பொதுக் கழிப்பறைகளின் நிலை என்ன? எத்தனை பேருந்து நிலையங்களில் பயன்படுத்தத் தக்க வகையில் சுகாதாரமான கழிப்பறைகள் இருக்கின்றன? அரசுப் பள்ளிகளில், அரசு மருத்துவமனைகளில் நிலை என்ன? சென்னை, அண்ணா சாலை போன்ற போக்குவரத்து நெரிசல் மிக்க, ஒரு நாளைக்கு ஆயிரக் கணக்கானோர் வந்து செல்லும் ஓர் இடத்தில் எத்தனை பேருந்து நிலையங்களில் கழிப்பறை இருக்கிறது? இங்கெல்லாம் ஒரு குழந்தை, ஒரு கர்ப்பிணி, ஒரு நீரிழிவு நோயாளி எத்தனை நேரம் மனதைக் கட்டிப்போட்டு, இயற்கை உபாதையைக் கட்டுப்படுத்த முடியும்? ஆனால், பேருந்து நிலையங்கள் இருக்கும் இடங்களிலெல்லாம் விளம்பரப் பதாகைகளை வைக்க நம்முடைய அரசு அமைப்புகள் முனைப்பு காட்டுகின்றன அல்லவா? இவையெல்லாம் ஒரு சமூகம் எந்த அளவுக்கு அடிப்படை அறிவோடும் சக மனிதர் மீதான கரிசனத்தோடும் செயல்படுகிறது என்பதற்கான வெளிப்பாடுகள்.

கழிப்பறை என்பது வெறும் நான்கு சுவர்களும், நடுவே ஒரு ஓட்டையும் மட்டும் அல்ல. நல்ல தண்ணீர் வசதி வேண்டும். பொதுக் கழிப்பறை என்றால், அவசியம் பராமரிக்க ஒரு ஆள் வேண்டும். இந்தியாவில் பொதுக் கழிப்பறைக்காகக் கட்டப்பட்டுப் பயனற்றுக் கிடக்கும் கட்டிடங்களையும் அதற்கான நிதி ஒதுக்கீடுகளையும் கணக்கிட்டால், மாபெரும் ஊழல் ஒன்று வெளியே வரக்கூடும். அவ்வளவு செலவிட்டிருக்கிறோம். ஆனாலும், தேசத்தின் சரிபாதி குடிமக்கள் திறந்தவெளியை நோக்கி ஓடுகிறார்கள். காரணம், நம்முடைய பொதுக் கழிப்பறைகள் பயன்படுத்தும் தகுதியோடு இல்லை என்பதுதான். மலமும் சிறுநீரும் சளியும் துர்நாற்றமும் கலந்து, ஊரிலுள்ள நோய்க் கிருமிகள் அத்தனையும் சேர்ந்து வெளியே துரத்தும் வெறும் கட்டிடங்களைக் கட்டி, வெளியே அதில் யாருடைய ஒதுக்கீட்டில் கட்டப்பட்டது என்று விளம்பரப்படுத்திக்கொள்வதில் யாருக்கு பிரயோஜனம்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x