Published : 22 Apr 2019 11:41 AM
Last Updated : 22 Apr 2019 11:41 AM

வனங்களின் பாதுகாப்பை வனச் சமூகங்களோடு சேர்த்து சிந்தியுங்கள்

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட சட்டங்களைக் காலம் கடந்து இப்போது நவீனப்படுத்துவது என்பதே மிகவும் தாமதமாகிவிட்ட செயல். இந்திய வனங்களைச் சுரண்டும் நோக்கத்துடன் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் இயற்றப்பட்ட ‘இந்திய வனச் சட்டம் - 1927’-ஐ ஆதாரமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்போதைய வனச் சட்டம் எந்த அளவிலும் இன்றைய காலகட்டத்தோடு பொருத்தமற்றது.

வனப் பல்லுயிரிகளின் நலன்களைப் பாதுகாக்கும் வகையிலும், காலங்காலமாக வனங்களிலேயே வாழும் மக்களின் நலன்களை உறுதிசெய்வதாகவும் வனச் சட்டத்தை நாம் எப்போதோ திருத்தி அமைத்திருக்க வேண்டும். அறிவியல்பூர்வமாக வகுக்கப்பட்ட வனக் காப்பு நடவடிக்கைகளும், வனச் சமூகத்தினரால் முன்னெடுக்கப்படும் வனக் காப்புச் செயல்களும் ஊக்கம் பெறும் வகையில் அச்சட்டத்தை நாம் கொண்டுவந்திருக்க வேண்டும்.

மிகத் தாமதமாகவே புதிய வனச் சட்டத்தை நாம் யோசிக்கிறோம். ஆனால், அப்படிக் கொண்டுவர முனையும் புதிய வனச் சட்டத்தின் முன்வரைவும் மீண்டும் அதிகாரவர்க்கக் கட்டுப்பாட்டுக்கே வனங்களை உட்படுத்தும் விழைவைக் கொண்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது என்பதோடு, மிகுந்த கண்டனத்துக்கும் உரியது.

வனப் பகுதிக்குள் தனியொருவர் தவறு செய்தாலும் அதற்காக அவர் சார்ந்த சமூகத்தையே வனப் பகுதிக்குள் அண்டவிடாமல் தடுக்கவும், தண்டனை அளிக்கவும் புதிய வனச் சட்ட வரைவில் வழிவகுக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி போன்றவற்றை வனத் துறை பயன்படுத்தினால் அதை எதிர்த்து வழக்கு தொடுக்க முடியாதபடிக்குப் பாதுகாப்புக் கவசமாகச் சட்ட விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இத்தகைய சட்டப் பிரிவுகள் காடுகளில் வாழும் வனவாசிகளைக் கடுமையாகப் பாதிக்கும்; வனங்களில் வசிப்போருக்கு அதன் விளைச்சல்களில் பங்கு தருவது, அதிகாரம் தருவது போன்ற உயரிய லட்சியங்களுக்கு முரணாக அவர்களைத் தண்டிக்க மட்டுமே இந்தப் புதிய சட்ட வரைவு வழிவகுக்கிறது.

இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 2.99% மட்டுமே ‘அடர்ந்த காடு’ என்று வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. 2017 வன அறிக்கையின்படி, 21.54% வனப்பரப்புதான் திறந்தவெளிக் காடாகவும் மிதமான அடர்க் காடாகவும் வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில், வனங்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டிருப்பதோடு வனச் சமூகங்கள் மீதான அக்கறையையும் வெளிப்படுத்துவதாக நம்முடைய சட்டங்கள் அமைவது முக்கியம்.

ஆகையால், வனப் பாதுகாப்புச் சட்டத்தை முழுதாக ஆராய்ந்து, வனங்களுடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரிடமும் ஆலோசனைகளும் கேட்கப்பட்டு அதன் அடிப்படையில் சட்டத்திருத்தம் மேற்கொள்வதன் மூலமாகவே வனச் சட்டம் முழுமை பெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x