Published : 15 Apr 2019 11:29 am

Updated : 15 Apr 2019 11:30 am

 

Published : 15 Apr 2019 11:29 AM
Last Updated : 15 Apr 2019 11:30 AM

வடாம், வற்றல் செய்யத் தெரியுமா? இதோ... இப்படித்தான்!

ஜெமினி தனா

நமது முன்னோர்கள் கொடுத்து வைத்தவர்கள்... இப்போது இருப்பது போல் ‘சர்க்கரை போட்டு காபி குடித்தால் சர்க்கரை அளவு ஏறிவிடும்..’. ‘உப்பு அதிகம் சேர்த்தால் இரத்த அழுத்தத்துக்கு ஆகாது...’ ‘எண்ணெயில் பொரித்த பலகாரமா? ஐயையோ.. டாக்டர் தொடவே கூடாது’ என்று சொல்லியிருக்கிறார். ‘சாதமா.. சர்க்கரை நோய்க்கு அதிகம் சாப்பிடக்கூடாதாமே’ இப்படிச் சொல்லி நாக்கை யும் கட்டுப்படுத்தமுடியாமல் மாத்திரைகளின் தயவோடு பயந்து பயந்து சாப்பிடும் நம்மைப் போன்று பலவீனமானவர்கள் அல்ல. அதனாலேயே நம் முன்னோர்கள் கொடுத்து வைத்தவர்கள்!


உணவே மருந்து என்று பருவகால மாற்றத்துக்கு ஏற்ப ருசியைக் கூட்டி சுவையோடு உண்டு ஏகபோகமாக வாழ்ந்த தீர்க்கதரிசிகள். இவர்களெல்லாம் மிக மூத்த தலைமுறைகள் அல்ல.. ஒரு 30 வருடத்துக்கு முந்தைய நம் பெற்றோர்கள். அத்தைமாமாக்கள்!

குழந்தைகளுக்கு மழைக்காலம் கொண்டாட்டம் என்றால் இல்லத்தரசிகளுக்கு கோடைக்காலம் கொண்டாட்டம். பெண்கள் கோடையை வரவேற்க முதலில் தூசி நிறைந்த மொட்டைமாடிகளை அழுக்கு நீங்க சுத்தம் செய்வார்கள். வருடம் முழுக்க கரக் மொறுக் என்று நொறுக்கித் தள்ளவேண்டிய அத்தனை வகைகளும் ரகரகமாய் இவர்களது கைப்பக்குவத்தில் பதமாகத் தயாராகும். கூட்டுக் குடும்பங்களில் வத்தல் வடாம் பிழியும் தினங்கள் எல்லாம் திருவிழா பரபரப்புதான்!

அதிகாலை அடுப்பை மூட்டி வற்றல் கூழை தயார் செய்வார்கள். குழந்தைகளும், பெரியவர்களும், சமயத்தில் ஆண்களும் கூட வயதில் மூத்த பெண்மணியோடு அதிகாலை 6 மணிக்கு மொட்டை மாடியில் கரண்டியும் கிண்ணமுமாக ஆஜராகிவிடுவார்கள்.. நண்டு சிண்டுகளின் கையில் கிண்ணத்தையும், ஸ்பூனையும் கொடுத்து மெல்லிய பருத்தித் துணியில் அப்போதே பாகம் பிரித்துவிடுவார்கள்.

அதிலும் காசு வத்தலான கண்ணாடி வத்தல்கள் ஊற்றுவது குழந்தைகளுக்கு குதூகலம்தான். தலையில் துணியைக் கட்டிக்கொண்டு கையில் குச்சியை வைத்து இல்லாத காக்கைகளை விரட்டிக் கொண்டிருப்பார்கள். ”உங்க வீட்ல வத்தல் போட்டாச்சா?” என்று அக்கம்பக்கத்தில் வற்றல் வடாம் பற்றிய குசல விசாரிப்பும் பெருமிதமாக இருக்கும். அக்னியில் திடீரென்று வருணபகவான் வந்துவிட வாய்ப்பு உண்டு என்பதால் வற்றல் காய்ந்து விட வேண்டுமே என்று வேண்டாத தெய்வங்களையெல்லாம் வேண்டிக் கொள்வார்கள். சில நேரங்களில் வற்றலா துணியா என்று ஒட்டிக்கொண்ட ரெட்டைப் பிறவியாய் பிரிக்க முடியாத சம்பவமும் பக்குவமின்மையால் நடந்து விடும்.

(ஜவ்வரிசி ) கண்ணாடி வற்றல், முறுக்கு வற்றல், இடியாப்ப வற்றல், சிவப்பரிசி வற்றல், கூழ் வற்றல் இப்படி ரகரகமாய் செய்யும் வற்றல் வகைகளோடு... கொசுறும் உண்டு. குழம்பில் தாளிப்பின் போது சேர்க்கப்படும் வடகம், மோர் மிளகாய், கொத்தவரங்காய் வற்றல், சுண்டைக்காய் வற்றல், வெண்டைக்காய் வற்றல், மணத்தக்காளி வற்றல், இனிப்பு நெல்லி வற்றல், பாகற்காய் வற்றல், கல்யாண பூசணிக்காய் வற்றல் இப்படி விதவிதமாய் செய்து உறவினர்களுக்கும் கொடுத்து முடித்த பிறகுதான் நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள். கோடை முடியும்போது வீட்டின் பானைகள் அனைத்தும் வற்றல் மயமாய் நிறைந்திருக்கும்.. ஆஹா.. ஓஹோ என்று வற்றலைப் புகழ்ந்தால் இமாலய சாதனை செய்தது போல், நிமிர்வை பெற்று விடுவார்கள் அம்மாச்சிகளும். அப்பத்தாக்களும்!

ஆனால் இன்றைக்கு எல்லாமே மாறிவிட்டது. அம்மிக்கல்லும் ஆட்டு உரலுக்கும்தான் ஓய்வு என்றால் வகைவகையான வற்றல் வகைகளையும் விற்பனைக்கு கொண்டு வந்து ஓய்வு கொடுத்துவிட்டது. அப்பளம், பப்படம், கலர் சேர்த்த வற்றல்கள், வெங்காய வற்றல், தக்காளி வற்றல் என்று 50க்கும் மேற்பட்ட வற்றல்கள் விற்பனைக்கு வந்து மொட்டை மாடியை வெறிச்சென்று ஆக்கிவிட்டன. கோடி ரூபாய் கொடுத்தாலும் நமது கைப்பக்குவத்தில் மெனக்கெட்டு வேலை செய்து... சுகாதாரமான இடத்தில் சுத்தமாக போடும் வற்றல்களுக்கு ஈடாகுமா என்ன?

 எல்லா வகை வற்றல்களும் மிக மிக எளிதானவை. இன்னும் எளிமையாக செய்யப்படும் வற்றல் வகைகளை மட்டும் குறிப்பிடுகிறேன்.. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வற்றல் செய்து ஜமாயுங்கள்..

மணத்தக்காளி வற்றல்:

மார்க்கெட்டில் கீரை விற்பவர்களிடம் சொன்னால் மணத்தக்காளி காய்களை கொண்டு வந்து ஆழாக்கு கணக்கில் தருவார்கள். அதை வாங்கி சுத்தம் செய்து கல் உப்பு கலந்த நீரில் நன்றாக அலசி வடிகட்டவும். பிறகு வற்றல் போடும் பாலித்தீன் பைகள் கடைகளில் கிடைக்கும். அதில் வடிகட்டிய மணத்தக்காளி காய்களைப் பரத்தி காயவைக்கவும்.

அடிக்கிற வெயிலுக்கு ஒரே வாரத்தில் நொறுங்கும் அளவு காய்ந்துவிடும்.. பிறகு காற்றுப்புகாத கண்ணாடி டப்பாக்களில் எடுத்து வைத்தால் வற்றல் குழம்பு மழைக்காலத்தில் ஜோராய் இருக்கும்.. தொட்டுக்கொள்ள இருக்கவே இருக்கு வற்றல்…

(உப்பு நீர் சேர்த்து வேகவைத்தும் மணத்தக்காளி காய்களை காயவைப்பார்கள். இதில் சத்துக்கள் நீங்கிவிடும் என்றும் சொல்கிறார்கள்)

 சுண்டைக்காய் வற்றல்:

சுற்றியிருக்கும் அத்தனை காய்களையும் மிஞ்சிவிடும் சத்துக்களைக் கொண்டது சுண்டைக்காய். மார்க்கெட்டில் எப்போதும் கிடைக்கும்.

சுண்டைக்காயை சிறு உரலில் இட்டு விதைகள் நீங்கும் வரை ஒரு இடி இடியுங்கள். கீறி எடுத்தால் மோரில் நீர் ஊறாது. .. இடித்த சுண்டைக்காயை விதைகள் வெளியேறிம் வரை நன்றாக நீரில் வையுங்கள்.

 கனமான மண்சட்டியில் ஆழாக்கு சுண்டைக்காய்க்கு ஆழாக்கு பசுந்தயிரை மோராக்கி ஊற்றி கல் உப்பை கையளவு அள்ளிப்போட்டு இடித்துக் கழுவிய சுண்டைக்காயை சேர்த்து நன்றாக குலுக்குங்கள். அன்று முழுவதும் அரை மணி நேரத்துக்கு ஒருமுறை சுண்டைக்காயை குலுக்கி குலுக்கி வையுங்கள்.. மறுநாள் காலை மோரிலிருந்து அகன்ற சல்லிகரண்டியில் சுண்டைக்காயை எடுத்து பாலித்தீன் பேப்பரில் காயவைத்து மாலையில் மீண்டும் மோர் சட்டியில் ஊறவிடுங்கள். இதேபோல் தினமும் காலையில் மோரை வடித்து காயவைத்து மீண்டும் மோர் சட்டியில் ஊறவிடுங்கள்.. மூன்று நான்கு நாட்களில் மோர் முழுவதையும் சுண்டைக்காய் உறிஞ்சிவிடும். பிறகு நான்கு நாட்களில் சுண்டைக்காய் காய்ந்துவிடும்..

இதையும் பக்குவமாக காற்றுப்புகாத டப்பாக்களில் அடைத்துக் கொள்ளலாம். தயிர் சாதம், சாம்பார் சாதம் அனைத்துக்கும் தொட்டுக்கொள்ளலாம். கசப்பு பிடித்தவர்கள் சும்மாவே வெறும் வாயில் இட்டு மென்று சாப்பிடலாம். உயர் ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்கும்.

 கல்யாண பூசணி வற்றல்:

 கல்யாணப்பூசணியை வாங்கி பெரிய துண்டுகளாக நடுத்தரமான உருளைக் கிழங்கைப் பாதியாக வெட்டுவது போல் நறுக்கி உப்பு கலந்த நீரில் அலசவும். பிறகு பாலித்தீன் பையில் காயவைத்து எடுத்தால் வீட்டில் காய்கறிகள் இல்லாத நேரங்களில் சாம்பாரில் போட்டு பயன்படுத்தலாம். காரக்குழம்பு, மோர்க்குழம்பிலும் காய்களாகப் போடலாம்.. இதையே உளுந்தம்பருப்பு கலந்து அரைத்து எள்ளடையாக தட்டி காயவைத்தும் எடுக்கலாம். சாப்பிட சுவையாக இருக்கும்.

கொத்தவரங்காய் வற்றல்:

கொத்தவரங்காயின் இருபுற முனைகளையும் நீக்கி சுத்தம் செய்து அகன்ற பாத்திரத்தில் மூழ்கும் வரை நீர்விட்டு தேவையான அளவு மஞ்சள் சேர்த்து, கல் உப்பு கலந்து வேகவிடவும். நன்றாக வெந்ததும் நீரை வடிகட்டி காயவிடவும்.. அவ்வளவுதான் கொத்தவரங்காய் வற்றல் தயார்.

வற்றல் வடகம் இவையெல்லாம் கைவந்த கலைதான்.. ஆனால் அல்ஜீப்ராக்களைக் கண்டு பயப்படுவது போல் ஒரு புறம் வெயிலுக்கும், மறுபுறம் வேலைக்கும் பயந்துகொண்டிருக்கிறோம். ஆனால் சுத்தமாக சுகாதாரமாக வீட்டிலேயே எளிய முறையில் எளிமையாக செய்யக்கூடிய இவற்றை செய்து பாருங்கள். வருடம் முழுவதும் தொட்டுக்கொள்ள என்ன செய்யலாம் என்று மண்டையை உடைத்துக்கொள்ள மாட்டீர்கள். ஆரோக்கியத்தையும் இழக்க மாட்டீர்கள்.

மொட்டைமாடி... வெயில்... வற்றல், வடாம். என்ன ரெடியா?

 


வற்றல் வடாம்மொட்டைமாடியில் வடாம் வற்றல்ஜவ்வரிசி வடாம்கொத்தவரங்காய் வற்றல்கல்யாணப்பூசணி வடாம்சுண்டைக்காய் வற்றல்கரகரமொறுமொறு வற்றல் வடாம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author