Last Updated : 01 Apr, 2019 07:43 AM

 

Published : 01 Apr 2019 07:43 AM
Last Updated : 01 Apr 2019 07:43 AM

நாட்டைக் காக்க வேண்டுமெனில் மதச்சார்பின்மையை காக்க வேண்டும்: கரு.பழனியப்பன் பேட்டி

தேர்தல் நேரத்தில் திடீரென அவதாரம் எடுக்கின்ற நட்சத்திரப் பேச்சாளர்கள்போலின்றி, வாய்ப்பு கிடைக்கிற இடங்களிலெல்லாம் தனது அரசியல் கருத்துகளைத் தொடர்ந்து பதிவுசெய்துகொண்டிருப்பவர் இயக்குநர் கரு.பழனியப்பன். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்காக ஒரு தன்னார்வலராக, பிரச்சாரத்தைத் தொடங்கியிருக்கும் அவருடன் ஒரு பேட்டி.

எந்தக் கட்சியிலும் சேரவும் இல்லை. பிரச்சாரத்துக்காக யாரும் அழைத்ததாகவும் தெரியவில்லை. பிறகு,  ஏன் இந்தப் பிரச்சாரம்?

இந்த நாட்டில் 100 பிரச்சினைகள் இருக்கலாம். இன்னும் புதிதாக 100 பிரச்சினைகள் வரலாம். அதை எல்லாம் நம்மால் சரியாக்கிவிட முடியும். ஆனால், மதச்சார்பின்மையை மட்டும் பிறகு பார்த்துக்கொள்ளலாமென விட்டுவிட முடியாது. இந்நாடு மதச்சார்பற்ற நாடுதான் என்ற நம்பிக்கை நீடிக்க வேண்டும் என்றால், இது எல்லோருக்குமான நாடுதான் என்று கேள்வி கேட்காத நம்பிக்கை மக்களிடம் இருக்க வேண்டும். அந்தக் கொள்கைக்காக ஓரணியில் திரண்டுள்ள மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளை ஆதரிக்க வேண்டியது என் கடமை. எனவேதான், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்கிறேன்.

நீங்கள் ஓர் ‘ஆன்டி-இண்டியன்’என்று சொல்வார்களே?

நம் குடும்பத்துக்குள் ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து, ரசனை, விருப்பம் இருக்கலாம். ஆனால், அதையும் தாண்டி நாம் ஒரே குடும்பமாக இருப்போம். அப்படித்தான் இந்த நாட்டிலும் எல்லோருக்கும் வேறு வேறு விருப்பங்கள், வேறு வேறு மதங்கள், வேறு வேறு பண்டிகைகள், வேறு வேறு உணவுகள் இருக்கின்றன. அதையெல்லாம் தாண்டி, “இந்த வியாழக்கிழமை நீ பிரியாணி கொடுத்துவிடு, அடுத்த செவ்வாய்க்கிழமை நான் பால்பாயாசம் கொண்டு வருகிறேன்” என்கிற அளவுக்கு நமக்குள் ஓர் குடும்ப உறவு இருக்கிறது. இதைப் பிரிக்க நினைப்பவர்கள் தான் ‘ஆன்டி-இண்டியன்’. ஒரு வீட்டில் அவரவர் விருப்பம், உரிமையுடன் நாமெல்லாம் எப்படி ஒற்றுமையாக இருக்கிறோமோ, அப்படித்தான் இந்த நாட்டில் ஒவ்வொரு மாநிலமும் அவரவருக்கான இடத்தோடு இந்தியா என்ற நாட்டைக் கட்டமைத்து வைத்திருக்கின்றன. “அப்படியெல்லாம் கூடாது. ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே தேர்வு” என்று சொல்லி அவர்கள்தான் இந்த நாட்டை, இந்தக் குடும்பத்தை உடைக்கிற வேலையைப் பார்க்கிறார்கள். அவர்களின் நோக்கங்களை எதிர்ப்பவர்கள்தான் உண்மையான இந்தியர்கள்.

நாடு முழுவதிலும், 108 சினிமா இயக்குநர்கள் மோடிக்கு எதிராகக் கையெழுத்திட்டிருக்கிறார்கள். தேர்தல் களத்தில் நடிகர்களின் குரல் எதிரொலிப்பதைப் போல, இயக்குநர்களின் குரல் மதிக்கப்படுமா?

இயக்குநர்களின் குரல் கண்டிப்பாக களத்தில் எதிரொலிக்கும். இந்த உலகத்தை எப்போதும் அறிவுலகம்தான் வழிநடத்துகிறது. அவர்களின் பின்னால் மக்கள் படை இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் சொல்வதை மக்கள் கேட்பார்கள். காரணம், ஒரு நாடு முழுவதும் சிந்திப்பதில்லை. ஒருவர் சிந்திப்பார். அந்தச் சிந்தனை சரியென்று நினைத்தால் மக்கள் பின்தொடர்வார்கள். மோடியை எதிர்த்து 108 இயக்குநர்கள் கையெழுத்திட்டு இருப்பது மகிழ்ச்சிக்குரியது. பாஜகவுக்கு வாக்களிக்காதீர்கள் என்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று அவர்கள் குரல்கொடுக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x