Last Updated : 15 Apr, 2019 09:57 AM

 

Published : 15 Apr 2019 09:57 AM
Last Updated : 15 Apr 2019 09:57 AM

இந்திய மக்களின் கூட்டுணர்வே யதேச்சாதிகார பாஜகவை விரட்டியடிக்கும்!- ப.சிதம்பரம் பேட்டி

வரலாற்று முக்கியத்துவம் மிக்க 2019 தேர்தலில் மக்கள் தரப்பிலிருந்து கொண்டாடத்தக்க விஷயங்களைப் பட்டியலிட்டால், காங்கிரஸின் தேர்தல் அறிக்கை அவற்றில் முதன்மை பெறும். ‘இது மக்களின் அறிக்கை’ என்ற பிரகடனத்துடன் வந்திருக்கும் இது, நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் 174 இடங்களில் விவசாயிகள், ஆசிரியர்கள், தொழில்முனைவோர் என்று பல்வேறு தரப்பு மக்களையும் சந்தித்து அவர்களிடமிருந்து பெற்ற கோரிக்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறது காங்கிரஸ். இந்தியாவில் இப்படி விரிவாக மக்களிடம் கருத்துகளைப் பெற்று ஒரு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படுவது இதுவே முதல் முறை. ஆளும் பாஜகவின் தேர்தல் அறிக்கை புத்தகத்தின் அட்டையை மோடி எனும் ஒரு தனிமனிதரின் படம் பிரதானமாக ஆக்கிரமித்திருக்க, காங்கிரஸின் தேர்தல் அறிக்கை புத்தகத்தின் அட்டையோ பல்லாயிரக்கணக்கான மக்களின் முகங்களைத் தாங்கி வந்திருக்கிறது. பாஜக அறிக்கை தேசியத்தையும் தேச அரசின் நலன்களையும் பிரதானப்படுத்தியிருக்க, மனித உரிமைகளையும் சமூக நலத் திட்டங்களையும் பிரதானப்படுத்தியிருக்கிறது காங்கிரஸ் அறிக்கை. இந்த அறிக்கை தயாரிப்பில் முக்கியப் பங்களித்த காங்கிரஸ் சித்தாந்த முகங்களில் ஒருவரான ப.சிதம்பரத்துடன் தேர்தல் தொடர்பில் உரையாடியதிலிருந்து...

அரசியல் நோக்கி நீங்கள் இழுக்கப்பட்டு அரை நூற்றாண்டு ஆகிறது. ‘ரேடிகல் ரிவியூ’ பத்திரிகை தயாரிப்பில் சிதம்பரம் பங்கெடுத்த அன்றைய காலகட்ட அரசியலுக்கும், காங்கிரஸின் தேர்தல் அறிக்கை தயாரிப்பில் சிதம்பரம் பங்கெடுத்த இன்றைய காலகட்ட அரசியலுக்கும் இடையேயான வேறுபாடு என்ன?

மிகுந்த வேறுபாடுகள். முக்கியமானது, செல்வந்தர்கள், உயர்சாதி என்று தங்களைக் கருதுபவர்களின் கைகளிலிருந்து விலகி பெருமளவு இன்று எளிய மக்கள் கைக்கு வந்து சேர்ந்திருக்கிறது அரசியல். ஒடுக்கப்பட்டோர், பெண்கள் என்று விளிம்புநிலையிலிருந்தவர்களின் குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்திரா காந்தி மறைவைத் தொடர்ந்து நடந்த 1984 தேர்தலில் சிவகங்கை தொகுதியைச் சுற்றி வந்தபோது ஒவ்வொரு கிராமத்திலும் எங்கள் வண்டியை நிறுத்தி அதில் இருந்த இந்திரா காந்தி படத்தின் முன் தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றிப் பூஜை செய்தார்கள் மக்கள். தலைவர்தான் எல்லாமும் என்று அரசியல் இருந்த காலம் அது. இன்றும் அத்தகைய சூழலைத் தலைவர்கள் விரும்பலாம். ஆனால், அதிலிருந்து அரசியல் வெகுதூரத்திற்கு வந்துவிட்டது. தனி ஒரு தலைவருடைய பெயரை மட்டுமே சொல்லி எந்தக் கட்சியும் தேர்தலை இனியும் எதிர்கொள்ள முடியாது. அன்று மக்களுடைய கோரிக்கைகள் எளிமையானவை – எங்களுக்குச் சாலை வேண்டும், பள்ளிக்கூடம் வேண்டும் இப்படி; இன்று எங்கள் பகுதிக்கு ஒரு ஆற்றின் நீரைத் திருப்பிவிட வேண்டும், தடுப்பணை கட்ட வேண்டும் என்றெல்லாம் கோரிக்கைகள் வருகின்றன. மக்களின் விஷய ஞானம் - ஜனநாயகவுணர்வு கூடியிருக்கிறது. காங்கிரஸின் தேர்தல் அறிக்கையே அதற்கான சான்றுதான்.

ஜனநாயகத்தைப் பற்றி நம்பிக்கையோடு பேசுகையில், இந்தியாவில் அதிகரித்துவரும் குடும்ப - வாரிசு அரசியல் ஆதிக்கம் தொடர்பான கேள்வி தவிர்க்க முடியாததாகிறது. நாம் இதைக் குறைக்கவே முடியாதா?

இந்தியா மட்டும் அல்ல; உலகில் எல்லா நாடுகளிலும் ஒரு அரசியல்வாதியினுடைய மகனோ, மகளோ அரசியலுக்கு வந்து பொறுப்புக்கு வருவது இயல்பாகத் தொடர்கிறது. அமெரிக்காவில் நம் கால உதாரணமாக தந்தை புஷ் - மகன் புஷ் இரு அதிபர்களைச் சொல்லலாம். தம்பதி உதாரணமாக கிளின்டன் - ஹிலாரி அரசியலைச் சொல்லலாம். இந்தியாவில் எல்லாக் கட்சிகளையும்போல காங்கிரஸிலும் அது தொடர்கிறது. ‘நாங்கள் மூன்று தலைமுறையாக காங்கிரஸ்காரர்கள்’ என்று சொல்லும் எத்தனையோ குடும்பங்களை இந்தியக் கிராமங்களில் நீங்கள் பார்க்கலாம். தொண்டர்களின் குடும்பங்களிலேயே அந்தச் சூழல் இருக்கும்போது தலைவர்களின் குடும்பங்களில் இருக்காதா? சரி, காங்கிரஸ் குடும்பத்தில் பிறக்கும் ஒருவரின் இயல்பான முதல் தேர்வாக பாஜகவா இருக்க முடியும், காங்கிரஸ்தானே இருக்க முடியும்? எல்லாத் துறைகளிலும் இந்நிலை இருப்பதுபோலவே அரசியலிலும் இருக்கிறது என்றுதான் நாம் கொள்ள வேண்டும்.

ராகுல் காந்தி பல வகைகளில் நம்பிக்கை அளிப்பவராக இருக்கிறார். ஆனால், மோடியைக் கடந்து, தேசம் தழுவிய ஒரு மாற்று கதையாடலை இந்த ஐந்தாண்டுகளில் ராகுலால் உருவாக்க முடியவில்லை. “மன்மோகன் சிங் அரசுக்கு எதிராக ஒரு அதிருப்தியலை உருவானபோது அதை மோடி அலையாக உருமாற்றிக்கொள்ள மோடியால் முடிந்தது; ஆனால், மோடி மீது ஏமாற்றமும் அதிருப்தியும் நிலவும் சூழலிலும் ‘மோடி வேண்டுமா, வேண்டாமா’ என்பதே இன்றைய கேள்வியாக இருக்கிறதே அன்றி அது ராகுல் அலையாக உருமாறவில்லை” என்ற குற்றச்சாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இந்தப் பார்வையே தவறு. 2014 தேர்தலின் கேள்வி என்ன? ‘காங்கிரஸ் அரசு வேண்டுமா; வேண்டாமா?’ என்பதுதான். அதை மோடி தனக்கு ஆதரவாக மாற்றிக்கொண்டார் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால், இந்தத் தேர்தலின் கேள்வியும் ‘பாஜக அரசு வேண்டுமா, வேண்டாமா?’ என்பதாகத்தான் இருக்கிறது. பாஜகவைப் பொருத்த அளவில் அது மோடி என்கிற ஒற்றை மனிதரையே கட்சியாக மொழிபெயர்ப்பதால் ஏற்பட்ட விளைவு அது. ஆனால், அது நாட்டுக்கு நல்லதா? மக்கள் இன்று மீண்டும் காங்கிரஸைத் தேட ஆரம்பித்துவிட்டார்கள். தேர்தல் முடிவுகள் அதை வெளிப்படுத்தும்.

இந்தத் தேர்தல் இந்திய ஜனநாயகத்துக்கு வாழ்வா சாவா யுத்தம்; இன்னொரு வகையில் காங்கிரஸுக்கும் அப்படித்தான் என்று கருதப்படும் நிலையில்கூட காங்கிரஸுக்குள் ஒரு யுத்தத்தை ராகுல் நடத்த வேண்டியிருக்கிறதா? பழைய தலைமுறைத் தலைவர்களே அவருடைய சீர்திருத்த முடிவுகளுக்கு ஒரு தடையாக இருக்கிறார்களா?

இந்திய ஜனநாயகத்துக்குப் பெரும் சவால் வந்திருக்கிறது என்பது உண்மை. அந்தச் சவாலைச் சமாளிக்கும் பணியில் காங்கிரஸ் முதல் வரிசையில் நிற்கிறது என்பதும் அதே அளவுக்கு உண்மை. முழு காங்கிரஸும் இன்று ராகுல் தலைமையை ஏற்றுக்கொண்டிருக்கிறது. பழையன கழிதலும், புதியன புகுதலும் இயல்பு. மூத்த தலைவர்கள் தமக்குரிய கடமைகளைச் செய்ய வேண்டுமே ஒழிய, எல்லாவற்றையும் நாங்களே செய்வோம் என்று கட்சியை ஆக்கிரமிக்கக் கூடாது. அடுத்த தலைமுறைக்கு வழிவிட்டு, அவர்களை வளர்த்தெடுக்க வேண்டும். அப்படிதான் நடக்கிறது.

தமிழ்நாட்டுக்கு வருவோம். தேர்தல் சமயத்தில்தான் காங்கிரஸாரைப் பார்க்க முடிகிறது. அரிதான விழாக்கள், அடையாளப் போராட்டங்கள், அறிக்கைகளைத் தாண்டிய கட்சி செயல்பாட்டைப் பார்க்க முடியவில்லை. இப்படிப்பட்ட முக்கியமான தேர்தலிலும்கூட சில இடங்களில் மூத்த காங்கிரஸ் தலைவர்களின் அழுத்தத்தால் பொதுமக்களின் எண்ணவோட்டத்துக்கு ஒவ்வாத வேட்பாளர்களைக் கட்சி நிறுத்தியிருப்பதைத் தேர்தல் களத்தில் சுற்றும்போது உணர முடிகிறது. தேனியில் இளங்கோவன் வெளியூர்க்காரர் என்ற குரலை மக்களிடம் கேட்க முடிந்தது. சிவகங்கையில் உங்கள் மகனுக்கு எதிராக உங்கள் கட்சிக்குள்ளிருந்தே எதிர்ப்பு வெளிப்பட்டது. ‘தமிழ்நாட்டில் ஹெச்.ராஜா எந்தத் தொகுதியில் நின்றாலும் தோற்கடிப்படுவார் என்றிருந்த சூழலை ஏராளமான குற்றச்சாட்டுகளைச் சுமக்கும் கார்த்தியின் தேர்வு கடினப் போட்டியாக்கியிருக்கிறது’ என்று மக்கள் சொல்கிறார்கள். இத்தகைய தேர்வுகள் எப்படி?

(இடைமறிக்கிறார்…) உங்கள் கேள்வியில் உள்ள அனைத்து வரிகளையும் நான் மறுக்கிறேன். பாரபட்சமான, மிகைப்படுத்தப்பட்ட ஒரு கேள்வி இது. காங்கிரஸின் அமைப்பு பலம் இங்கே ஓரளவு பலவீனமாக இருக்கிறது என்பதை நான் மறுக்கவில்லை. அதையும் மீறி

காங்கிரஸ் தோழர்கள் செயல்படுகிறார்கள். கட்சியின் முடிவுகள் ஜனநாயகமானவை. மே 23 வரை பொருத்திருங்கள். இந்தக் கேள்விக்கான முழு பதிலைத் தேர்தல் முடிவுகள் தரும்.

பாஜகவுக்கு எதிரான மஹா கூட்டணிதான் மோடியை எதிர்கொள்ள சரியான உபாயமாக இருக்கும் என்று எல்லோரும் பேசிவந்த நிலையில், இன்று தனக்குச் சவாலான சின்ன மாநிலங்களிலும்கூட வலிய கூட்டணியை பாஜக உருவாக்கிவருகிறது. வெளியே மோடி X எதிர்க்கட்சிகளின் கூட்டணி என்ற பிம்பம் எழுப்பப்பட்டிருந்தாலும், நாடு முழுக்க நூற்றுக்கணக்கான அமைப்புகளுடன் கை கோத்திருக்கிறது பாஜக. தமிழ்நாட்டில் விஜயகாந்த் தொடங்கி அய்யாக்கண்ணு வரை உதாரணம் காட்டலாம். காங்கிரஸுக்கோ அது மிக பலவீனமாக இருக்கும் உத்தர பிரதேசம் போன்ற பெரிய மாநிலத்திலேயேகூடப் பெரும் கூட்டணி உருவாகவில்லை; ஏன்? காங்கிரஸ் இன்னும் டெல்லி சுல்தான் மனோபாவத்திலேயேதான் இருக்கிறதா?

முற்றிலுமாக மறுக்கிறேன். எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவுக்கு இந்தத் தேர்லில் காங்கிரஸ் வளைந்து கொடுத்திருக்கிறது. உத்தர பிரதேசத்தில் ஒரு மஹா கூட்டணி அமையவில்லை என்றால், அதற்காக எங்களை யாரும் குறை கூற முடியாது; செல்வி மாயாவதியின் தவறான அணுகுமுறையே அதற்குக் காரணம். மாயாவதி சரியான முடிவை எடுத்திருந்தால், முன்னதாக மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தலிலேயே இன்னும் 14 இடங்களில் எங்கள் கூட்டணி கூடுதலாக வென்றிருக்கும். அப்படி அமையாதது வருத்தம்தான். ஆனால், நாடு முழுக்க பாஜகவைக் காட்டிலும் கூடுதலான மாநிலங்களில் வலிய கூட்டணியை காங்கிரஸ் அமைத்திருக்கிறோம். மகாராஷ்டிரா, பஞ்சாப், பிஹார், தமிழ்நாடு, அஸ்ஸாம் இந்த ஐந்து மாநிலங்களில்தான் பாஜகவுக்கு வலிய கூட்டணி அமைந்திருக்கிறது. கேரளா, தமிழ்நாடு, கர்நாடகம், மகாராஷ்டிரா, பிஹார், ஜார்க்கண்ட், காஷ்மீர் என்று பல மாநிலங்களில் காங்கிரஸ் வலுவான கூட்டணியை அமைத்திருக்கிறது. அஸ்ஸாம், டெல்லியிலும்கூடப் பேசிக்கொண்டிருக்கிறோம். பாஜக கணிசமான இடங்களை வெல்லும், மறுக்கவில்லை; ஆனால், நீங்கள் வியக்கத்தக்க அளவுக்கு காங்கிரஸும் இம்முறை கணிசமான இடங்களில் வெல்லும். மேலும், தேர்தல் களத்தில் பாஜகவுக்கு ஆதரவாக உள்ள அரசியல் கட்சி கூட்டணியைத்தான் இன்று ஊடகங்கள் கவனிக்கின்றன. ‘இந்நாட்டில் ஜனநாயகம் நீடிக்க இனியும் பாஜக ஆட்சி தொடரக் கூடாது’ என்று இன்று குடிமைச் சமூகத்தில் எவ்வளவு பேர் வெளியே வந்து தன்னெழுச்சியாகக் குரல் கொடுக்கின்றனர்! எழுத்தாளர்கள், கலைஞர்கள், பொருளாதார நிபுணர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் என்று எத்தனையெத்தனை மனிதர்கள் கூட்டமைப்புகளை அமைத்து அறிக்கை தருகிறார்கள்! இவ்வளவு பேரின் மனசாட்சியும் எதிர்ப்புணர்வும் தோற்றுவிடும் என்றா எண்ணுகிறீர்கள்? இந்திய மக்களின் கூட்டுணர்வே இந்த யதேச்சாதிகார பாஜக அரசை விரட்டியடிக்கும்.

இந்தத் தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்பட்டால், ‘ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72,000 வழங்கும் காங்கிரஸின் திட்டம்தான் தேர்தல் முடிவுகளைத் தீர்மானித்த கதாநாயகனாக இருக்கும்’ என்று சொல்கிறார்கள். சமூக நலத் திட்டங்களை சமூக நீதியின் ஒரு பகுதியாகப் பார்க்கும் தமிழ்நாட்டின் மரபிலிருந்து டெல்லிக்கு அளிக்கப்பட்டிருக்கும் பங்களிப்பு என்று இதைச் சொல்லலாமா?

காங்கிரஸே காலங்காலமாகவே சமூக நலத் திட்டங்களை முன்னெடுத்துவரும் கட்சிதானே! ஏழைகளை முன்னேற்றுவதில், குறிப்பாக கிராமப்புற வறுமை ஒழிப்பில், இந்திரா காந்தி காலத்திய ஒருங்கிணைந்த கிராம மேம்பாட்டுத் திட்டம், மன்மோகன் சிங் காலத்திய நூறு நாள் வேலையுறுதித் திட்டம் வரிசையில் அடுத்த மைல்கல் முயற்சி என்று இதைச் சொல்லலாம். இன்று சாமானிய மக்களின் குரல் ஓங்கி ஒலிக்கிறது; சமூக நலத் திட்டங்களுக்கான அழுத்தம் அதிகரித்திருக்கிறது. நாட்டினுடைய மொத்த உற்பத்தியும் அரசின் வரி வருமானமும் உயர்ந்திருக்கும் சூழலில், ‘பணமில்லை’ என்று சொல்லி இனியெல்லாம் ஒரு சமூக நலத் திட்டத்தை எந்த அரசாலும் தட்டிக்கழிக்க முடியாது.

பெரும்பான்மைவாத அடிப்படையிலான ஜனநாயகத் தன்மையிலிருந்து எல்லோர்க்கும் சம பிரதிநிதித்துவம் அளிக்கும் குடியரசுத்தன்மையுடையதாக இந்தியாவை மாற்றியமைக்க வேண்டும் என்றால், மாநிலங்களின் சுயாட்சி அதற்குத் தேவையான ஒரு முக்கியமான கருவி.  ‘மோடியின் ஐந்தாண்டு கால ஆட்சியில், மாநிலங்களின் உரிமைகள் - அதிகாரங்கள் மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதலானது பாஜக அரசின் யதேச்சதிகாரத்தை மட்டும் வெளிப்படுத்தவில்லை; இந்திய அரசமைப்பானது அடிப்படையிலேயே எந்த அளவுக்கு மாநிலங்கள் விரோதமானதாக இருக்கிறது என்பதையும்கூட சேர்த்துதான் வெளிப்படுத்துகிறது’ என்ற குற்றச்சாட்டை இன்றைய காங்கிரஸ் உணர்கிறதா? அதன் வெளிப்பாடுதான் ‘ஆரம்பக் கல்வியை மாநிலங்களின் பட்டியலுக்குக் கொண்டு செல்வோம்’ என்ற உங்கள் வாக்குறுதி என்று கருதலாமா?

நம்முடைய அரசமைப்பில், மாநிலப் பட்டியல் - மத்தியப் பட்டியல் - இரண்டுக்கும் பொதுவான ஒத்திசைவுப் பட்டியல் என்று மிகுந்த கவனத்துடனேயே அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டிருக்கின்றன. இடையில் காலத் தேவை கருதி சில மாற்றங்களைச் செய்திருக்கிறோம்; அவற்றில் நல்லவை, அல்லவை தொடர்பான விவாதங்களுக்குள் நாம் செல்ல வேண்டாம். பள்ளிக்கல்வி ஏன் மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது என்றால், பள்ளிக்கல்வியில் மாநில அரசுகள் போதிய அக்கறை செலுத்தவில்லை என்ற சூழல் அன்று பல மாநிலங்களில் இருந்தது. பொதுப் பட்டியலுக்கு மாற்றினால், மத்திய அரசு நாடு முழுவதும் தரமான பள்ளிக்கல்வியை உறுதிப்படுத்த வாய்ப்புக் கிடைக்கும் என்ற எண்ணத்தின் அடிப்படையிலேயே பள்ளிக்கல்வியானது பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அது சரியா, தவறா என்று இப்போது சர்ச்சை செய்வதில் பலன் கிடையாது. இன்று மாநிலங்களுடைய வரி வருமானம், நிர்வாகத் திறன் கூடியிருக்கிறது. ஆகவே, தொடக்கக் கல்வியை மாநிலங்கள் பட்டியலுக்கு மாற்றி அந்தந்த மாநிலங்கள் அந்தக் கடமையை எப்படிச் செய்கிறார்கள் என்பதை ஒப்பிட்டுப் பார்க்கலாம் என்ற நோக்கத்திலேயே இந்த முன்மொழிவை வைத்திருக்கிறோம்.

உங்களுடைய தேர்தல் அறிக்கையில், ‘பாஜக கொண்டு வந்திருக்கும் ஜிஎஸ்டிக்கு மாற்றாக, எளிமைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டியை காங்கிரஸ் கொண்டுவரும்’ என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால், ‘ஜிஎஸ்டியானது நடைமுறை அளவில் வரி விதிக்கும் பெரும்பான்மை அதிகாரத்தை டெல்லிக்கு மடைமாற்றுகிறது; மாநில அரசுகளின் இறையாண்மையைக் குலைத்து அவற்றை வெறும் நிர்வாக அலகுகள் ஆக்கிவிடும் தன்மையைக் கொண்டிருக்கிறது’ என்பதே ஜிஎஸ்டிக்கு எதிரான தமிழ்நாட்டின் விமர்சனம். காங்கிரஸ் இதைப் புரிந்துகொண்டிருக்கிறதா? இந்த விஷயத்தில் உங்களுடைய தனிப்பட்ட அபிப்ராயம் என்ன?

நாம் முதலில் விற்பனை வரியிலிருந்து மதிப்புக் கூட்டு வரிக்கு மாறினோம்; அடுத்த முன்னேற்றம் ஜிஎஸ்டி என்று சொல்லப்படும் சரக்கு மற்றும் சேவை வரி. காங்கிரஸின் நிலைப்பாடு என்பது போக தனிப்பட்ட அளவிலும் எனக்கு மிக்க உடன்பாடானது இது. இந்தியா ஜிஎஸ்டி நோக்கி நகர வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் 2005லேயே அறிவித்தவன் நான்தானே! ஆனால், இன்று பாஜக கொண்டுவந்திருப்பது நாங்கள் திட்டமிட்ட ஜிஎஸ்டி கிடையாது. மோடி அரசுக்கு ஜிஎஸ்டியின் உள்ளடக்கமே புரியவில்லை என்று சொல்வேன். எப்படியும், கிண்டிய முட்டையை மீண்டும் முட்டையாக மாற்ற முடியாது. ஆகவேதான், மாற்றியமைக்கப்பட்ட ஜிஎஸ்டியை அமலாக்குவோம் என்று சொல்கிறோம். ஆனால், இது மாநில உரிமைகள் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. வரியை அமலாக்கும்போது மத்திய – மாநில அரசுகளுக்கான பங்கை ஒரு அமர்வில் அமர்ந்து பேசி முடிவெடுக்கலாம்.

மருத்துவப் படிப்புக்கான தேசிய அளவிலான நுழைவுத்தேர்வை (நீட்) அந்தந்த மாநில அரசுகளின் முடிவுகளுக்கேற்ப மறு பரிசீலனை செய்வோம் என்று சொல்லியிருக்கிறீர்கள். ஆனால், இது ஒரு நல்ல முடிவா? ‘நுழைவுத்தேர்வையே கைவிட வேண்டும்’ என்ற தமிழ்நாட்டின் வலியுறுத்தலானது இந்த விஷயத்தை சமூக நீதி அடிப்படையில் பார்க்கும் சிந்தனையை டெல்லிக்கு வழங்குகிறது. காங்கிரஸோ அதை வெறும் தேர்தல் பிரச்சினை அல்லது வெகுமக்கள் உணர்வைப் பிரதிபலிக்கும் விவகாரம் என்பதாக தமிழ்நாடு அளவில் சுருக்கிவிட்டதோ என்று தோன்றுகிறது. உங்கள் கருத்து என்ன?

இல்லையே! ஒரு மாநில அரசின் வருவாயிலிருந்து கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மிகப் பெரும்பான்மையான இடங்கள் அந்த மாநிலத்தில் பிறந்த, அங்கு வசிக்கிற மாணவர்களுக்குத்தான் செல்ல வேண்டும்;அதற்கான மாணவர் தேர்வை அந்த மாநில அரசே நடத்தவேண்டும் என்ற சிந்தனையைத்தான் நாங்களும் வெளிப்படுத்தியிருக்கிறோம். இந்தியா போன்ற பரந்த நாட்டில்பயிற்சி மொழி, பயிற்சி முறை என ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறாக இருக்கும் சூழலில் தேர்வு முறை மட்டும் எப்படி ஒரே மாதிரியானதாக இருக்க முடியும் என்ற கேள்விக்கு நாங்கள் முகம் கொடுத்திருக்கிறோம்! அதன் அடிப்படையில்தான் அந்தந்த மாநில அரசுகளின் முடிவுகளுக்கு இதைக் கொண்டுசெல்வோம் என்று உறுதி கொடுத்திருக்கிறோம்.

மருத்துவம், பொறியியல் போன்ற தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கும் ‘எம்பிபி’ நிறுவனத்தில் சமீபத்தில் ‘ரிலையன்ஸ்’ முதலீடுசெய்திருப்பதை அறிந்திருப்பீர்கள். ‘அரசு தன் பொறுப்பில் கல்வியை வைத்துக்கொள்ள முடியாத அளவுக்கு இன்றைக்கு அது பெருவணிகமயமாகிவிட்டிருக்கிறது; அதாவது, ‘அரசே நினைத்தாலும்கூட இனி கல்வியில் முடிவெடுக்கும் முழு அதிகாரம் தன்னுடைய அரசிடமும் இல்லை’ என்று ஒரு சாமானியன் இந்நாட்டில் கருதுகிறான். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நான் இதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். நாங்கள் சொல்லும் மாற்றங்கள் வந்தால், மாநில அரசு சரியான கட்சியின் கையில், சரியான அமைச்சர்கள் கையிலே இருந்தால் இந்த முடிவுகளை எடுக்கிற அதிகாரம் மாநில அரசிடம் எதிர்காலத்தில் இருக்கும்.

நேருவின் காங்கிரஸுக்கும் ராகுலின் காங்கிரஸுக்கும் ஏராளமான வேறுபாடுகள் இருப்பதை உணர்வீர்கள். குறிப்பாக சிறுபான்மையினரை அணுகும் விஷயத்தில் கட்சி தலைகீழாக மாறியிருக்கிறதா? பாஜகவுக்கு ஈடுகொடுக்க மென்போக்கு பாஜகவாக காங்கிரஸ் மாறிக்கொண்டிருக்கிறதா?

(இடைமறிக்கிறார்...) நேருவின் இந்தியாவுக்கும், ராகுலின் இந்தியாவுக்கும் ஏராளமான வேறுபாடுகள் இருப்பதை நீங்களும் உணர்வீர்கள் என்றால் உங்கள் கேள்விக்கு அதுவே பதில். காங்கிரஸ் எல்லோருக்குமான கட்சி. காங்கிரஸ் பிளவுசக்தி அல்ல; இணைப்பு சக்தி.

அரசியல் தளத்தில் அபாயகரமான தேசியத்தை மையத்துக்கு பாஜக கொண்டுவந்திருக்கும் நாட்களில், தனது தேர்தல் அறிக்கையின் வழி மக்களின் உரிமைகளை மையத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது காங்கிரஸ். தேசியத்துக்கு எதிரான சிந்தனைகள் உலகெங்கும் மேலோங்கிவந்தாலும், தேசியத்தின் செல்வாக்கும் குறைந்தபாடில்லை. தேசியத்தின் எதிர்காலம் இங்கு என்னவாக இருக்கும்?

நம் மக்களிடம் இயல்பாக உள்ள நாட்டுப்பற்று வேறு; சர்வாதிகாரத்துக்காக இன்று கட்டியெழுப்பப்படும் தேசியம் - தேச பக்தி வேறு. தேசியம் என்பது சர்வாதிகாரப் போக்குகளை மறைப்பதற்காக ஒருவர் போட்டுக்கொள்ளக்கூடிய மேலாடை. உலகம் அதை உணர்ந்துகொண்டேவருகிறது. யதேச்சதிகாரத்தை மக்கள் தூக்கி எறியும்போது தேசியமும் தூக்கி எறியப்படும். இங்கும் அதுவே நடக்கும்.

இந்தத் தேர்தலில் தமிழர் ஒருவர் பிரதமராகும் வாய்ப்பும் எங்கேனும் இருக்கிறதா?

அடுத்த பிரதமர் யார் என்பதை காங்கிரஸ் கூட்டணித் தலைவர்கள் முடிவெடுப்பார்கள். காங்கிரஸுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என்றால், எங்களுடைய தேர்வு ராகுல் காந்தி என்பதில் யாருக்குமே இருவேறு கருத்துகள் இல்லை.

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x