Published : 14 Apr 2019 09:33 AM
Last Updated : 14 Apr 2019 09:33 AM

இதுதான் இந்த தொகுதி: கோயம்புத்தூர்

கொங்கு மண்டலத்தின் மையப் பகுதியான கோயம்புத்தூர், தமிழகத்தின் இரண்டாவது பெரிய தொழில் நகரம். நூற்பாலைகளில் தொடங்கிய தொழில் வளர்ச்சி, குண்டூசி முதல் ராணுவ தளவாடங்கள் வரை உற்பத்தி செய்யும் தொழில் மையமாக மாறியுள்ளது. 1952-ல் கோவை மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது. தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு, இத்தொகுதியில் தற்போது கோவை தெற்கு, கோவை வடக்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், சூலூர் சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

பொருளாதாரத்தின் திசை: பொறியியல், வேளாண் கருவிகள், நூற்பாலைகள், ஜவுளித் தொழிலுக்கான உபகரணங்கள், மோட்டார் பம்புகள், வாகன உதிரி பாகங்கள், காற்றாலைக்கான பாகங்கள், தங்க, வைர நகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. சென்னைக்கு அடுத்தபடியாக மென்பொருள் துறை, கல்வி, மருத்துவத் துறையிலும் கோவை கொடிகட்டிப் பறக்கிறது. அதேசமயம், ஊரகப் பகுதிகளில் விவசாயமும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

தீர்மானிக்கும் பிரச்சினைகள்: பணமதிப்புநீக்கம் மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கத்தால், சிறு, குறு தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்

ளன. ஏற்கெனவே வரி விதிக்கப்படாத அல்லது குறைந்த வரி விதிக்கப்பட்ட பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்பட்டதால் அதிக வேலைவாய்ப்புகளை அளிக்கின்ற சிறு, குறு தொழில்முனைவோரை நிலைகுலையச் செய்துள்ளது. ‘ஜாப் ஆர்டர்’ முறையில் செயல்படும் நிறுவனங்களுக்கு வரி விதிக்கப்பட்டது, தொழில் துறையினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சாலை வசதிகள், குடிநீர் விநியோகம், குப்பையை அகற்றுவது என அடிப்படைப் பிரச்சினைகளுக்கான தீர்வு,  ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், கோவை ரயில் நிலையத்திலிருந்து கூடுதல் ரயில்கள் இயக்கம் என மக்களின் கோரிக்கைகள் அதிகம்.

நீண்ட காலக் கோரிக்கைகள்: கோவை சர்வதேச விமான நிலையத்தை விரிவுபடுத்தி, பல்வேறு வெளிநாடுகளுக்கும் கூடுதல் விமானங்களை இயக்குதல், கோவை நகருக்கான பில்லூர் 3-வது குடிநீர்த் திட்டப் பணிகள், தொழில் நகரம் என்று அழைக்கப்பட்டாலும்கூட கோவையில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் எதுவுமே இல்லாதது, புதிதாகத் தொழில் தொடங்க கடனுதவி பெற நடைமுறைகளை எளிமையாக்குதல், தொழிற்பேட்டைகள் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு இதுவரை தீர்வுகாணப்படவில்லை.

ஒரு சுவாரஸ்யம்: அதிமுகவுக்கு இத்தொகுதியில் குறிப்பிடத்தகுந்த அளவில் வாக்கு வங்கி இருந்தாலும், அதிமுக ஒருமுறை மட்டுமே வென்றுள்ளது. பெரும்பாலும் இந்தத் தொகுதியை இடதுசாரிக் கட்சிகள், காங்கிரஸ், பாஜகவுக்கு ஒதுக்குவதே வழக்கம்.

வெற்றியைத் தீர்மானிக்கும் சமூகங்கள்: இந்தத் தொகுதியில் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். வெற்றியைத் தீர்மானிப்பதில் அவர்கள் பங்கு அதிகம். அதேபோல, பட்டியல் இனத்தவர்கள், நாயுடு சமூகத்தினரும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர்.

அதிக வெற்றியை ருசித்தவர்கள்: கோவை தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி 6 முறையும், காங்கிரஸ் கட்சி 5 முறையும், திமுக, பாஜக கட்சிகள் தலா இரு முறையும், அதிமுக ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன.

களம் காணும் வேட்பாளர்கள்:

நடராஜன் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

சி.பி.ராதாகிருஷ்ணன் – பாஜக

மகேந்திரன் – மக்கள் நீதி மய்யம்

அப்பாதுரை - அமமுக

வாக்காளர்கள் யார்?

மொத்தம் 19,31,558

பெண்கள் 9,66,239

மூன்றாம் பாலினத்தவர்கள் 199

சமூகங்கள் என்னென்ன?

இந்துக்கள்: 88.03 %

முஸ்லிம்கள்: 6.10 %

கிறிஸ்தவர்கள்: 5.50 %

இதர சமூகத்தினர்: 0.37 %

எழுத்தறிவு எப்படி?

மொத்தம் 83.98 %

ஆண்கள் 89.06 %

பெண்கள் 78.92 %

புள்ளிவிவரங்கள் கடைசியாக மாவட்டவாரியாக எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே தரப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x