Published : 02 Apr 2019 09:47 AM
Last Updated : 02 Apr 2019 09:47 AM

வாக்கு வங்கி அரசியல் ஒன்றும் மோசமான விஷயமில்லை...

தேர்தல் காலம் வரும்போதெல்லாம், அரசியல் பகுப்பாய்வுகளிலும் ஊடகங்களிலும் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தை ‘வாக்கு வங்கி’. விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சிகள், பத்தி எழுத்தாளர்கள், கருத்துக் கணிப்பு நிபுணர்கள் என்று ஏறக்குறைய அனைவருமே திருப்திப்படுத்தும் அரசியல் என்று அறியப்படும் ஒரு வகைமையை எடுத்துக்காட்ட இந்த வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர்.

‘வாக்கு வங்கி அரசியல்’ என்ற வார்த்தை முதன்முதலில் 1955-ம் ஆண்டில் பிரபல சமூகவியல் ஆய்வறிஞர் எம்.என்.சீனிவாஸ் எழுதிய ‘ஒரு மைசூரு கிராமத்தின் சமூக அமைப்பு’ என்ற கட்டுரையில் பயன்படுத்தப்பட்டது. ஆதரவாளர்கள் தாங்கள் ஆதரிப்பவரிடம் அரசியல் செல்வாக்கு செலுத்துவதை எடுத்துக்காட்டுவதற்காகவே அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது. ஆனால், இன்று அந்த வார்த்தையானது மற்ற விஷயங்களோடு சாதி, உட்பிரிவு, மொழி, மதம் ஆகியவற்றின் அடிப்படையில் வாக்களிப்பதைக் குறிப்பிடுகிறது.

நேர்மறையான விஷயங்களும் உண்டு

சந்தைப் பொருளாதாரம் ஒரு நபரை வாடிக்கையாளராக நடத்துவதுபோலவே, ஒரு அரசியல் கட்சி அல்லது தலைவரும் மக்கள் திரளை வாக்காளர்களாகவே பார்க்கிறார்கள். ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் தேர்தல்களின்போது தேர்ந்தெடுப்பதற்கான, மீண்டும் தேர்ந்தெடுப்பதற்கான அல்லது எதிராகப் போட்டியிடுபவரைத் தோற்கடிப்பதற்கான கருவிகளாகவே அவர்களைப் பார்க்கிறார்கள்.  

இது வாக்கு வங்கியின் எதிர்மறையான பக்கமாக இருந்தபோதிலும்கூட, நேர்மறையான பக்கமும் அதற்கு உண்டு.  தனிநபராகவும் கூட்டாகவும் மக்களும் அதிகாரத்தில் இருப்பவர்களும் தமக்கிடையே கூட்டு பேரங்கள் செய்துகொள்வதை அதிகரிக்கச்செய்துவருகிறது. ஜனநாயகம் என்பது குடிமக்களுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் இடையே எண்ணற்ற கூட்டு பேர நடவடிக்கைகளோடு தொடர்புடைய ஓர் அன்றாடச் செயல்பாடு.

எனவே, சாதி, உட்பிரிவு, மதம் அல்லது மதத்தின் அடிப்படையில் ஒன்றுசேரும் ஒரு குறிப்பிட்ட குழுவை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அரசியல் கட்சிகள் அங்கீகரிக்காத நிலையைக் காட்டிலும், அந்தக் குழுவோ அல்லது சமூகமோ ஒரு வாக்கு வங்கியாக அங்கீகரிக்கப்படும்போது அவர்களது கோரிக்கைகளும் விருப்பங்களும் பூர்த்திசெய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன.

பெண்களும் வாக்கு வங்கிதான்

உதாரணத்துக்கு, மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை 4 முதல் 6 கோடி வரை இருந்தாலும்கூட, அவர்கள் ஒரு வாக்கு வங்கியாக அங்கீகரிக்கப்படவில்லை என்று உலக வங்கியின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. எனவே, வெறும் எண்ணிக்கை அளவிலான வலிமை என்பது மட்டுமே அந்தக் குழுவை ஒரு வாக்கு வங்கியாக அரசியல் கட்சிகள் ஏற்றுக்கொள்வதற்குப் போதுமானதாக இல்லை. அந்தக் குழு அல்லது சமூகத்தின் நோக்கமும் வாக்கு வங்கியாகப் பார்க்கப்பட வேண்டும்.  பல்லாயிரக்கணக்கான மாற்றுத் திறனாளிகள் ஒன்றுசேர்ந்து தங்களை வாய்ப்புள்ள ஒரு வாக்கு வங்கியாகக் காட்ட முடியும். அதன் பிறகு அரசியல் கட்சிகள் அவர்களது வாக்குகளைப் பெறுவதற்காக மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளுக்காகத் தற்போது இருப்பதைக் காட்டிலும் கூடுதல் முக்கியத்துவத்தைக் கொடுப்பார்கள்.

அதேபோல, மக்கள்தொகையில் சரிபாதியாக இருக்கக்கூடிய பெண்களும் வாக்கு வங்கியாகக் கணக்கில்கொள்ளப்படவில்லை. பெண்கள் ஒரு குழுவாகவோ அல்லது சமூகமாகவோ ஒன்றிணைந்து ஓர் அரசியல் கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று அரசியல் கட்சிகள் புரிந்துவைத்திருப்பதே அதற்கான காரணம்.  தேர்தலின்போது, பெண் எனும் அடையாளம் பின்தள்ளப்பட்டு அவர்களது சாதி, மதம் மற்றும் உட்பிரிவு நலன்களே செல்வாக்கு செலுத்துகின்றன. ஒருவேளை, பாலினப் பிரச்சினைகளுக்கு அரசியல் கட்சிகள் கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பதும் காரணமாக இருக்கலாம்.

வாக்கு வங்கி அறுவடை

அரசியல் கட்சிகள் அதிக வாக்குகளைப் பெறுவதற்கு முயல்கின்றன; வாக்கு வங்கிகளை   ‘அறுவடை’ செய்கின்றன என்று அடிக்கடி விவாதிக்கப்படுகிறது. எனினும், இது எல்லா நேரங்களிலும் நடப்பதில்லை. அரசியல் கட்சிகள் வாக்கு வங்கியை அதன் அடையாளங்களைத் தாண்டி அறுவடை செய்ய முடியாது. குடிமக்களிடம் வெவ்வேறு விதமான அடையாளங்கள் காணப்படும்போது, வாக்கு வங்கி அறுவடை என்பது அவ்வளவு எளிதானது அல்ல.

ஒரு குழுவோ அல்லது சமூகமோ தாங்கள் ஒரு வாக்கு வங்கியாக ஏற்றுக்கொள்ளப்படுவோம் என்று எண்ணும்போது, அவர்களது கோரிக்கைகளை முன்வைத்து பேரம் பேசும் வலிமை பன்மடங்கு அதிகரிக்கிறது. தேர்தல்களின்போது தங்களது வாக்குகளை இழந்துவிடக் கூடாது என்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் அந்தக் குழுக்களைச் சாந்தப்படுத்த முயல்கின்றன.

இந்த வகையில், வாக்கு வங்கிகள் என்பவை வாக்காளர்கள், அரசியல் கட்சிகள் என்று இரண்டு தரப்புகளின் நோக்கம் நிறைவேறவும் உதவுகின்றன.  சமூகத்தைப் பிளவுபடுத்தி அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில்,  ஒரு குழு அல்லது சில குழுக்களின் கோரிக்கைகளை முன்வைத்து தவறான வகையில் பயன்படுத்தப்படும்போது மட்டுமே வாக்கு வங்கி அரசியல், அருவெறுக்கத்தக்கதாக மாறுகிறது. தவறான வகையில் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்றபோதும், வாக்கு வங்கி அரசியல் என்பதைக் குடிமக்களால் நிலைநிறுத்தப்படத்தக்க ஒரு கருவியாகவே பார்க்க வேண்டுமேயொழிய, அரசியல் கட்சிகளின் கருவியாக அல்ல.

- மார்த்தாண்ட ஜா,

ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக

ஆய்வு மாணவர்.

© ‘தி பிசினஸ்லைன்’, சுருக்கமாகத் தமிழில்: புவி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x