Published : 26 Apr 2019 03:15 PM
Last Updated : 26 Apr 2019 03:15 PM

கண்ணாடி, லென்ஸ் எது பெட்டர் சாய்ஸ்? - கண்களை கண்ணைப் போல் பாதுகாப்போம்

ஜெமினி தனா

பார்க்கப் பார்க்க காதல் வருமாம். யார் சொன்னது? பார்க்க பார்க்க கண்ணில் சிக்கல்தான் வரும் காலம் இது!

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். ‘ஒருத்தர் கண்ணைப் பாத்தே அவன் நல்லவனா, கெட்டவனானு சொல்லிடலாம்’ என்பார்கள். இதெல்லாம் இப்போது கதைக்கு உதவாது. கண்களின் நிறம், குணம், மணம் என இயல்புகள் எல்லாமே மாறிவிட்டன. கண்களின் பார்வையெல்லாம் இப்போது களை இழந்து வருகின்றன.

   கூட்டத்தில், கண்ணாடி போட்டவர்கள் தனித்துத் தெரியும் காலங்களைக் கடந்து  கண்ணாடி அணியாமல் இருப்பவர்கள்தான் இப்போது தனித்துத் தெரிகிறார்கள். யாருக்குத் தெரியும் இவர்களுள் லென்ஸ் அணிந்தவர்கள் கூட அதிகமாக  இருக்கலாம்.

   முப்பது அடி  தூரத்தில் வரும் வாகனங்களின் பெயர்ப் பலகையாகட்டும், தரையில் விழும் குண்டூசியாக இருக்கட்டும், துல்லியமாகக் கண்டுபிடிக்கும்  கூர்மையான பார்வைத்திறனைக் கொண்டவர்கள் நம் மூதாதையர்கள்.  இன்றைக்கு... இரண்டடி தூரத்தில் நிற்கும் பேருந்து  போர்டைக் கூட கண்ணாடியைக் கழட்டி துடைத்து மாட்டிய பிறகும் ஒருவித சந்தேகத்தோடு மீண்டும் மீண்டும் படித்தும் கேட்டும் பயணிக்கிறோம். இதுதான் நிகழ்காலம். இனி எதிர் காலம் எப்படி இருக்க வேண்டும் என்பது நம்முடைய வாழ்க்கை முறையில்தான் இருக்கிறது.

  எங்கள் பக்கத்து வீட்டு பாட்டிக்கு 90 வயது. கூன் விழாமல், கால்கள் வளையாமல், முக்கியமாக கண்ணாடி அணியாமல்  கம்பீரமாக வளைய வருவார். காலையில் அவர் பேப்பர் படிக்கும் அழகைப் பார்க்க கண் கோடி வேண்டும்.  கூர்மையான பார்வையால் ஒருவரி விடாமல் வாசிப்பார்.

   ”இந்த வயதிலும் கண்ணாடி அணியாமல் எப்படி சிறிய எழுத்துக்களைப் படிக்கிறீங்க’’ என்று கேட்டேன். 

''எங்க காலத்துல மூக்குக் கண்ணாடியெல்லாம் இல்ல. 45லேருந்து 50 வயசுல, எல்லாருக்கும் பார்வைக் கூர்மை குறையும். இதான் இயல்பு. அப்போ, எழுதுறதுலயும் படிக்கிறதுலயும் லேசா சிரமம் இருக்கும். இந்தமாதிரி சமயத்துல, கண்களுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்துருவோம். இந்தசமயத்துல, கீரை, காய்கறிகள்னு கண்ணுக்கு பலம் சேர்க்கிறதை அதிகமா எடுத்துக்குவோம். அப்புறம்... ஆறேழு மாசத்துல கண்ணு ரெண்டும், பழையபடி பளீர்னு பாக்க ஆரம்பிச்சிரும். அதுக்குப் பிறகுதான், புரை, சதைன்னு வர ஆரம்பிச்சுச்சு’’ என்றார்.

ஆனால், இப்போது  முக்கால்வாசி பேருக்கு வாகனத்தில் உள்ள எழுத்துகள் தெளிவாகத் தெரிவதில்லை. பத்து வயதுக் குழந்தைகள் கூட, கண்ணாடி அணிந்துகொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

உணவிலும் சத்தில்லை; கண்ணுக்கும் ஓய்வில்லை. இதுதான் இப்போதைய கண்ணான பிரச்சினை! 

கண்ணில் வரும் குறைபாடு:

பிறவியிலேயே கண்பார்வை இழப்பு, கண்ணில் குறைபாடு  வருவதுண்டு. தற்போது நீரிழிவு அதிகரிக்கும் போதும், ரத்த அழுத்தம் அதிகமாகும் போதும் கண்களில் அதிக பாதிப்பை உண்டாக்குகிறது. இது ஒருபுறம் என்றால்... மாறிவரும் வாழ்க்கைச்சூழலும், உணவு முறையும் ஓய்வில்லா கண்களுக்கான பணியும் கூட இன்றைய பார்வைக் குறைபாட்டை அதிகரிக்கச் செய்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.

கிட்டப்பார்வை, தூரப்பார்வை, மந்தமான பார்வை, கண்ணில் பூ விழுதல், புரை, சதை வளர்தல், கண்களில் இருக்கும் மெல்லிய நரம்பில் ரத்தம் உறைதல், கண் நோய்,  கண் கோளாறால் தலைவலி, மாலைக்கண் நோய், கண்ணில் நீர் வடிதல்,  வெள்ளெழுத்து என கண் நோய்களைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.  சில கண் குறைபாட்டை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்தாலும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை குறைபாடு கொண்டவர்கள் ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை அணுகி உரிய சிகிச்சையோடு  கண்ணாடி அணிந்து சரிவிகித உணவையும் எடுத்துக் கொண்டால் நாளடவில் பார்வை குறைபாடு நீங்கி சீரான கூர்மையான பார்வையைப் பெறலாம். குறிப்பாக குழந்தைகள்...

  கண் பார்வை  ஓர் பார்வை:

               உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி உலகில்  4 கோடி பேர் கண்பார்வை இழந்தவர்கள் என்கிறது. உலகில் கண்ணாடி அணிவோரின் எண்ணிக்கை 400 கோடியைத் தொட்டுவிட்டதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.  இந்தியாவில்  முதியவர்களைக் கடந்து குழந்தைகளையும், இளைஞர்களையும்  அதிகம் பாதித்திருக்கிறது. 5 கோடி மக்களுக்கும் மேல் கண்பார்வை குறைபாட்டைக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவிக்கிறது மருத்துவ ஆய்வு ஒன்று.

’கண்ணாடி’க் குழந்தைகள்:

       இன்று கண்ணாடி அணிபவர்களின்  எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்து விட்டது.  இதில் குழந்தைகளும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 20 வருடங்களாகவே பள்ளிக்குழந்தைகள் கண்ணாடி அணிவது அதிகரித்து வருகிறது. குழந்தைகளின்  பார்வை குறைபாட்டை பெற்றோர் புரிந்து கொள்வதற்குள் குறைபாடு அதிகரித்துவிடுகிறது.  அந்தக் குறைபாட்டோடு படிப்பது, எழுதுவது, விளையாடுவது, டீவி பார்ப்பது என்று  இருக்கிறார்கள். தொலைவில் உள்ள  பொருள்களைப் பார்க்க சிரமப்படும் குழந்தைகள், தீவிரமான பாதிப்பை அடையும்போதுதான் ஆசிரியர்கள் அவர்களைக் கவனித்து  பெற்றோர்களிடம் தெரிவிக்கிறார்கள்.

குழந்தைகளை தாக்கக்கூடிய  மையோப்பியா என்று சொல்லக்கூடிய  கிட்டப்பார்வை குறைபாடை ஆரம்பத்திலேயே களைந்தெறியமுடியும். பார்வை குறைபாட்டின் மோசமான பின்விளைவுகளை அறியாமல் காலம் தாழ்த்தும் ஒவ்வொரு நாளும் அந்தக் குழந்தையின் பார்வைத்திறனை மேலும் மேலும் பாதிப்புக்குள்ளாகும் என்று கண் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். 

குழந்தைகளோடு அதிக நேரம் செலவிடும்   பெற்றோர்கள்தான் குழந்தைகளின் நடவடிக்கையைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். அவ்வப்போது தலை வலி,  கண்ணில் வலி என்று சொல்லும் போதும் சற்று தொலைவில் இருக்கும் பொருளை தெளிவாக பார்க்காமல் சுருக்கி பார்த்தாலோ அவர்களுக்கு பார்வை குறைபாடு உண்டு என்பதை நிச்சயம் சொல்லிவிடலாம்.   

கண்ணாடியா? லென்ஸா?

சோடா புட்டி கண்ணாடி என்று  கனமான தடிமனான கண்ணாடிகள் அணியும் போதே கண் குறைபாடு விழிப்பு உணர்வைத் தீவிரமாக உணர்த்தி  அனைவரும் கடைப்பிடித்திருந்தால் இன்று கண் நோய் போல் விதவித மான கண்ணாடி வகைகளும் வந்திருக்காது. சூரிய வெளிச்சத்திலிருந்து காத்துக் கொள்ள,  கம்ப்யூட்டரில் பணிபுரிய, கீழே விழுந்தாலும் உடையாமல் இருக்க  என்று கண் குறைபாட்டை நீக்கும் சிகிச்சையை விட வேகமாக வளர்ந்துவிட்டது  கண்ணாடி வகைகள்.

    குழந்தைகளைத் தவிர கண் பார்வை குறைபாடுள்ளவர்கள்  கண்ணாடிகளைத் தவிர்த்து கான்டாக்ட் லென்ஸ் அணிவது இப்போது அதிகரித்திருக்கிறது.  இவை மூக்குக் கண்ணாடியை விட விலை  அதிகம். கூடவே ஒவ்வொரு முறையும் கருவிழியில் வைத்து எடுப்பதும் அதிகப்படியான வேலையே. ஆனாலும் இன்றைய இளைஞர்களின் ஓட்டு கண்ணாடியை விட  லென்ஸுக்குத்தான். லென்ஸ் அணிந்த கண்கள் கண்ணுக்கு மேலும் பாதிப்பையே உண்டாக்கும் என்று  மருத்துவர்கள் எச்சரிப்பதை இன்றைய இளம் வயதினர் நிச்சயம் கவனத்தில் கொள்வது நல்லது.       

கண்கள் பார்க்க மட்டுமே.. பார்க்க பார்க்க அல்ல..

     கண்கள் பார்க்க மட்டும்தான். பார்த்துக்கொண்டே இருப்பதற்கல்ல என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.  முந்தைய  கால வாழ்க்கை முறையில்   கண்களுக்கான வேலைகள் குறைவாக இருந்து கண்களுக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டது.

ஆனால் இப்போது கணினி பயன்பாடு, புத்தகம் வாசிப்பது, அதீத ஆபத்துக்களை உண்டாக்கும் வெளிச்சம் மிக்க திரைகளைக் கொண்ட டெக்னாலஜிகள் எல்லாம் கண்களைக் கூசவே செய்கின்றன. இப்படி கண்பார்வைக்கு வேட்டு வைக்கும்   செல்ஃபோன், வீடியோ கேம், டீவி,  கம்ப்யூட்டர் கேம்  என தூங்கும் நேரம் தவிர இதர நேரங்களில் கண்ணுக்கு வேலை கொடுக்கிறோம். சொல்லப்போனால், கண்ணுக்கு வேலை கொடுத்துக்கொண்டே, தூங்கும் நேரத்தைக் குறைத்துக் கொள்கிறோம். கல்லீரல், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றாலும் கண்ணில் குறைபாடு உண்டாகும். கண்ணாடி, லென்ஸ், அறுவை சிகிச்சை என்று இழந்த பார்வையை மீட்கும்  சிகிச்சைகளைத் தொடர்ந்தாலும் இயற்கை தந்த  பொலிவான கண்களில் மீண்டும் சரியான வெளிச்சத்தைக் காணமுடியாது.

உணவுமுறைக்கும் சம்பந்தம் உண்டு:

மருத்துவக்கட்டுரைகள் எல்லாவற்றிலும் சத்தான ஆகாரமில்லாததாலும், உணவு முறைகளை மாற்றியதாலும் இந்த கண் நோய் வரக்காரணம் என்ற வரிகள் நீக்கமற நிறைந்திருப்பதைப் பார்க்கமுடிகிறது. இது கண் நோய்க்கும் பொருந்தும். காரணம், எல்லா நோய்களுக்கும் முதல் மருந்து சத்தான உணவுதான். கண்களைப் பாதுகாக்கும் வைட்டமின் ஏ அதிகமுள்ள  கேரட், பீட்ரூட், பூசணி, வெண்டைக்காய், பசும்பால், மோர், தயிர், முளை கட்டிய தானியங்கள், கொத்துமல்லி... என அன்றாட உணவில் இவற்றில் ஏதேனும் ஒன்று இடம் பெற வேண்டும். அதே போன்று முருங்கைக்கீரை,  பசலைக்கீரை,  பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, பழங்களில் பப்பாளி, மாம்பழம், அன்னாசி, பேரிச்சை, நெல்லிக்காய், ஆப்பிள் முதலானவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

பயிற்சி முக்கியம்:

 நல்ல காற்றோட்டமான வெளிச்சமான இடத்தில் பணி செய்யும்போது வெளிச்சமானது நேரடியாக கண்களைத் தாக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இருள் படர்ந்த இடத்தில் அதீத ஒளிபாய்ச்சும் திரைகளைக (செல்போன் ஸ்கிரின், கம்ப்யூட்டர், லேப்டாப் மானிட்டர்) கண்ணுக்குள் அருகில் வைத்து பார்ப்பதைத் தவிர்ப்பது நல்லது.

   தொலைக்காட்சி முன்பு தவம் கிடக்காமல் நாள் ஒன்றுக்கு 2 மணி நேரம் மட்டுமே கண்களுக்கு விருந்தளிக்க வேண்டும். குறிப்பாக 8 அடி தொலைவில் தள்ளி அமர்ந்து பார்க்க வேண்டும். குறிப்பாக குழந்தைகள்…

 கம்ப்யூட்டரையோ, டீவியையோ, செல்ஃபோனையோ கண்சிமிட்டாமல் பார்ப்பதைத் தவிர்த்து அவ்வப்போது கண்களைச் சிமிட்டுவதும், கண்களில் குளிர்ந்த நீரால் கழுவுவதும் கண்களைப் பாதுகாக்கும்.  கண்ணில் குறைபாடு இருந்து மருத்துவர் கண்ணாடி அணிய நிர்ப்பந்தித்தால் தயக்கமின்றி, கூச்சமின்றி அணிந்து கொள்ளுங்கள். ஆரம்பத்தில் கண்டறியப்படும் மைனஸ், ப்ளஸ் வித்தியாசம் எல்லாம் நாளடைவில் சத்தான ஆகாரங்களோடு சரி செய்யப்பட்டு விடும்.

   கண் மருத்துவரது ஆலோசனையின்படி  கண்களுக்கு கொடுக்க வேண்டிய பயிற்சிகளைத் தவறாமல் செய்யுங்கள். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள் மட்டுமல்ல குழந்தைகள் முதல் அனைவருமே வருடத்துக்கு ஒருமுறை கண்பரிசோதனை செய்து கொள்வது நல்லது…

கையில் இருக்கிற செல்போனை கண்ணைப் போல் பாதுகாக்கும் நாம்... கண்களை கண்ணைப் போல் பார்த்துக்கொள்ளவேண்டாமா?   

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x