Published : 29 Apr 2019 08:52 am

Updated : 29 Apr 2019 08:52 am

 

Published : 29 Apr 2019 08:52 AM
Last Updated : 29 Apr 2019 08:52 AM

இந்தியாவை அறிவோம்: ஒடிஷா

மாநில வரலாறு

வரலாற்றுரீதியாகவும் கலாச்சாரரீதியாகவும் தொன்மையான பிரதேசம் ஒடிஷா. பண்டைய காலத்தில் கலிங்கம் எனும் பெயரில் அறியப்பட்ட இப்பிரதேசம், வங்காள விரிகுடாவின் துறைமுகங்கள் மூலம் தெற்காசியா, தென்கிழக்காசியாவுடன் வர்த்தக, கலாச்சாரத் தொடர்புகளையும் கொண்டிருந்தது. இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் இலங்கை, ஜாவா, பாலி, சுமத்ரா, வியத்நாம், தாய்லாந்து போன்ற நாடுகளில் வாழ்ந்தது; சில பகுதிகளில் கலிங்க மன்னர்கள் ஆட்சிசெய்தது குறித்த தகவல்களும் கிடைக்கின்றன. உத்கல பிரதேசம், ஒட்டர பிரதேசம், கோசல நாடு என்று பல்வேறு பிராந்தியங்கள் பண்டைய காலத்தில் இங்கு இருந்திருக்கின்றன. கி.மு. 262-ல் முடிவடைந்த கலிங்கத்துப் போர் ஏற்படுத்திய பேரழிவைக் கண்டு மனம் வருந்திய பேரரசர் அசோகர், புத்த மதத்தைத் தழுவியது வரலாற்றில் முக்கியமான நிகழ்வு. மராத்தாக்கள், முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் என்று பலரது ஆட்சியின் கீழ் இருந்த ஒடிஷா, 1912 வரை வங்காள மாகாணத்தின் ஒரு பகுதியாகவும், 1936 வரை பிஹாருடன் இணைந்தும் இருந்தது. 1950-ல் தனி மாநிலமானது.


புவியியல் அமைப்பு

இந்தியாவின் கிழக்குப் பகுதி மாநிலமான ஒடிஷா, நாட்டின் ஒன்பதாவது பெரிய மாநிலமாகும். பரப்பளவு 1,55,707 சதுர கிமீ; நாட்டின் பரப்பளவில் 4.73%. இம்மாநிலத்தின் மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிமீக்கு 269 (தமிழகத்தின் மக்கள் அடர்த்தி 555). மக்கள்தொகை 4,19,74,218. நாட்டின் மக்கள்தொகையில் இது 3.47%. இந்துக்கள் 93.63%. பிராமணர்கள், காரண காயஸ்தாக்கள், ஷத்திரியர்கள் ஆகியோர் முன்னேறிய சாதியினர். பட்டியலின சமூகத்தினர் 17.1%. பழங்குடியினர் 22.8%. முஸ்லிம்கள் 2.17%, கிறிஸ்தவர்கள் 2.77%, சீக்கியர்கள் 0.05%, பிற சமூகத்தினர் 1.38%.

சமூகங்கள்

கடலோரப் பகுதிகளைச் சேர்ந்தவர்களே அரசியலில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். பல முதல்வர்கள், முக்கியத் தலைவர்கள் கடலோரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்தான். கண்டாயத்துக்கள் கல்வி அடிப்படையில் அதிக வேகம் கண்ட சமூகத்தினர். மண்டல் கமிஷன் அமல்படுத்தப்பட்டபோது இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட கண்டாயத்துக்கள், இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தங்களைச் சேர்க்க வேண்டும் என்று பல ஆண்டுகளாகக் கோரிவருகிறார்கள். பழங்குடியினர் எண்ணிக்கையில் நாட்டிலேயே மூன்றாவது இடத்தில் இருக்கும் ஒடிஷாவில் (22.8%), தேர்தல் சமயங்களில் மட்டும் பழங்குடியினர் மீது அரசியல் கட்சிகள் அக்கறை காட்டுகின்றன.

ஆறுகள்

பிரதான ஆறு மகாநதி. சத்தீஸ்கரில் உற்பத்தியாகும் இந்நதி, ஒடிஷாவுக்குள் 494 கிமீ ஓடுகிறது. மாநிலத்துக்குள் இதன் நீர்ப்பிடிப்புப் பகுதி 65,580 சதுர கிமீ. ஸ்வர்ணரேகா ஆறு, பிராமி ஆறு போன்றவையும் முக்கியமான ஆறுகள். புத்தபலங்கா, பைதரணி ஆறு, ருசிகுல்ய ஆறு ஆகியவை மாநிலத்துக்குள்ளேயே உற்பத்தியாகி வளம்சேர்ப்பவை. பிரதான ஆறுகளும் கிளைநதிகளும் பல பகுதிகளில் மாசடைந்திருப்பதாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

காடுகள்

ஒடிஷாவின் பரப்பளவில் 39.31% வனப் பகுதிகளாகும். தெற்கு, மேற்குப் பகுதிகளில் காடுகள் அதிகம். காப்புக் காடுகள் 58.90%, பாதுகாக்கப்பட்ட காடுகள் 40.75%, வகைப்படுத்தப்படாதவை 0.35%. மிகவும் அடர்ந்த காடுகள் 6,082 சதுர கிமீ. மிதமான அடர்த்தி கொண்ட காடுகள் 15,603 சதுர கிமீ. திறந்தவெளிக் காடுகள் 34,116 சதுர கிமீ. இரண்டு தேசியப் பூங்காக்கள், 18 சரணாலயங்கள் இங்கு உண்டு. சிமிலிபால் உயிர்க்கோளக் காப்பகம் இங்கே அமைந்திருக்கிறது.

நீராதாரம்

சாகுபடிப் பரப்பு 61.80 லட்சம் ஹெக்டேர்கள். இதில் 49.90 லட்சம் ஹெக்டேர்கள் பெரிய, நடுத்தர, சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களின் கீழ் நீர் வரத்தைப் பெறுகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் கூடுதலாக 2.94 லட்சம் ஹெக்டேர் பாசனப்பரப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. மகாநதியின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் ஹிராகுட் அணை, சுதந்திர இந்தியாவில் உருவாக்கப்பட்ட பிரதானமான பல்நோக்கு ஆற்றுத் திட்டங்களில் முக்கியமானது. இந்திராவதி அணை, ஜலாபுத் அணை, ரெங்காலி அணை, மந்திரா அணை போன்றவை முக்கியமான அணைகள்.

கனிம வளம்

கனிம உற்பத்தியில் நாட்டின் முதன்மையான மாநிலங்களில் ஒன்று. நிலக்கரி, பாக்ஸைட், க்ரோமைட், இரும்புத் தாது, மாங்கனீசு, சுண்ணாம்புக் கல் ஆகியவை அதிக அளவில் உற்பத்தியாகின்றன. இந்தியாவில் குரோமைட், நிக்கல், பாக்ஸைட், இரும்புத் தாது, நிலக்கரி ஆகியவற்றின் உற்பத்தியில் ஒடிஷாவின் பங்களிப்பு முறையே 83%, 92%, 55%, 38%, 26%. 2016-17-ல் மட்டும் ஒடிஷாவின் கனிம உற்பத்தி மதிப்பு ரூ.22,567.67 கோடி.

பொருளாதாரம்

பொருளாதாரரீதியாக வேகமாக வளர்ந்துவரும் மாநிலங்களில் ஒடிஷாவும் ஒன்று. விவசாயம், சுரங்கத் தொழில், வர்த்தகம், போக்குவரத்து உள்ளிட்ட துறைகள் மூலம் கணிசமான வருவாய் கிடைக்கிறது.

2018-19-க்கான வளர்ச்சி விகிதம் 8.35% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் இம்மாநிலத்தின் சராசரி வளர்ச்சி விகிதம் 8%-க்கும் அதிகம் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் தேசிய சராசரியை (7.1%) விடவும் இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் சூழல்

1965 வரை காங்கிரஸின் ஆதிக்கத்தில் இருந்த ஒடிஷாவில், 1967-ல் சுதந்திரா கட்சி - ஒரிஸா ஜன காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்தது. பின்னர் சுதந்திரா, காங்கிரஸ், ஜனதா என்று ஆட்சிகள் மாறிவந்தன.

1997-ல் தனது தந்தையின் பெயரில் பிஜு ஜனதா தளம் கட்சியைத் தொடங்கி, 2000 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்தார் நவீன் பட்நாயக் (1961-ல் காங்கிரஸ் முதல்வராகவும், 1990-ல் ஜனதா தள முதல்வராகவும் இருந்த பிஜு பட்நாயக், ஒடிஷாவின் மிக முக்கியமான தலைவர்). 2000, 2004, 2009, 2014 என்று தொடர்ந்து நான்கு தேர்தல்களில் வென்று முதல்வர் பதவியில் நீடிக்கும் நவீன் பட்நாயக், 2019 சட்டமன்றத் தேர்தலில் தனித்தே களம் காண்கிறார். பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸைத் தாண்டி வளர்ந்துவருகிறது பாஜக.

முக்கியப் பிரச்சினைகள்

வேலைவாய்ப்பின்மை, விவசாயிகள் பிரச்சினை, சுகாதாரப் பிரச்சினைகள் நீண்ட காலமாகத் தொடர்கின்றன. மாவோயிஸ்ட் பிரச்சினை அதிகம் உள்ள மாநிலம். மகாநதி ஆற்று நீரைப் பகிர்ந்துகொள்வதில் சத்தீஸ்கருடன் பல ஆண்டுகளாகப் பிரச்சினை நீடிக்கிறது. போலாவரம் திட்டம் தொடர்பாக ஆந்திர அரசுடன் மோதல் தொடர்கிறது. ஏழ்மை ஒழிப்பு, தொழில் துறை வளர்ச்சி என்று ஒடிஷா சாதிக்க வேண்டிய விஷயங்கள் ஏராளம்.

தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author