Published : 04 Apr 2019 10:10 AM
Last Updated : 04 Apr 2019 10:10 AM

இதுதான் இந்தத் தொகுதி: திண்டுக்கல்

வரலாற்று முக்கியத்துவம் கொண்ட தமிழக நகரங்களில் ஒன்று, திண்டுக்கல். மதுரையை ஆண்ட ராணிமங்கம்மாள் களம் அமைத்தது திண்டுக்கல்லில்தான். திண்டுக்கல் அருகே விருப்பாச்சியில் தங்கி கோபாலநாயக்கர் உதவியுடன் படை திரட்டிச் சென்று சிவகங்கையை மீட்டெடுத்தார் வேலுநாச்சியார். வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரை, ஹைதர் அலி, திப்பு சுல்தான் என இங்கு சுவடு பதித்த வரலாற்று நாயகர்களின் பட்டியல் நீளமானது. திண்டுக்கல் மலைக்கோட்டை புகழ்பெற்றது. திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, ஆத்தூர், நத்தம், நிலக்கோட்டை(தனி) ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

பொருளாதாரத்தின் திசை: திண்டுக்கல் மக்களவைத் தொகுதி முற்றிலும் விவசாயம் சார்ந்தது. காய்கறிகள், பூக்கள் விளைச்சல் அதிகம். பழனி, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் காய்கறிகள் சாகுபடியும், திண்டுக்கல், நிலக்கோட்டை பகுதிகளில் பூக்கள் சாகுபடியும் அதிகம். அணைகள்மூலம் நீர்ப்பாசனம் பெறுகிறது. சிறு தொழில்கள்மூலம் இங்குள்ள மக்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். திண்டுக்கல், நிலக்கோட்டையில் சிப்காட் தொழிற்பேட்டை அமைந்துள்ளது. தோல் தொழிற்சாலைகள் உள்ளன. கொடைக்கானல் சுற்றுலா தலமாகவும், பழனி ஆன்மிகத் தலமாகவும் உள்ளதால் பல்வேறு மக்கள் வந்துசெல்லும் இடமாக திண்டுக்கல் மாவட்டம் உள்ளது.

தீர்மானிக்கும் பிரச்சினைகள்: திண்டுக்கல் மாவட்டத்தில் கோடை தொடங்கினாலே குடிநீர்த் தட்டுப்பாடும் தொடங்கிவிடும். கிராமப்புறம், நகர்ப்புறம் எனப் பாகுபாடின்றி குடிநீர்ப் பிரச்சினை நிலவுகிறது. காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தின் பல பகுதிகள் பயன்பெறும் என்று எதிர்பார்ப்பு நிலவிய சூழலில், அந்தத் திட்டம் முறையாகச் செயல்பாட்டுக்கு வராமல் முடங்கிக்கிடக்கிறது. திண்டுக்கல்லில் சிறு தொழில்கள் அதிகம் இருந்த நிலையில், சில ஆண்டுகளாகப் படிப்படியாகக் குறைந்துவருகிறது. கழிவுநீர்ச் சுத்திகரிப்பு பிரச்சினையால், தோல் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை குறைந்து,  தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பும் குறைந்துவிட்டது. பூட்டுத் தொழிற்சாலைகள் நவீனத் தரத்துக்கு மேம்படுத்தப்படாததால் பூட்டுத் தொழிலும் நசிந்துவிட்டது. பாலித்தீன் தடையாலும் உற்பத்தி நிறுவனங்களில் பணிபுரிந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலையிழந்துவிட்டனர். இதனால், வேலைவாய்ப்பு தேடி வெளிமாவட்டங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நீண்ட காலக் கோரிக்கைகள்: திண்டுக்கல்லில் மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் ஆட்சி மாற்றம் காரணமாக அது கிடப்பில் போடப்பட்டுள்ளது. நல்லதங்காள் ஓடையின் குறுக்கே கட்டப்பட்ட அணை முழுமைபெறாமல் உள்ளது. ஒட்டன்சத்திரத்தில் விலை கிடைக்காதபோது காய்கறிகளைப் பாதுகாக்கப் போதுமான குளிர்பதனக் கிட்டங்கி இல்லை. இதனால், விவசாயிகள் தொடர்ந்து இழப்பைச் சந்தித்துவருகின்றனர். கூட்டுக் குடிநீர்த் திட்டங்களைச் செயல்படுத்தினால் மாவட்டத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணலாம். கொடைக்கானலில் சுற்றுலா மேம்பாடு எதுவும் இல்லை. பழநியில் பக்தர்கள் வருகைக்கேற்ற அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை.

ஒரு சுவாரஸ்யம்: அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கிய பிறகு, முதன்முதலாக அக்கட்சி களம் கண்டது திண்டுக்கல் மக்களவை இடைத்தேர்தலில்தான். முதல் தேர்தலிலேயே அதிமுக முதல் வெற்றியையும் பெற்றது. இரட்டை இலை சின்னத்தை முதன்முறையாகப் பெற்றதும் இந்தத் தேர்தலில்தான். அதிமுகவின் முதல் மக்களவை உறுப்பினரான திண்டுக்கல் தொகுதியிலிருந்து கே.மாயத்தேவர் தேர்வு செய்யப்பட்டார்.

வெற்றியைத் தீர்மானிக்கும் சமூகங்கள்: திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் முக்குலத்தோர், கவுண்டர், நாயக்கர், தேவேந்திரகுல வேளாளர் என அனைத்து சமுதாயத்தினரும் பரவலாக வசித்துவருகின்றனர். குறிப்பிட்டுச் சொல்லும்படியாக ஒரு சமூகம் மட்டுமே இங்கு வெற்றியைத் தீர்மானிப்பதில்லை.

அதிக வெற்றியை ருசித்தவர்கள்: திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் அதிகபட்சமாக அதிமுக எட்டு முறை வெற்றிபெற்றுள்ளது (இடைத்தேர்தல் உட்பட). காங்கிரஸ் ஐந்து முறையும், திமுக மூன்று முறையும், தமாகா ஒரு முறையும் வெற்றிபெற்றுள்ளன. 1980-க்குப் பிறகு திண்டுக்கல் தொகுதியில் திமுக பலமுறை போட்டியிட்டும் வெற்றிபெற்றதில்லை. ஆனால், அதன் கூட்டணி கட்சியாகப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியை மூன்று முறை வெற்றிபெறச்செய்துள்ளது.

வாக்காளர்கள் யார்?

மொத்தம் 15,18,385

ஆண்கள் 7,43,516

மூன்றாம் பாலினத்தவர்கள் 152

சமூகங்கள் என்னென்ன?

இந்துக்கள்: 87.61%

முஸ்லிம்கள்: 4.66%

கிறிஸ்தவர்கள்: 7.55%

பிற சமயத்தவர் 0.18%

எழுத்தறிவு எப்படி?

மொத்தம் 76.26%

ஆண்கள் 84.23%

பெண்கள் 68.33%

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x