Published : 20 Mar 2019 10:40 AM
Last Updated : 20 Mar 2019 10:40 AM

மெட்ராஸ் சென்னை ஆகலாம்... அலகாபாத் பிரயாக்ராஜ் ஆகக் கூடாதா?- யோகி ஆதித்யநாத் பேட்டி

டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றுவது யார் என்பதைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் மாநிலமான உத்தர பிரதேசத்தின் ஆட்சி இப்போது பாஜக கையில் இருக்கிறது. மொத்தமுள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் கடந்த முறை 71 தொகுதிகளை பாஜக வென்ற மாநிலம் இது. இப்போதைய சூழல் எப்படி? தன்னுடைய ஆட்சி ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்துடன்  இணைத்துப் பேசுகிறார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.

முதலமைச்சராக இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்டன. மக்களிடம் என்ன மாதிரியான உணர்வு இருப்பதாக நினைக்கிறீர்கள்?

மக்களுடைய நலன் உள்பட பல்வேறு விஷயங்களிலும் மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. வளர்ச்சியிலும் அரசு நிர்வாகத்திலும் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. முந்தைய 15 அல்லது 20 ஆண்டுகளாக உத்தர பிரதேசம் குறித்து நிலவிய அவப்பெயர் நீங்கிவருகிறது. பிரதமர் மோடியின் வழிகாட்டலாலும் மாநில அதிகாரிகளின் கடும் உழைப்பாலும் மாற்றங்கள் நிகழ்கின்றன.

உங்கள் ஆட்சியின் மிகப் பெரிய சாதனை என்ன?

சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பதில் நாட்டுக்கே முன்னுதாரணமாக இருக்கிறது உ.பி. எங்களுடைய உணவுதானியக் கொள்முதல் விவசாயிகளுக்கு உதவுவது. விவசாயிகளின் கொள்முதலுக்கு 48 மணி நேரத்துக்குள் பணம் அவருடைய வங்கிக் கணக்குக்குச் செல்வதை உறுதிசெய்திருக்கிறோம். இடைத் தரகர்களுக்கு இப்போது வேலையில்லை. கடந்த 20 ஆண்டுகளைவிடக் கடந்த 2 ஆண்டுகளில் அதிக நிலங்களுக்குப் பாசன வசதி அளித்திருக்கிறோம்.

சட்டம், ஒழுங்கு உத்தர பிரதேசத்தில் ஒரு பெரிய சவால் அல்லவா? நீங்கள் முதலமைச்சரானது முதல் போலீஸுடனான துப்பாக்கிச் சண்டையில் 80 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சட்டம், ஒழுங்கை அமல்படுத்த இது ஒன்றுதான் வழியா?

ஒரு மோதல்கூடப் போலியில்லை. 23 கோடி மக்களைக் காப்பாற்ற வேண்டிய கடமை உத்தர பிரதேச அரசுக்கு இருக்கிறது.

பசு பாதுகாப்புச் சட்டம் உங்களுடைய அரசின் முன்னுரிமையாக இருக்கிறது. ஆனால், ஏராளமான விவசாயிகளின் விளைநிலங்களில் மாடுகள் புகுந்துவிடுவதால் நஷ்டப்பட்டுள்ளனரே?

இரண்டு மாதங்களுக்கு முன்னர் அந்த நிலைமை. இப்போது மாறிவிட்டது. சட்ட விரோதமான இறைச்சிக்கூடங்களை மூடினோம். சட்ட விரோதமான இறைச்சிக் கூடங்களை மூடியபோது அவை ஆயிரக்கணக்கான கால்நடைகளைத் தெருவில் அவிழ்த்துவிட்டன. பசுக்களையும் பாதுகாக்க வேண்டும், விவசாய நிலங்களையும் பாதுகாக்க வேண்டும். பசுப் பாதுகாப்பைச் சமுதாயம் மேற்கொள்ள வேண்டும் என்பது என் திட்டம். அது சரிப்பட்டு வரவில்லை. குறைந்த அளவு பால் சுரப்புள்ள மாடுகள் விவசாயிகளுக்கு லாபகரமானவை அல்ல. அது தொடர்பாக மேல் நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம். விவசாய வேலைகளுக்கு டிராக்டர்களும் இயந்திரங்களும் வந்துவிட்டதால் காளைகளுக்குத் தேவை குறைந்துவிட்டது. எனவே, பசுக்களின் எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை எடுத்துவருகிறோம். இப்போதைக்கு 4 லட்சம் கால்நடைகளை அவற்றுக்கான குடில்களில் வைத்துப் பராமரிக்கிறோம். பசுக்களை வளர்ப்பதற்கான கொட்டில்களுக்குத் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட நிதியைப் பயன்படுத்துகிறோம். விவசாயிகளின் நலனுக்காக மண்டிகளிலிருந்தும் நிதி திரட்டுகிறோம்.

ஊர்களின் பெயர்களை மாற்றி வருகிறீர்கள், என்ன காரணம்?

பம்பாய், மும்பை ஆகலாம், பெங்களூர், பெங்களூரு ஆகலாம், மெட்றாஸ், சென்னை ஆகலாம், கல்கத்தா, கொல்கத்தா ஆகலாம். அலாகாபாத் ஏன் பிரயாக்ராஜ் ஆகக் கூடாது? ஃபைசாபாத் ஏன் அயோத்தியா ஆகக் கூடாது? நம்முடைய அசல் அடையாளம் நிலைநாட்டப்பட பெயர்களை மாற்றியிருக்கிறோம். மக்கள் இதை வரவேற்கிறார்கள்.

மற்ற பெயர் மாற்றங்களின் பின்னணியில் மதம் இல்லையே?

உண்மையில்லை. மும்பை என்பது மும்பாதேவி கோயிலை ஒட்டிய பெயர். டிரிவேண்ட்ரம் எப்படி திருவனந்தபுரம் ஆனது! நாங்கள் பாரம்பரியத்தைத்தான் மீட்டெடுக்கிறோம்.

முகலாயர்கள் நம்முடைய பாரம்பரியத்தின் அங்கம் இல்லையா?

அன்னிய ஆக்கிரமிப்பாளர்கள் நம்முடைய பாரம்பரியமாக முடியாது. ஆக்கிரமிப்பாளர்களும் நம்முடைய பாரம்பரியம் என்று நினைப்பது அடிமைப் புத்தி.

மக்களவைப் பொதுத் தேர்தலை எதை மையமாக வைத்துச் சந்திக்கிறீர்கள்?

வளர்ச்சி, நல்ல அரசு நிர்வாகம், தேசியவாதம். எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் பதவிக்கான தலைவர் இல்லை, சரியான நோக்கங்களும் இல்லை.

கடந்த முறைபோல இல்லாமல் சமாஜ்வாதியும் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. நாடாளுமன்ற இடைத் தேர்தல்கள் மூன்றில் வென்றுள்ளனர். முடிவு எப்படி இருக்கும்?

அவையெல்லாம் இடைத் தேர்தல்கள். ஆனால், பொதுத் தேர்தலில் பாஜக கூட்டணி இம்முறை 74 தொகுதிகளில் வெற்றிபெறும்.

உ.பி.க்கு வெளியேயும் பிரச்சாரம் செய்வீர்களா?

உத்தர பிரதேசம்தான் என்னுடைய இலக்கு. கட்சி கேட்டுக்கொண்டால் வெளியேயும் செல்வேன்.

அயோத்தியில் கோயில் கட்டும் திட்டத்தை ஒத்திவைத்துவிட்டீர்கள்; மிகப் பெரிய ராமர் சிலை அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளீர்களே?

சொன்னதிலிருந்து பின்வாங்க மாட்டோம், எதையெல்லாம் அறிவித்தோமோ, அதையெல்லாம் செய்வோம்.

அயோத்தியில் ராமருக்குக் கோயிலா, சிலையா?

எல்லாமே எங்களுடைய ஆட்சிக் காலத்தில் முடிக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x