Published : 14 Mar 2019 10:16 AM
Last Updated : 14 Mar 2019 10:16 AM

360: 40% எம்பிக்களுக்கு வாய்ப்பு மறுக்கும் மபி பாஜக

தேர்தலை எதிர்கொள்வதில் மத்திய பிரதேச பாஜக உற்சாகமாக இருந்தாலும், உள்ளுக்குள் சலசலப்புகள் எழத் தொடங்கியிருக்கின்றன. ஒவ்வொரு தொகுதியிலும் மத்திய அரசுக்கு எதிரான மக்களின் மனநிலை, திறம்பட செயலாற்றாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று எல்லா விஷயங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டிருக்கும் பாஜக, அதற்கேற்ப வேட்பாளர்களை முடிவுசெய்கிறது. அந்த வகையில், தற்போதைய எம்பிக்களில் சுமார் 40% பேருக்கு வாய்ப்பு மறுக்கப்படும் என்று தெரிகிறது. இது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. கட்சிக்குள் முரண்கள் ஏற்படுவதைத் தடுக்க வேட்புமனு கையெழுத்தாவதற்கு முதல் நாள்தான் வேட்பாளர் பட்டியலை இறுதிசெய்யவிருக்கிறது மத்திய பிரதேச பாஜக. தங்களுக்கு வாய்ப்பு கேட்டு மூத்த தலைவர்களும் மேலிடத்தை நச்சரிக்கத் தொடங்கிவிட்டார்கள்!

மோடியை விமர்சிக்கும் செயல் தலைவர்

தெலங்கானாவில் தனித்த பலத்துடன் களமிறங்கும் டிஆர்எஸ் கட்சியில் பாஜக, காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சிகளிலிருந்து உறுப்பினர்கள் சேர்ந்துகொண்டே இருக்கிறார்கள். அந்த உற்சாகத்தில் மோடியைக் கடுமையாக விமர்சித்துவருகிறார்கள் டிஆர்எஸ் தலைவர்கள். “நாங்கள் கொடுத்த பூங்கொத்துகளைப் புன்னகையுடன் வாங்கிக்கொண்ட பிரதமர், பதிலுக்குத் தெலங்கானாவுக்கு எதையுமே செய்யவில்லை. பல்வேறு திட்டங்களுக்காக ரூ.24,000 கோடியைக் கேட்டோம். கைவிரித்துவிட்டார்” என்று சகட்டுமேனிக்கு வாரியிருக்கிறார் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகனும் டிஆர்எஸ் செயல் தலைவருமான கே.டி.ராமராவ். “அதனால்தான், 16 மக்களவைத் தொகுதிகளிலும் டிஆர்எஸ்ஸை மக்கள் வெற்றிபெறச் செய்ய வேண்டும்” என்றும் பேசுகிறார்!

வட கிழக்கில் காத்திருக்க காங்கிரஸ் முடிவு

இந்தியாவின் வட கிழக்கில் உள்ள எட்டு மாநிலங்களில் 25 மக்களவைத் தொகுதிகள். கல்வியறிவு அதிகம். மக்களில் பெரும்பாலானவர்கள் பழங்குடிகள், கிறிஸ்தவர்கள். 2014 வரையில் காங்கிரஸ் கட்சிதான் செல்வாக்காக இருந்தது. 2014 மக்களவை பொதுத் தேர்தலில் காங்கிரஸ் அவற்றில் 8 தொகுதிகளில் மட்டுமே வென்றது. முதலில் அஸாம் பிறகு மணிப்பூர், அருணாசல பிரதேசம், மேகாலயா, மிசோரம், திரிபுரா என்று எல்லாவற்றிலும் காங்கிரஸை வெளியேற்றிவிட்டது பாஜக. திரிபுராவில் இடதுசாரி முன்னணியை ஆட்சியிலிருந்து அகற்றியது. பிரதான எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸுக்கு பேரவையில் ஒரு தொகுதிகூட கிடைக்கவில்லை. காங்கிரஸ் தன்னுடைய இருப்பை உறுதி செய்யப் போராடிக் கொண்டிருக்கிறது, பாஜகவோ தானோ, தன்னுடைய தோழமைக் கட்சிகளோ வெற்றிபெற வழி என்ன என்று பார்க்கிறது. புதிய குடியுரிமை மசோதாவுக்கு அசாம் உட்பட அனைத்து வட கிழக்கு மாநிலங்களிலும் கடும் எதிர்ப்பு தோன்றியிருக்கிறது. இது மக்களவைத் தேர்தல் முடிவுகளில் நிச்சயம் எதிரொலிக்கும் என்கிறார் காங்கிரஸ் தலைவரும் மேகாலயத்தின் முன்னாள் முதலமைச்சருமான முகுல் சங்மா. தேர்தலுக்குப் பிறகு தோழமைக் கட்சிகளுடன் உடன்பாடு செய்து கொண்டு, கர்நாடகத்தில் நடந்ததைப் போல ஆட்சியையும் பிடிப்போம் என்கிறார்.

வெற்றிதான் முக்கியம்: சகாவுக்களின் சபதம்

வங்கம் உட்பட நாடு முழுக்கவும் காங்கிரஸோடு கைகோத்து தேர்தலைச் சந்திக்க திட்டமிட்டிருக்கும் இடதுசாரிகள் கேரளத்தில் மட்டும் தனித்துப் போட்டியிடுகிறார்கள். காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளையும் களத்தில் சந்திக்க வேண்டியிருப்பதால் முன்கூட்டியே தேர்தல் வேலைகளையும் தொடங்கியாகிவிட்டது. தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பே கேரளத்தின் இருபது தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது இடதுசாரிக் கூட்டணி. மார்க்சிஸ்ட் கட்சி 16 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் நான்கு  இடங்களிலும் போட்டியிடுகின்றன. கூட்டணிக் கட்சிகளான மதச்சார்பற்ற ஜனதா தளம், லோக்தந்திரிக் ஜனதா தளம் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக குரல்கொடுத்துவரும் மார்க்சிஸ்ட் கட்சி இரண்டு தொகுதிகளில் மட்டுமே பெண் வேட்பாளர்களுக்கு இடம் ஒதுக்கியுள்ளது பெரும் சர்ச்சையாகியிருக்கிறது.  வழிபாட்டில் சமத்துவத்துக்காக குரல்கொடுக்கும் கம்யூனிஸ்டுகள் தேர்தலிலும் அதைக் காட்ட வேண்டாமா என்று கேள்வி எழுந்திருக்கிறது. ஆனால்,  “நாடாளுமன்றத்தில் கம்யூனிஸ்ட்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது மட்டும்தான் தற்போதைக்கு முதல் நோக்கம், மற்றதையெல்லாம் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்” என்கிறார்கள் சகாவுக்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x