Published : 12 Mar 2019 10:32 AM
Last Updated : 12 Mar 2019 10:32 AM

ஒரு நபர் குடும்ப அட்டையை ரத்துசெய்வது நியாயமற்றது!

நியாய விலைக் கடைகளில் ஒரு நபர் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்க மறுப்பதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்திருக்கின்றன.

ஒரு நபர் குடும்ப அட்டையை முடிவுக்குக் கொண்டுவரும் தமிழக அரசின் நடவடிக்கைதான் இதற்குக் காரணம் என்று அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின்றன. குடும்பத்தை இழந்து தனித்து வாழும் முதியவர்கள், பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்கள், கணவனை இழந்த பெண்கள் போன்றோர்தான் பெரும்பாலும் ஒரு நபர் குடும்ப அட்டையைப் பயன்படுத்திவருகிறார்கள். இந்நிலையில், இந்த நடவடிக்கை அவர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

கடந்த ஆண்டிலேயே ஒரு நபர் குடும்ப அட்டைகளை ரத்துசெய்வதில் தீவிரம் காட்டியது தமிழக அரசு. பாதிக்கப்பட்டவர்கள் பல ஊர்களில் புகார் மனுக்களோடு வருவாய்த் துறை அலுவலகங்களை முற்றுகையிட்டார்கள். எதிர்க்கட்சிகளும் சட்டமன்றத்தில் கேள்விகளை எழுப்பின. இது போலி அட்டைகளை நீக்கும் நடவடிக்கை, விசாரணைகளுக்குப் பிறகே முடிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று சட்டமன்றத்தில் பதிலளித்தார் உணவுத் துறை அமைச்சர். அதன் பிறகும் ஒரு நபர் குடும்ப அட்டைகளை நீக்கும் பணிகள் நிற்கவில்லை. அறிவிப்புகள் ஏதுமில்லாமல், வாய்மொழி உத்தரவுகள் மூலம் தொடரத்தான் செய்கின்றன. நியாய விலைக் கடைகளில் தற்போது உணவுப் பொருட்களை மறுப்பது அதைத்தான் காட்டுகிறது.

தமிழகத்தில் 19 லட்சம் ஒரு நபர் குடும்ப அட்டைகள் மட்டுமே உள்ளன. அவற்றில் 21 ஆயிரம் அட்டைகள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளன என்று கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் அறிவித்தார் உணவுத் துறை அமைச்சர். தமிழகத்தில் குடும்ப அட்டைகள் விண்ணப்பித்தவுடன் கிடைத்துவிடுவதில்லை. வருவாய்த் துறை விசாரணைக்குப் பிறகுதான் வழங்கப்படுகின்றன. நியாய விலைக் கடைகளில் உணவுப் பொருட்களைப் பெறுவதற்கு மட்டுமே குடும்ப அட்டைகள் பயன்படுவதில்லை. அரசின் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையாகவும் முகவரிச் சான்றாகவும் பயன்படுத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில், ஒரு நபர் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களை அவர்களது விருப்பத்துக்கு மாறாக, பக்கத்து வீட்டுக்காரர்களின் அல்லது உறவினர்களின் அட்டையில் பெயர் சேர்ப்பது வன்முறையானது.

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், உணவுப் பாதுகாப்புச் சட்டத்தைத் தொடக்கத்திலிருந்தே கடுமையாக எதிர்த்துவந்தவர் ஜெயலலிதா. அச்சட்டத்தைத் தவிர்க்கவே முடியாது என்ற நிலையில், தமிழகத்துக்கு 10 ஆண்டுகள் விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், மூன்று ஆண்டுகள் மட்டுமே தமிழகத்தால் விதிவிலக்கு பெற முடிந்தது. அந்த விதிவிலக்கு நிறைவடைய இருக்கும் நிலையில், அதை நீட்டிக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்திருக்க வேண்டும். அதைச் செய்ய அதிமுக அரசு தவறிவிட்டது. இப்படிப்பட்ட நடவடிக்கையில் இறங்கியிருப்பதன் மூலம், இவ்விஷயத்தில் மத்திய அரசுக்குச் சாதகமாக நடந்துகொள்கிறதோ என்ற கேள்விக்குத் தமிழக அரசு வழிவகுத்திருக்கிறது. முதியவர்கள், கைவிடப்பட்ட பெண்கள் உள்ளிட்டோரின் வயிற்றிலடிக்கும் இந்த முயற்சியை அரசு கைவிட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x