Last Updated : 11 Mar, 2019 10:38 AM

 

Published : 11 Mar 2019 10:38 AM
Last Updated : 11 Mar 2019 10:38 AM

எதிர்க்கட்சிகளின் கூட்டணிதான் ஆட்சியமைக்கும்: மணி சங்கர் அய்யர் பேட்டி

தமிழகம் வந்த பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி பற்றிக் கடுமையாக விமர்சித்துவிட்டுப் போயிருக்கிறார். பிரிந்துசென்ற கட்சிகளை மீண்டும் சேர்ப்பதில் காங்கிரஸ் ஆர்வம் காட்டவில்லை என்று அதிருப்திக் குரல்கள் ஒலிக்கின்றன. இதற்கெல்லாம் என்ன பதில் வைத்திருக்கிறது காங்கிரஸ்? கட்சியின் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யரிடம் பேசலாம்.

பாஜகவி ஐந்தாண்டு கால ஆட்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?

‘அச்சே தின்’ அதாவது ‘நல்லகாலம் பொறக்குது’ என்று பிரச்சாரம் செய்து ஆட்சியைப் பிடித்தார்கள். தேர்தல் முடிந்தவுடனே அதை மறந்துவிட்டார்கள். ஐந்தாண்டுகள் ஆட்சியில் இருந்தவர்கள் தேர்தல் வருகிறபோது, தங்களது சாதனைகளைச் சொல்லித்தானே ஓட்டுக் கேட்க வேண்டும்? என்னவோ இப்போதுதான் புதிதாக அரசியலுக்கு வந்தவர்கள் போல வாய்ப்புக் கேட்கிறார்கள்.

வலிமையான மாநிலத் தலைமைகளை காங்கிரஸ் தொடர்ந்து அவமானப்படுத்தியது; காமராஜரையே பல முறை அவமானப்படுத்தியது என்றெல்லாம் மோடி குற்றம்சாட்டியிருக்கிறாரே?

1962-ல் பெரியவர்களைக் கட்சிப் பொறுப்புக்கு அழைக்கும் திட்டத்துக்கு ‘காமராஜ் திட்டம்’ என்று பெயரிட்டு, காமராஜரை அகில இந்திய காங்கிரஸ் தலைவராக்கியவர் நேரு. அப்போது எனக்கு 25 வயது. மோடிக்கு 13 வயது இருந்திருக்கலாம். அவர் வரலாற்றைப் படித்தாரோ இல்லையோ, தெரியாது. ஆனால், இந்தியாவின் சிற்பியான நேருவைத் தொடர்ந்து அவமானப்படுத்திப் பேச மட்டும் அவர் தயங்குவதில்லை. பொய் குற்றச்சாட்டுகளைச் சொல்லியே ஆட்சிக்கு வந்தார்கள். இம்முறை அது நடக்காது!

பிற கட்சிகளோடு இறங்கிப் பேசுகிற காங்கிரஸ், தன்னிடமிருந்து பிரிந்துசென்ற தமாகா, திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகளை ஒதுக்குவதாகச் சொல்லியிருக்கிறாரே ஞானதேசிகன்?

தமாகா, 2002-ல் காங்கிரஸுடன் இணைந்தபோது, அந்தக் கட்சிக்கு உரிய மரியாதையை அளித்தோம். ஜி.கே.வாசனை மத்திய அமைச்சராக்கினோம். அவர் காட்டிய நபரைத்தான் கட்சியின் மாநிலத் தலைவராகவும் நியமித்தோம். ஆனால், இரண்டாவது முறையும் துரோகம் செய்துவிட்டார். எங்களுக்கும் சுயமரியாதை இருக்கிறது. இனியும் அவர்களிடம் கெஞ்சுவது சரிவராது. ஒருவேளை, அவர்களே திரும்பி வந்தால் பார்க்கலாம். திரிணமூல் உள்ளிட்ட கட்சிகளை எதிரிகளாக நாங்கள் பார்க்கவில்லை. சக ஜனநாயக சக்திகளாகத்தான் கருதுகிறோம்.

மக்களுக்கு எதிரான திட்டங்கள், உதாரணமாக ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டம் போன்றவை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும் தொடரத்தானே செய்யும்?

நான் பெட்ரோலியத் துறை அமைச்சராக மட்டுமல்ல, பஞ்சாயத்து ராஜ் அமைச்சராகவும் இருந்திருக்கிறேன். “மக்கள் எதை விரும்புகிறார்களோ அந்த அடிப்படையில் ஆட்சி நடத்த வேண்டும்” என்பதுதான் ராஜீவ் காந்தி கற்றுத்தந்த பாடம். நான் இப்போது அந்தத் துறையின் அமைச்சராக இருந்திருந்தால், நாட்டுக்கு எங்கிருந்தெல்லாம் எண்ணெய், எரிவாயு வளம் கிடைக்கிறதோ அதையெல்லாம் பெறுவதற்கு பெருமுயற்சி செய்திருப்பேன். மக்கள் விரும்பவில்லை என்றால், அவர்களைச் சந்தித்து உரிய விளக்கங்களைக் கொடுக்க முன்வந்திருப்பேன். ஆனால், பாஜக அரசின் பெட்ரோலியத் துறை அமைச்சர் மக்களைச் சந்திக்க முன்வரவில்லை. அதிகாரம் கையில் இருக்கிறதென்று இவ்வளவு பிடிவாதமாக காங்கிரஸ் அமைச்சர்கள் செயல்பட மாட்டார்கள்.

காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று நம்புகிறீர்களா?

எதிர்க்கட்சிகளின் கூட்டணிதான் ஆட்சி அமைக்கப்போகிறது. ஆனால், யாருடைய தலைமையில் நாம் ஆட்சி அமைக்கப்போகிறோம் என்பதைத் தேர்தல் முடிந்த பிறகே தீர்மானிப்போம். காங்கிரஸ் தலைமையும் அப்படித்தான் அறிவித்திருக்கிறது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x