Published : 29 Mar 2019 08:31 AM
Last Updated : 29 Mar 2019 08:31 AM

360: அன்பில் திளைக்கும் திருமா

மேடைகளில் ஏறினால் அனல் தெறிக்கும் பேச்சு, குழந்தைகளைக் கண்டால் குதூகலம் என்று திருமாவளவனின் தேர்தல் பிரச்சாரக் கணங்கள் ஒவ்வொன்றும் அவரது பேஸ்புக் பக்கத்தில் உடனுக்குடன் பதிவாகிக்கொண்டிருக்கின்றன. ஒரு இளைஞர் தனது கன்னத்தில் முத்தமிட்ட புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்டிருக்கும் திருமாவளவன், ‘காட்டுமன்னார்கோவிலில் ஒரு தம்பி திடீரெனக் கட்டிப்பிடித்து முத்தமிட்டார். அவர் வன்னியர் சமூகத்தைச் சார்ந்தவர் என்று குறிப்பிட்டார். மகிழ்ச்சி’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இது ஒருபுறம் இருக்க, ‘நான் ஒரு வன்னியர். ஆனாலும் நேசிப்பது திருமாவளவனைத்தான்’ என்று தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார் சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் விசுவநாதன். வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருமாவளவனை வீட்டுக்குள் அழைத்து உபசரிப்பதும் தொடர்நிகழ்வாக மாறியிருக்கிறது.  வெற்றி, தோல்விக்கு அப்பாற்பட்டு சமூகங்களின் இந்த இணைப்பு நாட்டுக்கு நல்லது.

கலாய்க்கும் கண்ணையா

பிஹாரி பெகுசராய் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கண்ணையா குமாரின் பேஸ்புக் பக்கம், அரசியல் பகடிகளால் நிரம்பிவழிகிறது. அதே தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கை ‘செமை’யாகக் கலாய்த்துக்கொண்டிருக்கிறார். அவரின் சமீபத்திய பதிவு இது: ‘என் சொந்தக்காரப் பையன் ஒருவன் வீட்டுப்பாடம் எழுதாவிட்டால் பள்ளிக்கூடத்துக்கு வர மாட்டான். அதற்காக, வாத்தியாரை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் என்று அவன் ஒருநாளும் சொன்னதில்லை.’ பாஜகவினரும் பதிலடி கொடுக்கிறார்கள்: ‘தேர்தல் முடிவு வரட்டும்; கண்ணையா எதில் கெட்டிக்காரர் என்பதை மதிப்பெண்கள் காட்டிவிடும்!’

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x