Published : 28 Mar 2019 11:57 AM
Last Updated : 28 Mar 2019 11:57 AM

ஹைஹீல்ஸ்’ ஆபத்துகள்

ஜெமினி தனா

பென்சில்ஃபிட்  ஜீன்ஸ், இடுப்பைப் பிடிக்கும் ஸ்கர்ட்,  உள்ளே காற்று புகாத அளவுக்கு நெருக்கடியான டீஷர்ட் இதெல்லாம் பேஃஷன் என்று சொல்லும் பெண்கள் தங்களை

வெயிட் பார்ட்டியாக காட்டிக்கொள்வதில் கவலையும் ஹைட் பார்ட்டியாக காட்டிக்கொள்வதில் பெருமிதமும் கொள்கிறார்கள். ஆகவே, ஹை ஹீல்ஸ் செருப்புகளை மட்டும் விட்டுவைப்பார்களா என்ன? இன்று பெரும்பாலான பெண்கள் ஹைஹீல்ஸ் செருப்புகளை மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.

      வீட்டை விட்டு வெளியே செல்லும் போது  முள்ளும் கல்லும் படாமல் இருக்க காலில் அணிந்துகொள்வதற்காக உருவானதுதான்  காலணி. ஆனால் இன்று உலகமே ஃபேஷன் மயமாயிற்றே!  மாடலிங் பெண்கள் ஃபேஷனாக பயன்படுத்தும் பொருட்களை அன்றாடம் முக்கால்வாசி பேர் பயன்படுத்தத் தொடங்கி விட்டார்கள். குறிப்பாக கூர்மையான முனைகளைக் கொண்ட பாயின்டட் ஹீல்ஸ், ஹைஹீல்ஸ்  செருப்புகளை சாதாரணமாகவே பயன்படுத்துகிறார்கள்.  

  ஹைஹீல்ஸ் அணிவதில் 60 சதவீதப் பெண்கள் ஆர்வமாக இருக்கிறார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில் 90% க்கு மேற்பட்ட பெண்கள் முதுகுத்தண்டில் வலி, மூட்டு வலி, இடுப்பு வலி, காலில் ஆணி, கால் சுளுக்கு முதலான பாதிப்புகளால் அவதிப்படுகிறார்கள் என்பதை ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.

    பெண்கள் ஹை-பை எனும் பெயரில்… நடைக்கும், உடைக்கும் பொருத்தமே ஹை ஹீல்ஸ்தான் என்று வளைய வருவது  பெரிய அளவில் உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

      பெரும்பாலான  வீடுகளில் ஆடைகளுக்கு அலமாரி போல ஹை  ஹீல்ஸ் வைக்கவும் ஒரு அலமாரி ஒதுக்கப்படுகிறது. குள்ளமாக இருந்தால் ஹை ஹீல்ஸ் போட்டு உயரமாகக் காட்டலாம். உயரமாக இருந்தால் ஹை  ஹீல்ஸ் போட்டு அழகை இன்னும் கூட்டலாம் என்று யார் சொல்லிக்கொடுத்தார்களோ தெரியவில்லை.

      அழகு என்பது ஆரோக்கியத்துடன் சம்பந்தப்பட்டது. ஆரோக்கியக் குறைவை ஏற்படுத்தும் எதுவுமே  அழகு கிடையாது. ஆரம்பத்தில் ஹைஹீல்ஸ் செருப்புகள் ஏற்படுத்தும் குதிகால் வலியும், கால் சுளுக்கும் கெண்டைக்கால் வலியும், வீக்கமும் புது செருப்பு கடிக்கும் என்பதாகவே நினைத்துக் கொள்கிறார்கள். பிறகுதான், எவ்வளவு பெரிய பின்விளைவுகளைத் தருகின்றன என்பதை உணர்ந்து வேதனைப்படுகிறார்கள்.

குதிகால் உயர செருப்புகளை அணிவது தகுதியை மிகைப்படுத்திக் காட்டும் எனும் தவறான முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். ஆனால் இது ஆரோக்கியமான விஷயமல்ல. .

      அதிக உயரம் கொண்ட  ஹைஹீல்ஸ்கள் அணிந்தால் வேகமாக நடக்கும் போது தடக்கென்று கால் நொடிப்பதற்கு, சுளுக்கிக் கொள்வதற்கு, கால் நரம்புகளோ எலும்போ பாதிப்பதற்கு எக்கச்சக்க வாய்ப்புகள் இருக்கின்றன. அதுமட்டுமல்ல அவசர காலங்களில் ஸ்லோமோஷனில் கூட ஓடமுடியாது. ஏனெனில் நம் உடலின் மொத்த எடையையும் கணுக்கால் தாங்குகிறது. கீழே விழும்போது  கணுக்கால்  எலும்பில் முறிவு ஏற்பட்டால் நீண்ட நாள்  சிகிச்சை பெறவேண்டியிருக்கும்.

   சாதாரணமாக தட்டையான அல்லது சற்றே உயரமிக்க செருப்புகள் நம் உடலில் எவ்விதமான பாதிப்புகளையும் ஏற்படுத்தாது.  சமநிலையில் நடக்கும் போது எலும்புகளும் மாற்றங்கள் இல்லாமல் இருக்கும். ஆனால் ஹைஹீல்ஸ் அணியும் போது  பாதங்களின் பின்பகுதியான குதிகால் தரையில் படாமல் மேல் நோக்கி நின்றபடி இருக்கும்.  உடல் சமநிலையில் இல்லாத  இத்தன்மையில் உடலில் எலும்பும் அதற்கேற்ப வளைந்து கொடுக்க வேண்டியதாக இருக்கும். அப்போது நமது  உடலின் மொத்த எடையையும் முன்பாதங்கள் தாங்கும்படி இருப்பதால் இயல்பாகவே முன்னோக்கி நடப்போம். இதனால் நமது உடல் எடையும் முன்னுக்கு தள்ளப்படுகிறது.  உடலின் சமநிலை இதனால்  தடுமாறு கிறது. தொடர்ந்து ஹை ஹீல்ஸ் அணிந்து கொண்டே இருந்தால் கால் சுளுக்கு, கால் ஆணிகள், கொப்புளங்கள் ஏற்படுவதோடு  நம்மையும் அறியா மல் முதுகுத்தண்டிலும் பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது.

   முதுகுத்தண்டு  பாதிப்புகள் நாளடைவில்  அழுத்தத்தை உண்டாக்கி மூட்டு வலியையும் உண்டாக்குகிறது. இயற்கைக்கு மாறாக அதிகமாக வளைவதால் விரைவிலேயே கூன் தோற்றம் உண்டாகும் என்றும் அதிர்ச்சிதருகிறார்கள் மருத்துவர்கள். மேலும்  ஹைஹீல்ஸ் அணியும் போது கால்விரல்கள் இறுகு வதால் அழுத்தம் ஏற்பட்டு சீரான இரத்த ஓட்டம் தடைபடும், குதிகால்களில் உள்ள தசைநார்கள் சுருங்கிவிடும்  என்றும் எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

     எனக்குத்தெரிந்த பெண்ணுக்கு  கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.  ஃபேஷன் உலகில் புதிய டிரெண்ட் என்ன என்று அவளைத்தான் கேட்போம். அனைத்தையும்  விரல் நுனியில் அப்டேட்டாக வைத்திருப்பாள்.  அவள் அணியும் ஆடை, அலங்காரமும் அதற்குப் பொருத்தமாக அணியும் ஹை ஹீல்ஸ் செருப்புகளையும் ரசிக்க, எங்கள் அபார்ட்மென்ட்டில் ஒரு கூட்டமே உண்டு. அவள் நடக்கும் போது இமைதட்டாமல்  நானும் பார்த்திருக்கிறேன். ’இவ்ளோ பெரிய ஸ்டூலை மாட்டிக்கொண்டு நடக்கிறாளே. எங்கேனும் விழுந்து விடுவாளோ’ என்று ஒரு வித அச்சத்தோடு, பார்த்திருக்கிறேன்.

   ஒருநாள் மகப்பேறு மருத்துவரிடம்  போனபோது அவளும் சிகிச்சைக்கு வந்திருந்தாள். இயல்பாகவே கண்கள் அவளது கால்களைப் பார்த்தது.  பார்த்தேன். சற்றே உயரமான செருப்பை அணிந்திருந்தாள். நலம் விசாரிப்புக்குப் பிறகு அவள் வந்த காரணத்தைத் தெரிவித்தாள்.  உயர்வகையான ஹைஹீல்ஸ்கள் அணிந்ததால்  இடுப்புவலியும் அதைத் தொடர்ந்து கருப்பையில் பாதிப்பும்  ஏற்படும் அளவுக்கு தீவிரமாகிவிட்டதாகவும் தெரிவித்தாள். தற்போது குழந்தை வேண்டி சிகிச்சை பெற்றுவருவதாகக்  கூறினாள்.  எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

    ஹைஹீல்ஸ் அணிவது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்ற எச்சரிக்கைகள் பரவி வந்தாலும் வெளிநாடுகளில் உள்ள ரெட்கார்ப்பெட் நிறுவனங்கள், பெண்கள் ஹைஹீல்ஸ் அணிந்து வேலைக்கு வர வேண்டும் என்றே விதிமுறைகளை வகுத்திருக்கின்றன.  

  ”எப்போதாவது ஹைஹீல்ஸ் அணிவதையே  வெறுப்பவள் நான். தினமும் வேலைக்குச் செல்லும்போது அணிய வேண்டுமா” என்று ட்வீட்டில் குமுறியிருக்கிறார் யூமி இஷிகாவா என்னும் விளம்பர மாடல் பெண்மணி. இவர் உருவாக்கிய #kutoo என்னும் ஹேஷ்டேக் பெண்கள் மத்தியில் பிரபலம். பல பெண்கள் ஹைஹீல்ஸ் அணிந்ததால் கால்களில் ஏற்பட்ட  புண்களின் படங்களை அதில் பதிவிட்டிருந்தார்கள்.

   கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல ஹைஹீல்ஸ் தரும்  அதிகப்படியான வலிக்குப்  பிறகே உணர்ந்து புலம்புகிறார்கள்.

   உணர்ந்தால் சரி!

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x