Published : 07 Mar 2019 08:37 AM
Last Updated : 07 Mar 2019 08:37 AM

360: கூட்டணி ஆட்சிகளே சிறந்தவை

டெல்லி மக்களுக்கே வேலைவாய்ப்பு: கெஜ்ரிவாலின் அதிரடி!

டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டால்  டெல்லி மக்களுக்கு வேலைவாய்ப்புகளில் 85% இடம் ஒதுக்கப்படும் என்று உறுதியளித்திருக்கிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். மாநில அந்தஸ்து அளிக்கப்பட்டதும், அனைவருக்கும் வீடு மற்றும் வேலைவாய்ப்புகள் உறுதிசெய்யப்படும் என்று அறிவித்திருக்கிறார் அவர்.  48 மணி நேரத்திற்குள் இரண்டு லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், 10 ஆண்டுகளுக்குள் டெல்லியில் வசிக்கும் அனைவருக்கும் வீடு கட்டித்தரப்படும் என்று அவர் தெரிவித்திருக்கிறார். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் பணிபுரிவதைக் குறித்து அனைத்து மாநிலங்களிலுமே அதிருப்தி நிலவிவருகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் மகாராஷ்டிராவிலும் கர்நாடகாவிலும் சொந்த மாநில மக்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கான விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக அமைந்துள்ளது அரவிந்த் கெஜ்ரிவாலின் அறிவிப்பு.

கூட்டணி ஆட்சிகளே சிறந்தவை

இந்தியாவில் கூட்டணி ஆட்சிகளே சிறந்த நிர்வாகத்தைத் தருகின்றன என்று கூறியிருக்கிறார் நியூயார்க்கைச் சேர்ந்த எழுத்தாளர் ருச்சிர் ஷர்மா. கடந்த இருபது ஆண்டுகளாக, இந்தியாவில் நடக்கும் தேர்தல்களை உன்னிப்பாகக் கவனித்துவருபவரான ருச்சிர் ஷர்மா எழுதியிருக்கும் ‘டெமாக்ரஸி ஆன் தி ரோடு’ எனும் புதிய புத்தகம், மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக வெளியிடப்படுகிறது. இந்நிலையில், ‘தி ஏசியன் ஏஜ்’ இதழுக்கு அளித்திருக்கும் பேட்டியில், “இந்தியாவைப் பொறுத்தவரை தேசியவாதத்துக்கு ஒரு எல்லை உண்டு. துணை தேசியவாதமே வலுவாக இருக்கிறது. இங்கு கூட்டணி ஆட்சிகள் சிறந்த நிர்வாகத்தை வழங்குவதற்கு முக்கியக் காரணம், மாநில அளவிலான அரசியல் நிகழ்வுகள்தான். கூட்டணி ஆட்சிகளில் மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் அளிக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார் ருச்சிர் ஷர்மா!

தேர்தல் செயலிகள்: முட்டிக்கொள்ளும் கட்சிகள்

மக்களவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகளின் பல்வேறு செயலிகள் கூகுள் ஸ்டோரில் இடம்பிடிக்க ஆரம்பித்திருக்கின்றன. செயலிகளின் வழியாக வாக்காளர் பட்டியல்களைப் பயன்படுத்துவது எளிதாக இருப்பதால் கட்சி ஊழியர்களும் அதைப் பயன்படுத்துவதில் ஆர்வம்காட்டுகிறார்கள்.  தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியினர் ‘டிஆர்எஸ் மிஷன்- கால் காம்ப்பைன்’ என்ற செயலியைப் பயன்படுத்திவந்தார்கள். முதியவர்கள், விதவைகளுக்கான ஆசாரா ஓய்வூதியத் திட்டப் பயனாளிகளைப் பற்றிய  விவரங்கள் இடம்பெற்றிருப்பதாக எழுந்த சர்ச்சையை அடுத்து அந்தச் செயலியை கூகுஸ் ஸ்டோர்ஸ் நீக்கியிருக்கிறது. இருந்தாலும் தெலுங்குதேசம் கட்சி இந்தப் பிரச்சினையை விடுவதியில்லை. ஸ்க்ரீன்ஷாட் படங்களை இணையத்தில் வெளியிட்டு, சரமாரியாக கேள்விகளை எழுப்பிவருகிறது தெலுங்கு தேசம் கட்சி.   “அது எங்களின் கட்சியின் அதிகாரப்பூர்வமான செயலி அல்ல. தெலுங்கு தேசம் கட்சியின்  'சேவ மித்ரா' செயலியில் வாக்காளர்களின் சாதி விவரங்களையும் அவர்களின் அனுமதி இல்லாமலேயே ஆதார் விவரங்களையும் வெளியிட்டிருக்கிறார்கள். அது மட்டும் எப்படி அனுமதிக்கப்படுகிறது?” என்று எதிர்க்கேள்வி கேட்கிறார்கள் தெலுங்கு ராஷ்ட்ரிய சமிதி ஆதரவாளர்கள்.

கோலியாத்களும் டேவிட்டுகளும்: மீரா குமார்

ஹாஜிபூர் மக்களவைத் தேர்தலில் 1977-ல், 4,24,545 வாக்குகள் வித்தியாசத்தில் ஜனதா வேட்பாளராக வென்றவர் ராம் விலாஸ் பாஸ்வான். உலகத் தேர்தல் வரலாற்றில் இன்றுவரை உலக சாதனை இது. இன்று வரை செல்வாக்கு மிக்க தலித் தலைவர்களில் முக்கியமானவர் அவர். 1985 மக்களவைத் தேர்தலில், பிஜ்னூர் தொகுதியில் களமிறங்கிய அவர், காங்கிரஸ் வேட்பாளர் மீரா குமாரிடம் தோற்றுப்போனார். இந்திய அரசியல் வரலாற்றில் தனக்கென்று தனியிடம் பிடித்த தலைவர் பாபு ஜகஜீவன்ராமின் மகள் என்றாலும் அரசியலுக்கு மீரா குமார் அப்போது புதியவர். வெளியுறவுத் துறையில் உயர் அதிகாரியாகப் பணியாற்றிய அவர், பாஸ்வானை 5,339 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். வளர்ந்துவந்த இன்னொரு தலைவரும் அந்தத் தேர்தலில் தோல்வியடைந்தார் அவர் – பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x