Published : 21 Mar 2019 07:53 AM
Last Updated : 21 Mar 2019 07:53 AM

அண்ணா செல்லும் விமானத்தையாவது பார்க்கிறேன்... அழைத்துச்செல்லுங்கள் என்றார் பெரியார்- கி.வீரமணி பேட்டி

அடிப்படை லட்சியத்தில் திகவும் திமுகவும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள் என்ற அண்ணாவுக்கும் திராவிடர் கழகத்தின் இன்றைய தலைவர் வீரமணிக்கும் இயற்கையாகவே ஒரு பிணைப்பு இருந்தது. பள்ளிச் சிறுவனாக திராவிட இயக்க மேடையில் வீரமணி ஏறிப் பேசிய முதல் கூட்டத்திலேயே அண்ணாதான் சிறப்பு விருந்தினர். அங்கு தொடங்கி பெரியாருக்கும் அண்ணாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு, பிரிவு, இணைவு எல்லாவற்றுக்கும் சாட்சியமாக இருந்தவர் வீரமணி. பெரியார் – அண்ணா உறவை நினைவுகூர்ந்தார்.

அண்ணா பங்கேற்ற உங்கள் முதல் கூட்டத்தை நினைவுகூர முடியுமா?

எப்படி மறக்க முடியும்! அறிஞர் அண்ணா அவர்களை என்னுடைய 11-வது வயதில், இன்றைக்குச் சரியாக 75 ஆண்டுகளுக்கு முன்னால் சந்தித்தேன். கடலூரில் எங்களையெல்லாம் திராவிட இயக்கத்துக்கு ஆளாக்கிய எனது பள்ளி ஆசிரியர் ஆ.திராவிடமணி ‘திராவிட நாடு’ பத்திரிகைக்குப் பணமுடிப்பு வழங்குவதற்காக நடத்திய கூட்டம் அது. அண்ணா தொடங்கிய ‘திராவிட நாடு’ பத்திரிகைக்கு நூறு ரூபாய் நிதியும், அச்சகப் பொருட்களும் அளித்த பெரியார் ஏனையோரும் அந்த முயற்சிக்கு உதவிட வேண்டுகோள் விடுத்திருந்தார். எங்களூரில் ரூ.123 பணமுடிப்பு கொடுத்தோம். அதையொட்டி நடந்த கூட்டத்தில்தான் மேஜையின் மீது ஏற்றி என்னைப் பேசவைத்தார்கள். அண்ணா முன்னிலையில் பேசினேன்.

உங்கள் பார்வையில் பெரியார் - அண்ணா பிரிவுக்கான அடிப்படைக் காரணம் என்ன?

‘சமூகச் சீர்திருத்தப் பணியைத் தாண்டி தேர்தல் அரசியலிலும் காலடி எடுத்துவைக்க வேண்டும்; சமூக மாற்றங்களைக் கொண்டுவர அரசியலதிகாரம் முக்கியம்’ என்று எண்ணினார் அண்ணா. பெரியார் சமூகச் சீர்திருத்தத்திலேயே நம்பிக்கை கொண்டிருந்தார். இதுதான் மிக அடிப்படையான முரண்பாடு. அணுகுமுறைகளில் இருந்த முரண்பாடு 1947 ஆகஸ்ட் 15 நாளை அணுகுவதில் அப்பட்டமாக வெளிப்பட்டது. பெரியார், ‘இது துக்க நாள்; ஏனென்றால், சனாதனிகளுக்கு அதிகாரம் மாற்றியளிக்கப்பட்டிருக்கிறது, அவ்வளவுதான்’ என்று எண்ணினார். அண்ணாவோ, ‘மூன்று எதிரிகளில் ஒருவனான வெள்ளைக்காரன் போய்விட்டான்; பல கட்ட சுதந்திரப் போராட்டத்தில் இது முதல் படி; அதனால், கொண்டாடுவோம்’ என்று அறிக்கை வெளியிட்டார்.

காங்கிரஸில் இருந்த காலகட்டத்திலேயே தேர்தல் அரசியல் வேண்டாம் என்று முடிவெடுத்தவர் பெரியார். காந்தியாரும்கூட அப்படித்தானே செயல்பட்டார்! மணியம்மையாரை பெரியார் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தபோது அண்ணா வெளியேறுவதற்கான சூழலாக அதை மாற்றிக்கொண்டார். கருத்து முரண்பாடு பிரதானமாக இருந்ததே தவிர, மணியம்மையார் மீது அவருக்கு எந்தக் காழ்ப்பும் இல்லை; சொல்லப்போனால், மணியம்மையாரின் அனுசரணையான கவனிப்பால்தான் பெரியார் ஆரோக்கியமாக இருந்தார் என்பதைப் பிற்பாடு அங்கீகரித்தும்கூட எங்களிடம் பேசியிருக்கிறார்.

பெரியார் – அண்ணா ஒன்றுகூடலை நினைவுகூர முடியுமா?

நான் அப்போது சென்னையில் இருந்தேன். தேர்தலில் அண்ணா வென்ற பிறகு, பதவியேற்பதற்கு முன்பு பெரியாரைச் சந்தித்து ஆசி பெற விழைந்தார். திருச்சியிலிருந்த பெரியாரைச் சந்திக்க அண்ணா, கருணாநிதி, நெடுஞ்செழியன் மூவரும் இங்கிருந்து சென்றிருக்கிறார்கள். இரவு 10 மணிக்கு நடந்த சந்திப்பு அது. மணியம்மையார்தான் அப்போது பெரியாருடன் இருந்தார்கள். அந்தச் சந்திப்பு முடிந்தவுடனேயே பெரியார் சொல்லி மணியம்மையார் என்னைத் தொலைபேசியில் அழைத்துப் பேசினார். எனக்கு அந்த நேரத்தில் ஒரு கேள்விதான் இருந்தது. பிரிவு தொடங்கி ‘கண்ணீர்த் துளிகள்’ என்றே நாங்கள் அவர்களைக் குறிப்பிட்டுவந்தோம்; திமுக என்று குறிப்பிடுவதில்லை. “நாளையிலிருந்து எப்படி எழுதுவது? ஐயாவிடம் கேட்டுச் சொல்லுங்கள்” என்றேன்.

மணியம்மையார் பெரியாரிடம் கேட்டுவிட்டு, “திமுக என்றே ஐயா குறிப்பிடச் சொல்கிறார்கள்” என்றார். பெரியார் இது தொடர்பாக எழுதினார். அந்தச் சந்திப்பு ராஜாஜி உட்பட பலருக்கு அதிர்ச்சியைத் தந்தது. ஒன்பது மந்திரிகள் பதவியேற்றார்கள். ஒருவர்கூட பார்ப்பனர் கிடையாது. எவரும் கடவுளின் பெயரால் சத்தியப் பிரமாணம் எடுத்துக்கொள்ளவில்லை. “ஒரு நாத்திக மந்திரி சபை வந்தது உலகத்திலேயே பெரிய விஷயம்; மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று எழுதினார் பெரியார். விமர்சித்தவர்களுக்கும் பதிலடி கொடுத்தார். “எனக்கு அடிப்படையான கொள்கை மூன்று. சமூக நீதி, சாதி ஒழிப்பு, பார்ப்பனீய ஒழிப்பு. இந்தக் கொள்கைகளில் நான் மாறியதே இல்லை. இவற்றை நடைமுறைப்படுத்துவதற்காக எந்த அரசாங்கம் வந்தாலும் அவர்களை ஆதரிப்பேன். இன்று திமுகவை ஆதரிக்கிறேன்” என்று சொல்லியிருந்தார். உள்ளபடியாகவே பெரிய மகிழ்ச்சியில் அவர் ஆழ்ந்திருந்தார்.

பெரியாரின் மகிழ்ச்சி சரி; ஆனால், 18 ஆண்டுகள் அண்ணாவை எதிர்த்துச் செயல்பட்டுவந்த அடுத்த தலைமுறைத் தலைவர்கள், தொண்டர்கள் மத்தியில் எப்படியான மனநிலை இருந்தது?

பெரியார் – அண்ணா இருவர் இடையே தனிப்பட்ட அன்பு ஆழமாக இருந்தது என்பது இரு இயக்கங்களில் இருந்தவர்களுக்கும் நன்றாகவே புரிபட்டிருந்தது. பிரிவுக்குப் பின் இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை. அந்தச் சூழலிலும்கூட 1950-51-ல் திருச்சியில் ஒரே சிறையில் அருகருகே அடைக்கப்பட்டிருந்தபோது தன்னைச் சந்திக்க வந்தோர் கொண்டுவந்திருந்த சாக்லேட், பிஸ்கட்டுகளை அண்ணாவுக்கு அனுப்பிவைத்தார் பெரியார். அரசியல் களத்தில் அண்ணாவை எவ்வளவு கடுமையாக விமர்சித்தபோதும் பெரியாரை ஒருநாளும் பதிலுக்குப் பேசியதில்லை அண்ணா.

முதல்வரான பின்னர் உடல்நிலை குன்றியிருந்த பெரியாரைச் சந்திக்க மருத்துவமனைக்கு வந்திருந்தார். பெரியாரின் முன் ஈரோட்டில் அவருடன் பணியாற்றிய காலகட்டத்தில் எப்படியான மரியாதையோடு நிற்பாரோ அப்படிதான் – ஒரு மகனைப் போல – நின்றார் அண்ணா; பெரியார் முன் உட்கார மறுத்தார். நாகரசம்பட்டியில் ‘பெரியார் ராமசாமி கல்விக்கூடம்’ என்ற பெயரில் ஒரு பள்ளிக்கூடம். அதன் புதிய கட்டிடத் திறப்பு விழாவில் பெரியாரும் அண்ணாவும் பங்கெடுத்துக்கொள்கிறார்கள்.

“பிரிந்திருந்தவர்கள் சேர்ந்திருக்கிறோம் என்று இங்கே பேசினார்கள். அவருடைய உள்ளத்தில் நான் இருந்தேன். என்னுடைய உள்ளத்தில் அவர் இருந்தார். நாங்கள் எப்போதும் பிரிந்திருந்ததே இல்லை” என்று அந்த நிகழ்வில் பேசிய அண்ணா, “அதிகாரமற்ற இந்தப் பதவியிலிருந்து அதிகம் சாதித்துவிட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. நீங்கள் கட்டளை இட்டால், முன்புபோல உங்கள் பின்னாலே வந்து சமூகப் பணியைத் தொடரத் தயாராக இருக்கிறேன்” என்றார். பெரியார் பேசினார், “நீங்கள் ஆட்சிக்கு வந்துவிட்டீர்கள். மக்கள் உங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். உங்களால் முடிந்த வேலையைச் செய்யுங்கள். என் வேலையை நான் செய்கிறேன். ஒரு நாள் ஒரு மணி நேரம்கூடக் குறைத்துக்கொள்ளக் கூடாது; இதிலிருந்து நீங்கள் விலகக் கூடாது.” ஆக, பழைய மனக் கசப்புகள் நீங்கிவிட்டன என்பது மட்டுமல்ல, பழைய உறவைக் காட்டிலும் ஒருபடி மேலாகவே உறவு அமைந்தது.

பிரிவுக்குப் பின் நீங்கள் எப்போது அண்ணாவைச் சந்தித்தீர்கள்? எப்படி இருந்தது அந்தச் சந்திப்பு?

திருச்சி மருத்துவமனையில் குழந்தைகளுக்குத் தனி சிகிச்சைப் பிரிவு இல்லாமல் இருந்த காலம் அது. பெரியார் நிதியளித்து உதவினால் குழந்தைகள் பிரிவு தொடங்கலாம் என்று அப்போதைய மருத்துவத் துறை இயக்குநர் கேட்டுக்கொண்டிருந்தார்கள். பெரியாரும் ஒரு லட்ச ரூபாய் தருவதாக அறிவித்துவிட்டார். இடையில் தேர்தல், ஆட்சி மாற்றம் நிகழ்ந்துவிட்ட நிலையில், அண்ணாவிடம் காசோலையைக் கொண்டுபோய்க் கொடுத்துவரச் சொன்னார் பெரியார். எனக்கோ மனம் கனமாக இருக்கிறது.

ஏனென்றால், பிரிவுக் காலகட்டத்தில் அவரைக் கடுமையாக விமர்சித்துவந்தவன் நான். அண்ணா எப்படி நம்மை நடத்துவார் என்பது யோசனையாக இருந்தது. தயக்கத்துடன் சென்றவனைத் துளிக் கசப்பின்றி வரவேற்றார் அண்ணா. “நான் முதலமைச்சராகி முதன்முதலாக ஐயாவிடமிருந்து நிதியுதவி பெறுவது எனக்குப் பேறு” என்று சிரித்துக்கொண்டே சொன்னார். சாதிக் பாட்ஷாதான் அப்போது சுகாதாரத் துறை அமைச்சர். அவரிடம் சொன்னார், “சாதிக், ஐயா ஒரு லட்சம் கொடுத்தால், அது ஒரு கோடிக்குச் சமம்.” இதற்குப் பிறகு, திருச்சியில் மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு நடந்தது.

வழக்கமாக, சென்னையில்தான் அந்த மாநாடு நடத்தப்படும். மாநிலத்தின் மையமான திருச்சிக்கு அதை மாற்றியிருந்தார் அண்ணா. அந்தச் சமயத்தில் கட்சி நிகழ்ச்சி ஒன்றிலும் பேசினார். அதில் சொன்னார், “தமிழ்நாட்டில் எந்தக் கட்சித் தலைவராக இருந்தாலும் ஒன்று பெரியாரிடத்திலே ஆதரித்துப் பயிற்சி பெற்றிருப்பார் அல்லது எதிர்த்துப் பயிற்சி பெற்றிருப்பார். பெரியாரை விட்டு வேறு தலைவர்கள் தமிழ்நாட்டில் இல்லை. இன்னும் கேட்டால், தமிழ்நாட்டுத் தலைவர்களெல்லாம் பெரியார் புகழின் சிதறல்கள்” என்றார். சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை பெரியாருக்குச் செலுத்தும் காணிக்கையாகவே கருதினார் அண்ணா. அண்ணாவின் இத்தகைய இயல்பு எங்கள் பிணைப்பை உறுதியாக்கிவிட்டது.

அண்ணாவின் மரணத்தை எப்படி எதிர்கொண்டார் பெரியார்?

உருக்குலைந்துபோய்விட்டார்! அண்ணா உடல் நலம் குன்றிய நிலையிலிருந்தே கடுமையான பாதிப்புக்குள்ளாகியிருந்தார் பெரியார். அமெரிக்காவுக்கு அண்ணா புறப்படும் முன்னரே மருத்துவமனைக்குச் சென்று பார்த்துவந்தவர் வீட்டுக்கு வந்தும் பதைபதைப்பிலேயே இருந்தார். “நாம் ஒருமுறை விமான நிலையம் போய்ப் பார்த்துவிட்டு வருவோமா?” என்று கேட்டார். எங்கள் கணிப்புப்படி அண்ணா விமானம் ஏறும் முன் நாங்கள் அங்கு சென்றடைவது சாத்தியமே இல்லை. ஏனென்றால், மவுன்ட் ரோடு நெடுகிலும் அண்ணாவை வழியனுப்பக் கூட்டம் திரண்டிருந்தது. அவர் ஏற்கெனவே புறப்பட்டுவிட்ட தகவலும் தெரியவந்தது.

பெரியாரிடம் சொன்னபோது, “அண்ணா விமானத்துக்குள் சென்றுவிட்டால் என்ன, அண்ணா செல்லும் விமானத்தையாவது பார்த்துவிட்டு வருகிறேனே!” என்றார். வேகமாக வண்டியில் பறந்தோம். நல்ல வாய்ப்பாக, அண்ணா விமானப்படிகளில் ஏறுவதற்காகச் சென்றபோது அவரை அடைந்துவிட்டோம். பெரியாரைப் பார்த்தவுடனே திரும்பிய அண்ணா அவர் அருகில் வந்து வணங்கினார். இருவரின் கண்களிலுமே நீர் கோத்திருந்தது. அமெரிக்காவிலிருந்து திரும்பிய அண்ணாவுக்கு மீண்டும் உடல்நலம் குன்றியபோது அவரை வீட்டில் சென்று சந்தித்துவந்தார் பெரியார். துக்கம் தாளாமல் அண்ணாவின் கன்னங்களைத் தடவிய பெரியார் கண்ணீர்விட்டார். அருகிலிருந்த அத்தனை பேரும் உடைந்துபோய் அழுதோம்.

திரும்பும் வழிநெடுகிலும், “அண்ணா போட்டிருந்த சட்டை எப்படி தொளதொளவென்று ஆகிவிட்டது – எவ்வளவு உடல் மெலிந்துவிட்டது” என்று சொல்லிச் சொல்லி ஆத்துப்போனார் பெரியார். இறுதி நாட்களில் அண்ணா அடையாறு மருத்துவமனையில் இருந்தபோது பெரியார் என்னுடைய அடையாறு வீட்டிலேயே தங்கிவிட்டார். அங்கு வீட்டுப் படியேறுவது பெரியாருக்குப் பெரும் சிரமம். ஆனாலும், அண்ணாவை அடிக்கடி போய்ப் பார்க்க வேண்டும் என்பதற்காகச் சிரமங்களை ஏற்றார். அண்ணா மறைந்தபோது “அண்ணாவின் மறைவு தமிழ்நாடு கண்ட பேரிழப்பு” என்று சொன்னார் பெரியார். அண்ணாவின் இரங்கல் செய்தியை என் வீட்டிலிருந்துதான் எழுதினார் பெரியார். அந்த அறிக்கையின் தலைப்பு ‘அண்ணா மறைந்தார், அண்ணா வாழ்க!’

‘மாபெரும் தமிழ்க் கனவு’ புத்தகம் வாங்க இந்த இணைப்பைச் சொடுக்கவும்: https://www.kamadenu.in/publications

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x