Last Updated : 12 Mar, 2019 10:48 AM

 

Published : 12 Mar 2019 10:48 AM
Last Updated : 12 Mar 2019 10:48 AM

மோடிக்கு ஆதரவாக தமிழக மடாதிபதிகள் குரல் கொடுப்பார்கள்: இல.கணேசன் பேட்டி

மோடியை மீண்டும் பிரதமராக்குவற்காக முழு மூச்சுடன் பணியாற்றி வருகின்றன பாஜகவும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும். கலை, ஆன்மிகம் போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்தோரைச் சந்தித்து ஆதரவு திரட்டுகிறது தேசிய அளவிலான குழு ஒன்று. இதன் ஒரு பகுதியாக, மதுரை ஆதீனம், பிரம்மகுமாரிகள் அமைப்பின் நிர்வாகிகளைச் சந்திக்க மதுரை வந்திருந்த பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசனுடன் ஒரு பேட்டி.

திராவிட இயக்கச் சார்பு கொண்ட மதுரை ஆதீனத்தை எப்படி மோடிக்கு ஆதரவாக குரல் கொடுக்க வைத்தீர்கள்?

தென் மாவட்டங்களில் மதமாற்ற அச்சுறுத்தல் ஏற்பட்டபோது மத மாற்றத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக, இந்து சமுதாயத்துக்குள் ஒற்றுமையை உண்டாக்குவதற்காக கிராமம் கிராமமாக நாங்கள் செய்த பிரச்சாரத்தில் எங்களுடன் பங்கேற்றவர் மதுரை ஆதீனம். இன்றைய அரசியல் சூழலில் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்று கேட்பதற்காகச் சென்றேன். ஆனால், பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரபின் பேட்டியைப் படித்துவிட்டு, மோடியை ஆதரிக்க முடிவெடுத்துவிட்டார்.

குன்றக்குடி அடிகளார் உள்ளிட்ட மற்ற மடாதிபதிகளையும் சந்தித்து ஆதரவு கோருவீர்களா?

கட்டாயமாக. குன்றக்குடி அடிகளாரை மட்டுமல்ல, எல்லா மடாதிபதிகள், ஆன்மிக நிலையங்களுக்கும் போய் ஆதரவு கோருவேன். ஏற்கெனவே, குருமூர்த்தியின் முயற்சியினால், சென்னையில் நடந்த ‘இந்து ஆன்மிக கண்காட்சி’ தொடக்க விழாவில் காஞ்சி சங்கராச்சாரியார், ஜீயர், தருமபுரம் ஆதீனம் ஆகியோர் பங்கேற்றார்கள். அதில் பேசிய சுவாமி ஓம்காரானந்தா, “அடுத்த ஆண்டு இதே கண்காட்சியை தொடக்கி வைப்பதற்கு நரேந்திர மோடி வர வேண்டும். பிரதமராக வர வேண்டும்” என்று பகிரங்கமாகச் சொன்னார். தமிழகத்தில் இனி இந்த குரல் ஓங்கி ஒலிக்கும்.

'ஊழலற்ற ஆட்சி' என்று தொடர்ந்து முழங்குகிறது பாஜக. ஆனால், ஊழல் புகாரில் அடிபடுகிற அதிமுகவோடு கூட்டணி வைத்திருக்கிறதே?

நடப்பது மக்களவைத் தேர்தல். ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியது ஊழல்கள் மலிந்த முந்தைய காங்கிரஸ் ஆட்சியையும், ஐந்து ஆண்டுகளாக ஊழலற்ற ஆட்சி தந்த மோடியின் ஆட்சியையும்தான்.

‘நல்ல காலம் பொறக்குது’ என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பாஜக, அந்த முழக்கத்தையே மறந்துவிட்டது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனவே?

காங்கிரஸுக்கு நல்ல காலம் வரும் என்றா நாங்கள் சொன்னோம்? நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காங்கிரஸுக்குக் கெட்ட காலம்தான் வரும். ‘காங்கிரஸ் இல்லாத பாரதம்’ என்றால், ‘ஊழல்வாதிகள் இல்லாத பாரதம்’ என்றுதான் அர்த்தம்!

பாகிஸ்தானின் ஜனநாயகச் சீரழிவுக்குக் காரணம், அரசியலுக்காக ராணுவத்தைப் பயன்படுத்தியதுதான். அதே குற்றச்சாட்டு பாஜக மீதும் விழுந்திருக்கிறது. ராணுவச் சீருடையில் வாக்கு கேட்டு அந்தக் குற்றச்சாட்டுக்கு பாஜகவினர் வலு சேர்த்திருக்கிறார்களே?

உலகில் உள்ள எல்லா நாட்டு ராணுவங்களும் அந்தந்த நாட்டின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன, ஒரே விதிவிலக்கு பாகிஸ்தான். அந்த நிலை நம் நாட்டில் ஒருபோதும் நடைபெறாது. இந்த தேசத்தின் ஜனநாயகத்தன்மை நேற்று, இன்று வந்ததல்ல. அது ராமாயண, மகாபாரத காலந்தொட்டே இருப்பது. இடையில் அந்நியர் ஆட்சிக் காலத்திலும், இந்திரா காந்தி ஆட்சியிலும்தான் ராணுவ ஆட்சி போன்ற நிலையை ஏற்படுத்தினார்கள். ஆனால், மக்கள் கொதித்தெழுந்து ஜனநாயகத்துக்கு எதிரான அந்த ஆட்சிகளை வீழ்த்தினார்கள். அதில் ஆர்.எஸ்.எஸ். பேரியக்கத்துக்கும் பெரும் பங்குண்டு. யாரோ எங்கோ விதிவிலக்காக தவறாக நடந்துகொண்டிருந்தால் அதைப் பெரிதுபடுத்தாதீர்கள்!

;

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x